மாற்கு எழுதியது 10:1-52

10  அவர் அங்கிருந்து புறப்பட்டு, யோர்தானைக் கடந்து யூதேயாவின் எல்லைப் பகுதிகளுக்குப் போனார்; மறுபடியும் மக்கள் அவரிடம் கூட்டமாக வந்தார்கள், வழக்கம்போல் அவர்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்தார்.+  அப்போது அவரைச் சோதிப்பதற்காக பரிசேயர்கள் வந்து, ‘ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியா?’+ என்று கேட்டார்கள்.  அதற்கு அவர், “மோசே உங்களுக்கு என்ன கட்டளையிட்டார்?” என்று கேட்டார்.  “விவாகரத்துப் பத்திரத்தை எழுதிக் கொடுத்துவிட்டு மனைவியை விவாகரத்து செய்துகொள்ள மோசே அனுமதி கொடுத்தார்”+ என்று சொன்னார்கள்.  ஆனால் இயேசு, “உங்களுடைய இதயம் இறுகிப்போயிருந்த காரணத்தால்தான்+ இந்தக் கட்டளையை அவர் உங்களுக்குக் கொடுத்தார்.+  இருந்தாலும், கடவுள் ஆரம்பத்தில் மனுஷர்களைப் படைத்தபோது, ‘அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார்.+  இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுப் பிரிந்திருப்பான்;+  அவனும் அவன் மனைவியும்* ஒரே உடலாக* இருப்பார்கள்.’ இப்படி, அவர்கள் இரண்டு பேராக இல்லாமல், ஒரே உடலாக இருப்பார்கள்.+  அதனால், கடவுள் இணைத்து வைத்ததை* எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்”+ என்று அவர்களிடம் சொன்னார். 10  அவர் மறுபடியும் வீட்டுக்குள் வந்தபோது சீஷர்கள் இதைப் பற்றி அவரிடம் கேட்டார்கள். 11  அப்போது அவர்களிடம், “மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறவன் முறைகேடான உறவுகொள்கிறான்;+ இப்படி, தன் மனைவிக்குத் துரோகம் செய்கிறான். 12  கணவனை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு ஆணைத் திருமணம் செய்துகொள்கிறவள் முறைகேடான உறவுகொள்கிறாள்”+ என்று சொன்னார். 13  பின்பு, சின்னப் பிள்ளைகளை அவர் தொடுவதற்காக மக்கள் அவர்களைக் கொண்டுவர ஆரம்பித்தார்கள்; ஆனால், அந்த மக்களைச் சீஷர்கள் திட்டினார்கள்.+ 14  இயேசு இதைப் பார்த்துக் கோபப்பட்டு, “சின்னப் பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள்; இப்படிப்பட்டவர்களுக்கே கடவுளுடைய அரசாங்கம் சொந்தமாகும்.+ 15  உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு சின்னப் பிள்ளையைப் போலிருந்து கடவுளுடைய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளாத எவனும் அதில் அனுமதிக்கப்படவே மாட்டான்”+ என்று சொன்னார். 16  பின்பு, அந்தச் சின்னப் பிள்ளைகளை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து ஆசீர்வதித்தார்.+ 17  அங்கிருந்து அவர் போய்க்கொண்டிருந்தபோது ஒருவன் ஓடிவந்து அவர் முன்னால் மண்டிபோட்டு, “நல்ல போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?”+ என்று கேட்டான். 18  அதற்கு இயேசு அவனிடம், “என்னை ஏன் நல்லவன் என்று சொல்கிறாய்? கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரும் நல்லவர் கிடையாது.+ 19  ‘கொலை செய்யாதே,+ மணத்துணைக்குத் துரோகம் செய்யாதே,+ திருடாதே,+ பொய் சாட்சி சொல்லாதே,+ மோசடி செய்யாதே,+ அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடு’+ என்ற கட்டளைகளெல்லாம் உனக்குத் தெரியுமே” என்று சொன்னார். 20  அதற்கு அவன், “போதகரே, இவை எல்லாவற்றையும் சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன்” என்று சொன்னான். 21  இயேசு அன்போடு அவனைப் பார்த்து, “நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது; நீ போய் உன்னிடம் இருப்பதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, என்னைப் பின்பற்றி வா; அப்போது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் சேரும்”+ என்று சொன்னார். 22  இதைக் கேட்டதும் அவனுடைய முகம் வாடியது, அவன் துக்கத்தோடு திரும்பிப் போனான்; ஏனென்றால், அவனிடம் நிறைய சொத்துகள் இருந்தன.+ 23  அப்போது இயேசு சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்துவிட்டுத் தன் சீஷர்களிடம், “பணக்காரர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் நுழைவது எவ்வளவு கஷ்டம்!”+ என்று சொன்னார். 24  இதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே, கடவுளுடைய அரசாங்கத்துக்குள் நுழைவது எவ்வளவு கஷ்டம்! 25  கடவுளுடைய அரசாங்கத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவதைவிட ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது சுலபம்”+ என்றார். 26  அவர்கள் இன்னும் அதிக பிரமிப்போடு, “அப்படியானால், யாரால் மீட்புப் பெற முடியும்?”+ என்று கேட்டார்கள்.* 27  இயேசு அவர்களை நேராகப் பார்த்து, “மனுஷர்களால் இது முடியாது; ஆனால் கடவுளால் முடியும்; ஏனென்றால், கடவுளால் எல்லாமே செய்ய முடியும்”+ என்று சொன்னார். 28  பேதுரு அவரிடம், “இதோ! நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களைப் பின்பற்றி வந்திருக்கிறோமே”+ என்று சொன்னார். 29  அதற்கு இயேசு, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், எனக்காகவும் நல்ல செய்திக்காகவும் வீட்டையோ சகோதரர்களையோ சகோதரிகளையோ அம்மாவையோ அப்பாவையோ பிள்ளைகளையோ வயல்களையோ தியாகம் செய்கிறவன்,+ 30  இந்தக் காலத்தில் துன்புறுத்தல்களோடுகூட, 100 மடங்கு அதிகமாக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் அம்மாக்களையும் பிள்ளைகளையும் வயல்களையும் பெறுவான்;+ வரப்போகும் காலத்தில்* முடிவில்லாத வாழ்வையும் நிச்சயம் பெறுவான். 31  ஆனால், முந்தினவர்கள் பலர் பிந்தினவர்களாகவும், பிந்தினவர்கள் முந்தினவர்களாகவும் ஆவார்கள்”+ என்று சொன்னார். 32  எருசலேமுக்குப் போகும் வழியில், சீஷர்களுக்கு முன்னால் இயேசு போய்க்கொண்டிருந்தார்; அதைப் பார்த்து சீஷர்கள் ஆச்சரியப்பட்டார்கள்; பின்னால் போன மற்றவர்களோ பயப்பட ஆரம்பித்தார்கள். அவர் மறுபடியும் பன்னிரண்டு பேரையும்* தனியாகக் கூப்பிட்டு, தனக்கு நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.+ 33  “இதோ! நாம் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கிறோம், மனிதகுமாரன் முதன்மை குருமார்களிடமும் வேத அறிஞர்களிடமும் ஒப்படைக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து, மற்ற தேசத்தாரிடம் அவரை ஒப்படைத்துவிடுவார்கள். 34  அவர்கள் அவரைக் கேலி செய்து, அவர்மேல் துப்பி, அவரை முள்சாட்டையால் அடித்து, பின்பு கொலை செய்வார்கள்; ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்”+ என்று சொன்னார். 35  செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும்+ அவரிடம் வந்து, “போதகரே, நீங்கள் எங்களுக்கு ஒன்று செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்”+ என்றார்கள். 36  அதற்கு அவர், “என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்” என்று கேட்டார். 37  அப்போது அவர்கள், “நீங்கள் ராஜ மகிமையில் உட்கார்ந்திருக்கும்போது, எங்களில் ஒருவரை உங்கள் வலது பக்கத்திலும் இன்னொருவரை இடது பக்கத்திலும் உட்கார வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்”+ என்றார்கள். 38  ஆனால் இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் கிண்ணத்தில் உங்களால் குடிக்க முடியுமா? நான் பெறும் ஞானஸ்நானத்தை உங்களால் பெற முடியுமா?”+ என்று கேட்டார். 39  அதற்கு அவர்கள் “முடியும்” என்று சொன்னார்கள். அப்போது இயேசு, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெறுவீர்கள்.+ 40  ஆனால், என்னுடைய வலது பக்கத்திலோ இடது பக்கத்திலோ உங்களை உட்கார வைக்க எனக்கு அதிகாரம் இல்லை. அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் அங்கே உட்கார முடியும்” என்று சொன்னார். 41  நடந்ததைக் கேள்விப்பட்ட மற்ற பத்துப் பேரும் யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் கோபப்பட்டார்கள்.+ 42  இயேசுவோ அவர்களைத் தன்னிடம் கூப்பிட்டு, “மற்ற தேசத்து ஆட்சியாளர்கள்* மக்களை அடக்கி ஆளுவதும், உயர் அதிகாரிகள் அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துவதும் உங்களுக்குத் தெரியும்.+ 43  ஆனால், நீங்கள் அப்படி இருக்கக் கூடாது. உங்களில் உயர்ந்தவனாக இருக்க விரும்புகிறவன் உங்களுக்குச் சேவை செய்கிறவனாக இருக்க வேண்டும்.+ 44  உங்களில் முதலாவதாக இருக்க விரும்புகிறவன் எல்லாருக்கும் அடிமையாக இருக்க வேண்டும். 45  ஏனென்றால், மனிதகுமாரனும் மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும்+ பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுப்பதற்குமே வந்தார்”+ என்று சொன்னார். 46  அவர்கள் எரிகோவுக்கு வந்து சேர்ந்தார்கள். பின்பு, அவரும் அவருடைய சீஷர்களும் திரளான மக்களும் எரிகோவைவிட்டுப் போய்க்கொண்டிருந்தபோது, பார்வையில்லாத ஒரு பிச்சைக்காரன் பாதையோரம் உட்கார்ந்திருந்தான். அவன் பெயர் பர்திமேயு, அவன் திமேயுவின் மகன்.+ 47  நாசரேத்தூர் இயேசு போகிறார் என்பதைக் கேள்விப்பட்டு, “தாவீதின் மகனே,+ இயேசுவே, எனக்கு இரக்கம் காட்டுங்கள்!”+ என்று அவன் சத்தமாகக் கத்த ஆரம்பித்தான். 48  அமைதியாக இருக்கச் சொல்லி நிறைய பேர் அவனை அதட்டினார்கள்; ஆனாலும், “தாவீதின் மகனே, எனக்கு இரக்கம் காட்டுங்கள்!” என்று இன்னும் சத்தமாகக் கத்திக்கொண்டே இருந்தான். 49  அதனால் இயேசு நின்று, “அவனை என்னிடம் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்று சொன்னார். அவர்கள் அவனிடம், “தைரியமாக எழுந்து வா, அவர் உன்னைக் கூப்பிடுகிறார்” என்று சொல்லி அவனைக் கூப்பிட்டார்கள். 50  உடனே, அவன் தன்னுடைய மேலங்கியைத் தூக்கியெறிந்துவிட்டு, துள்ளியெழுந்து இயேசுவிடம் போனான். 51  இயேசு அவனிடம், “உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். பார்வையில்லாத அந்த மனிதன், “ரபூனி,* தயவுசெய்து எனக்குப் பார்வை கொடுங்கள்” என்று சொன்னான். 52  அதற்கு இயேசு, “உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது,+ நீ போகலாம்” என்று சொன்னார். உடனே அவன் பார்வை பெற்று,+ அவர் போன வழியில் அவரைப் பின்பற்றிப் போனான்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “இரண்டு பேரும்.”
நே.மொ., “சதையாக.”
நே.மொ., “நுகத்தடியில் பிணைத்ததை.”
அல்லது, “ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்.”
வே.வா., “சகாப்தத்தில்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
அதாவது, “அப்போஸ்தலர்களையும்.”
வே.வா., “ஆட்சியாளர்களாகக் கருதப்படுகிறவர்கள்.”
அர்த்தம், “போதகரே.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா