யோவான் 19:1-42

19  பின்பு, இயேசுவைக் கொண்டுபோய் முள்சாட்டையால் அடிக்கும்படி பிலாத்து கட்டளையிட்டார்.+  படைவீரர்கள் ஒரு முள்கிரீடம் செய்து அதை அவர் தலைமேல் வைத்தார்கள், பின்பு ஊதா நிற சால்வையை அவருக்குப் போர்த்திவிட்டார்கள்.+  அவர் பக்கத்தில் திரும்பத் திரும்பப் போய், “யூதர்களுடைய ராஜாவே, வாழ்க!” என்று சொன்னார்கள். அவருடைய கன்னத்தில் மறுபடியும் மறுபடியும் அறைந்தார்கள்.+  பிலாத்து திரும்பவும் வெளியே வந்து கூட்டத்தாரிடம், “அவனிடம் எந்தக் குற்றத்தையும் நான் பார்க்கவில்லை.+ இதை நீங்கள் தெரிந்துகொள்வதற்காக அவனை வெளியே உங்களிடம் கொண்டுவருகிறேன்” என்று சொன்னார்.  அப்போது, முள்கிரீடத்தோடும் ஊதா நிற சால்வையோடும் இயேசு வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம், “இதோ! இந்த மனுஷன்!” என்று சொன்னார்.  ஆனால், முதன்மை குருமார்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது, “இவனை மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்! மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!”+ என்று கத்தினார்கள். அப்போது பிலாத்து, “நீங்களே இவனைக் கொண்டுபோய் மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள், இவனிடம் எந்தக் குற்றத்தையும் நான் பார்க்கவில்லை”+ என்று சொன்னார்.  அதற்கு யூதர்கள், “எங்களுக்கு ஒரு சட்டம் இருக்கிறது, அந்தச் சட்டத்தின்படி இவன் சாக வேண்டும்.+ ஏனென்றால், இவன் தன்னைக் கடவுளுடைய மகன் என்று சொல்லிக்கொண்டான்”+ என்றார்கள்.  பிலாத்து இதைக் கேட்டபோது இன்னும் அதிகமாகப் பயந்தார்.  அதனால் மறுபடியும் மாளிகைக்குள் போய், “நீ எங்கிருந்து வந்திருக்கிறாய்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு இயேசு எந்தப் பதிலும் சொல்லவில்லை.+ 10  அப்போது பிலாத்து அவரிடம், “என்னிடம் பேச மாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது, உன்னைக் கொல்லவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது என்று உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார். 11  அப்போது இயேசு, “மேலே இருந்து உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்றால் எனக்கு எதிராக எதையும் செய்ய உங்களுக்கு அதிகாரம் இருக்காது. இதனால்தான் என்னை உங்களிடம் ஒப்படைத்தவனுக்கு அதிக பாவம் இருக்கிறது” என்று சொன்னார். 12  அதனால், அவரை விடுதலை செய்வதற்கு பிலாத்து வழிதேடிக்கொண்டே இருந்தார். யூதர்களோ, “இவனை விடுதலை செய்தால் ரோம அரசனுக்கு* நீங்கள் நண்பர் கிடையாது. தன்னை ராஜா என்று சொல்லிக்கொள்கிற எவனும் ரோம அரசனுக்கு விரோதி”+ என்று கத்தினார்கள். 13  பிலாத்து இந்த வார்த்தைகளைக் கேட்டதும் இயேசுவை வெளியே வரவழைத்தார். பின்பு, கல்தளம் என்ற இடத்திலிருந்த நியாயத்தீர்ப்பு மேடையில் உட்கார்ந்தார். அந்த இடத்துக்கு எபிரெய மொழியில் கபத்தா என்று பெயர். 14  அன்று, பஸ்காவுக்கு ஆயத்த நாளாக இருந்தது.+ அப்போது, சுமார் ஆறாம் மணிநேரமாக* இருந்தது. அவர் யூதர்களிடம், “இதோ! உங்கள் ராஜா!” என்று சொன்னார். 15  அதற்கு அவர்கள், “இவனை ஒழித்துக்கட்டுங்கள்! ஒழித்துக்கட்டுங்கள்! மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், “உங்கள் ராஜாவையா கொல்லச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு முதன்மை குருமார்கள், “ரோம அரசனைத் தவிர வேறெந்த ராஜாவும் எங்களுக்கு இல்லை” என்று சொன்னார்கள். 16  பின்பு, மரக் கம்பத்தில் அறைந்து கொல்வதற்காக அவரை பிலாத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.+ அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள். 17  சித்திரவதைக் கம்பத்தை* அவரே சுமந்துகொண்டு மண்டையோடு என்ற இடத்துக்குப் போனார்;+ எபிரெய மொழியில் அதற்கு கொல்கொதா என்று பெயர்.+ 18  அங்கே அவர்கள் இயேசுவை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்தார்கள்;+ அவருக்கு இந்தப் பக்கம் ஒருவனும் அந்தப் பக்கம் ஒருவனுமாக வேறு இரண்டு பேரையும் மரக் கம்பங்களில் ஏற்றினார்கள்.+ 19  பிலாத்து ஒரு வாசகத்தை எழுதி அவருடைய சித்திரவதைக் கம்பத்தின்* மேல் வைத்தார். அதில், “நாசரேத்தூர் இயேசு, யூதர்களுடைய ராஜா”+ என்று எழுதப்பட்டிருந்தது. 20  மரக் கம்பத்தில் இயேசு ஆணியடிக்கப்பட்ட இடம் நகரத்துக்குப் பக்கத்தில் இருந்ததால் நிறைய யூதர்கள் அந்த வாசகத்தைப் படித்தார்கள். அது எபிரெயுவிலும் லத்தீனிலும் கிரேக்கிலும் எழுதப்பட்டிருந்தது. 21  யூதர்களின் முதன்மை குருமார்களோ, “‘யூதர்களுடைய ராஜா’ என்று எழுதாமல், ‘நான் யூதர்களுடைய ராஜா’ என்று அவன் சொல்லிக்கொண்டதாக எழுதுங்கள்” என்று பிலாத்துவிடம் சொன்னார்கள். 22  அதற்கு பிலாத்து, “நான் எழுதியது எழுதியதுதான்” என்று சொன்னார். 23  படைவீரர்கள் இயேசுவை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்த பின்பு, அவருடைய மேலங்கிகளை நான்கு பாகங்களாக்கி ஆளுக்கொரு பாகத்தை எடுத்துக்கொண்டார்கள்; உள்ளங்கியையும் எடுத்துக்கொண்டார்கள். அந்த உள்ளங்கி தையல் இல்லாமல் மேலிருந்து கீழ்வரை ஒரே துணியாக நெய்யப்பட்டிருந்தது. 24  அதனால், “இதைக் கிழிக்க வேண்டாம்; இது யாருக்கு என்று குலுக்கல் போட்டுப் பார்க்கலாம்”+ என ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள். “என்னுடைய அங்கிகளைப் பங்கு போட்டுக்கொள்கிறார்கள், என்னுடைய உடைக்காகக் குலுக்கல் போடுகிறார்கள்”+ என்ற வசனம் நிறைவேறும்படியே அப்படி நடந்தது. உண்மையில், அந்தப் படைவீரர்கள் அதைத்தான் செய்தார்கள். 25  இயேசுவுடைய சித்திரவதைக் கம்பத்துக்கு* பக்கத்தில் அவருடைய அம்மாவும்,+ அம்மாவின் சகோதரியும், குளோப்பாவின் மனைவி மரியாளும், மகதலேனா மரியாளும்+ நின்றுகொண்டிருந்தார்கள். 26  அப்போது, பக்கத்தில் இருந்த தன்னுடைய அம்மாவையும் அன்புச் சீஷரையும்+ இயேசு பார்த்து, தன்னுடைய அம்மாவிடம், “பெண்மணியே, இதோ! உங்கள் மகன்!” என்று சொன்னார். 27  அடுத்ததாக அந்தச் சீஷரிடம், “இதோ! உன் அம்மா!” என்று சொன்னார். அன்றைக்கே அவருடைய அம்மாவை அந்தச் சீஷர் தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனார். 28  பின்பு, எல்லாம் முடிந்துவிட்டதை இயேசு தெரிந்துகொண்டு, “எனக்குத் தாகமாக இருக்கிறது”+ என்று சொன்னார். வேதவசனம் நிறைவேறும்படியே இப்படிச் சொன்னார். 29  புளிப்பான திராட்சமது நிறைந்த ஒரு ஜாடி அங்கே இருந்ததால், ஒரு கடற்பஞ்சை அதில் நனைத்து மருவுச்செடியின்* தண்டில் மாட்டி அவருடைய வாய்க்குப் பக்கத்தில் நீட்டினார்கள்.+ 30  இயேசு அந்தப் புளிப்பான திராட்சமதுவைச் சுவைத்த பின்பு, “முடித்துவிட்டேன்!”+ என்று சொல்லி, தலைசாய்த்து உயிர்விட்டார்.+ 31  அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு+ ஆயத்த நாளாக இருந்தது;+ அதனால், ஓய்வுநாளிலே உடல்கள் சித்திரவதைக் கம்பங்களில் தொங்கிக்கொண்டிருக்காதபடி+ அவர்களுடைய கால்களை உடைத்து உடல்களை எடுத்துவிடும்படி பிலாத்துவிடம் யூதர்கள் கேட்டுக்கொண்டார்கள். 32  உடனே படைவீரர்கள் போய், அவர் பக்கத்திலிருந்த மரக் கம்பங்களில் ஏற்றப்பட்டவர்களில் ஒருவனுடைய கால்களை முதலில் உடைத்தார்கள், பின்பு மற்றவனுடைய கால்களையும் உடைத்தார்கள். 33  ஆனால் இயேசுவிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே இறந்திருந்ததைப் பார்த்து அவருடைய கால்களை உடைக்காமல் விட்டுவிட்டார்கள். 34  இருந்தாலும், படைவீரர்களில் ஒருவன் அவருடைய விலாவை ஈட்டியால் குத்தினான்;+ உடனே இரத்தமும் தண்ணீரும் வெளியே வந்தன. 35  இதை நேரில் பார்த்த ஒருவர் சாட்சி கொடுத்திருக்கிறார், அவருடைய சாட்சி உண்மையானது. அவர் உண்மையைத்தான் சொல்கிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காக அவற்றைச் சொல்லியிருக்கிறார்.+ 36  “அவருடைய எலும்புகளில் ஒன்றுகூட முறிக்கப்படாது”*+ என்ற வசனம் நிறைவேறும்படியே அவை நடந்தன. 37  “அவர்கள் யாரைக் குத்தினார்களோ அவரைப் பார்ப்பார்கள்”+ என்று வேறொரு வசனமும் சொல்கிறது. 38  அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீஷர்களில் ஒருவர். ஆனால், யூதர்களுக்குப் பயந்து அதை வெளியே சொல்லாமல் இருந்தவர்.+ அவர் இயேசுவின் உடலை எடுத்துக்கொண்டு போக பிலாத்துவிடம் அனுமதி கேட்டார். பிலாத்து அனுமதி கொடுத்ததால் அவருடைய உடலை எடுத்துக்கொண்டு போனார்.+ 39  முதல் தடவை ஒரு ராத்திரி நேரத்தில் அவரைச் சந்தித்திருந்த நிக்கொதேமு+ என்பவர்கூட, வெள்ளைப்போளமும்* அகில் தூளும் கலந்த நறுமணக் கலவையை* ஏறக்குறைய நூறு ராத்தல்* கொண்டுவந்தார்.+ 40  அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்கிற வழக்கத்தின்படியே நறுமணப் பொருள்களோடு நாரிழை* துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.+ 41  அவர் கொல்லப்பட்ட இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் ஒரு புதிய கல்லறை* இருந்தது. அந்தக் கல்லறையில் அதுவரை ஒருவரும் அடக்கம் செய்யப்படவில்லை.+ 42  அது யூத பண்டிகையின் ஆயத்த நாளாக இருந்ததாலும்,+ பக்கத்திலேயே அந்தக் கல்லறை இருந்ததாலும் இயேசுவை அங்கே அடக்கம் செய்தார்கள்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “சீஸருக்கு.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
அதாவது, “மதியம் சுமார் 12 மணியாக.”
வே.வா., “நொறுக்கப்படாது.”
அல்லது, “கட்டு ஒன்றை.”
அதாவது, “ரோம ராத்தல்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “லினன்.”
வே.வா., “நினைவுக் கல்லறை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

ஆணி துளைக்கப்பட்ட குதிங்கால் எலும்பு
ஆணி துளைக்கப்பட்ட குதிங்கால் எலும்பு

4.5 அங். (11.5 செ.மீ.) நீளமுள்ள இரும்பு ஆணியால் துளைக்கப்பட்ட ஒரு மனித குதிங்கால் எலும்பு, 1968-ல் வட எருசலேமில் நடந்த புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டது. பிற்பாடு, அதேபோல் செய்யப்பட்ட ஒரு செயற்கை குதிங்கால் எலும்பைத்தான் இந்தப் படத்தில் பார்க்கிறோம். 1968-ல் கண்டெடுக்கப்பட்ட குதிங்கால் எலும்பு ரோமர்களின் காலத்தைச் சேர்ந்தது. ஆட்களை மரக் கம்பத்தில் அறைந்து கொல்ல ஆணிகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு அந்தப் புதைபொருள் கண்டுபிடிப்பு ஒரு அத்தாட்சி. ஒருவேளை, இயேசு கிறிஸ்துவை மரக் கம்பத்தில் அறைவதற்காக ரோம வீரர்கள் அதுபோன்ற ஆணிகளைப் பயன்படுத்தியிருக்கலாம். அந்தக் குதிங்கால் எலும்பு, ஆஸ்யூரி என்ற ஒரு கல் பெட்டியில் கண்டெடுக்கப்பட்டது; அழுகிப்போன சடலத்தில் இருந்த உலர்ந்த எலும்புகள் இந்தப் பெட்டியில் வைக்கப்பட்டன. மரக் கம்பத்தில் கொல்லப்பட்டவர்கள் அடக்கமும் செய்யப்பட்டிருக்கலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது.

கல்லறை
கல்லறை

யூதர்கள் பொதுவாக இறந்தவர்களைக் குகைகளிலோ, பாறைகளில் வெட்டப்பட்ட அறைகளிலோ அடக்கம் செய்தார்கள். ராஜாக்களின் கல்லறைகளைத் தவிர மற்றவை நகரங்களுக்கு வெளியில் இருந்தன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள யூதர்களின் கல்லறைகளை வைத்துப் பார்க்கும்போது, அவை மிக எளிமையாக இருந்தன என்று தெரிகிறது. யூதர்கள் இறந்தவர்களை வழிபடாததாலும், மரணத்துக்குப் பிறகு ஒருவர் எங்கோ வாழ்கிறார் என்று நம்பாததாலும் அவர்களுடைய கல்லறைகள் அப்படி எளிமையாக இருந்திருக்கலாம்.