யாத்திராகமம் 21:1-36
21 பின்பு அவர், “நீ இஸ்ரவேலர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய நீதித்தீர்ப்புகள் இவைதான்:+
2 ஒரு எபிரெயனை நீங்கள் அடிமையாக வாங்கினால்,+ அவன் உங்களிடம் ஆறு வருஷங்கள் வேலை செய்யலாம். ஆனால், ஏழாம் வருஷம் அவனிடமிருந்து எதையும் வாங்காமல் அவனை விடுதலை செய்துவிட வேண்டும்.+
3 அவன் தனியாளாக வந்திருந்தால், தனியாளாகப் போக வேண்டும். மனைவியோடு வந்திருந்தால், அவளும் அவனுடன் போக வேண்டும்.
4 அவனுடைய எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை மனைவியாகத் தந்திருந்தால், அவள் அவனுக்கு மகன்களையோ மகள்களையோ பெற்றுக் கொடுத்திருந்தால், அந்த மனைவியும் பிள்ளைகளும் எஜமானுக்குச் சொந்தமாவார்கள். அந்த அடிமை மட்டும் விடுதலையாகிப் போகலாம்.+
5 ஆனால் அந்த அடிமை, ‘நான் என் எஜமானையும் மனைவிமக்களையும் நேசிக்கிறேன், விடுதலை பெற எனக்கு இஷ்டமில்லை’ என்று உறுதியாகச் சொன்னால்,+
6 அவனுடைய எஜமான் அவனைக் கதவுக்குப் பக்கத்தில் அல்லது நிலைக்காலுக்குப் பக்கத்தில் கொண்டுவந்து, உண்மைக் கடவுளைச் சாட்சியாக வைத்து,* ஒரு ஊசியால் அவன் காதைக் குத்த வேண்டும். வாழ்நாள் முழுக்க அவன் அவருக்கு அடிமையாக இருப்பான்.
7 ஒருவன் தன் மகளை அடிமையாக விற்றால், ஒரு ஆண் அடிமை விடுதலையாகிப் போவதுபோல் அவளால் போக முடியாது.
8 அவளுடைய எஜமானுக்கு அவளைப் பிடிக்கவில்லை என்பதற்காக அவர் அவளைத் தன்னுடைய மறுமனைவியாக ஆக்கிக்கொள்ளாமல் வேறொருவனுக்கு விற்றுப்போடப் பார்த்தால், அவர் அவளுக்குத் துரோகம் செய்ததாக அர்த்தம். வேறு தேசத்தைச் சேர்ந்தவனிடம் அவளை விற்க அவருக்கு உரிமை இல்லை.
9 அவளை அவர் தன்னுடைய மகனுக்கு மனைவியாகக் கொடுத்தால், மகளின் உரிமைகளை அவர் தர வேண்டும்.
10 அவருடைய மகன்* இன்னொரு பெண்ணையும் கல்யாணம் செய்துகொண்டால், உணவு, உடை, தாம்பத்தியக் கடன்+ என எதிலுமே முதல் மனைவிக்குக் குறை வைக்கக் கூடாது.
11 இந்த மூன்று பொறுப்புகளையும் அவன் செய்யாமல்போனால், பணம் எதுவும் கொடுக்காமல் அவள் விடுதலையாகிப் போகலாம்.
12 ஒருவன் யாரையாவது அடித்து அவன் செத்துப்போனால் அடித்தவன் கொல்லப்பட வேண்டும்.+
13 ஆனால், அவன் தெரியாத்தனமாக அதைச் செய்திருந்தால், அப்படி நடக்கும்படி உண்மைக் கடவுளாகிய நான் விட்டிருந்தால், அவன் ஓடிப்போவதற்கு ஒரு இடத்தை ஏற்பாடு செய்வேன்.+
14 ஒருவன் இன்னொருவன்மேல் கடும் கோபம்கொண்டு அவனை வேண்டுமென்றே கொலை செய்தால்,+ கொலைகாரனைச் சாகடிக்க வேண்டும். தப்பிப்பதற்காக அவன் என் பலிபீடத்திடம் வந்திருந்தாலும்கூட அவனை அங்கிருந்து பிடித்துக்கொண்டுபோய்ச் சாகடிக்க வேண்டும்.+
15 அப்பாவையோ அம்மாவையோ அடிக்கிறவன் கொல்லப்பட வேண்டும்.+
16 ஒருவன் யாரையாவது கடத்திக்கொண்டு+ போய் விற்றுவிட்டால் அல்லது அப்படிக் கடத்தும்போது கையும் களவுமாகப் பிடிபட்டால்,+ அவன் கொல்லப்பட வேண்டும்.+
17 அப்பாவையோ அம்மாவையோ சபிக்கிற எவனும் கொல்லப்பட வேண்டும்.+
18 சண்டை போடும்போது ஒருவன் இன்னொருவனைக் கல்லாலோ கைமுஷ்டியாலோ* அடித்ததால், அவன் படுத்த படுக்கையாகக் கிடந்து,
19 பின்பு மறுபடியும் எழுந்து ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு வெளியே நடமாட ஆரம்பித்தால், அடித்தவனுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காது. ஆனால், அடிவாங்கியவன் முழுவதுமாகக் குணமாகி வேலைக்குப் போகும்வரை அவனுக்குத் தேவையானதைக் கொடுத்து உதவ வேண்டும்.
20 ஒருவன் தனக்கு அடிமையாக இருக்கிற ஆணையோ பெண்ணையோ தடியால் அடிக்கும்போது அந்த அடிமை இறந்துபோனால், அடித்தவன் தண்டிக்கப்பட வேண்டும்.+
21 ஆனால், அந்த அடிமை ஒரு நாளோ இரண்டு நாளோ உயிரோடு இருந்தால், அடித்தவன் தண்டிக்கப்படக் கூடாது. ஏனென்றால், அந்த அடிமையை அவன் விலைகொடுத்து வாங்கியிருக்கிறான்.
22 ஆண்கள் ஒருவருக்கொருவர் சண்டை போடும்போது ஒரு கர்ப்பிணிக்கு அடிபட்டு குறைப்பிரசவம்+ ஆகிவிட்டால், அதேசமயத்தில் அவளுடைய உயிருக்கோ குழந்தையின் உயிருக்கோ ஒன்றும் ஆகாவிட்டால், அடித்தவன் அந்தப் பெண்ணின் கணவர் கேட்கிற அபராதத்தை நியாயாதிபதிகளின் மூலம் கொடுக்க வேண்டும்.+
23 ஆனால் தாயோ குழந்தையோ இறந்துவிட்டால், உயிருக்கு உயிர் கொடுக்க வேண்டும்.+
24 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,+
25 சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், அடிக்கு அடி கொடுக்க வேண்டும்.
26 ஒருவன் தனக்கு அடிமையாக இருக்கிற ஆணையோ பெண்ணையோ அடிக்கும்போது அந்த அடிமையின் கண் போய்விட்டால், கண்ணுக்கு நஷ்ட ஈடாக அந்த அடிமையை அவன் விடுதலை செய்ய வேண்டும்.+
27 அவன் தன்னுடைய அடிமையின் பல்லை உடைத்தால், பல்லுக்கு நஷ்ட ஈடாக அந்த அடிமையை அவன் விடுதலை செய்ய வேண்டும்.
28 மாடு முட்டியதால் ஒரு ஆணோ பெண்ணோ செத்துப்போனால், அந்த மாடு கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.+ அதன் இறைச்சியை யாரும் சாப்பிடக் கூடாது. மாட்டின் சொந்தக்காரனுக்குத் தண்டனை கொடுக்கக் கூடாது.
29 ஆனால், ஒரு மாடு வழக்கமாக முட்டுகிற மாடாய் இருந்தால், அதன் சொந்தக்காரன் எச்சரிக்கப்பட்டும் அவன் அதைக் கட்டி வைக்காமல்போய் அது ஒருவனைக் கொன்றுபோட்டால், அந்த மாடும் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும், அதன் சொந்தக்காரனும் கொல்லப்பட வேண்டும்.
30 ஒருவேளை உயிருக்குப் பதிலாக ஒரு மீட்புவிலையைக் கொடுக்கும்படி அவனிடம் சொல்லப்பட்டால் அந்த மொத்த விலையையும் அவன் கொடுக்க வேண்டும்.
31 ஒரு மாடு ஒருவருடைய மகனை முட்டினாலும் சரி, மகளை முட்டினாலும் சரி, மாட்டின் சொந்தக்காரனுக்கு இந்த நீதித்தீர்ப்பின்படியே செய்ய வேண்டும்.
32 ஒரு மாடு அடிமையாக இருக்கும் ஒரு ஆணையோ பெண்ணையோ முட்டினால், அதன் சொந்தக்காரன் அந்த அடிமையின் எஜமானுக்கு 30 சேக்கல்* கொடுக்க வேண்டும். அந்த மாடு கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.
33 ஏற்கெனவே உள்ள குழியை அல்லது புதிதாகத் தோண்டிய குழியை ஒருவன் மூடாமல் இருந்து, அதில் ஒரு மாடோ கழுதையோ விழுந்து செத்துவிட்டால்,
34 குழிக்குச் சொந்தக்காரன் மிருகத்தின் சொந்தக்காரனுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.+ செத்த மிருகம் அவனுக்குச் சேர வேண்டும்.
35 ஒருவனுடைய மாடு இன்னொருவனுடைய மாட்டை முட்டிக் கொன்றுபோட்டால், உயிருள்ள மாட்டை விற்று, அந்தத் தொகையை அவர்கள் இரண்டு பேரும் பகிர்ந்துகொள்ள வேண்டும். செத்துப்போன மாட்டையும் அவர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
36 அந்த மாடு வழக்கமாக முட்டுகிற மாடாய் இருந்தும் அதன் சொந்தக்காரன் அதைக் கட்டி வைக்காமல் இருந்தால், அவன் நஷ்ட ஈடாக மாட்டுக்கு மாடு கொடுக்க வேண்டும். செத்த மாடு அவனுக்குச் சேர வேண்டும்” என்றார்.
அடிக்குறிப்புகள்
^ அதாவது, “உண்மைக் கடவுளுக்கு முன்பாக.”
^ அல்லது, “அவர்.”
^ அல்லது, “கருவியாலோ.”
^ ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.