அப்போஸ்தலர் 1:1-26

1  அன்புள்ள தெயோப்பிலுவே, இயேசு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்த எல்லாவற்றையும் கற்பித்த எல்லாவற்றையும் பற்றி என்னுடைய முதல் புத்தகத்தில் எழுதியிருந்தேன்.+  அவர் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு+ முன்பு, தான் தேர்ந்தெடுத்திருந்த அப்போஸ்தலர்களுக்குக்+ கடவுளுடைய சக்தியினால் அறிவுரைகள் கொடுத்தார்.  பாடுகள் பட்டு இறந்த பின்பு, 40 நாட்களாக அவர்களுக்குத் தோன்றி, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொல்லிவந்தார்;+ தான் உயிரோடு இருப்பதை நம்பகமான பல ஆதாரங்கள் மூலம் அவர்களுக்குக் காட்டினார்.+  அவர்களைச் சந்தித்தபோது, “எருசலேமைவிட்டுப் போகாதீர்கள்;+ தகப்பனின் வாக்குறுதியைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன், அந்த வாக்குறுதி நிறைவேறும்வரை காத்திருங்கள்”+ என்று கட்டளை கொடுத்தார்.  “யோவான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுத்தார்; நீங்களோ இன்னும் சில நாட்களில் கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்”+ என்றும் சொன்னார்.  அவர்கள் மறுபடியும் ஒன்றாகக் கூடியிருந்தபோது, “எஜமானே, இந்தச் சமயத்திலா இஸ்ரவேலுக்கு அரசாங்கத்தை மீட்டுத் தரப்போகிறீர்கள்?”+ என்று அவரிடம் கேட்டார்கள்.  அதற்கு அவர், “தகப்பனின் கட்டுப்பாட்டிலுள்ள* காலங்களையோ வேளைகளையோ*+ நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  ஆனால், கடவுளுடைய சக்தி உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமை பெற்று,+ எருசலேமிலும்+ யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும்+ பூமியின் எல்லைகள் வரையிலும்+ எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்”+ என்று சொன்னார்.  அவர் இதையெல்லாம் சொன்ன பின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்; ஒரு மேகம் அவர்களுடைய பார்வையிலிருந்து அவரை மறைத்தது.+ 10  அவர் மேலே போய்க்கொண்டிருந்தபோது, அவர்கள் வானத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது, வெள்ளை உடை அணிந்திருந்த இரண்டு பேர்+ திடீரென்று அவர்கள் பக்கத்தில் வந்து நின்று, 11  “கலிலேயர்களே, ஏன் வானத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? உங்களிடமிருந்து வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இயேசு, எந்த விதத்தில் வானத்துக்குப் போவதைப் பார்த்தீர்களோ அந்த விதத்திலேயே வருவார்” என்று சொன்னார்கள். 12  பின்பு, ஒலிவ மலை என்று அழைக்கப்பட்ட மலையிலிருந்து அவர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்;+ அந்த மலை எருசலேமுக்குப் பக்கத்தில், ஓர் ஓய்வுநாள் பயணதூரத்தில்தான்* இருந்தது. 13  பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தொலொமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, பக்திவைராக்கியமுள்ளவன் என்று அழைக்கப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதாஸ் ஆகிய அவர்கள் எருசலேமுக்கு வந்து, தாங்கள் தங்கியிருந்த வீட்டின் மாடி அறைக்குப் போனார்கள்.+ 14  சில பெண்களோடும்+ இயேசுவின் சகோதரர்களோடும் அவருடைய அம்மா மரியாளோடும்+ அவர்கள் எல்லாரும் விடாமல் ஒருமனதோடு ஜெபம் செய்துகொண்டிருந்தார்கள். 15  அப்படி ஒருநாள் சுமார் 120 பேர் கூடியிருந்தபோது, பேதுரு அவர்கள் நடுவில் எழுந்து நின்று, 16  “சகோதரர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த யூதாசைப்+ பற்றிக் கடவுளுடைய சக்தி தாவீதின் மூலம் முன்னதாகவே சொன்ன வசனம் நிறைவேற வேண்டியிருந்தது.+ 17  அவன் எங்களில் ஒருவனாக இருந்தான்,+ எங்களோடு சேர்ந்து இந்த ஊழியத்தைச் செய்துவந்தான். 18  ஆனால், அவன் செய்த அநீதிக்குக் கிடைத்த கூலியை+ வைத்து ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு தலைகுப்புற விழுந்ததால் அவனுடைய வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போனது.+ 19  இந்த விஷயம் எருசலேமில் குடியிருந்த எல்லாருக்கும் தெரியவந்தது. அதனால், அந்த நிலத்துக்கு அவர்களுடைய மொழியில் அக்கெல்தமா என்று பெயர் வைத்தார்கள். இதற்கு “இரத்த நிலம்” என்று அர்த்தம். 20  சங்கீத புத்தகத்தில், ‘அவனுடைய வீடு வெறிச்சோடிப் போகட்டும், அது ஆளில்லாமல் கிடக்கட்டும்’+ என்றும், ‘அவனுடைய கண்காணிக்கும் பொறுப்பை வேறொருவன் எடுத்துக்கொள்ளட்டும்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது.+ 21  அதனால், அவனுக்குப் பதிலாக வேறொருவரை இப்போது தேர்ந்தெடுக்க வேண்டும். அவர், எஜமானாகிய இயேசு எங்களோடு ஊழியம் செய்த காலம் முழுவதும் எங்களோடு இருந்திருக்க வேண்டும். 22  அதாவது, யோவானிடம் இயேசு ஞானஸ்நானம் பெற்ற+ நாள்முதல் மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை+ எங்களோடு இருந்திருக்க வேண்டும்; எங்களோடு சேர்ந்து அவருடைய உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாகவும் இருந்திருக்க வேண்டும்”+ என்று சொன்னார். 23  அப்போது, சீஷர்கள் இரண்டு பேருடைய பெயர்களைக் குறிப்பிட்டார்கள். ஒருவர் பர்சபா என்று அழைக்கப்பட்ட யோசேப்பு; இவருக்கு யுஸ்து என்ற பெயரும் உண்டு. இன்னொருவர் மத்தியா. 24  பின்பு அவர்கள் ஜெபம் செய்து, “யெகோவாவே,* எல்லா இதயங்களையும் அறிந்தவரே,+ இந்த ஊழியத்தையும் அப்போஸ்தலப் பணியையும் விட்டுவிட்டுத் தன் போக்கில் போன யூதாசுக்குப் பதிலாக,+ 25  இந்த இரண்டு பேரில் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதை எங்களுக்குக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். 26  பின்பு, அவர்களுடைய பெயர்களில் குலுக்கல் போட்டார்கள்.+ அது மத்தியாவின் பெயருக்கு விழுந்தது. அதனால், 11 அப்போஸ்தலர்களோடு அவரும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அதிகாரத்திலுள்ள.”
வே.வா., “குறித்த நாட்களையோ.”
அதாவது, “சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான்.” ஓய்வு நாளன்று ஒரு யூதர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட தூரம் இது.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

பெத்பகே, ஒலிவ மலை, எருசலேம்
பெத்பகே, ஒலிவ மலை, எருசலேம்

இந்தச் சின்ன வீடியோ, கிழக்கிலிருந்து எருசலேமுக்குப் போகும் பாதையைக் காட்டுகிறது. இன்றுள்ள எட்-டூர் கிராமத்தில் ஆரம்பித்து, ஒலிவ மலையின் உயரமான ஒரு பகுதிவரை காட்டுகிறது. எட்-டூர் கிராமம்தான் பைபிளில் சொல்லப்பட்ட பெத்பகே ஊராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பெத்பகேயின் கிழக்கே இருக்கிற ஒலிவ மலையின் கிழக்குச் சரிவிலே பெத்தானியா இருக்கிறது. இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமில் இருந்தபோது, பெத்தானியாவில் தங்குவது வழக்கம். இன்று அந்தப் பகுதி எல்-அஸாரீயா (எல் ஐஸாரீயா) என்று அழைக்கப்படுகிறது. “லாசருவின் இடம்” என்பதுதான் இந்த அரபியப் பெயரின் அர்த்தம். மார்த்தாள், மரியாள், லாசரு ஆகியவர்களின் வீட்டில் இயேசு தங்கினார் என்பதில் சந்தேகமே இல்லை. (மத் 21:17; மாற் 11:11; லூ 21:37; யோவா 11:1) இயேசு அவர்களுடைய வீட்டிலிருந்து எருசலேமுக்குப் போனபோது, இந்த வீடியோவில் காட்டப்படுகிற வழியில் போயிருக்கலாம். கி.பி. 33, நிசான் 9-ம் தேதி, இயேசு பெத்பகே ஊரிலிருந்து ஒரு கழுதையின் மேல் ஏறி ஒலிவ மலை வழியாக எருசலேமுக்குப் போயிருக்கலாம்.

1. பெத்தானியாவிலிருந்து பெத்பகேவுக்குப் போகும் சாலை

2. பெத்பகே

3. ஒலிவ மலை

4. கீதரோன் பள்ளத்தாக்கு

5. ஆலயப் பகுதி