பேதுருவின் முதலாம் கடிதம் 2:1-25

2  அதனால், எல்லா விதமான கெட்ட குணத்தையும் சூழ்ச்சியையும் வெளிவேஷத்தையும் பொறாமையையும் புண்படுத்துகிற பேச்சையும் விட்டுவிடுங்கள்.+  பச்சிளம் குழந்தைகள்+ பாலுக்காக ஏங்குவதுபோல், கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற கலப்படமில்லாத* பாலுக்காக ஏக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்; அதைக் குடிப்பதன் மூலம் நீங்கள் வளர்ச்சியடைந்து மீட்புப் பெறுவீர்கள்.+  ஏனென்றால், நம் எஜமான் கருணையுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்து* பார்த்திருக்கிறீர்கள்.  மனிதர்களால் ஒதுக்கித்தள்ளப்பட்டதாக+ இருந்தாலும், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவருடைய பார்வையில் விலைமதிப்புள்ளதாகவும் இருக்கிற உயிருள்ள கல்லாகிய நம் எஜமானிடம்+ வரும்போது,  உயிருள்ள கற்களாகிய நீங்களும்கூட ஆன்மீக வீடாகக் கட்டப்படுகிறீர்கள்.+ கடவுளுக்குப் பிரியமான ஆன்மீக பலிகளை+ இயேசு கிறிஸ்துவின் மூலம் கொடுக்கும்படி, பரிசுத்த குருமார்களாக இருக்க அப்படிக் கட்டப்படுகிறீர்கள்.  ஏனென்றால், “இதோ! நான் சீயோனில் ஒரு மூலைக்கல்லை நாட்டுகிறேன்; அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலைமதிப்புள்ள மூலைக்கல்; அதன்மீது விசுவாசம் வைக்கிற யாருமே ஒருபோதும் ஏமாற்றம் அடைய* மாட்டார்கள்” என்று வேதவசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.+  அதனால், விசுவாசிகளாக* இருக்கிற உங்களுக்கு அவர் மதிப்புள்ளவராக இருக்கிறார். ஆனால் விசுவாசிகளாக இல்லாதவர்களுக்கு, “கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய+ கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது.”+  அதோடு, “தடைக்கல்லாகவும், தடுக்கிவிழ வைக்கும் கற்பாறையாகவும் ஆனது.”+ கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாததால்தான் அவர்கள் தடுக்கி விழுகிறார்கள்; அதுதான் அப்படிப்பட்டவர்களுக்கு வரப்போகும் முடிவு.  ஆனால் நீங்கள், இருளிலிருந்து தன்னுடைய அற்புதமான ஒளியின் பக்கம் உங்களை அழைத்தவருடைய+ “மகத்துவங்களை* எல்லா இடங்களிலும் அறிவிப்பதற்குத்+ தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக, ராஜ அதிகாரமுள்ள குருமார்களாக, பரிசுத்த ஜனமாக,+ அவருடைய விசேஷ சொத்தாக”+ இருக்கிறீர்கள். 10  முன்பு நீங்கள் கடவுளுடைய மக்களாக இருக்கவில்லை, இப்போதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்;+ முன்பு உங்களுக்குக் கடவுள் இரக்கம் காட்டவில்லை, இப்போதோ இரக்கம் காட்டியிருக்கிறார்.+ 11  அன்பானவர்களே, நீங்கள் இந்த உலகத்தில் அன்னியர்களாகவும் தற்காலிகக் குடிமக்களாகவும்+ இருப்பதால், உங்களுக்கு எதிராகப் போர் செய்துகொண்டிருக்கிற+ பாவ ஆசைகளிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.+ 12  உலக மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல நடத்தை உள்ளவர்களாக இருங்கள்;+ அவர்கள் உங்களைக் கெட்டவர்கள் என்று சொன்னாலும், உங்களுடைய நல்ல செயல்களை நேரடியாகப் பார்த்து,+ கடவுள் சோதனையிடும் நாளில் அவரை மகிமைப்படுத்துவார்கள். 13  அதிகாரத்தில் இருக்கிற எல்லாருக்கும்,*+ எஜமானை முன்னிட்டு கட்டுப்பட்டு நடங்கள்: உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிற ராஜாவாக இருந்தாலும்+ சரி, 14  கெட்டது செய்கிறவர்களைத் தண்டிப்பதற்கும் நல்லது செய்கிறவர்களைப் பாராட்டுவதற்கும் அவரால் அனுப்பப்பட்ட ஆளுநராக இருந்தாலும் சரி, எல்லாருக்கும் கட்டுப்பட்டு நடங்கள்.+ 15  இப்படி நீங்கள் சரியான விதத்தில் நடந்து,* முட்டாள்தனமாகப் பேசுகிற புத்தியில்லாத ஆட்களின் வாயை அடைக்க வேண்டுமென்பது கடவுளுடைய விருப்பம்.*+ 16  நீங்கள் சுதந்திரமாக வாழுங்கள்.+ இருந்தாலும், உங்களுடைய சுதந்திரத்தைக் கெட்ட செயல்களை மறைக்கும் போர்வையாக* பயன்படுத்தாதீர்கள்,+ கடவுளுக்கு அடிமைகளாக வாழுங்கள்.+ 17  எல்லா விதமான ஆட்களுக்கும் மதிப்புக் கொடுங்கள்.+ சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள்.+ கடவுளுக்குப் பயந்து நடங்கள்.+ ராஜாவுக்கு மதிப்புக் கொடுங்கள்.+ 18  வேலைக்காரர்களே, உங்கள் முதலாளிகளுக்குத் தகுந்த மரியாதை காட்டி அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடங்கள்;+ நல்லவர்களாகவும் நியாயமானவர்களாகவும் இருக்கிற முதலாளிகளுக்கு மட்டுமல்ல, பிரியப்படுத்தக் கடினமானவர்களாக இருக்கிறவர்களுக்கும் கட்டுப்பட்டு நடங்கள். 19  கடவுளுக்கு முன்னால் நீங்கள் சுத்தமான மனசாட்சியோடு இருப்பதற்காக அநியாயமாய்ப் பாடுகள் பட்டு வேதனைகளை* சகித்துக்கொண்டால்,+ அது கடவுளுக்குப் பிரியமாக இருக்கும். 20  நீங்கள் பாவம் செய்ததற்காக அடிக்கப்படும்போது சகித்துக்கொண்டால், அதில் என்ன விசேஷம்?+ ஆனால், நீங்கள் நன்மை செய்ததற்காகப் பாடுகள் படும்போது அவற்றைச் சகித்துக்கொண்டால், அதுதான் கடவுளுக்குப் பிரியமாக இருக்கும்.+ 21  சொல்லப்போனால், நீங்கள் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் உங்களை அழைத்திருக்கிறார். ஏனென்றால், கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டு,+ நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்.+ 22  அவர் பாவம் செய்யவில்லை,+ அவருடைய பேச்சில் சூதுவாது இருக்கவில்லை.+ 23  அவர் அவமானப்படுத்தப்பட்டபோது*+ பதிலுக்கு அவமானப்படுத்தவில்லை.*+ துன்புறுத்தப்பட்டபோது+ மிரட்டவில்லை; மாறாக, நீதியான தீர்ப்பு கொடுக்கிறவரிடம்+ தன்னையே ஒப்படைத்தார். 24  நாம் பாவச் செயல்களுக்குச் செத்து நீதியான செயல்களுக்கென்று வாழ்வதற்காகத்தான், மரக் கம்பத்தில்* அறையப்பட்ட தன்னுடைய உடலில்+ அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்தார்.+ “அவருடைய காயங்களால் நீங்கள் குணமானீர்கள்.”+ 25  நீங்கள் வழிதவறித் திரிகிற ஆடுகளைப் போல் இருந்தீர்கள்.+ ஆனால் இப்போது, உங்கள் உயிரைப் பாதுகாக்கிற மேய்ப்பராகவும் கண்காணியாகவும் இருப்பவரிடமே திரும்பி வந்திருக்கிறீர்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “சுத்தமான.”
வே.வா., “அனுபவத்தில்.”
நே.மொ., “அவமானப்பட.”
வே.வா., “இயேசுவின் சீஷர்களாக.”
அதாவது, “புகழுக்குரிய குணங்களையும் செயல்களையும்.”
வே.வா., “மனிதர்களால் உருவாக்கப்பட்ட எல்லாவற்றுக்கும்.”
வே.வா., “சித்தம்.”
வே.வா., “நல்லது செய்து.”
வே.வா., “கெட்ட செயல்களைச் செய்வதற்குச் சாக்காக.”
வே.வா., “வலிகளை.”
வே.வா., “சபித்துப் பேசப்பட்டபோது.”
வே.வா., “சபித்துப் பேசவில்லை.”
வே.வா., “மரத்தில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா