Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“வேளை வந்தது”!

“வேளை வந்தது”!

“வேளை வந்தது”!

‘இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான . . . வேளை வந்தது.’யோவான் 13:⁠1.

1. பொ.ச. 33-⁠ன் பஸ்கா நெருங்குகையில், இயேசுவைப் பற்றி என்ன ஊகிப்புகள் எருசலேமில் பரவியிருந்தன, ஏன்?

 இயேசு பொ.ச. 29-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றபோது, தாம் மரித்து உயிர்த்தெழுந்து மகிமைப்படுத்தப்படுவதற்குரிய ‘வேளைக்கு’ வழிநடத்தும் ஒரு பாதையில் கால்வைக்கிறார். இப்போது பொ.ச. 33 இளவேனிற்காலம். இயேசுவை கொலை செய்ய யூத உயர் நீதிமன்றம் ஆலோசனை நடத்தி சில வாரங்களே ஆகியிருந்தன. அவர்களுடைய சதித் திட்டத்தைப் பற்றி இயேசு கேள்விப்பட்டு, உடனே எருசலேமை விட்டு யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள நாட்டுப்புறப் பகுதிக்கு சென்றுவிடுகிறார். அவரிடம் சிநேகமாயிருந்த யூத உயர்நீதி மன்ற உறுப்பினராகிய நிக்கொதேமுவிடமிருந்து இயேசு ஒருவேளை இந்த விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். பஸ்கா பண்டிகை சமீபமானபோது, அந்த நாட்டுப்புறப் பகுதியிலிருந்து எருசலேமுக்கு பலர் செல்கிறார்கள். இயேசு வருவாரா வரமாட்டாரா என்ற சந்தேக பேச்சு அந்த நகரம் முழுவதும் பரவியிருந்தது. “உங்களுக்கெப்படி தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கிறார்கள். எவராவது இயேசுவைக் கண்டால் உடனே அறிவிக்க வேண்டுமென்று பிரதான ஆசாரியரும் பரிசேயரும் இட்ட கட்டளை மேலும் பரபரப்பூட்டியது.​—யோவான் 11:47-​57.

2. மரியாளின் என்ன செயல் சர்ச்சையை தூண்டுகிறது, அவளுக்கு ஆதரவாக இயேசு சொன்ன பதில், ‘தம்முடைய வேளையைப்’ பற்றி இயேசுவுக்கு இருந்த என்ன உணர்வை குறிப்பாக தெரிவிக்கிறது?

2 பஸ்காவுக்கு ஆறு நாட்களுக்கு முன், நிசான் 8-⁠ம் தேதி இயேசு மறுபடியும் எருசலேமின் சுற்றுப்புறப் பகுதிக்கு வருகிறார். அதாவது, எருசலேமிலிருந்து ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலுள்ள பெத்தானியாவுக்கு​—⁠தம்முடைய நெருங்கிய நண்பர்களாகிய மார்த்தாளும் மரியாளும் லாசருவும் வசிக்கும் ஊருக்கு​—⁠வருகிறார். அது வெள்ளிக்கிழமை சாயங்காலம், இயேசு ஓய்வுநாளை அங்கு செலவிடுகிறார். அடுத்த நாள் சாயங்காலத்தில், மரியாள் விலையுயர்ந்த பரிமள தைலத்தை இயேசுவின் தலையிலும் பாதங்களிலும் ஊற்றுகையில் சீஷர்கள் ஆட்சேபிக்கின்றனர். இயேசு இவ்வாறு பதிலளிக்கிறார்: “ஏன் இந்தப் பெண்ணுக்கு தொல்லை கொடுக்கிறீர்கள்? . . . ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. இவர் இந்த நறுமணத் தைலத்தை எனது உடல்மீது ஊற்றி எனது அடக்கத்திற்கு ஆயத்தம் செய்தார்.” (யோவான் 12:1-8; மத்தேயு 26:​6-​13, பொ.மொ.) ‘இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று’ இயேசு அறிந்திருக்கிறார். (யோவான் 13:1) இன்னும் ஐந்து நாட்களுக்குப் பின், ‘அநேகரை மீட்கும்பொருளாக தம்முடைய ஜீவனைக் கொடுப்பார்.’ (மாற்கு 10:45) அதுமுதல் இயேசுவின் போதனைகளிலும் செயல்களிலும் ஓர் அவசர உணர்வை காணமுடிகிறது. இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு சிறந்த முன்மாதிரி! அடுத்த நாளே இயேசுவுக்கு என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள்.

இயேசுவின் வெற்றி பவனி

3. (அ) நிசான் 9, ஞாயிற்றுக்கிழமை அன்று இயேசு எவ்வாறு எருசலேமுக்குள் பிரவேசிக்கிறார், அவரை சூழ்ந்திருக்கும் ஜனங்களில் பெரும்பான்மையர் என்ன செய்கிறார்கள்? (ஆ) ஜனங்களை குறைகூறும் பரிசேயருக்கு இயேசு என்ன பதில் சொல்கிறார்?

3 ஞாயிறு நிசான் 9-⁠ல், இயேசு வெற்றிசிறப்புடன் எருசலேமுக்கு பவனி வருகிறார். சகரியா 9:9-⁠ன் நிறைவேற்றமாக கழுதைக் குட்டியின் மீது ஏறி வருகிறார். அந்த நகரத்தை நெருங்குகையில், அவரை சுற்றி கூடிவந்த ஜனங்களில் பெரும்பான்மையர் தங்கள் மேல் அங்கிகளை பாதையில் விரிக்கிறார்கள். மற்றவர்கள் மரக்கிளைகளை வெட்டி அவற்றை தரையில் பரப்புகிறார்கள். “கர்த்தரின் [யெகோவாவின்] நாமத்தில் வருகிறவராகிய ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்று ஆர்ப்பரிக்கிறார்கள். ஜனக்கூட்டத்தில் இருந்த பரிசேயரில் சிலர் இயேசு தம்முடைய சீஷர்களை அதட்டும்படி விரும்புகிறார்கள். ஆனால் இயேசு இவ்வாறு பதிலளிக்கிறார்: “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடுமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”​—லூக்கா 19:38-​40, தி.மொ.; மத்தேயு 21:​6-9.

4. இயேசு எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், அந்த நகரத்தில் ஏன் பரபரப்பு ஏற்படுகிறது?

4 சில வாரங்களுக்கு முன்புதானே, லாசருவை இயேசு உயிர்த்தெழுப்பியதை அந்தக் கூட்டத்திலிருந்த பலர் கண்டிருந்தார்கள். அப்போதிருந்து இவர்கள் அந்த அற்புதத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், இயேசு எருசலேமுக்குள் பிரவேசிக்கையில் அந்த முழு நகரமும் பரபரப்படைகிறது. “இவர் யார்?” என்று ஜனங்கள் கேட்கிறார்கள். “இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு!” என்று கூட்டத்தார் தொடர்ந்து சொல்கிறார்கள். நடப்பதைக் கண்டு பரிசேயர்: “இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே” என்று புலம்புகிறார்கள்.​—மத்தேயு 21:10, 11; யோவான் 12:17-​19.

5. இயேசு ஆலயத்துக்குச் செல்கையில் என்ன நடக்கிறது?

5 பெரிய போதகராகிய இயேசு எருசலேமுக்குச் செல்கையில் போதிப்பதற்காக வழக்கம்போல் ஆலயத்திற்குச் செல்கிறார். அங்கு குருடரும் சப்பாணிகளும் அவரிடம் வருகிறார்கள், அவர்களைச் சுகப்படுத்துகிறார். இவற்றை பார்க்கும்போதும், “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா!” என்று ஆலயத்திலிருக்கும் சிறுவர்கள் ஆர்ப்பரிப்பதைக் கேட்கும்போதும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கோபமடைகிறார்கள். “இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ” என்று கண்டனக் குரலில் கேட்கிறார்கள். அதற்கு இயேசு: “ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?” என்று பதில் சொல்கிறார். இப்படி இயேசு தொடர்ந்து போதித்து வருகையில், ஆலயத்தில் நடக்கும் மற்ற விஷயங்களையும் காணத் தவறவில்லை.​—மத்தேயு 21:15, 16; மாற்கு 11:⁠11.

6. இயேசுவின் அணுகுமுறை முன்பு இருந்ததிலிருந்து இப்போது எவ்வாறு வேறுபடுகிறது, ஏன்?

6 இயேசுவின் அணுகுமுறையில் ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் எவ்வளவு வேறுபாடு! அன்றோ, கூடார பண்டிகைக்காக அவர் எருசலேமுக்கு “வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் . . . போனார்.” (யோவான் 7:10) தம்முடைய உயிருக்கு ஆபத்து வந்தபோதெல்லாம், உஷாராக தப்பிச்சென்றார். இன்றோ, அவரைக் கைது செய்ய கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கும் நகரத்திற்குள் வெளியரங்கமாய்ப் பிரவேசிக்கிறார்! அதோடு, இயேசு ஒருபோதும் தம்மை மேசியாவாக விளம்பரப்படுத்தவில்லை. (ஏசாயா 42:2; மாற்கு 1:​40-​44) தம்மை பற்றி பகட்டான விளம்பரமோ வதந்திகளோ பரவுவதையும் அவர் விரும்பவில்லை. இப்போதோ, ஜனங்கள் அவரை அரசராகவும் மீட்பராகவும், அதாவது, மேசியாவாகவும் வெளிப்படையாய் அறிவிக்கிறார்கள். இருந்தாலும் அவர்களை பேசாமலிருக்கச் சொன்ன மதத் தலைவர்களையே கண்டிக்கிறார்! ஏன் இந்த மாற்றம்? ஏனெனில், அடுத்த நாளில்தானே இயேசு அறிவிக்கிறபடி, “மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.”​—யோவான் 12:⁠23.

தைரியமான நடவடிக்கை​—⁠பின்பு ஜீவனைக் காக்கும் போதனைகள்

7, 8. பொ.ச. 33, நிசான் 10-⁠ல் இயேசு எடுத்த நடவடிக்கைகள், பொ.ச. 30-⁠ல் பஸ்காவின்போது ஆலயத்தில் அவர் செய்ததை எவ்வாறு பிரதிபலிக்கின்றன?

7 திங்கட்கிழமை நிசான் 10-⁠ம் தேதி ஆலயத்திற்கு இயேசு வந்தபோது, முந்தைய நாள் பிற்பகலில் தாம் பார்த்த விஷயத்தின் பேரில் நடவடிக்கை எடுக்கிறார். “ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து, ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோக விடாமல்” தடுக்கிறார். தவறு செய்பவர்களைக் கண்டனம்பண்ணி: “என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்” என்று சொல்கிறார்.​—⁠மாற்கு 11:15-17.

8 இயேசுவின் இந்த நடவடிக்கை, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பொ.ச. 30-⁠ல் பஸ்காவுக்காக ஆலயத்திற்கு வந்தபோது அவர் செய்ததை நினைப்பூட்டுகிறது. ஆனால் இந்தச் சமயத்தில் கண்டனம் அதிக கடுமையாகவே இருக்கிறது. ஆலயத்திலிருக்கும் அந்த விற்பனையாளர்களை இப்போது “கள்ளர்” என குறிப்பிடுகிறார். (லூக்கா 19:45, 46; யோவான் 2:​13-​16) பலி செலுத்துவதற்காக மிருகங்களை கொள்ளை லாபத்திற்கு விற்றதால் அவர்களை அப்படி குறிப்பிடுகிறார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் இயேசு செய்வதைப் பற்றி கேள்விப்பட்டு, அவரை கொலை செய்ய மறுபடியும் வழிதேடுகிறார்கள். ஆனால் ஜனங்கள் எல்லாரும் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியமடைந்து, அவர் சொல்வதை செவிகொடுத்துக் கேட்பதற்கு அவரை சூழ்ந்திருந்தபடியால் அவரை ஒழித்துக்கட்ட வகை காணாதிருக்கிறார்கள்.​—மாற்கு 11:18; லூக்கா 19:47, 48.

9. ஆலயத்தில் தமக்குச் செவிகொடுத்துக் கேட்போருக்கு என்ன பாடத்தை இயேசு கற்பிக்கிறார், என்ன அழைப்பைக் கொடுக்கிறார்?

9 ஆலயத்தில் இயேசு தொடர்ந்து போதிக்கையில் இவ்வாறு சொல்கிறார்: “மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.” ஆம், தம் மனித வாழ்க்கைக்கு ஒருசில நாட்கள் மாத்திரமே மீந்திருப்பதை அவர் அறிந்திருக்கிறார். எவ்வாறு கோதுமை மணி பலன் தருவதற்கு சாகவேண்டுமோ, அவ்வாறே தம் சொந்த மரணமும் மற்றவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பதற்கு வழிவகையாகும் என்பதை சொன்ன பின்பு, இயேசு ஓர் அழைப்பு விடுக்கிறார்: “ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.”​—யோவான் 12:23-​26.

10. தமக்குக் காத்திருந்த வேதனைமிகுந்த மரணத்தைக் குறித்து இயேசு எவ்வாறு உணருகிறார்?

10 நான்கு நாட்களுக்குப் பிறகு அனுபவிக்கப் போகும் வேதனை மிகுந்த தம்முடைய மரணத்தை நினைத்து இயேசு இவ்வாறு சொல்கிறார்: “இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும்.” ஆனால் இயேசுவுக்கு சம்பவிக்கப் போவது தவிர்க்க முடியாதது! “ஆகிலும்,” அவர் சொல்கிறார், “இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.” நிச்சயமாகவே, கடவுளுடைய முழு ஏற்பாடுடனும் இயேசு ஒத்திசைந்திருக்கிறார். தம்முடைய பலிக்குரிய மரணம் வரையில் தேவ சித்தத்தின்படி நடக்க தீர்மானித்திருக்கிறார். (யோவான் 12:27) தெய்வீக சித்தத்திற்கு முழுமையாக கட்டுப்பட்டு நடக்க நமக்கு எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி!

11. பரலோகத்திலிருந்து வந்த குரலைக் கேட்ட ஜனங்களுக்கு இயேசு போதித்ததென்ன?

11 தம்முடைய மரணத்தால் பிதாவின் கீர்த்தி பாதிக்கப்படும் என்பதை எண்ணி இயேசு ஆழ்ந்த கவலையோடு ஜெபிக்கிறார்: “பிதாவே உமது நாமத்தை மகிமைப்படுத்தும்.” ஆலயத்தில் கூடியிருந்த ஜனங்கள் பிரமித்துப்போகும் வகையில் பரலோகத்திலிருந்து ஒரு குரல் அறிவிக்கிறது: “மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்.” அந்தக் குரல் ஏன் உண்டாயிற்று, தம்முடைய மரணத்தினால் உண்டாகும் விளைவுகள் என்ன, அவர்கள் ஏன் விசுவாசம் வைக்க வேண்டும் என்பதை ஜனங்களுக்கு சொல்ல பெரிய போதகர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறார். (யோவான் 12:28-​36) நிச்சயமாகவே, கடந்த இரண்டு நாட்களில் இயேசு பல காரியங்களை நடப்பிக்கிறார். ஆனால், நெருக்கடியான நாள் இனிமேல்தான் வரப்போகிறது.

கண்டனங்கள் நிறைந்த நாள்

12. செவ்வாய்க்கிழமை நிசான் 11-⁠ல், இயேசுவை சிக்க வைப்பதற்கு மதத் தலைவர்கள் எவ்வாறு முயற்சி செய்கிறார்கள், அதன் விளைவென்ன?

12 நிசான் 11 செவ்வாய்க்கிழமை அன்று, இயேசு மறுபடியும் ஒரு முறை ஆலயத்திற்குள் போதிக்கச் செல்கிறார். எதிரிகள் இன்னும் அங்கிருக்கிறார்கள். முந்தின நாள் இயேசு செய்ததை குறிப்பிட்டு, பிரதான ஆசாரியர்களும் ஜனத்தின் மூப்பரும்: “நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?” என்று அவரைக் கேட்கிறார்கள். போதிப்பதில் தன்னிகரற்றவராக திகழ்ந்த இயேசு அப்போதும் அவர்களின் வாயை அடக்கும் பதிலை தந்துவிட்டு மிகச் சிறந்த மூன்று உவமைகளைச் சொல்கிறார். இவற்றில் இரண்டு திராட்சத் தோட்டத்தைப் பற்றியவை, மற்றொன்று ஒரு கலியாண விருந்தைப் பற்றியது. எதிரிகள் எவ்வளவு பொல்லாதவர்கள் என்பதை அவை அம்பலப்படுத்தின. அதைக் கேட்டு கொதித்தெழுந்த மதத் தலைவர்கள், அவரை எப்படியும் பிடித்துவிட முயற்சி செய்கின்றனர். ஆனால், இயேசுவை ஒரு தீர்க்கதரிசியாக கருதும் கூட்டத்திற்குப் பயந்தபடியால் அவரை கைதுசெய்வதற்கு ஏதுவாக அவருடைய வாயினாலேயே மாட்டிவிட சதித்திட்டம் தீட்டுகின்றனர். ஆனால் இயேசு கொடுத்த பதில்கள் அவர்களை ஊமையாக்கியது.​—மத்தேயு 21:⁠23-​22:⁠46.

13. வேதபாரகரையும் பரிசேயரையும் குறித்து என்ன அறிவுரையை இயேசு தமக்குச் செவிகொடுப்போருக்கு அளிக்கிறார்?

13 வேதபாரகரும் பரிசேயரும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிப்பதாக உரிமை பாராட்டுகின்றனர். அதனால் இயேசு தமக்குச் செவிகொடுத்துக் கேட்போரிடம் இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில் அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.” (மத்தேயு 23:​1-3) எப்பேர்ப்பட்ட வலிமைமிக்க கண்டனம்! ஆனால் இயேசு தம்முடைய கண்டனத்தை இத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. இதுவே, ஆலயத்தில் அவருடைய கடைசி நாள். இடிமுழக்கத்தைப்போல், அவர்களுடைய செயல்களை அடுக்கடுக்காக தைரியமாய் அம்பலப்படுத்துகிறார்.

14, 15. வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் எதிராக என்ன கடுமையான கண்டன வார்த்தைகளை இயேசு கூறுகிறார்?

14 அவர்கள் அவ்வளவு மோசமாக இருந்ததால், “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ” என்று இயேசு ஆறு தடவை கூறுகிறார். ஏனெனில், மனிதருக்கு முன்பாக பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப்போட்டு, பிரவேசிக்கப் போகிறவர்களை பிரவேசிப்பதற்கு அனுமதிக்கிறதில்லை. இந்த மாய்மாலக்காரர்கள், ஒருவனை தங்கள் மார்க்கத்தானாக்குவதற்கு சமுத்திரத்தையும் வறண்ட நிலத்தையும் சுற்றித்திரிகிறார்கள், என்ன பிரயோஜனம்? அவனை நித்திய அழிவுக்குத்தான் வழிநடத்துகிறார்கள். “நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும்” கவனியாமல் விட்டு, தசம பாகம் செலுத்துவதற்கே மிகுந்த கவனத்தை செலுத்துகிறார்கள். சொல்லப்போனால், ‘போஜன பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறார்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கின்றன.’ அதாவது, வெளித் தோற்றத்திற்கு மட்டுமே பக்திமான்கள்போல் தென்படும் இவர்களின் இதயமோ எல்லாவித அசுத்தத்தாலும் நிறைந்திருக்கிறது. அவர்கள் “தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கி”றார்கள். என்றபோதிலும், தொண்டு செய்வதாக காட்டுவதற்கு தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டி, அவற்றை சிங்காரிக்கிறார்கள்.​—⁠மத்தேயு 23:13-​15, 23-​31.

15 எதிரிகளின் ஆவிக்குரிய நிலையைக் கண்டனம் செய்து இயேசு இவ்வாறு சொல்கிறார்: “குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ.” அவர்கள் நீதிநெறியில் குருடராக இருக்கிறார்கள். ஏனெனில், வணக்கத்திற்குரிய இடமாகிய அந்த ஆலயத்தின் ஆவிக்குரிய மதிப்பிற்கு அல்ல, ஆனால் அதன் பொன்னிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும், இயேசு மிகக் கடுமையான கண்டன வார்த்தைகளைக் கூறுகிறார். “சர்ப்பங்களே, விரியன் பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு [“கெஹென்னா ஆக்கினைக்கு,” NW] எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?” ஆம், பொல்லாத வழியில் தொடருவதால் நித்திய அழிவை அடைவார்கள் என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 23:16-​22, 33) நாமும் ராஜ்ய செய்தியை யாவரறிய அறிவிப்பதிலும் பொய் மதத்தை அம்பலப்படுத்துவதிலும் தைரியம் காட்டுவோமாக!

16. ஒலிவ மலைமீது உட்கார்ந்திருக்கையில், என்ன முக்கியமான தீர்க்கதரிசனத்தை இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கூறுகிறார்?

16 இயேசு இப்போது ஆலயத்தை விட்டுச் செல்கிறார். சாயங்கால வேளையில் அவரும் அவருடைய அப்போஸ்தலரும் ஒலிவ மலையின்மீது ஏறுகிறார்கள்; அங்கு உட்கார்ந்திருக்கையில், ஆலயத்தின் அழிவையும், தம்முடைய வந்திருத்தலின் அடையாளத்தையும், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவையும் பற்றிய தீர்க்கதரிசனத்தை இயேசு சொல்கிறார். தீர்க்கதரிசன வார்த்தைகளின் உட்கருத்து நம்முடைய காலத்திற்கும் பொருந்துகிறது. அந்தச் சாயங்காலத்தில் இயேசு இதையும் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்கிறார்: “இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்.”​—மத்தேயு 24:​1-14; 26:​1, 2.

இயேசு ‘தம்முடையவர்களிடத்தில் முடிவுபரியந்தமும் அன்பு வைக்கிறார்’

17. (அ) நிசான் 14-⁠ல் பஸ்கா ஆசரிப்பின்போது, அந்தப் பன்னிருவருக்கு என்ன பாடத்தை இயேசு கற்பிக்கிறார்? (ஆ) யூதாஸ் காரியோத்தை அனுப்பிவிட்ட பின்பு, என்ன நினைவு ஆசரிப்பை இயேசு தொடங்கி வைக்கிறார்?

17 அடுத்த இரண்டு நாட்களாகிய நிசான் 12-⁠லும் 13-⁠லும் இயேசு வெளிப்படையாக ஆலயத்திற்குச் செல்லவில்லை. மதத் தலைவர்கள் அவரைக் கொலை செய்ய வகைதேடுகின்றனர். ஆனால் தம்முடைய அப்போஸ்தலருடன் பஸ்கா ஆசரிப்பதை எதுவும் தடைசெய்ய அவர் விரும்புகிறதில்லை. வியாழக்கிழமை சூரிய அஸ்தமனத்தோடு நிசான் 14 ஆரம்பமாகிறது. இது, இயேசுவினுடைய மனித வாழ்க்கையின் கடைசி நாள். அன்று மாலையில் இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் பஸ்காவை ஆசரிப்பதற்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற எருசலேமிலுள்ள ஒரு வீட்டில் இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக பஸ்காவை அனுபவிக்கையில், இயேசு அவர்களின் பாதங்களைக் கழுவி, மனத்தாழ்மைக்கு ஓர் ஒப்பற்ற பாடத்தை கற்பிக்கிறார். தன் எஜமானரை 30 வெள்ளிக்காசுகளுக்கு, அதாவது மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி வெறும் ஓர் அடிமையின் விலைக்கு காட்டிக் கொடுக்க சம்மதித்திருந்த யூதாஸ் காரியோத்தை அனுப்பிய பிறகு இயேசு தம்முடைய மரண நினைவு ஆசரிப்பை தொடங்கி வைக்கிறார்.​—யாத்திராகமம் 21:32; மத்தேயு 26:14, 15, 26-​29; யோவான் 13:​2-​30.

18. கூடுதலான என்ன போதனைகளை இயேசு தம்முடைய உண்மையுள்ள 11 அப்போஸ்தலருக்கு அன்புடன் அளிக்கிறார், தாம் சீக்கிரத்தில் பிரிவதற்குமுன் அவர்களை எவ்வாறு ஆயத்தம் செய்கிறார்?

18 நினைவு ஆசரிப்பைத் தொடங்கி கொஞ்ச நேரத்திற்குள், தங்களில் யார் மிகப் பெரியவன் என்ற வாக்குவாதம் அப்போஸ்தலர்களுக்குள் மும்முரமாக வந்துவிடுகிறது. இயேசு அவர்களை கண்டிப்பதற்குப் பதிலாக, மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதன் முக்கியத்துவத்தை பொறுமையுடன் கற்பிக்கிறார். தமக்கு நேரிட்ட சோதனைகளில் தம்முடன் நிலைத்திருந்ததற்கு நன்றி தெரிவித்து, ராஜ்யத்திற்கான உடன்படிக்கையை அவர்களுடன் செய்கிறார். (லூக்கா 22:24-​30) மேலும், அவர்தாமே அவர்களில் அன்புகூர்ந்தது போல் அவர்களும் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டுமென்றும் கட்டளையிடுகிறார். (யோவான் 13:34) இயேசு சீக்கிரத்தில் அவர்களைவிட்டு பிரிந்து செல்வார். ஆகையால், மீதமிருந்த கொஞ்ச நேரத்திலும் அவர்களை அன்புடன் ஆயத்தம் செய்கிறார். தம்முடைய நட்பு என்றும் தொடரும் என அவர்களுக்கு உறுதிகூறுகிறார். விசுவாசத்தோடு இருப்பதற்கு ஊக்குவித்து, பரிசுத்த ஆவியின் உதவி அவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என வாக்குறுதி அளிக்கிறார். (யோவான் 14:​1-​17; 15:15) அந்த வீட்டைவிட்டு செல்வதற்கு முன்பு, இயேசு தம் பிதாவிடம் இவ்வாறு வேண்டிக்கொள்கிறார்: “பிதாவே, வேளை வந்தது, . . . உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.” அப்போஸ்தலர்களை விட்டு பிரிந்து செல்வதற்கு முன்பு இயேசு அவர்களை ஆயத்தம் செய்கிறார், ‘தம்முடையவர்களிடத்தில் முடிவுபரியந்தமும் அன்பு வைத்திருக்கிறார்.’​—யோவான் 13:1; 17:⁠1, 2.

19. கெத்செமனே தோட்டத்தில் இயேசு ஏன் மனவேதனை அடைகிறார்?

19 இயேசுவும் அவருடைய உண்மையுள்ள 11 அப்போஸ்தலரும் கெத்செமனே தோட்டத்திற்குப் போய்ச் சேருகையில் நள்ளிரவு கடந்து வெகு நேரமாகியிருக்கலாம். இயேசு தம்முடைய அப்போஸ்தலருடன் அங்கு அடிக்கடி சென்றிருக்கிறார். (யோவான் 18:​1, 2) சில மணிநேரத்தில், இகழத்தக்க குற்றவாளியாக பழிசுமத்தப்பட்டு இயேசு மரிக்கப்போகிறார். அந்த சம்பவத்தையும் அது பிதாவின்மீது நிந்தையைக் கொண்டுவரக்கூடும் என்பதையும் பற்றிய மனவேதனை அவ்வளவு மிகக் கடுமையாக இருப்பதால், இயேசு ஜெபிக்கையில் அவருடைய வியர்வை இரத்தத் துளிகளாகி தரையில் விழுகிறது. (லூக்கா 22:41-​44) “வேளை வந்தது!” என்று இயேசு தம்முடைய அப்போஸ்தலரிடம் சொல்கிறார். “என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான்.” அவர் பேசிக்கொண்டிருக்கையில், தீவட்டிகளையும், தீபங்களையும், பட்டயங்களையும் பிடித்துக்கொண்டுவரும் பெருங்கூட்டத்தாருடன் யூதாஸ்காரியோத்து அவரை அணுகுகிறான். அவரை கைதுசெய்ய அவர்கள் வந்திருக்கிறார்கள். இயேசு எதிர்க்கிறதில்லை. “அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்க வேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும்?” என்று அவர் விளக்குகிறார்.​—மாற்கு 14:41-​43; மத்தேயு 26:48-​54.

மனுஷகுமாரன் மகிமைப்படுத்தப்படுகிறார்

20. (அ) இயேசு கைதுசெய்யப்பட்ட பின்பு என்ன கொடுமைகளை அனுபவிக்கிறார்? (ஆ) தாம் மரிப்பதற்கு ஒருசில விநாடிகளுக்கு முன்பு, “முடிந்தது” என்று இயேசு ஏன் சத்தமிட்டு சொல்கிறார்?

20 கைது செய்யப்பட்ட பிறகு, இயேசு பொய்ச் சாட்சிகளால் குற்றஞ்சாட்டப்பட்டு, பாரபட்சமுள்ள நியாயாதிபதிகளால் குற்றமுள்ளவரென தீர்க்கப்பட்டு, பொந்தியு பிலாத்துவால் தீர்ப்பளிக்கப்பட்டு, ஆசாரியர்களாலும் கலகக் கூட்டங்களாலும் ஏளனம் செய்யப்பட்டு, போர்ச் சேவகர்களால் பரியாசம் செய்யப்பட்டு வதைக்கப்படுகிறார். (மாற்கு 14:53-​65; 15:​1, 15; யோவான் 19:​1-3) வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் வாதனையின் கழுமரத்தில் இயேசு அறையப்படுகிறார். அவருடைய உடலின் பளுவினால் அவருடைய கைகளிலும் பாதங்களிலும் ஆணி அறையப்பட்ட காயங்கள் மேலும் கிழிகையில் தாங்கமுடியாத வேதனையடைகிறார். (யோவான் 19:17, 18) பிற்பகல் மூன்று மணிபோல், “முடிந்தது” என்று இயேசு சத்தமிட்டுச் சொல்கிறார். ஆம், பூமியில் தாம் செய்யவேண்டிய எல்லாவற்றையும் வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டார். தம்முடைய ஆவியைக் கடவுளிடம் ஒப்புவித்துவிட்டு, தலையை சாய்த்து உயிர்விடுகிறார். (யோவான் 19:28, 30; மத்தேயு 27:45, 46; லூக்கா 23:46) அதன்பின் மூன்றாம் நாளில், யெகோவா தம்முடைய குமாரனை உயிர்த்தெழுப்புகிறார். (மாற்கு 16:​1-6) தாம் உயிர்த்தெழுந்து நாற்பது நாட்களுக்குப் பின், இயேசு பரலோகங்களுக்கு செல்கிறார், அங்கே அவர் மகிமைப்படுத்தப்படுகிறார்.​—யோவான் 17:5; அப்போஸ்தலர் 1:​3, 9-​12; பிலிப்பியர் 2:8-11.

21. நாம் எவ்வாறு இயேசுவின் மாதிரியைப் பின்பற்றலாம்?

21 நாம் எவ்வாறு ‘இயேசுவின் அடிச்சுவடுகளை நெருங்க பின்பற்றலாம்?’ (1 பேதுரு 2:​21) அவரைப்போல் ராஜ்ய பிரசங்கிப்பிலும் சீஷராக்கும் ஊழியத்திலும் நாம் சுறுசுறுப்பாய் ஈடுபட வேண்டும். கடவுளுடைய வார்த்தையைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கு பயப்படக் கூடாது. (மத்தேயு 24:14; 28:19, 20; அப்போஸ்தலர் 4:​29-​31; பிலிப்பியர் 1:​14) கால ஓட்டத்தில் நாம் எங்கிருக்கிறோம் என்பதை ஒருபோதும் மறவாமல் இருப்போமாக, அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் தவறாமல் தூண்டுவோமாக. (மாற்கு 13:28-​33; எபிரெயர் 10:24, 25) ‘முடிவுகாலத்தில்’ வாழ்கிறோம் என்ற உணர்வோடு, எப்போதும் யெகோவாவின் சித்தத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்வோமாக.​—தானியேல் 12:⁠4.

நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?

• தம்முடைய மரணம் நெருங்கியதைப் பற்றி இயேசு அறிந்திருந்தது, எருசலேமிலிருந்த ஆலயத்தில் அவருடைய கடைசி ஊழியத்தின்மீது என்ன விளைவை ஏற்படுத்தியது?

• இயேசு ‘தம்முடையவர்களிடத்தில் முடிவுபரியந்தமும் அன்புவைத்தார்’ என்பதை எது காட்டுகிறது?

• இயேசுவினுடைய வாழ்க்கையின் கடைசி சில மணிநேரங்களில் நடந்த சம்பவங்கள் அவரைப் பற்றி என்ன தெரிவிக்கின்றன?

• நம் ஊழியத்தில் கிறிஸ்து இயேசுவின் மாதிரியை எவ்வாறு பின்பற்றலாம்?

[கேள்விகள்]

[பக்கம் 18-ன் படங்கள்]

இயேசு “முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார்”