தானியேல் 12:1-13

12  அதோடு அவர், “அந்தக் காலத்தில், உன் ஜனங்களுக்குத் துணையாக நிற்கிற மகா அதிபதியாகிய+ மிகாவேல்*+ செயலில் இறங்குவார்.* பூமியில் முதன்முதலாக ஒரு தேசம் உருவானதுமுதல் அதுவரை வந்திருக்காத மிக வேதனையான காலம் வரும். அப்போது, உன் ஜனங்களில் யாருடைய பெயரெல்லாம் கடவுளுடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதோ+ அவர்கள் எல்லாரும் தப்பிப்பார்கள்.+  மண்ணுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் பலர் எழுந்திருப்பார்கள். அவர்களில் சிலர் முடிவில்லாத வாழ்வைப் பெறுவார்கள். மற்றவர்கள் வெட்கத்துக்கும் முடிவில்லாத இழிவுக்கும் ஆளாவார்கள்.  விவேகமுள்ளவர்கள்* வானத்தின் ஒளியைப் போல் பிரகாசிப்பார்கள். பலரை நீதியின் வழிக்குக் கொண்டுவருகிறவர்கள் நட்சத்திரங்களைப் போல் என்றென்றும் ஜொலிப்பார்கள்.  தானியேலே, முடிவு காலம்வரை நீ இந்த வார்த்தைகளை ரகசியமாக வைத்து, இந்தப் புத்தகத்துக்கு முத்திரை போடு.+ அப்போது இதைப் பலர் அலசி ஆராய்வார்கள், உண்மையான அறிவும் பெருகும்”+ என்றார்.  பின்பு தானியேலாகிய நான், ஆற்றுக்குப் பக்கத்தில் இன்னும் இரண்டு பேர் நிற்பதைப் பார்த்தேன். ஒருவர் ஆற்றுக்கு இந்தப் பக்கத்திலும் இன்னொருவர் அந்தப் பக்கத்திலும் நின்றுகொண்டிருந்தார்கள்.+  நாரிழை* உடை போட்டுக்கொண்டு+ ஆற்றின் மேல் நின்றுகொண்டிருந்தவரிடம் மற்றவர், “இந்த ஆச்சரியமான காரியங்கள் முடிவுக்கு வர எவ்வளவு காலம் ஆகும்?” என்று கேட்டார்.  அப்போது, நாரிழை உடை போட்டுக்கொண்டு ஆற்றின் மேல் நின்றுகொண்டிருந்தவர் பேசுவதைக் கேட்டேன். அவர் தன் வலது கையையும் இடது கையையும் வானத்துக்கு நேராக உயர்த்தி, என்றென்றும் வாழ்கிறவர்மேல்+ சத்தியம் செய்து, “குறிக்கப்பட்ட ஒரு காலமும், இரண்டு காலங்களும், அரைக் காலமும்* ஆகும். பரிசுத்த ஜனங்களின் பலம் அடக்கப்பட்டதுமே+ இவையெல்லாம் முடிவுக்கு வரும்” என்று சொன்னார்.  நான் அதைக் கேட்டேன், ஆனால் புரிந்துகொள்ள முடியவில்லை.+ அதனால், “எஜமானே, இவற்றின் முடிவில் என்ன நடக்கும்?” என்று கேட்டேன்.  அதற்கு அவர், “தானியேலே, நீ போகலாம். ஏனென்றால், இந்த வார்த்தைகள் முடிவு காலம்வரை ரகசியமாக வைக்கப்பட்டு, முத்திரை போடப்பட்டிருக்கும்.+ 10  பலர் தங்களைச் சுத்தமாக்கிக்கொண்டு, தூய்மைப்படுத்திக்கொண்டு, புடமிடப்பட்டவர்களாய் ஆவார்கள்.+ கெட்டவர்கள் கெட்டதையே செய்வார்கள், அவர்களில் ஒருவரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், விவேகம்* உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள்.+ 11  வழக்கமான* பலி+ நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பானது+ ஏற்படுத்தப்பட்ட பின்பு 1,290 நாட்கள் கடந்து போகும். 12  1,335 நாட்கள்வரை காத்திருக்கிறவர்கள்* சந்தோஷமானவர்கள். 13  நீ முடிவுவரை சகித்திரு. அதன்பின் ஓய்வெடுப்பாய். ஆனால், முடிவு நாளில் உன் பங்கை* பெறுவதற்காக எழுந்திருப்பாய்”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “கடவுளைப் போன்றவர் யார்?”
நே.மொ., “எழுந்து நிற்பார்.” எபிரெய மொழியில், ராஜ அதிகாரம் செலுத்துவதைக் குறிக்கலாம்.
வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள்.”
அதாவது, “லினன்.”
அதாவது, “மொத்தம் மூன்றரை காலங்கள்.”
வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதல்.”
வே.வா., “தினமும் செலுத்தப்படுகிற.”
வே.வா., “ஆவலோடு காத்திருக்கிறவர்கள்.”
வே.வா., “உனக்கு ஒதுக்கப்படும் நிலத்தை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா