மத்தேயு எழுதியது 21:1-46

21  அவர்கள் எருசலேமை நெருங்கியபோது, ஒலிவ மலையில்+ இருக்கிற பெத்பகே கிராமத்துக்குப் பக்கத்தில் வந்தார்கள். அப்போது இயேசு தன்னுடைய சீஷர்கள் இரண்டு பேரை அனுப்பி,+  “அதோ! அங்கே தெரிகிற அந்தக் கிராமத்துக்குப் போங்கள்; அங்கே போனவுடன், ஒரு கழுதையும் அதன் குட்டியும் கட்டி வைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள்; அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டுவாருங்கள்.  யாராவது உங்களிடம் ஏதாவது கேட்டால், ‘அவை எஜமானுக்கு வேண்டும்’ என்று சொல்லுங்கள். உடனே அவற்றை அவர் அனுப்பிவிடுவார்” என்று சொன்னார்.  “‘இதோ! உன் ராஜா உன்னிடம் வருகிறார்;+ அவர் சாந்தகுணமுள்ளவர்;+ கழுதைமேல் ஏறி வருகிறார், ஆம், சுமை சுமக்கும் கழுதையின் குட்டிமேல் ஏறி வருகிறார்’+ என சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்” என்று  தீர்க்கதரிசி மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது.  சீஷர்கள் புறப்பட்டுப் போய் இயேசு தங்களிடம் சொன்னபடியே செய்தார்கள்.+  கழுதையையும் அதன் குட்டியையும் அவர்கள் கொண்டுவந்து அவற்றின்மேல் தங்கள் மேலங்கிகளைப் போட்டார்கள், அவர் ஏறி உட்கார்ந்தார்.+  பெரும்பாலான மக்கள் தங்களுடைய மேலங்கிகளை வழியில் விரித்தார்கள்;+ வேறு சிலர் ஓலைகளை வெட்டி பாதையில் பரப்பினார்கள்.  அவருக்கு முன்னும் பின்னும் போய்க்கொண்டிருந்த கூட்டத்தார், “கடவுளே, தாவீதின் மகனைக் காத்தருளுங்கள்!*+ யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!+ பரலோகத்தில் இருக்கிறவரே, இவரைக் காத்தருளுங்கள்!”+ என்று ஆரவாரம் செய்துகொண்டே இருந்தார்கள். 10  அவர் எருசலேமுக்குள் போனபோது, நகரத்திலிருந்த எல்லாரும் பரபரப்பாகி, “இவர் யார்?” என்று கேட்டார்கள். 11  அதற்கு அந்தக் கூட்டத்தார், “இவர்தான் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசியான இயேசு!+ கலிலேயாவில் உள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்” என்று சொன்னார்கள். 12  பின்பு இயேசு ஆலயத்துக்குள் போய், அங்கே விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டும் இருந்த எல்லாரையும் வெளியே துரத்தினார்; காசு மாற்றுபவர்களின் மேஜைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார்.+ 13  பின்பு அவர்களிடம், “‘என் வீடு ஜெப வீடு என்று அழைக்கப்படும்’ என எழுதப்பட்டிருக்கிறது.+ ஆனால் நீங்கள் அதைக் கொள்ளைக்காரர்களின் குகையாக்குகிறீர்கள்”+ என்று சொன்னார். 14  அதன் பின்பு, ஆலயத்திலிருந்த அவரிடம் பார்வை இல்லாதவர்களும் கால் ஊனமானவர்களும் வந்தார்கள், அவர்களை அவர் குணமாக்கினார். 15  அவர் அற்புதமான செயல்கள் செய்வதை முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் பார்த்தார்கள்; அதோடு, “கடவுளே, தாவீதின் மகனைக் காத்தருளுங்கள்!”+ என்று ஆலயத்தில் சிறுவர்கள் ஆரவாரம் செய்வதையும் பார்த்தார்கள்; அதனால் கோபமடைந்து,+ 16  அவரிடம், “இவர்கள் சொல்வதைக் கேட்கிறாயா?” என்றார்கள். அதற்கு இயேசு, “கேட்கிறேன். ‘பிள்ளைகளின் வாயினாலும் குழந்தைகளின் வாயினாலும் உங்களுக்குப் புகழ் உண்டாகும்படி செய்தீர்கள்’ என்ற வார்த்தைகளை நீங்கள் வாசித்ததே இல்லையா?”+ என்று அவர்களிடம் கேட்டார். 17  பின்பு, அவர்களைவிட்டு விலகி, அந்த நகரத்திலிருந்து புறப்பட்டு பெத்தானியாவுக்குப் போய் அன்று ராத்திரி அங்கே தங்கினார்.+ 18  விடியற்காலையில் நகரத்துக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அவருக்குப் பசி எடுத்தது.+ 19  பாதையோரமாக இருந்த ஓர் அத்தி மரத்தைப் பார்த்து, அதன் பக்கத்தில் அவர் போனார். ஆனால், அதில் இலைகள் மட்டும்தான் இருந்தன, ஒரு கனிகூட இல்லை.+ அதனால் அந்த மரத்தைப் பார்த்து, “இனி ஒருபோதும் நீ கனிகொடுக்க மாட்டாய்” என்று சொன்னார்.+ உடனே அந்த அத்தி மரம் பட்டுப்போனது. 20  அவருடைய சீஷர்கள் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, “எப்படி இந்த அத்தி மரம் உடனே பட்டுப்போனது?”+ என்று கேட்டார்கள். 21  அதற்கு இயேசு, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு இருந்தால், நான் இந்த அத்தி மரத்துக்குச் செய்ததை நீங்களும் செய்வீர்கள்; அதுமட்டுமல்ல, நீங்கள் இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து போய்க் கடலில் விழு’ என்று சொன்னாலும் அது அப்படியே நடக்கும்.+ 22  விசுவாசத்தோடு ஜெபம் செய்தால், நீங்கள் கேட்கிற எல்லாமே உங்களுக்குக் கிடைக்கும்”+ என்று சொன்னார். 23  அவர் ஆலயத்துக்குள் போய் அங்கே கற்பித்துக்கொண்டிருந்தார்; அப்போது, முதன்மை குருமார்களும் பெரியோர்களும்* அவரிடம் வந்து, “எந்த அதிகாரத்தால் நீ இதையெல்லாம் செய்கிறாய்? உனக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?” என்று கேட்டார்கள்.+ 24  அதற்கு இயேசு, “நானும் உங்களிடம் ஒன்றைக் கேட்கிறேன். நீங்கள் பதில் சொன்னால், எந்த அதிகாரத்தால் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்கிறேன். 25  ஞானஸ்நானம் கொடுக்கிற அதிகாரத்தை யோவானுக்குக் கொடுத்தது யார்? கடவுளா* மனுஷர்களா?” என்று கேட்டார். அப்போது அவர்கள், “‘கடவுள்’ என்று சொன்னால், ‘பின்பு ஏன் அவரை நம்பவில்லை?’+ என்று கேட்பான்; 26  ‘மனுஷர்கள்’ என்று சொன்னால், ஜனங்களிடம் மாட்டிக்கொள்வோம்; ஏனென்றால், யோவானை ஒரு தீர்க்கதரிசி+ என்று அவர்கள் எல்லாரும் நம்புகிறார்கள்” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். 27  அதனால், “எங்களுக்குத் தெரியாது” என்று இயேசுவிடம் சொன்னார்கள். அதற்கு அவர், “அப்படியானால், எந்த அதிகாரத்தால் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்றார். 28  பின்பு அவர், “ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர் தன்னுடைய முதல் மகனிடம் வந்து, ‘மகனே, நீ இன்றைக்குத் திராட்சைத் தோட்டத்துக்குப் போய் வேலை செய்’ என்று சொன்னார். 29  அதற்கு அவன், ‘போக மாட்டேன்’ என்று சொன்னான். ஆனால், அதற்குப் பின்பு மனம் வருந்தி அங்கே போனான். 30  அவர் தன் இரண்டாவது மகனிடம் வந்து அதையே சொன்னார். அதற்கு அவன், ‘போகிறேன், அப்பா’ என்று சொல்லிவிட்டு, போகாமலேயே இருந்துவிட்டான். 31  இந்த இரண்டு பேரில் தங்களுடைய அப்பாவின் விருப்பப்படி நடந்துகொண்டது யார்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “முதல் மகன்தான்” என்று சொன்னார்கள். அப்போது அவர், “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், வரி வசூலிப்பவர்களும் விலைமகள்களும் உங்களுக்கு முன்பே கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போய்க்கொண்டிருக்கிறார்கள்.+ 32  ஏனென்றால், நீதியான வழியைக் காட்ட யோவான் உங்களிடம் வந்தார், நீங்களோ அவரை நம்பவில்லை. ஆனால், வரி வசூலிப்பவர்களும் விலைமகள்களும் அவரை நம்பினார்கள்;+ இதைப் பார்த்த பின்பும்கூட நீங்கள் மனம் வருந்தவில்லை, அவரை நம்பவும் இல்லை. 33  இன்னொரு உவமையைக் கேளுங்கள்: நிலச் சொந்தக்காரர் ஒருவர் திராட்சைத் தோட்டம் போட்டு,+ அதைச் சுற்றிலும் வேலியடைத்தார். அதில் திராட்சரச ஆலை அமைத்து, காவலுக்கு ஒரு கோபுரத்தைக் கட்டினார்.+ அதைத் தோட்டக்காரர்களிடம் குத்தகைக்கு விட்டுவிட்டுத் தூர தேசத்துக்குப் போனார்.+ 34  அறுவடைக் காலம் வந்தபோது, தனக்குச் சேர வேண்டிய பங்கை வாங்கி வரச் சொல்லி தன்னுடைய அடிமைகளை அந்தத் தோட்டக்காரர்களிடம் அனுப்பினார். 35  ஆனால், அந்தத் தோட்டக்காரர்கள் அவருடைய அடிமைகளைப் பிடித்து, ஒருவனை அடித்தார்கள், மற்றொருவனைக் கொலை செய்தார்கள், இன்னொருவனை கல்லெறிந்து கொன்றார்கள்.+ 36  மறுபடியும் அவர், முதலில் அனுப்பியதைவிட அதிகமான அடிமைகளை அனுப்பினார்; அவர்களுக்கும் அதேபோல் செய்தார்கள்.+ 37  ‘என் மகனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று நினைத்து, கடைசியாக அவர் தன்னுடைய மகனையே அனுப்பினார். 38  ஆனால், அந்தத் தோட்டக்காரர்கள் அவருடைய மகனைப் பார்த்தபோது, ‘இவன்தான் வாரிசு.+ வாருங்கள், நாம் இவனைத் தீர்த்துக்கட்டிவிட்டு, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளலாம்!’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். 39  அதன்படியே அவருடைய மகனைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்துக்கு வெளியே தள்ளி, கொலை செய்தார்கள்.+ 40  அதனால், அந்தத் திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரர் வரும்போது, அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வார்?” என்று கேட்டார். 41  அதற்கு அவர்கள், “அந்த அக்கிரமக்காரர்களை அடியோடு ஒழித்துக்கட்டிவிடுவார்; தனக்குச் சேர வேண்டிய பங்கைச் சரியான சமயத்தில் கொடுக்கிற வேறு தோட்டக்காரர்களிடம் திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுத்துவிடுவார்” என்று சொன்னார்கள். 42  அப்போது இயேசு, “‘கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது;+ இது யெகோவாவின் செயல், இது நம்முடைய கண்களுக்கு அருமையாக இருக்கிறது’+ என்று வேதவசனங்களில் நீங்கள் வாசித்ததே இல்லையா? 43  அதனால்தான் நான் உங்களுக்குச் சொல்கிறேன், கடவுளுடைய அரசாங்கத்தின் ஆசீர்வாதங்கள் உங்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஒரு ஜனத்திடம் கொடுக்கப்படும். 44  அதோடு, இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் சின்னாபின்னமாவான்.+ இது யார்மேல் விழுகிறதோ அவனை நசுக்கிப்போடும்” என்று சொன்னார்.+ 45  முதன்மை குருமார்களும் பரிசேயர்களும் இந்த உவமைகளைக் கேட்டபோது, தங்களை மனதில் வைத்துதான் அவர் பேசுகிறார் என்று புரிந்துகொண்டார்கள்.+ 46  அதனால், அவரைப் பிடிக்க* நினைத்தார்கள்; ஆனாலும், அவரை ஒரு தீர்க்கதரிசி என்று மக்கள் நம்பியதால்,+ அவர்களுக்குப் பயந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

பெத்பகே: இது ஒலிவ மலைமேல் இருந்த ஒரு கிராமம். “முதல் அத்திப் பழங்களின் வீடு” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வார்த்தையிலிருந்து இந்தப் பெயர் வந்திருக்கிறது. பாரம்பரிய நம்பிக்கையின்படி, இது ஒலிவ மலையின் தென்கிழக்குச் சரிவில், அதன் உச்சிக்குப் பக்கத்தில், எருசலேமுக்கும் பெத்தானியாவுக்கும் இடையில் இருந்தது. எருசலேமிலிருந்து சுமார் 1 கி.மீ. (1 மைலுக்கும் குறைவான) தூரத்தில் இருந்தது.—மாற் 11:1; லூ 19:29; இணைப்பு A7-ஐயும் வரைபடம் 6-ஐயும் பாருங்கள்.

கழுதைமேல் . . . கழுதையின் குட்டிமேல்: மத் 21:2, 7-ல் இரண்டு விலங்குகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தாலும், சக 9:9-ல் ஒரு விலங்கின் மீதுதான் ராஜா வருவதாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த வசனத்தில், “அவர் கழுதையின் மேல் ஏறிவருகிறார், [அதாவது] கழுதைக்குட்டியின் மேல் ஏறிவருகிறார்” என்று கொடுக்கப்பட்டுள்ளது.​—மத் 21:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

ஒரு கழுதையும் அதன் குட்டியும் கட்டி வைக்கப்பட்டிருப்பதை: மத்தேயு மட்டும்தான் ஒரு கழுதையையும் அதன் குட்டியையும் சேர்த்துக் குறிப்பிட்டிருக்கிறார். (மாற் 11:2-7; லூ 19:30-35; யோவா 12:14, 15) மாற்குவும் லூக்காவும் யோவானும் கழுதைக்குட்டியை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இயேசு கழுதைக்குட்டியின் மீது மட்டும் சவாரி செய்ததால் அவர்கள் அதை மட்டும் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.​—மத் 21:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

சாந்தகுணமுள்ளவர்: வே.வா., “மனத்தாழ்மையானவர்.”​—மத் 5:5-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

கழுதைமேல் . . . கழுதையின் குட்டிமேல்: மத் 21:2, 7-ல் இரண்டு விலங்குகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தாலும், சக 9:9-ல் ஒரு விலங்கின் மீதுதான் ராஜா வருவதாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த வசனத்தில், “அவர் கழுதையின் மேல் ஏறிவருகிறார், [அதாவது] கழுதைக்குட்டியின் மேல் ஏறிவருகிறார்” என்று கொடுக்கப்பட்டுள்ளது.​—மத் 21:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

சீயோன் மகளுக்கு: வே.வா., “சீயோனின் மகளுக்கு.” பைபிளில், நகரங்கள் அடிக்கடி பெண்களாக உருவகப்படுத்திச் சொல்லப்பட்டுள்ளன அல்லது அடையாள அர்த்தத்தில் பெண்பாலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கே ‘மகள்’ என்ற வார்த்தை அந்த நகரத்தைக் குறிக்கலாம் அல்லது அந்த நகரத்தைச் சேர்ந்த மக்களைக் குறிக்கலாம். சீயோன் என்ற பெயர் எருசலேம் நகரத்தைக் குறிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தப்பட்டது.

சாந்தமாக இருப்பவர்கள்: சாந்தம் என்பது கடவுளுடைய விருப்பத்துக்கும் வழிநடத்துதலுக்கும் மனதார அடிபணிகிறவர்களின் குணத்தைக் குறிக்கிறது. அப்படிப்பட்டவர்கள் மற்றவர்களை அடக்கியாள முயற்சி செய்ய மாட்டார்கள். சாந்தம் கோழைத்தனத்தையோ பலவீனத்தையோ குறிப்பதில்லை. “தாழ்மையான” அல்லது “மனத்தாழ்மையான” என்று அர்த்தப்படுத்துகிற ஒரு எபிரெய வார்த்தைக்கு இந்த வார்த்தையை செப்டுவஜன்ட் பயன்படுத்தியிருக்கிறது. மோசேயையும் (எண் 12:3), கற்றுக்கொள்ளும் விருப்பம் உள்ளவர்களையும் (சங் 25:9), பூமியைச் சொந்தமாக்கப்போகிற நபர்களையும் (சங் 37:11), மேசியாவையும் (சக 9:9; மத் 21:4) விவரிப்பதற்கு அது இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறது. இயேசுவும் தான் சாந்தமாக இருப்பதாக, அதாவது தாழ்மையாக இருப்பதாக, சொன்னார்.—மத் 11:29.

ஒரு கழுதையும் அதன் குட்டியும் கட்டி வைக்கப்பட்டிருப்பதை: மத்தேயு மட்டும்தான் ஒரு கழுதையையும் அதன் குட்டியையும் சேர்த்துக் குறிப்பிட்டிருக்கிறார். (மாற் 11:2-7; லூ 19:30-35; யோவா 12:14, 15) மாற்குவும் லூக்காவும் யோவானும் கழுதைக்குட்டியை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இயேசு கழுதைக்குட்டியின் மீது மட்டும் சவாரி செய்ததால் அவர்கள் அதை மட்டும் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.​—மத் 21:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசியின் மூலம் சொன்னது நிறைவேற வேண்டும் என்பதற்காகவே: இந்த வார்த்தைகளையும் இதுபோன்ற வார்த்தைகளையும் மத்தேயு தன் சுவிசேஷத்தில் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார். இயேசுதான் வாக்குக் கொடுக்கப்பட்டிருந்த மேசியா என்பதை யூதர்களுக்கு வலியுறுத்துவதற்காக அவர் இந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தியிருக்கலாம்.—மத் 2:15, 23; 4:16; 8:17; 12:17; 13:35; 21:5; 26:56; 27:10.

தீர்க்கதரிசி மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே: மத் 21:4-ல் உள்ள மேற்கோளின் முதல் பாகம் அநேகமாக சக 9:9-லிருந்தும், அதன் இரண்டாவது பாகம் ஏசா 62:11-லிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன.​—மத் 1:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

ஒரு கழுதையும் அதன் குட்டியும் கட்டி வைக்கப்பட்டிருப்பதை: மத்தேயு மட்டும்தான் ஒரு கழுதையையும் அதன் குட்டியையும் சேர்த்துக் குறிப்பிட்டிருக்கிறார். (மாற் 11:2-7; லூ 19:30-35; யோவா 12:14, 15) மாற்குவும் லூக்காவும் யோவானும் கழுதைக்குட்டியை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இயேசு கழுதைக்குட்டியின் மீது மட்டும் சவாரி செய்ததால் அவர்கள் அதை மட்டும் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.​—மத் 21:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

கழுதைமேல் . . . கழுதையின் குட்டிமேல்: மத் 21:2, 7-ல் இரண்டு விலங்குகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தாலும், சக 9:9-ல் ஒரு விலங்கின் மீதுதான் ராஜா வருவதாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த வசனத்தில், “அவர் கழுதையின் மேல் ஏறிவருகிறார், [அதாவது] கழுதைக்குட்டியின் மேல் ஏறிவருகிறார்” என்று கொடுக்கப்பட்டுள்ளது.​—மத் 21:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

கழுதையையும் அதன் குட்டியையும்: மத் 21:2, 4-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

அவர் ஏறி உட்கார்ந்தார்: நே.மொ., “அவர் அவற்றின் மேல் ஏறி உட்கார்ந்தார்.” அதாவது, அவர் அந்த மேலங்கிகளின் மேல் உட்கார்ந்தார்.

ராஜாவாகிய தாவீது: இந்த வம்சாவளிப் பட்டியலில் நிறைய ராஜாக்களுடைய பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன; இருந்தாலும், தாவீதுக்கு மட்டும்தான் “ராஜா” என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலின் அரசப் பரம்பரை, ‘தாவீதின் வம்சம்’ என்று சொல்லப்பட்டது. (1ரா 12:19, 20) முதல் வசனத்தில் இயேசுவை “தாவீதின் மகன்” என்று சொல்வதன் மூலம், பைபிளின் மையப்பொருளாகிய கடவுளுடைய அரசாங்கத்தை மத்தேயு சிறப்பித்துக் காட்டுகிறார்; தாவீதோடு கடவுள் செய்த ஒப்பந்தத்தின்படி, தாவீதின் அரச பரம்பரையில் வரும் வாரிசு இயேசுதான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.—2சா 7:11-16.

தாவீதின் மகன்: தாவீதின் வம்சத்தில் வருகிற ஒருவரால்தான் அரசாங்க ஒப்பந்தம் நிறைவேற வேண்டியிருந்தது; அந்த வாரிசு இயேசுதான் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.

தாவீதின் மகனை: இயேசு தாவீதின் வம்சத்தில் வந்தவர் என்பதையும், அவர்தான் வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியா என்பதையும் மக்கள் நம்பியதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.​—மத் 1:1, 6; 15:25; 20:30-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

காத்தருளுங்கள்!: கிரேக்கில், “ஓசன்னா.” இந்த கிரேக்க வார்த்தை, “காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கிறோம்” அல்லது “தயவுசெய்து காப்பாற்றுங்கள்” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வார்த்தைகளிலிருந்து வந்திருக்கிறது. காப்பாற்றச் சொல்லி அல்லது வெற்றி தரச் சொல்லி கடவுளிடம் கெஞ்சுவதை இது குறிக்கிறது. “தயவுசெய்து மீட்புக் கொடுங்கள்” என்றும் இதை மொழிபெயர்க்கலாம். காலப்போக்கில், இந்த வார்த்தை ஜெபம் செய்யும்போது மட்டுமல்லாமல், கடவுளைப் புகழும்போதும் பயன்படுத்தப்பட்டது. இதற்கான எபிரெய வார்த்தைகள் சங் 118:25-ல் கொடுக்கப்பட்டுள்ளன. அவை பஸ்கா பண்டிகைக் காலத்தில் பாடப்பட்ட ‘அல்லேல் சங்கீதங்களின்’ பாகமாக இருந்தன. அதனால், இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த வார்த்தைகள் உடனடியாக மனதுக்கு வந்தன. தாவீதின் மகனைக் காத்தருள வேண்டுமென்று செய்யப்பட்ட ஜெபத்துக்குக் கடவுள் பதிலளித்த ஒரு விதம், அவரை உயிர்த்தெழுப்பியதாகும். சங் 118:22, 23-ல் உள்ள வார்த்தைகளை இயேசுவே மேற்கோள் காட்டி, மேசியாவாகிய தனக்கு அதைப் பொருத்திக் காட்டினார்.—மத் 21:42.

யெகோவாவின்: இது சங் 118:25, 26-ன் மேற்கோள்; மூல எபிரெயப் பதிவில், கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் (தமிழில், ய்ஹ்வ்ஹ்) பயன்படுத்தப்பட்டுள்ளன.​—இணைப்பு C-ஐப் பாருங்கள்.

தாவீதின் மகனே: பார்வையில்லாத அந்த இரண்டு பேரும் இயேசுவை இப்படி அழைப்பதன் மூலம், அவர்தான் மேசியா என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டார்கள்.​—மத் 1:1, 6; 15:25-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

அவர் முன்னால் மண்டிபோட்டு: வே.வா., “அவர் முன்னால் தலைவணங்கி; அவருக்கு மரியாதை செலுத்தி.” யூதர் அல்லாத அந்தப் பெண், இயேசுவை “தாவீதின் மகனே” (மத் 15:22) என்று அழைப்பதன் மூலம், அவர்தான் வாக்குக் கொடுக்கப்பட்டிருந்த மேசியா என்பதை ஒத்துக்கொண்டதாகத் தெரிகிறது. அவரை ஒரு தெய்வமாக நினைத்து அல்ல, கடவுளுடைய பிரதிநிதியாக நினைத்து அவள் மண்டிபோட்டாள்.​—மத் 2:2; 8:2; 14:33; 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

பரபரப்பாகி: வே.வா., “ஆடிப்போய் (பொங்கியெழுந்து).” ஒரு நிலநடுக்கத்தின் அல்லது புயலின் விளைவுகளை (மத் 27:51; வெளி 6:13) குறிக்கும் கிரேக்க வினைச்சொல் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது; நகர மக்கள் மத்தியில் ஏற்பட்ட சலசலப்பை விவரிப்பதற்கு அது இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வினைச்சொல்லோடு சம்பந்தப்பட்ட கிரேக்க பெயர்ச்சொல்லான சீஸ்மாஸ், “புயல்காற்று” அல்லது “நிலநடுக்கம்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது.—மத் 8:24; 24:7; 27:54; 28:2.

ஆலயத்துக்குள்: இங்கே ஆலயம் என்பது, ஆலயத்தில் இருந்த மற்ற தேசத்தாருக்கான இடத்தைக் குறிப்பதாகத் தெரிகிறது.​—இணைப்பு B11-ஐப் பாருங்கள்.

காசு மாற்றுபவர்களின்: அந்தச் சமயத்தில் வித்தியாசமான காசுகள் புழக்கத்தில் இருந்தன. ஆனால், வருடாந்தர ஆலய வரி செலுத்துவதற்காக அல்லது பலிக்கான விலங்குகளை வாங்குவதற்காக ஒரு குறிப்பிட்ட விதமான காசைத்தான் பயன்படுத்த முடிந்ததாகத் தெரிகிறது. அதனால், மற்ற ஊர்களிலிருந்து எருசலேமுக்கு வந்த யூதர்கள், தங்களுடைய காசை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது; அப்போதுதான் அது ஆலயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. காசு மாற்றுபவர்கள் மக்களிடம் அளவுக்கதிகமான கட்டணம் வசூலித்ததாகவும், அது கொள்ளையடிப்பதற்குச் சமமாக இருந்ததாகவும் இயேசு நினைத்தார்.

கொள்ளைக்காரர்களின் குகையாக்குகிறீர்கள்: வே.வா., “திருடர்கள் பதுங்குகிற இடமாக்குகிறீர்கள்.” இயேசு இங்கே எரே 7:11-ஐ மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார். அந்த வியாபாரிகளும் காசு மாற்றுபவர்களும் பலிக்கான விலங்குகளை அநியாயமான விலைக்கு விற்றதாலும், காசு மாற்றுவதற்கு அநியாயமான கட்டணம் வசூலித்ததாலும், இயேசு அவர்களை ‘கொள்ளைக்காரர்கள்’ என்று சொல்லியிருப்பார். யெகோவாவின் ஜெப வீடு, அதாவது அவரை வணங்குவதற்கான இடம், ஒரு விற்பனைக் கூடமாக மாற்றப்பட்டிருந்ததால் இயேசு மிகவும் கோபப்பட்டார்.

ஆலயத்திலிருந்த: இங்கே ஆலயம் என்பது, அநேகமாக ஆலயத்தில் இருந்த மற்ற தேசத்தாருக்கான இடத்தைக் குறிக்கலாம். ஏனென்றால், பார்வை இல்லாதவர்களும் கால் ஊனமானவர்களும் ஆலயத்தின் உள்ளே இருந்த சில பகுதிகளுக்குப் போக அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் இயேசு ஆலயத்தை சுத்தப்படுத்துவதன் மூலமாக மட்டுமல்லாமல், அங்கே தன்னைத் தேடி வந்த பார்வையற்றவர்களையும் கால் ஊனமானவர்களையும் குணப்படுத்துவதன் மூலமாகவும் பக்திவைராக்கியத்தைக் காட்டினார்; இதைத்தான் மத்தேயுவின் பதிவு சுட்டிக்காட்டுவதுபோல் தெரிகிறது.

கடவுளே, தாவீதின் மகனைக் காத்தருளுங்கள்!: மத் 21:9-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

தாவீதின் மகனை: இயேசு தாவீதின் வம்சத்தில் வந்தவர் என்பதையும், அவர்தான் வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியா என்பதையும் மக்கள் நம்பியதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.​—மத் 1:1, 6; 15:25; 20:30-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

காத்தருளுங்கள்!: கிரேக்கில், “ஓசன்னா.” இந்த கிரேக்க வார்த்தை, “காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கிறோம்” அல்லது “தயவுசெய்து காப்பாற்றுங்கள்” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வார்த்தைகளிலிருந்து வந்திருக்கிறது. காப்பாற்றச் சொல்லி அல்லது வெற்றி தரச் சொல்லி கடவுளிடம் கெஞ்சுவதை இது குறிக்கிறது. “தயவுசெய்து மீட்புக் கொடுங்கள்” என்றும் இதை மொழிபெயர்க்கலாம். காலப்போக்கில், இந்த வார்த்தை ஜெபம் செய்யும்போது மட்டுமல்லாமல், கடவுளைப் புகழும்போதும் பயன்படுத்தப்பட்டது. இதற்கான எபிரெய வார்த்தைகள் சங் 118:25-ல் கொடுக்கப்பட்டுள்ளன. அவை பஸ்கா பண்டிகைக் காலத்தில் பாடப்பட்ட ‘அல்லேல் சங்கீதங்களின்’ பாகமாக இருந்தன. அதனால், இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த வார்த்தைகள் உடனடியாக மனதுக்கு வந்தன. தாவீதின் மகனைக் காத்தருள வேண்டுமென்று செய்யப்பட்ட ஜெபத்துக்குக் கடவுள் பதிலளித்த ஒரு விதம், அவரை உயிர்த்தெழுப்பியதாகும். சங் 118:22, 23-ல் உள்ள வார்த்தைகளை இயேசுவே மேற்கோள் காட்டி, மேசியாவாகிய தனக்கு அதைப் பொருத்திக் காட்டினார்.—மத் 21:42.

பெத்தானியாவுக்கு: இது ஒலிவ மலையின் தென் கிழக்குச் சரிவில் (தென் கிழக்கின் கிழக்குச் சரிவில்), எருசலேமிலிருந்து கிட்டத்தட்ட 3 கி.மீ. (2 மைல்) தூரத்தில் இருந்த ஒரு கிராமம். (யோவா 11:18, அடிக்குறிப்பு) அங்குதான் மார்த்தாள், மரியாள், லாசரு ஆகியோரின் வீடு இருந்தது. யூதேயாவில் இருந்தபோது இயேசு இவர்களுடைய வீட்டில்தான் தங்கியதாகத் தெரிகிறது. (யோவா 11:1) இன்று அந்தப் பகுதியில் ஒரு சின்னக் கிராமம் இருக்கிறது; “லாசருவின் இடம்” என்ற அர்த்தத்தைத் தரும் ஒரு அரபியப் பெயரால் அது அழைக்கப்படுகிறது.

அதில் இலைகள் மட்டும்தான் இருந்தன, ஒரு கனிகூட இல்லை: அந்தப் பருவத்தில் அத்தி மரம் பொதுவாகக் கனி தராது என்பது உண்மைதான். ஆனால், அந்த மரத்தில் இலைகள் இருந்தன; பொதுவாக, ஒரு மரத்தில் முதல் பழங்கள் வந்த பிறகுதான் இலைகள் வரும். ஆனால் இந்த மரத்தில் பழங்களே வராமல் இலைகள் மட்டும்தான் வந்திருந்தன. அதனால், இனிமேலும் அதில் பழங்கள் வராது என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதன் தோற்றம் ஏமாற்றமளிப்பதாக இருந்ததால் அவர் அதைச் சபித்தார். அதாவது, இனி கனிகொடுக்க மாட்டாய் என்று சொல்லி, அதைப் பட்டுப்போக வைத்தார்.

உண்மையாகவே: கிரேக்கில், ஆமென். இது, ஆமன் என்ற எபிரெய வார்த்தையின் எழுத்துப்பெயர்ப்பு. இதன் அர்த்தம், “அப்படியே ஆகட்டும்” அல்லது “நிச்சயமாகவே.” ஒரு விஷயத்தை, வாக்குறுதியை, அல்லது தீர்க்கதரிசனத்தைச் சொல்வதற்கு முன்பு இயேசு அடிக்கடி இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். இப்படி, அவர் சொல்லவந்த விஷயம் முழுக்க முழுக்க உண்மை என்பதையும் நம்பகமானது என்பதையும் வலியுறுத்திக் காட்டினார். “உண்மையாகவே” அல்லது ஆமென் என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்தியதுபோல் வேறு யாரும் பயன்படுத்தியதாக வேறெந்தப் புனித நூலும் சொல்வதில்லை. தான் சொல்லவரும் விஷயம் நம்பகமானது என்பதை இன்னும் அதிகமாக வலியுறுத்துவதற்காக இயேசு இந்த வார்த்தையை அடுத்தடுத்து இரண்டு தடவை சொல்லியிருக்கிறார் (ஆமென் ஆமென்); யோவான் சுவிசேஷம் முழுவதிலும் அந்தப் பதிவுகளை நாம் பார்க்கலாம்.—யோவா 1:51.

பெரியோர்களாலும்: வே.வா., “மூப்பர்களாலும்.” பெரியோர்கள் என்பதற்கான கிரேக்க வார்த்தை பிரஸ்பிட்டிரோஸ். பைபிளில் பயன்படுத்தப்படும்போது, சமுதாயத்திலோ தேசத்திலோ அதிகாரமும் பொறுப்பும் உள்ள நபர்களை அது முக்கியமாகக் குறிக்கிறது. அது சிலசமயங்களில் வயதில் மூத்தவர்களைக் குறிக்கிறது (லூ 15:25; அப் 2:17), ஆனால் எப்போதுமே அல்ல. இந்த வசனத்தில் அது யூதத் தலைவர்களைக் குறிக்கிறது; அவர்கள் அடிக்கடி முதன்மை குருமார்களோடும் வேத அறிஞர்களோடும் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த மூன்று பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்தான் நியாயசங்கத்தின் உறுப்பினர்களாக இருந்தார்கள்.​—மத் 21:23; 26:3, 47, 57; 27:1, 41; 28:12; சொல் பட்டியலில் “மூப்பர்கள்; பெரியோர்கள்” என்ற தலைப்பைப் பாருங்கள்.

பெரியோர்களும்: மத் 16:21-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

‘போக மாட்டேன்’ என்று சொன்னான்: இந்த உவமையில் (மத் 21:28-31) வருகிற முதல் மகனும் இரண்டாவது மகனும் சொன்ன பதில்களும் செய்த காரியங்களும், பழமையான சில கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் வித்தியாசமான வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. (கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைப் பாருங்கள்.) அவற்றின் அடிப்படை அர்த்தம் ஒன்றுதான் என்றாலும், பழமையான பல கையெழுத்துப் பிரதிகளில் இந்த வரிசையில்தான் கொடுக்கப்பட்டுள்ளன.

வரி வசூலிப்பவர்களும்: நிறைய யூதர்கள் ரோம அதிகாரிகளுக்காக வரி வசூலித்தார்கள். மக்களுக்கு அவர்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. ஏனென்றால், தாங்கள் வெறுக்கிற வேறொரு நாட்டுக்கு அவர்கள் துணைபோனதோடு, சட்டப்படி வசூலிக்க வேண்டிய தொகையைவிட அதிகமாக வசூலித்தார்கள். வரி வசூலித்த யூதர்களிடமிருந்து மற்ற யூதர்கள் பொதுவாக ஒதுங்கியே இருந்தார்கள். அவர்களைப் பாவிகள் போலவும் விலைமகள்கள் போலவும் பார்த்தார்கள்.—மத் 11:19; 21:32.

வரி வசூலிப்பவர்களும்: மத் 5:46-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

உவமைகள்: வே.வா., “நீதிக் கதைகள்; உருவகக் கதைகள்.” இதற்கான கிரேக்க வார்த்தை, பாராபோலே. இதன் நேரடி அர்த்தம், “ஒன்றுக்குப் பக்கத்தில் (ஒன்றோடு சேர்த்து) வைப்பது.” இது ஒரு உருவகக் கதையாக, ஒரு பழமொழியாக, அல்லது ஒரு உதாரணமாக இருக்கலாம். இயேசு, அடிக்கடி ஒரு விஷயத்தை அதேபோன்ற இன்னொரு விஷயத்துக்குப் ‘பக்கத்தில் வைத்து,’ அதாவது இன்னொரு விஷயத்தோடு ஒப்பிட்டு, பேசினார். (மாற் 4:30) இயேசு சுருக்கமான உவமைகளைப் பயன்படுத்தினார். அவை பொதுவாக, ஏதோவொரு ஒழுக்க அல்லது ஆன்மீக நெறியை உணர்த்தும் கற்பனைக் கதைகளாக இருந்தன.

உவமையை: வே.வா., “நீதிக் கதையை; உருவகக் கதையை.”​—மத் 13:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

கோபுரத்தை: திருடர்களும் விலங்குகளும் வராதபடி திராட்சைத் தோட்டங்களைக் காவல் காப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட உயரமான இடம்.—ஏசா 5:2.

குத்தகைக்கு விட்டுவிட்டு: இது, முதல் நூற்றாண்டில் இஸ்ரவேலர்கள் மத்தியில் சகஜமாக இருந்த ஒரு வழக்கம். இந்த உவமையில், தோட்டத்தின் சொந்தக்காரர் ஆரம்பக் கட்ட வேலைகளை ஏற்கெனவே செய்திருந்தார். அதனால், அதற்குத் தகுந்த பலன் கிடைக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்த்தது நியாயமாக இருந்தது.

அந்த அக்கிரமக்காரர்களை அடியோடு ஒழித்துக்கட்டிவிடுவார்: கிரேக்கில், இங்கே சொல் வித்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; அதாவது, தண்டனைத் தீர்ப்புச் செய்தியின் வலிமையைக் கூட்டுவதற்காக, ஒரே வார்த்தையின் வித்தியாசமான வடிவங்கள் இப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளன: “அவர்கள் கொடூரர்களாக இருப்பதால் அவர்களுக்குக் கொடூரமான அழிவைக் கொண்டுவருவார்.”

மூலைக்குத் தலைக்கல்லாக: வே.வா., “மிக முக்கியமான கல்லாக.” சங் 118:22-ல் பயன்படுத்தப்பட்டுள்ள எபிரெய வார்த்தைகளும், இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைகளும், “மூலையின் தலை” என்ற நேரடி அர்த்தத்தைக் கொடுக்கின்றன. இந்த வார்த்தைகளைப் பலர் பல விதமாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்; ஆனாலும், இரண்டு சுவர்கள் சந்திக்கும் மூலையில், அவை விலகாமல் இருப்பதற்காக மேலே பொருத்தப்படும் கல்லை அவை குறித்ததாகத் தெரிகிறது. இயேசு இந்தத் தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டி, தான்தான் “மூலைக்குத் தலைக்கல்” என்பதைச் சுட்டிக்காட்டினார். ஒரு கட்டிடத்தின் உச்சியில் வைக்கப்படுகிற தலைக்கல் எப்படி அந்தக் கட்டிடத்தின் மிக முக்கியமான கல்லாக இருக்கிறதோ, அப்படித்தான் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களின் சபைக்கு, அதாவது ஆன்மீக ஆலயத்துக்கு, இயேசு கிறிஸ்து மிக முக்கியமான தலைக்கல்லாக இருக்கிறார்.

யெகோவாவின்: இது சங் 118:22, 23-ன் மேற்கோள்; மூல எபிரெயப் பதிவில், கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் (தமிழில், ய்ஹ்வ்ஹ்) பயன்படுத்தப்பட்டுள்ளன.​—இணைப்பு C-ஐப் பாருங்கள்.

வேதவசனங்களில்: வேதவசனங்கள் என்ற வார்த்தை, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட எபிரெய வேதாகமம் முழுவதையும் குறிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

மீடியா

பெத்பகே, ஒலிவ மலை, எருசலேம்
பெத்பகே, ஒலிவ மலை, எருசலேம்

இந்தச் சின்ன வீடியோ, கிழக்கிலிருந்து எருசலேமுக்குப் போகும் பாதையைக் காட்டுகிறது. இன்றுள்ள எட்-டூர் கிராமத்தில் ஆரம்பித்து, ஒலிவ மலையின் உயரமான ஒரு பகுதிவரை காட்டுகிறது. எட்-டூர் கிராமம்தான் பைபிளில் சொல்லப்பட்ட பெத்பகே ஊராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பெத்பகேயின் கிழக்கே இருக்கிற ஒலிவ மலையின் கிழக்குச் சரிவிலே பெத்தானியா இருக்கிறது. இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமில் இருந்தபோது, பெத்தானியாவில் தங்குவது வழக்கம். இன்று அந்தப் பகுதி எல்-அஸாரீயா (எல் ஐஸாரீயா) என்று அழைக்கப்படுகிறது. “லாசருவின் இடம்” என்பதுதான் இந்த அரபியப் பெயரின் அர்த்தம். மார்த்தாள், மரியாள், லாசரு ஆகியவர்களின் வீட்டில் இயேசு தங்கினார் என்பதில் சந்தேகமே இல்லை. (மத் 21:17; மாற் 11:11; லூ 21:37; யோவா 11:1) இயேசு அவர்களுடைய வீட்டிலிருந்து எருசலேமுக்குப் போனபோது, இந்த வீடியோவில் காட்டப்படுகிற வழியில் போயிருக்கலாம். கி.பி. 33, நிசான் 9-ம் தேதி, இயேசு பெத்பகே ஊரிலிருந்து ஒரு கழுதையின் மேல் ஏறி ஒலிவ மலை வழியாக எருசலேமுக்குப் போயிருக்கலாம்.

1. பெத்தானியாவிலிருந்து பெத்பகேவுக்குப் போகும் சாலை

2. பெத்பகே

3. ஒலிவ மலை

4. கீதரோன் பள்ளத்தாக்கு

5. ஆலயப் பகுதி

கழுதைக்குட்டி
கழுதைக்குட்டி

கழுதை, கடினமான குளம்புகளைக் கொண்ட ஒரு விலங்கு. அது குதிரையின் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால், குதிரையைவிட உருவத்தில் சிறியது, அதைவிடக் குட்டையான பிடரிமயிரையும், நீளமான காதுகளையும், வாலின் முனைப்பகுதியில் மட்டும் குட்டையான முடியையும் கொண்டது. கழுதை பொதுவாக முட்டாள்தனத்துக்கும் பிடிவாதத்துக்கும் உதாரணமாகச் சொல்லப்படுகிறது; ஆனாலும், அது குதிரையைவிடப் புத்திசாலியான விலங்கு, பெரும்பாலும் பொறுமையாக இருக்கும் விலங்கு. இஸ்ரவேலில் ஆண்களும், பெண்களும், பிரபலமானவர்களும்கூட கழுதையில் சவாரி செய்தார்கள். (யோசு 15:18; நியா 5:10; 10:3, 4; 12:14; 1சா 25:42) தாவீதின் மகனாகிய சாலொமோன், ராஜாவாக அபிஷேகம் செய்யப்படுவதற்குப் போனபோது தன்னுடைய அப்பாவுக்குச் சொந்தமான ஒரு பெட்டைக் கழுதையில்தான் சவாரி செய்தார்; அது பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்த கோவேறு கழுதை. (1ரா 1:33-40) அதனால், பெரிய சாலொமோனாகிய இயேசு ஒரு குதிரைமேல் சவாரி செய்யாமல் கழுதைக்குட்டிமேல் சவாரி செய்தது மிகப் பொருத்தமாக இருந்தது; அது சக 9:9-ல் உள்ள தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாகவும் இருந்தது.

திராட்சரச ஆலை
திராட்சரச ஆலை

இஸ்ரவேலில் திராட்சைகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்பட்டன. திராட்சையின் வகையைப் பொறுத்தும் அந்தப் பகுதியின் சீதோஷ்ணத்தைப் பொறுத்தும் அறுவடைக் காலம் மாறுபட்டது. அவை பொதுவாக சுண்ணாம்புக்கல் தொட்டிகளில் அல்லது பாறைகளில் வெட்டப்பட்ட தொட்டிகளில் வைக்கப்பட்டன. ஆண்கள் பொதுவாகப் பாட்டு பாடிக்கொண்டே வெறுங்காலில் திராட்சைகளை மிதித்தார்கள்.—ஏசா 16:10; எரே 25:30; 48:33.

1. அறுவடை செய்யப்பட்ட திராட்சைகள்

2. திராட்சரச ஆலை

3. வடிகால்

4. திராட்சரசம் வடிவதற்கான கீழ்த் தொட்டி

5. திராட்சமதுவுக்கான மண் ஜாடிகள்