யோவான் எழுதியது 7:1-52
7 இதற்குப் பின்பு, இயேசு கலிலேயாவிலேயே பயணம் செய்துவந்தார்.* அவரைக் கொலை செய்வதற்கு யூதர்கள்* வழிதேடிக்கொண்டிருந்ததால்+ அவர் யூதேயாவில் பயணம் செய்ய விரும்பவில்லை.
2 யூதர்களுடைய கூடாரப் பண்டிகை+ நெருங்கிக்கொண்டிருந்தது.
3 அதனால் அவருடைய சகோதரர்கள்+ அவரிடம், “நீங்கள் இந்த இடத்தைவிட்டு யூதேயாவுக்குப் போங்கள், நீங்கள் செய்யும் செயல்களை உங்களுடைய சீஷர்களும் பார்க்கட்டும்.
4 பிரபலமாக இருக்க விரும்புகிற யாரும் எதையும் ரகசியமாகச் செய்ய மாட்டார்கள். இதையெல்லாம் செய்வதாக இருந்தால் ஊர் உலகத்துக்கே செய்து காட்டுங்கள்” என்று சொன்னார்கள்.
5 அவருடைய சகோதரர்கள் அவர்மேல் விசுவாசம் வைக்காததால்+ அப்படிச் சொன்னார்கள்.
6 அதற்கு இயேசு அவர்களிடம், “என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை,+ ஆனால் உங்களுக்கு எந்த நேரமும் சரியான நேரம்தான்.
7 இந்த உலகம் உங்களை வெறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை; அதன் செயல்கள் பொல்லாதவை என்று நான் சாட்சி கொடுப்பதால் அது என்னைத்தான் வெறுக்கிறது.+
8 பண்டிகைக்கு நீங்கள் போங்கள்; நான் இப்போது போகப்போவதில்லை; ஏனென்றால், என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை”+ என்று சொன்னார்.
9 அவர்களிடம் இப்படிச் சொன்ன பின்பு அவர் கலிலேயாவிலேயே இருந்துவிட்டார்.
10 ஆனால், பண்டிகைக்கு அவருடைய சகோதரர்கள் போன பின்பு அவரும் அங்கே போனார்; ஆனாலும், வெளிப்படையாகப் போகாமல் ரகசியமாகப் போனார்.
11 அதனால், பண்டிகையின்போது யூதர்கள் அவரைத் தேட ஆரம்பித்தார்கள்; “அந்த ஆள் எங்கே?” என்று கேட்டார்கள்.
12 மக்கள் அவரைப் பற்றிப் பலவிதமாகக் கிசுகிசுத்தார்கள். சிலர், “அவர் ஒரு நல்ல மனுஷர்” என்று சொன்னார்கள். மற்றவர்களோ, “இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறான்”+ என்று சொன்னார்கள்.
13 ஆனால், யூதர்களுக்குப் பயந்ததால் அவர்களில் யாருமே அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை.+
14 பண்டிகை பாதி முடிந்தபோது, ஆலயத்துக்குப் போய் இயேசு கற்பிக்க ஆரம்பித்தார்.
15 அப்போது யூதர்கள், “பள்ளிகளுக்கு* போகாத இவனுக்கு+ வேதவசனங்களைப்+ பற்றி எப்படி இந்தளவு அறிவு வந்தது?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள்.
16 அதற்கு இயேசு, “என் போதனை என்னுடையதல்ல, என்னை அனுப்பியவருடையது.+
17 அவருடைய விருப்பத்தின்படி* செய்ய ஒருவன் விரும்பினால், என் போதனை கடவுளிடமிருந்து வந்திருக்கிறதா+ அல்லது நானே சொந்தமாகப் பேசுகிறேனா என்று தெரிந்துகொள்வான்.
18 சொந்தமாகப் பேசுகிறவன் சொந்த மகிமையை விரும்புகிறான். ஆனால், தன்னை அனுப்பியவருக்கு மகிமை சேர்க்க+ விரும்புகிறவன்தான் உண்மையுள்ளவன். அவனிடம் எந்த அநீதியும் இல்லை.
19 மோசே உங்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுத்தார்,+ இல்லையா? ஆனால், உங்களில் ஒருவர்கூட அந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படிவதில்லை. இப்போது என்னை ஏன் கொல்லப் பார்க்கிறீர்கள்?”+ என்று கேட்டார்.
20 அதற்கு அந்தக் கூட்டத்தார், “உனக்குப் பேய் பிடித்திருக்கிறது. யார் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்கள்?” என்று கேட்டார்கள்.
21 அப்போது இயேசு, “நான் ஒரேவொரு செயலைச் செய்ததற்காக நீங்கள் எல்லாரும் ஆச்சரியப்படுகிறீர்கள்.
22 அப்படியானால் இதை யோசித்துப் பாருங்கள்: மோசே உங்களுக்கு விருத்தசேதனத்தைப்+ பற்றிய கட்டளையைக் கொடுத்தார்—அது மோசேயின் காலத்திலிருந்து அல்ல, அவருக்குமுன் வாழ்ந்த முன்னோர்கள் காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது+—அதன்படி, ஓய்வுநாளில் ஒருவனுக்கு விருத்தசேதனம் செய்கிறீர்கள்.
23 மோசேயின் திருச்சட்டத்தை மீறக் கூடாது என்பதற்காக ஓய்வுநாளில் ஒருவனுக்கு நீங்கள் விருத்தசேதனம் செய்கிறீர்கள் என்றால், அதே ஓய்வுநாளில் நான் ஒருவனை முழுமையாகக் குணமாக்கியதற்காக ஏன் என்மேல் சீறுகிறீர்கள்?+
24 வெளித்தோற்றத்தைப் பார்த்துத் தீர்ப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டு, நீதியின்படி தீர்ப்பு கொடுங்கள்”+ என்று சொன்னார்.
25 அப்போது, எருசலேம் குடிமக்களில் சிலர், “இவரைத்தானே கொலை செய்யத் தேடுகிறார்கள்?+
26 அப்படியிருந்தும், இதோ! மக்களிடம் இவர் வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருக்கிறார், அவர்களும் இவரிடம் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார்கள். இவர்தான் கிறிஸ்து என்று தலைவர்கள் உறுதியாகத் தெரிந்துகொண்டார்களோ?
27 ஆனால், கிறிஸ்து எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல்தானே இருக்கும்! இவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்பதுதான் நமக்குத் தெரியுமே!”+ என்று பேசிக்கொண்டார்கள்.
28 அதனால், ஆலயத்தில் கற்பித்துக்கொண்டிருந்த இயேசு உரத்த குரலில் அவர்களிடம், “நான் யார் என்றும், எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும் உங்களுக்குத் தெரியும். நான் சுயமாக வரவில்லை,+ என்னை அனுப்பியவர் நிஜமானவர், உங்களுக்கு அவரைத் தெரியாது.+
29 எனக்கு அவரைத் தெரியும்;+ ஏனென்றால், நான் அவருடைய பிரதிநிதியாக வந்திருக்கிறேன்; அவரே என்னை அனுப்பினார்” என்று சொன்னார்.
30 இதைக் கேட்டதும் அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடினார்கள்.+ ஆனால், அவருடைய நேரம் இன்னும் வராததால் ஒருவரும் அவர்மேல் கை வைக்கவில்லை.+
31 இருந்தாலும், மக்களில் பலர் அவர்மேல் விசுவாசம் வைத்து,+ “கிறிஸ்து வரும்போது இவர் செய்வதைவிடவா அதிகமான அடையாளங்களைச் செய்யப்போகிறார்?” என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
32 மக்கள் அவரைப் பற்றி இப்படிக் கிசுகிசுப்பதைப் பரிசேயர்கள் கேட்டார்கள்; அதனால், முதன்மை குருமார்களும் பரிசேயர்களும் அவரைப் பிடித்துக்கொண்டு வருவதற்காகக் காவலர்களை அனுப்பினார்கள்.
33 அப்போது இயேசு, “இன்னும் கொஞ்சக் காலம்தான் உங்களோடு இருப்பேன், அதன் பின்பு என்னை அனுப்பியவரிடமே போய்விடுவேன்.+
34 நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் கண்டுபிடிக்க மாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்துக்கு உங்களால் வரவும் முடியாது”+ என்று சொன்னார்.
35 அதனால் அந்த யூதர்கள், “நாம் கண்டுபிடிக்க முடியாதபடி இவன் எங்கே போகப் போகிறான்? கிரேக்கர்கள் மத்தியில் சிதறியிருக்கிற யூதர்களிடம் போகப் போகிறானோ, கிரேக்கர்களுக்கும்கூட கற்பிக்கப் போகிறானோ?
36 ‘என்னைத் தேடுவீர்கள், ஆனால் கண்டுபிடிக்க மாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்துக்கு உங்களால் வரவும் முடியாது’ என்று சொல்கிறானே, இதற்கு என்ன அர்த்தம்?” என்று பேசிக்கொண்டார்கள்.
37 பண்டிகையின் மிக முக்கியமான நாளாகிய கடைசி நாளில்+ இயேசு எழுந்து நின்று, “ஒருவன் தாகமாக இருந்தால், அவன் என்னிடம் வந்து தண்ணீர் குடிக்கட்டும்.+
38 ஒருவன் என்மேல் விசுவாசம் வைத்தால், வேதவசனத்தில் சொல்லியிருக்கிறபடி, ‘வாழ்வு தரும் தண்ணீர் அவனுக்குள்ளிருந்து ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்’”+ என்று சொன்னார்.
39 அவர்மேல் விசுவாசம் வைத்தவர்களுக்கு அருளப்படவிருந்த கடவுளுடைய சக்தியைப் பற்றியே அவர் அப்படிச் சொன்னார்; இயேசு அதுவரை மகிமைப்படாததால்+ கடவுளுடைய சக்தி அதுவரை அவர்களுக்கு அருளப்படவில்லை.+
40 இந்த வார்த்தைகளைக் கேட்ட மக்களில் சிலர், “நிச்சயமாகவே இவர்தான் வர வேண்டிய தீர்க்கதரிசி”+ என்று சொன்னார்கள்.
41 மற்றவர்களோ, “இவர்தான் கிறிஸ்து”+ என்று சொன்னார்கள். ஆனால் வேறு சிலர், “கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?+
42 அவர் தாவீதின் வம்சத்தில்,+ தாவீது குடியிருந்த+ பெத்லகேம்+ கிராமத்திலிருந்துதான் வருவாரென வேதவசனம் சொல்கிறது, இல்லையா?” என்றார்கள்.
43 இப்படி, அவரைப் பற்றி மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்பட்டது.
44 அவர்களில் சிலர் அவரைப் பிடித்துக்கொடுக்க நினைத்தார்கள், ஆனால் ஒருவரும் அவர்மேல் கை வைக்கவில்லை.
45 பின்பு, முதன்மை குருமார்களிடமும் பரிசேயர்களிடமும் அந்தக் காவலர்கள் திரும்பிப்போனபோது, “ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?” என்று பரிசேயர்கள் அவர்களிடம் கேட்டார்கள்.
46 அதற்கு அவர்கள், “அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை”+ என்று சொன்னார்கள்.
47 அப்போது பரிசேயர்கள், “நீங்களுமா ஏமாந்துவிட்டீர்கள்?
48 தலைவர்களிலும் பரிசேயர்களிலும் ஒருவராவது அவன்மேல் விசுவாசம் வைத்திருக்கிறார்களா?+
49 திருச்சட்டத்தைப் புரிந்துகொள்ளாத இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்று சொன்னார்கள்.
50 அந்தப் பரிசேயர்களில் ஒருவரும், முன்பு இயேசுவிடம் வந்தவருமான நிக்கொதேமு அவர்களிடம்,
51 “ஒருவனை முதலில் விசாரித்து அவன் என்ன செய்தானென்று தெரிந்துகொள்ளாமல் அவனுக்குத் தீர்ப்பளிக்கும்படி நம்முடைய திருச்சட்டம் சொல்கிறதா?”+ என்று கேட்டார்.
52 அதற்கு அவர்கள், “நீங்களும் கலிலேயரா என்ன? கலிலேயாவிலிருந்து எந்தத் தீர்க்கதரிசியும் வர மாட்டார் என்பதை வேதவசனங்களில் ஆராய்ந்து தெரிந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.*
அடிக்குறிப்புகள்
^ அதாவது, “யூதத் தலைவர்கள்.”
^ வே.வா., “நடந்துகொண்டிருந்தார்.”
^ அதாவது, “ரபீக்களுடைய பள்ளிகளுக்கு.”
^ வே.வா., “சித்தத்தின்படி.”
^ பழமையான, அதிகாரப்பூர்வ கையெழுத்துப் பிரதிகள் பலவற்றில் 53-ஆம் வசனம்முதல் 8-ஆம் அதிகாரம் 11-ஆம் வசனம்வரை காணப்படுவதில்லை.