யோவான் 18:1-40

18  இயேசு இவற்றைச் சொன்ன பின்பு, தன்னுடைய சீஷர்களோடு வெளியே போய், கீதரோன் பள்ளத்தாக்கைக்+ கடந்து ஒரு தோட்டத்தை அடைந்தார். அந்தத் தோட்டத்துக்குள் அவரும் அவருடைய சீஷர்களும் போனார்கள்.+  அங்கே இயேசு தன்னுடைய சீஷர்களோடு அடிக்கடி போயிருந்ததால், அவரைக் காட்டிக்கொடுக்க இருந்த யூதாசுக்கும் அந்த இடம் தெரிந்திருந்தது.  அதனால் படைப்பிரிவினரையும், முதன்மை குருமார்கள் மற்றும் பரிசேயர்கள் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக்கொண்டு அவன் அங்கே வந்தான்; அவர்கள் தீப்பந்தங்களையும் விளக்குகளையும் ஆயுதங்களையும் கொண்டுவந்தார்கள்.+  இயேசு தனக்கு நடக்கப்போகிற எல்லாவற்றையும் தெரிந்திருந்ததால் அவர்களுக்கு நேராகப் போய், “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.  அதற்கு அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறோம்”+ என்று சொன்னார்கள். அப்போது அவர், “நான்தான்” என்று சொன்னார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான்.+  “நான்தான்” என்று அவர் சொன்னதும், அவர்கள் பின்வாங்கி தரையில் விழுந்தார்கள்.+  அவர் மறுபடியும் அவர்களிடம், “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறோம்” என்று சொன்னார்கள்.  அப்போது இயேசு, “நான்தான் என்று உங்களுக்குச் சொன்னேனே. என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்” என்று சொன்னார்.  “நீங்கள் எனக்குத் தந்தவர்களில் ஒருவரையும் நான் இழந்துவிடவில்லை”+ என்று அவர் சொன்ன வார்த்தைகள் நிறைவேறும்படியே அப்படிச் சொன்னார். 10  அப்போது, சீமோன் பேதுரு தன்னுடைய வாளை உருவி தலைமைக் குருவின் வேலைக்காரனான மல்குஸ் என்பவனைத் தாக்கினார், அவனுடைய வலது காது அறுந்துபோனது.+ 11  அப்போது இயேசு, “வாளை உறையிலே போடு.+ என் தகப்பன் எனக்குக் கொடுத்திருக்கிற கிண்ணத்திலிருந்து* நான் குடித்தாக வேண்டும், இல்லையா?”+ என்று பேதுருவிடம் சொன்னார். 12  அப்போது, படைப்பிரிவினரும் படைத் தளபதியும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி, 13  முதலில் அன்னா என்பவரிடம் அவரைக் கொண்டுபோனார்கள். அவர் அந்த வருஷத்தின் தலைமைக் குருவான+ காய்பாவின்+ மாமனார். 14  ‘மக்களுக்காக ஒரேவொரு மனுஷன் சாவது உங்களுக்குத்தான் நல்லது’ என்று யூதர்களுக்கு ஆலோசனை சொன்னது இந்த காய்பாதான்.+ 15  சீமோன் பேதுருவும் மற்றொரு சீஷரும் இயேசுவுக்குப் பின்னால் போனார்கள்.+ இந்தச் சீஷர் தலைமைக் குருவுக்குத் தெரிந்தவர் என்பதால் இயேசுவோடு தலைமைக் குருவுடைய வீட்டு முற்றத்துக்குப் போனார். 16  ஆனால், பேதுரு வெளியே வாசலில் நின்றுகொண்டிருந்தார். தலைமைக் குருவுக்குத் தெரிந்த அந்தச் சீஷர் வெளியே போய், வாசலில் காவல் காத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் பேசி, பேதுருவை உள்ளே கூட்டிக்கொண்டு போனார். 17  அப்போது, வாசலில் காவல் காத்துக்கொண்டிருந்த அந்த வேலைக்காரி, “நீயும் அந்த மனுஷனுடைய சீஷன்தானே?” என்று பேதுருவிடம் கேட்டாள். அதற்கு அவர், “இல்லை” என்று சொன்னார்.+ 18  குளிராக இருந்ததால் வேலைக்காரர்களும் காவலர்களும் கரியால் தீ மூட்டி அதைச் சுற்றிநின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார். 19  இயேசுவிடம் அவருடைய சீஷர்களைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் தலைமைக் குரு விசாரணை செய்தார். 20  அப்போது இயேசு, “நான் உலகறியப் பேசியிருக்கிறேன். யூதர்கள் எல்லாரும் கூடிவருகிற ஜெபக்கூடத்திலும் ஆலயத்திலும் எப்போதும் கற்பித்திருக்கிறேன்;+ எதையும் நான் ரகசியமாகப் பேசியதே இல்லை. 21  அப்படியிருக்கும்போது, ஏன் என்னை விசாரணை செய்கிறீர்கள்? நான் பேசியதைக் கேட்டவர்களிடம் விசாரணை செய்யுங்கள். நான் என்ன பேசினேன் என்று அவர்களுக்குத் தெரியும்” என்று சொன்னார். 22  இயேசு இப்படிச் சொன்னதும், அங்கே நின்றுகொண்டிருந்த காவலர்களில் ஒருவன் அவருடைய கன்னத்தில் அறைந்து,+ “முதன்மை குருவுக்கு இப்படித்தான் பதில் சொல்வதா?” என்று கேட்டான். 23  அதற்கு இயேசு, “நான் தவறாகப் பேசியிருந்தால், அந்தத் தவறு என்னவென்று சொல். சரியாகப் பேசியிருந்தால், என்னை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டார். 24  அதன் பின்பு, கட்டுகளை அவிழ்க்காமலேயே அவரைத் தலைமைக் குருவான காய்பாவிடம் அன்னா அனுப்பி வைத்தார்.+ 25  சீமோன் பேதுரு அங்கே நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார். அப்போது சிலர் அவரிடம், “நீயும் அவனுடைய சீஷன்தானே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை” என்று மறுத்தார்.+ 26  தலைமைக் குருவுடைய வேலைக்காரர்களில் ஒருவன், பேதுருவால் காது வெட்டப்பட்டவனுடைய சொந்தக்காரன்.+ அவன் அவரிடம், “தோட்டத்தில் நான் உன்னை அவரோடு பார்த்தேனே” என்று சொன்னான். 27  ஆனால் பேதுரு மறுபடியும் மறுத்தார், உடனே சேவல் கூவியது.+ 28  பின்பு, அவர்கள் இயேசுவை காய்பாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்குக் கொண்டுபோனார்கள்.+ அது பொழுது விடியும் நேரம். பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்கு முன்பு தீட்டுப்படக் கூடாது என்பதற்காக யூதர்கள் அந்த மாளிகைக்குள் போகவில்லை.+ 29  அதனால் பிலாத்து வெளியே வந்து, “இந்த மனுஷன்மேல் நீங்கள் என்ன குற்றம் சுமத்துகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். 30  அதற்கு அவர்கள், “இவன் ஒரு குற்றவாளி இல்லையென்றால், இவனை உங்களிடம் ஒப்படைத்திருக்கவே மாட்டோம்” என்று சொன்னார்கள். 31  அப்போது பிலாத்து, “இவனை நீங்களே கொண்டுபோய் உங்கள் சட்டப்படி தீர்ப்பு வழங்குங்கள்”+ என்று சொன்னார். அதற்கு யூதர்கள், “யாருக்கும் மரண தண்டனை விதிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை”+ என்று சொன்னார்கள். 32  தான் எந்த விதத்தில் சாக வேண்டியிருக்கும்+ என்று இயேசு குறிப்பாகச் சொல்லியிருந்தாரோ அது நிறைவேறும்படியே அப்படி நடந்தது. 33  பிலாத்து மறுபடியும் ஆளுநர் மாளிகைக்குள் போய் இயேசுவைக் கூப்பிட்டு, “நீ யூதர்களுடைய ராஜாவா?”+ என்று கேட்டார். 34  அதற்கு இயேசு, “நீங்களே இதைக் கேட்கிறீர்களா, அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றிச் சொன்னதை வைத்துக் கேட்கிறீர்களா?” என்றார். 35  அப்போது பிலாத்து, “நான் ஒரு யூதனா என்ன? உன்னுடைய தேசத்தாரும் முதன்மை குருமார்களும்தான் உன்னை என்னிடம் ஒப்படைத்தார்கள். நீ என்ன செய்தாய்?” என்று கேட்டார். 36  அதற்கு இயேசு,+ “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல.+ என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், நான் யூதர்களிடம் ஒப்படைக்கப்படாதபடி என் ஊழியர்கள் எனக்காகப் போராடியிருப்பார்கள்.+ ஆனால், என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தைச் சேர்ந்ததல்ல” என்று சொன்னார். 37  “அப்படியென்றால் நீ ஒரு ராஜாவா?” என்று பிலாத்து கேட்டார். அதற்கு இயேசு, “நான் ஒரு ராஜாவென்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.+ சத்தியத்தைப் பற்றிச் சாட்சி கொடுப்பதற்காகவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்துக்கு வந்தேன்.+ சத்தியத்தின் பக்கம் இருக்கிற ஒவ்வொருவனும் நான் சொல்வதைக் கேட்கிறான்” என்று சொன்னார். 38  “சத்தியமா? அது என்ன?” என்று பிலாத்து கேட்டார். இப்படிக் கேட்டுவிட்டு, அவர் மறுபடியும் வெளியே வந்து யூதர்களைப் பார்த்து, “இவனிடம் எந்தவொரு குற்றமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.+ 39  பஸ்கா பண்டிகையின்போது உங்களுக்காக நான் ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் இருக்கிறதே.+ அதன்படி, யூதர்களுடைய ராஜாவை நான் உங்களுக்கு விடுதலை செய்யட்டுமா?” என்று கேட்டார். 40  அதற்கு அவர்கள், “வேண்டாம், பரபாசை விடுதலை செய்யுங்கள்!” என்று மறுபடியும் கத்தினார்கள். அந்த பரபாஸ் ஒரு கொள்ளைக்காரன்.+

அடிக்குறிப்புகள்

“கிண்ணம்” என்பது கடவுளுடைய சித்தத்தை, அதாவது இயேசு தெய்வ நிந்தனை செய்தார் என்று பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கொல்லப்படுவதற்குக் கடவுள் அவரை அனுமதித்ததை அடையாளப்படுத்துகிறது.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா