எபிரெயர் 10:1-39

10  திருச்சட்டம், வரப்போகிற நன்மைகளின் நிஜம் அல்ல,+ அவற்றின் நிழல்தான்.+ அதனால்தான், திருச்சட்டத்தாலும்* வருஷா வருஷம் தொடர்ந்து கொடுக்கப்படுகிற ஒரேவிதமான பலிகளாலும் கடவுளை வணங்குகிற ஆட்களை ஒருபோதும் பரிபூரணமாக்க முடியாது.+  அப்படிப் பரிபூரணமாக்க முடியுமென்றால் பலி கொடுப்பது நிறுத்தப்பட்டிருக்கும், இல்லையா? பலி கொடுக்கிறவர்கள்* ஒரு தடவை சுத்தமாகிவிட்டால், அதன் பிறகு பாவங்களைப் பற்றிய உணர்வுகூட அவர்களுக்கு இருக்காதே!*  ஆனால், பாவங்கள் இன்னமும் இருக்கின்றன என்பதை அந்தப் பலிகள் வருஷா வருஷம் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.+  ஏனென்றால் காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தால் பாவங்களைப் போக்க முடியாது.  அதனால், கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்தபோது, “‘பலியையும் காணிக்கையையும் நீங்கள் விரும்பவில்லை, ஆனால் எனக்காக ஓர் உடலைத் தயார்படுத்தினீர்கள்.  தகன பலிகளையும் பாவப் பரிகார பலிகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை’ என்று கடவுளிடம் சொன்னார்.+  அதோடு, ‘கடவுளே, இதோ, உங்களுடைய விருப்பத்தை* நிறைவேற்ற வந்துவிட்டேன். சுருளில்* என்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது’ என்று சொன்னேன்” என்றார்.+  முதலில், திருச்சட்டத்தின்படி கொடுக்கப்படுகிற பலிகளைப் பற்றி, “பலிகளையும் காணிக்கைகளையும் தகன பலிகளையும் பாவப் பரிகார பலிகளையும் நீங்கள் விரும்பவில்லை, அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று சொன்னாலும்,  பின்பு, “இதோ! உங்களுடைய விருப்பத்தை* நிறைவேற்ற வந்துவிட்டேன்” என்று சொன்னார்.+ அதனால், இரண்டாவதை நிலைநாட்டுவதற்காக முதலாவதை அவர் நீக்கிப்போடுகிறார். 10  இயேசு கிறிஸ்து தன்னுடைய உடலை எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி கொடுத்து அந்த “விருப்பத்தை”+ நிறைவேற்றியதால்தான் நாம் புனிதமாக்கப்பட்டிருக்கிறோம்.+ 11  தினமும் மக்களுக்குப் பரிசுத்த சேவை* செய்கிற ஒவ்வொரு குருவும்+ ஒரேவிதமான பலிகளைத் திரும்பத் திரும்பக் கொடுக்கிறார்;+ அவற்றால் ஒருபோதும் பாவங்களை முழுமையாகப் போக்க முடியாது.+ 12  ஆனால், இவர் நம்முடைய பாவங்களுக்காக எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி கொடுத்துவிட்டு, கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தார்.+ 13  அந்தச் சமயத்திலிருந்து, தன்னுடைய எதிரிகள் தனக்குக் கால்மணையாக்கிப் போடப்படும்வரை காத்துக்கொண்டிருக்கிறார்.+ 14  புனிதமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியால் என்றென்றும் இவர் பரிபூரணமாக்கியிருக்கிறார்.+ 15  கடவுளுடைய சக்தியும் இப்படி நமக்குச் சாட்சி கொடுக்கிறது: 16  “யெகோவா* சொல்கிறார், ‘அந்த நாட்களுக்குப் பின்பு நான் அவர்களோடு செய்யப்போகிற ஒப்பந்தம் இதுதான். நான் அவர்களுடைய இதயத்தில் என் சட்டங்களை வைப்பேன், அவர்களுடைய மனதில் அவற்றை எழுதுவேன்.’”+ 17  “அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்”+ என்றும் அது சொல்கிறது. 18  அதனால், இவற்றுக்கு மன்னிப்பு கிடைத்த பின்பு பாவப் பரிகார பலிக்கு அவசியம் இல்லை. 19  அதனால் சகோதரர்களே, இயேசு தன்னுடைய உடலாகிய திரைச்சீலையைக்+ கடப்பதன் மூலம் மகா பரிசுத்த அறைக்குள் போக நமக்காக ஒரு புதிய வழியைத் திறந்திருக்கிறார்,+ அது வாழ்வு தரும் வழி. 20  அந்த வழியில் மகா பரிசுத்த அறைக்குள் போக அவருடைய இரத்தத்தால் நமக்குத் தைரியம்* கிடைத்திருப்பதாலும், 21  கடவுளுடைய வீட்டின் மீது அதிகாரமுள்ள அவர் நம்முடைய மாபெரும் குருவாக இருப்பதாலும்+ முழு விசுவாசத்தோடு கடவுளை நாம் அணுக வேண்டும். 22  கெட்ட மனசாட்சியிலிருந்து சுத்தமாக்கப்பட்ட*+ இதயமும், சுத்தமான தண்ணீரால் கழுவப்பட்ட உடலும்+ உள்ளவர்களாக, உண்மை இதயத்தோடும் முழு விசுவாசத்தோடும் அவரை அணுக வேண்டும். 23  நமக்கு வாக்குறுதி தந்தவர் நம்பகமானவர் என்பதால், எந்த விதமான சந்தேகமும் இல்லாமல் நம்முடைய நம்பிக்கையைப் பற்றி எல்லாருக்கும் சொல்ல வேண்டும்.+ 24  அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்;+ 25  சிலர் வழக்கமாகச் சபைக் கூட்டங்களுக்கு வராமல் இருந்துவிடுவதுபோல் நாமும் இருந்துவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, ஒன்றுகூடிவந்து+ ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்;+ நாள் நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ+ அந்தளவுக்கு ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும். 26  சத்தியத்தைப் பற்றித் திருத்தமாகத் தெரிந்துகொண்ட பின்பு+ வேண்டுமென்றே நாம் பாவங்கள் செய்துவந்தால் அந்தப் பாவங்களுக்காக நாம் வேறெந்தப் பலியும் கொடுக்க முடியாது.+ 27  நாம் பயத்தோடு எதிர்பார்க்கிற நியாயத்தீர்ப்பையும், எதிரிகளைச் சுட்டுப் பொசுக்கப்போகிற கடவுளுடைய பயங்கர கோபத்தையும்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.+ 28  மோசேயின் திருச்சட்டத்தை அவமதிக்கிறவன் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் இரக்கமில்லாமல் கொல்லப்படுகிறான் என்றால்,+ 29  கடவுளுடைய மகனை மிதித்து, தன்னைப் புனிதப்படுத்திய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் இரத்தத்தைச்+ சாதாரணமாக நினைத்து, அளவற்ற கருணையைக் காட்டுகிற கடவுளுடைய சக்தியை அவமதிக்கிறவனுக்கு இன்னும் எந்தளவு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.+ 30  “யெகோவா* தன்னுடைய ஜனங்களுக்குத் தீர்ப்பு கொடுப்பார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது; “பழிவாங்குவது என் பொறுப்பு, நானே பதிலடி கொடுப்பேன்” என்று சொன்னவரை நமக்குத் தெரியும்.+ 31  உயிருள்ள கடவுளுடைய கைகளில் சிக்கிக்கொள்வது பயங்கரமாக இருக்கும். 32  ஆனாலும், முந்தின நாட்களை எப்போதும் நினைத்துப் பாருங்கள்; உங்களுக்கு அறிவொளி+ கிடைத்த பின்பு பயங்கரமான போராட்டங்களையும் கஷ்டங்களையும் சகித்துக்கொண்டீர்கள். 33  சிலசமயங்களில், எல்லாருக்கும் முன்பாக* அவமானங்களுக்கும் உபத்திரவங்களுக்கும் ஆளானீர்கள். சிலசமயங்களில், அப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவித்தவர்களுக்குத் துணையாக இருந்தீர்கள். 34  சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்காக அனுதாபப்பட்டீர்கள்; உங்களுடைய உடைமைகள் பறிக்கப்பட்டபோது, அவற்றைவிட உயர்ந்த, நிலையான சொத்து உங்களுக்கு இருப்பதைத் தெரிந்து,+ அந்த இழப்பைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டீர்கள்.+ 35  அதனால், தைரியத்தை* விட்டுவிடாதீர்கள்; அதற்குப் பெரிய பலன் கிடைக்கும்.+ 36  நீங்கள் கடவுளுடைய விருப்பத்தை* நிறைவேற்றி, அவர் வாக்குறுதி கொடுத்ததைப் பெற வேண்டுமென்றால் சகித்திருப்பது+ அவசியம். 37  ஏனென்றால், இன்னும் “கொஞ்ச நேரம்தான் இருக்கிறது,”+ “வரப்போகிறவர் தாமதிக்காமல் வந்துவிடுவார்.”+ 38  “நீதிமானாக இருக்கிற என் ஊழியனோ விசுவாசத்தால் வாழ்வு பெறுவான்;+ அவன் பின்வாங்கினால் அவன்மேல் எனக்குப் பிரியம் இருக்காது” என்று எழுதப்பட்டிருக்கிறது.+ 39  அதனால்தான், நாம் பின்வாங்கி அழிந்துபோகிறவர்களாக இல்லாமல்,+ விசுவாசத்தோடு இருந்து நம் உயிரைப் பாதுகாத்துக்கொள்கிறவர்களாக இருக்கிறோம்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “ஆட்களாலும்.”
நே.மொ., “பரிசுத்த சேவை செய்கிறவர்கள்.”
வே.வா., “பாவங்களைக் குறித்து இனியும் அவர்களுடைய மனசாட்சி உறுத்தாது.”
வே.வா., “சித்தத்தை.”
நே.மொ., “புத்தகச் சுருளில்.”
வே.வா., “சித்தத்தை.”
வே.வா., “தொண்டு.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “உறுதியான நம்பிக்கை.”
நே.மொ., “தெளிக்கப்பட்ட.” அதாவது, இயேசுவின் இரத்தத்தால் தெளிக்கப்பட்ட.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “அரங்கத்திலே வேடிக்கை செய்யப்படுகிறவர்கள் போல்.”
நே.மொ., “தயக்கமில்லாமல் பேசுவதை.”
வே.வா., “சித்தத்தை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா