மாற்கு எழுதியது 13:1-37

13  ஆலயத்தைவிட்டு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தபோது அவருடைய சீஷர்களில் ஒருவர், “போதகரே, பாருங்கள்! எவ்வளவு அழகான கற்கள், எவ்வளவு அழகான கட்டிடங்கள்!”+ என்று சொன்னார்.  ஆனால் இயேசு அவரிடம், “பிரமாண்டமான இந்தக் கட்டிடங்களையா பார்க்கிறாய்? ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாமே நிச்சயமாகத் தரைமட்டமாக்கப்படும்”+ என்று சொன்னார்.  பின்பு, ஆலயத்தைப் பார்த்தபடி ஒலிவ மலைமேல் அவர் உட்கார்ந்திருந்தபோது, பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் தனியாக வந்து,  “இதெல்லாம் எப்போது நடக்கும், இதெல்லாம் நிறைவேறப்போகிற* காலத்துக்கு அடையாளம் என்ன, எங்களுக்குச் சொல்லுங்கள்”+ என்று கேட்டார்கள்.  அதற்கு இயேசு, “உங்களை யாரும் ஏமாற்றிவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.+  நிறைய பேர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நான்தான் கிறிஸ்து’ என்று சொல்லி நிறைய பேரை ஏமாற்றுவார்கள்.  அதுமட்டுமல்ல, போர் முழக்கங்களையும் போர்ச் செய்திகளையும் நீங்கள் கேட்கும்போது, திகிலடையாதீர்கள். இதெல்லாம் நடக்க வேண்டும், ஆனால் முடிவு அப்போதே வராது.+  ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும்* சண்டை போடும்.+ அடுத்தடுத்து பல இடங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படும். பஞ்சங்களும் உண்டாகும்.+ இவையெல்லாம் வேதனைகளுக்கு* ஆரம்பம்.+  ஆனால், நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் என்னுடைய சீஷர்களாக இருப்பதால் மக்கள் உங்களை உள்ளூர் நீதிமன்றங்களுக்குக் கொண்டுபோய் நிறுத்துவார்கள்,+ ஜெபக்கூடங்களில் அடிப்பார்கள்,+ ஆளுநர்களுக்கும் ராஜாக்களுக்கும் முன்னால் நிறுத்துவார்கள். அப்போது நீங்கள் அவர்களுக்குச் சாட்சி கொடுக்க முடியும்.+ 10  எல்லா தேசத்தாருக்கும் நல்ல செய்தி முதலாவது பிரசங்கிக்கப்பட வேண்டும்.+ 11  அவர்கள் உங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோகும்போது, என்ன பேசுவதென்று நினைத்துக் கவலைப்படாதீர்கள்; அந்த நேரத்தில் உங்களுக்கு என்ன அருளப்படுகிறதோ அதையே பேசுங்கள்; ஏனென்றால் பேசுவது நீங்கள் அல்ல, கடவுளுடைய சக்தியே.+ 12  அதோடு, சகோதரனின் சாவுக்கு சகோதரனும், பிள்ளையின் சாவுக்கு அப்பாவும் காரணமாக இருப்பார்கள். பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களுடைய சாவுக்குக் காரணமாவார்கள்.+ 13  நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்;+ ஆனால், முடிவுவரை சகித்திருப்பவர்தான்+ மீட்புப் பெறுவார்.+ 14  இருந்தாலும், பாழாக்கும் அருவருப்பு+ நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் பார்க்கும்போது (வாசிப்பவர் பகுத்தறிவைப் பயன்படுத்தி இதைப் புரிந்துகொள்ளட்டும்), யூதேயாவில் இருப்பவர்கள் மலைகளுக்குத் தப்பியோட வேண்டும்.+ 15  வீட்டு மாடியில் இருப்பவர் கீழே இறங்கிவர வேண்டாம், எதையாவது எடுத்துக்கொண்டு போவதற்காகத் தன் வீட்டுக்குள் போகவும் வேண்டாம். 16  வயலில் இருப்பவர் தன் மேலங்கியை எடுப்பதற்காகத் திரும்பிப் போக வேண்டாம். 17  அந்த நாட்களில் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஐயோ ஆபத்து!+ 18  இது குளிர் காலத்தில் நடந்துவிடக் கூடாது என்று ஜெபம் செய்துகொண்டிருங்கள். 19  ஏனென்றால், அந்த நாட்கள் உபத்திரவ+ நாட்களாக இருக்கும். கடவுள் உலகத்தைப் படைத்ததுமுதல் அதுவரை அப்படிப்பட்ட உபத்திரவம் வந்திருக்காது, அதற்குப் பிறகும் வராது.+ 20  சொல்லப்போனால், யெகோவா* அந்த நாட்களைக் குறைக்கவில்லை என்றால், யாருமே தப்பிப்பிழைக்க மாட்டார்கள்; ஆனால், தான் தேர்ந்தெடுத்த மக்களுக்காக அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.+ 21  அதோடு, யாராவது உங்களிடம், ‘இதோ! கிறிஸ்து இங்கே இருக்கிறார்,’ ‘அதோ! அங்கே இருக்கிறார்’ என்று சொன்னால் நம்பாதீர்கள்.+ 22  ஏனென்றால், போலிக் கிறிஸ்துக்களும் போலித் தீர்க்கதரிசிகளும் வருவார்கள்;+ முடிந்தால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் வழிவிலக வைப்பதற்காக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 23  அதனால், விழிப்புடன் இருங்கள்;+ எல்லாவற்றையும் உங்களிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டேன். 24  ஆனால் அந்த நாட்களில், அந்த உபத்திரவத்துக்குப் பின்பு, சூரியன் இருண்டுவிடும், சந்திரன் ஒளி கொடுக்காது,+ 25  வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழும், வான மண்டலங்கள் அசைக்கப்படும். 26  அதன் பின்பு, மனிதகுமாரன்+ மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களில் வருவதை அவர்கள் பார்ப்பார்கள்.+ 27  பிறகு, அவர் தேவதூதர்களை அனுப்பி, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பூமியின் ஒரு முனையிலிருந்து வானத்தின் மறுமுனைவரை நான்கு திசைகளிலிருந்தும்* கூட்டிச்சேர்ப்பார்.+ 28  அத்தி மர உவமையிலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் இளங்கிளைகள் தோன்றி, இலைகள் துளிர்க்க ஆரம்பித்ததுமே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என்று தெரிந்துகொள்கிறீர்கள்.+ 29  அப்படியே, இவையெல்லாம் நடப்பதை நீங்கள் பார்க்கும்போது, அவர் கதவுக்குப் பக்கத்திலேயே வந்துவிட்டார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.+ 30  உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இவையெல்லாம் நடப்பதற்கு முன்பு இந்தத் தலைமுறை ஒருபோதும் ஒழிந்துபோகாது.+ 31  வானமும் பூமியும் ஒழிந்துபோகும்,+ ஆனால் என் வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்துபோகாது.+ 32  அந்த நாளோ அந்த நேரமோ பரலோகத் தகப்பன் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது, பரலோகத்தில் இருக்கிற தேவதூதர்களுக்கும் தெரியாது, மகனுக்கும் தெரியாது.+ 33  இதெல்லாம் எப்போது நடக்குமென்று உங்களுக்குத் தெரியாததால்+ எச்சரிக்கையாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்.+ 34  ஒருவர் தன் வீட்டைவிட்டுத் தூர தேசத்துக்குப் புறப்பட்டுப் போகும்போது தன் அடிமைகளுக்கு அதிகாரத்தையும் அவனவன் செய்ய வேண்டிய வேலையையும் கொடுத்துவிட்டு,+ விழிப்புடன் இருக்கச் சொல்லி வாயிற்காவலனுக்குக் கட்டளையிடுகிறார்.+ 35  அதனால், விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால் வீட்டு எஜமான் வரும் நேரம் மாலையா,* நடுராத்திரியா,* சேவல் கூவும் நேரமா,* அல்லது விடியற்காலையா*+ என்பது உங்களுக்குத் தெரியாது.+ 36  அவர் திடீரென்று வரும்போது, நீங்கள் தூங்கிக்கொண்டிருக்காதபடி+ பார்த்துக்கொள்ளுங்கள். 37  உங்களுக்குச் சொல்வதை எல்லாருக்கும் சொல்கிறேன், விழிப்புடன் இருங்கள்”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “முடிவடையப்போகிற.”
நே.மொ., “பிரசவ வேதனை போன்ற வேதனைகளுக்கு.”
வே.வா., “ராஜ்யத்துக்கு எதிராக ராஜ்யமும்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “நான்கு காற்றுகளிலிருந்தும்.”
கிரேக்க மற்றும் ரோமக் கணக்குப்படி, இது முதலாம் ஜாமம்; சூரிய அஸ்தமனத்திலிருந்து ராத்திரி சுமார் 9 மணிவரை.
இது இரண்டாம் ஜாமம்; ராத்திரி சுமார் 9 மணியிலிருந்து நடுராத்திரிவரை.
இது மூன்றாம் ஜாமம்; நடுராத்திரியிலிருந்து காலை சுமார் 3 மணிவரை.
இது நான்காம் ஜாமம்; காலை சுமார் 3 மணியிலிருந்து சூரியன் உதிக்கும்வரை.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

ஆலயப் பகுதியின் கற்கள்
ஆலயப் பகுதியின் கற்கள்

மேற்கு மதிலின் தென்பகுதியில் காணப்படும் இந்தக் கற்கள், முதல் நூற்றாண்டு ஆலயப் பகுதியில் அமைந்திருந்த கட்டிடங்களைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. எருசலேமும் அதன் ஆலயமும் ரோமர்களால் அழிக்கப்பட்ட கோர சம்பவத்தை நினைப்பூட்டுவதற்காக அவை இங்கே விடப்பட்டிருக்கின்றன.

ஒலிவ மலை
ஒலிவ மலை

ஒலிவ மலை (1) என்பது, எருசலேமின் கிழக்கே அமைந்திருக்கும் தொடர்ச்சியான சுண்ணாம்புக்கல் குன்றுகளைக் குறிக்கிறது. ஒலிவ மலைக்கும் எருசலேமுக்கும் இடையில் கீதரோன் பள்ளத்தாக்கு இருக்கிறது. ஆலயப் பகுதிக்கு (2) எதிரே இருந்த அதன் சிகரத்தின் அதிகபட்ச உயரம் சுமார் 812 மீ. (2,644 அடி). அதுதான் பைபிளில் பொதுவாக ஒலிவ மலை என்று அழைக்கப்படுகிறது. ஒலிவ மலையின் ஒரு பகுதியில்தான் இயேசு தன்னுடைய பிரசன்னத்தின் அடையாளத்தைப் பற்றித் தன் சீஷர்களுக்கு விளக்கினார்.