லூக்கா எழுதியது 19:1-48
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மீடியா

இந்தச் சின்ன வீடியோ, கிழக்கிலிருந்து எருசலேமுக்குப் போகும் பாதையைக் காட்டுகிறது. இன்றுள்ள எட்-டூர் கிராமத்தில் ஆரம்பித்து, ஒலிவ மலையின் உயரமான ஒரு பகுதிவரை காட்டுகிறது. எட்-டூர் கிராமம்தான் பைபிளில் சொல்லப்பட்ட பெத்பகே ஊராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பெத்பகேயின் கிழக்கே இருக்கிற ஒலிவ மலையின் கிழக்குச் சரிவிலே பெத்தானியா இருக்கிறது. இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமில் இருந்தபோது, பெத்தானியாவில் தங்குவது வழக்கம். இன்று அந்தப் பகுதி எல்-அஸாரீயா (எல் ஐஸாரீயா) என்று அழைக்கப்படுகிறது. “லாசருவின் இடம்” என்பதுதான் இந்த அரபியப் பெயரின் அர்த்தம். மார்த்தாள், மரியாள், லாசரு ஆகியவர்களின் வீட்டில் இயேசு தங்கினார் என்பதில் சந்தேகமே இல்லை. (மத் 21:17; மாற் 11:11; லூ 21:37; யோவா 11:1) இயேசு அவர்களுடைய வீட்டிலிருந்து எருசலேமுக்குப் போனபோது, இந்த வீடியோவில் காட்டப்படுகிற வழியில் போயிருக்கலாம். கி.பி. 33, நிசான் 9-ம் தேதி, இயேசு பெத்பகே ஊரிலிருந்து ஒரு கழுதையின் மேல் ஏறி ஒலிவ மலை வழியாக எருசலேமுக்குப் போயிருக்கலாம்.
1. பெத்தானியாவிலிருந்து பெத்பகேவுக்குப் போகும் சாலை
2. பெத்பகே
3. ஒலிவ மலை
4. கீதரோன் பள்ளத்தாக்கு
5. ஆலயப் பகுதி

கழுதை, கடினமான குளம்புகளைக் கொண்ட ஒரு விலங்கு. அது குதிரையின் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால், குதிரையைவிட உருவத்தில் சிறியது, அதைவிடக் குட்டையான பிடரிமயிரையும், நீளமான காதுகளையும், வாலின் முனைப்பகுதியில் மட்டும் குட்டையான முடியையும் கொண்டது. கழுதை பொதுவாக முட்டாள்தனத்துக்கும் பிடிவாதத்துக்கும் உதாரணமாகச் சொல்லப்படுகிறது; ஆனாலும், அது குதிரையைவிடப் புத்திசாலியான விலங்கு, பெரும்பாலும் பொறுமையாக இருக்கும் விலங்கு. இஸ்ரவேலில் ஆண்களும், பெண்களும், பிரபலமானவர்களும்கூட கழுதையில் சவாரி செய்தார்கள். (யோசு 15:18; நியா 5:10; 10:3, 4; 12:14; 1சா 25:42) தாவீதின் மகனாகிய சாலொமோன், ராஜாவாக அபிஷேகம் செய்யப்படுவதற்குப் போனபோது தன்னுடைய அப்பாவுக்குச் சொந்தமான ஒரு பெட்டைக் கழுதையில்தான் சவாரி செய்தார்; அது பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்த கோவேறு கழுதை. (1ரா 1:33-40) அதனால், பெரிய சாலொமோனாகிய இயேசு ஒரு குதிரைமேல் சவாரி செய்யாமல் கழுதைக்குட்டிமேல் சவாரி செய்தது மிகப் பொருத்தமாக இருந்தது; அது சக 9:9-ல் உள்ள தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாகவும் இருந்தது.

மேற்கு மதிலின் தென்பகுதியில் காணப்படும் இந்தக் கற்கள், முதல் நூற்றாண்டு ஆலயப் பகுதியில் அமைந்திருந்த கட்டிடங்களைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. எருசலேமும் அதன் ஆலயமும் ரோமர்களால் அழிக்கப்பட்ட கோர சம்பவத்தை நினைப்பூட்டுவதற்காக அவை இங்கே விடப்பட்டிருக்கின்றன.