மாற்கு 14:1-72
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மீடியா

வாசனை எண்ணெயை ஊற்றி வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இந்தச் சிறிய ஜாடிகள், எகிப்திலுள்ள அலபாஸ்ட்ரான் என்ற இடத்துக்குப் பக்கத்தில் கிடைத்த கல்லால் செய்யப்பட்டன. அது ஒரு விதமான சுண்ணாம்புக் கல். பிற்பாடு அது அலபாஸ்ட்ரான் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. படத்தில் காட்டப்பட்டிருக்கும் குப்பி எகிப்தில் கண்டெடுக்கப்பட்டது. அது கி.மு. 150-க்கும் கி.பி. 100-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. அதைவிட விலை குறைந்த ஜிப்சம் போன்ற பொருள்கள், அதே விதமான குப்பிகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன. அவையும் வெண்சலவைக்கல் குப்பிகள் என்றே அழைக்கப்பட்டன. ஏனென்றால், அவையும் அதே காரணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், விலை உயர்ந்த தைலங்களுக்கும் வாசனை எண்ணெய்களுக்கும் அசல் வெண்சலவைக்கல் குப்பிகள் பயன்படுத்தப்பட்டன. இரண்டு சந்தர்ப்பங்களில், அதாவது கலிலேயாவில் ஒரு பரிசேயரின் வீட்டிலும், பெத்தானியாவில் முன்பு தொழுநோயாளியாக இருந்த சீமோனின் வீட்டிலும், அப்படிப்பட்ட அசல் குப்பிகளிலிருந்த எண்ணெய்தான் இயேசுவின் தலையில் ஊற்றப்பட்டது.

பஸ்காவின்போது சாப்பிட வேண்டியிருந்த உணவுகள் இவைதான்: நெருப்பில் வாட்டப்பட்ட ஆட்டுக்குட்டி (எந்த எலும்புகளும் முறிக்கப்படாத ஆட்டுக்குட்டி) (1); புளிப்பில்லாத ரொட்டி (2); கசப்பான கீரை (3). (யாத் 12:5, 8; எண் 9:11) இந்தக் கசப்பான கீரை, எகிப்தில் அடிமைகளாக இருந்த கசப்பான அனுபவத்தை இஸ்ரவேலர்களுக்கு அநேகமாக ஞாபகப்படுத்தியிருக்கும். புளிப்பில்லாத ரொட்டியை இயேசு தன்னுடைய பரிபூரணமான மனித உடலுக்கு அடையாளமாகப் பயன்படுத்தினார். (மத் 26:26) அப்போஸ்தலன் பவுல் இயேசுவை “நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி” என்று அழைத்தார். (1கொ 5:7) முதல் நூற்றாண்டில், பஸ்கா உணவு பரிமாறப்பட்டபோது திராட்சமதுவும் (4) பரிமாறப்பட்டது. மனிதர்களுக்காக சிந்திய தன் இரத்தத்துக்கு அடையாளமாக இயேசு திராட்சமதுவைப் பயன்படுத்தினார்.—மத் 26:27, 28.