யோவான் எழுதியது 11:1-57

11  பெத்தானியா கிராமத்தில் லாசரு என்பவன் வியாதியாக இருந்தான். மரியாளும் மார்த்தாளும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.+  இந்த மரியாள்தான் இயேசுமேல் வாசனை எண்ணெயை ஊற்றி, தன்னுடைய கூந்தலால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள்;+ இவளுடைய சகோதரன் லாசருதான் வியாதியாக இருந்தான்.  அதனால் அவனுடைய சகோதரிகள் ஆள் அனுப்பி, “எஜமானே, உங்கள் பாசத்துக்குரிய நண்பன் வியாதியாக இருக்கிறான்” என்று சொல்லச் சொன்னார்கள்.  இயேசு இதைக் கேட்டபோது, “இந்த வியாதியின் முடிவில் மரணம் அல்ல, கடவுளுக்கு மகிமைதான் உண்டாகும்;+ இதன் மூலம் கடவுளுடைய மகனுக்கும் மகிமை உண்டாகும்” என்று சொன்னார்.  மார்த்தாளையும் அவளுடைய சகோதரியையும் லாசருவையும் இயேசு நேசித்தார்.  ஆனால், லாசருவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதைக் கேள்விப்பட்ட பிறகும் தான் இருந்த இடத்திலேயே இன்னும் இரண்டு நாட்கள் தங்கினார்.  அதன் பின்பு அவர் தன்னுடைய சீஷர்களிடம், “மறுபடியும் யூதேயாவுக்குப் போகலாம், வாருங்கள்” என்று சொன்னார்.  அதற்குச் சீஷர்கள், “ரபீ,+ சமீபத்தில்தான் யூதேய மக்கள் உங்களைக் கல்லெறிந்து கொல்லப் பார்த்தார்கள்,+ மறுபடியுமா அங்கே போகப்போகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.  அப்போது இயேசு, “பகலுக்கு 12 மணிநேரம் இருக்கிறது, இல்லையா?+ ஒருவன் பகலில் நடந்தால் தடுக்கி விழ மாட்டான். ஏனென்றால், அவன் இந்த உலகத்தின் ஒளியைப் பார்க்கிறான். 10  ஆனால், ஒருவன் இருட்டில் நடந்தால் தடுக்கி விழுவான். ஏனென்றால், அவனிடம் ஒளி இல்லை” என்று சொன்னார். 11  இப்படிச் சொல்லிவிட்டு, “நம்முடைய நண்பன் லாசரு தூங்குகிறான்,+ அவனை எழுப்புவதற்காக நான் அங்கே போகப்போகிறேன்” என்று சொன்னார். 12  அதற்குச் சீஷர்கள், “எஜமானே, அவன் தூங்கினால் குணமாகிவிடுவானே” என்று சொன்னார்கள். 13  லாசரு இறந்துவிட்டதைப் பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்தார். அவர்களோ, தூங்குவதைப் பற்றி அவர் பேசுவதாக நினைத்துக்கொண்டார்கள். 14  அதனால் இயேசு, “லாசரு இறந்துவிட்டான்”+ என்று அவர்களிடம் வெளிப்படையாகவே சொன்னார். 15  “நான் அங்கே இல்லாததால் உங்கள் நம்பிக்கை அதிகமாவதற்கு வாய்ப்புக் கிடைக்கப்போகிறது, அதை நினைத்துச் சந்தோஷப்படுகிறேன். வாருங்கள், இப்போது நாம் அவனிடம் போகலாம்” என்று சொன்னார். 16  திதிமு என்ற தோமா மற்ற சீஷர்களிடம், “நாம் அவரோடு சேர்ந்து சாக வேண்டியிருந்தாலும் சரி, அவரோடு போகலாம், வாருங்கள்”+ என்று சொன்னார். 17  இயேசு அங்கே போய்ச் சேர்ந்தபோது, லாசரு கல்லறையில்* வைக்கப்பட்டு ஏற்கெனவே நான்கு நாட்கள் ஆகியிருந்தன. 18  எருசலேமுக்குப் பக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு மைல்* தூரத்தில் பெத்தானியா இருந்தது. 19  மார்த்தாள் மற்றும் மரியாளின் சகோதரன் இறந்திருந்ததால் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல யூதர்கள் நிறைய பேர் அங்கே வந்திருந்தார்கள். 20  இயேசு வந்துகொண்டிருப்பதைக் கேள்விப்பட்டபோது அவரைச் சந்திக்க மார்த்தாள் போனாள். ஆனால், மரியாள்+ வீட்டிலேயே உட்கார்ந்திருந்தாள். 21  மார்த்தாள் இயேசுவைப் பார்த்து, “எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். 22  ஆனாலும், நீங்கள் கடவுளிடம் எதைக் கேட்டாலும் அவர் உங்களுக்குத் தருவாரென்று இப்போதும் நம்புகிறேன்” என்று சொன்னாள். 23  இயேசு அவளிடம், “உன் சகோதரன் எழுந்திருப்பான்” என்று சொன்னார். 24  அதற்கு மார்த்தாள், “கடைசி நாளில் உயிர்த்தெழுதல்+ நடக்கும்போது அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்னாள். 25  அப்போது இயேசு, “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்.+ என்மேல் விசுவாசம் வைக்கிறவன் இறந்தாலும் உயிர்பெறுவான். 26  உயிரோடிருந்து என்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் இறந்துபோகவே மாட்டார்கள்.+ இதை நம்புகிறாயா?” என்று கேட்டார். 27  அதற்கு அவள், “ஆமாம், எஜமானே. நீங்கள்தான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து, நீங்கள்தான் இந்த உலகத்துக்கு வரவேண்டியவர் என்பதை நம்புகிறேன்” என்று சொன்னாள். 28  இப்படிச் சொல்லிவிட்டு தன் சகோதரி மரியாளிடம் போய், “போதகர்+ வந்திருக்கிறார், உன்னைக் கூப்பிடுகிறார்” என்று அவள் காதில் சொன்னாள். 29  மரியாள் இதைக் கேட்டவுடன், அவரைச் சந்திக்க வேகமாக எழுந்து போனாள். 30  இயேசு இன்னும் கிராமத்துக்குள் வராமல், மார்த்தாள் தன்னைச் சந்தித்த இடத்திலேயே இருந்தார். 31  மரியாளின் வீட்டில் அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், அவள் வேகமாக எழுந்து வெளியே போவதைப் பார்த்து, அழுவதற்காகக் கல்லறைக்குப்+ போகிறாள் என நினைத்துக்கொண்டு அவள் பின்னாலேயே போனார்கள். 32  இயேசு இருந்த இடத்துக்கு மரியாள் வந்து, அவரைப் பார்த்ததும் அவருடைய காலில் விழுந்து, “எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்று சொன்னாள். 33  அவள் அழுவதையும் அவளோடு வந்த யூதர்கள் அழுவதையும் இயேசு பார்த்தபோது உள்ளம் குமுறினார், மனம் கலங்கினார். 34  “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எஜமானே, வந்து பாருங்கள்” என்று சொன்னார்கள். 35  அப்போது, இயேசு கண்ணீர்விட்டார்.+ 36  அதனால் யூதர்கள், “பாருங்கள், அவன்மேல் இவருக்கு எவ்வளவு பாசம்!” என்று பேசிக்கொண்டார்கள். 37  ஆனால் அவர்களில் வேறு சிலர், “குருடனுடைய கண்களைத் திறந்த இவரால்+ லாசருவின் சாவைத் தடுக்க முடியவில்லையா?” என்று கேட்டார்கள். 38  இயேசு மறுபடியும் உள்ளத்தில் குமுறியபடி கல்லறைக்கு வந்தார். அது கல்லால் மூடப்பட்டிருந்த ஒரு குகை. 39  “இந்தக் கல்லை எடுத்துப் போடுங்கள்” என்று இயேசு சொன்னார். அப்போது, இறந்தவனின் சகோதரியான மார்த்தாள் அவரிடம், “எஜமானே, நான்கு நாளாகிவிட்டது, நாறுமே” என்று சொன்னாள். 40  அதற்கு இயேசு, “நீ நம்பிக்கை வைத்தால் கடவுளுடைய மகிமையைப் பார்ப்பாய் என்று உனக்குச் சொன்னேன், இல்லையா?”+ என்று கேட்டார். 41  பின்பு, அவர்கள் கல்லை எடுத்துப் போட்டார்கள். அதன்பின், இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து,+ “தகப்பனே, என் ஜெபத்தைக் கேட்டதற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன். 42  நீங்கள் எப்போதும் என் ஜெபத்தைக் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதை இங்கே சுற்றி நிற்கிற மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே இப்படி ஜெபம் செய்கிறேன்”+ என்று சொன்னார். 43  இவற்றைச் சொன்ன பின்பு, “லாசருவே, வெளியே வா!”+ என்று சத்தமாகக் கூப்பிட்டார். 44  அப்போது, இறந்தவன் உயிரோடு வெளியே வந்தான்; அவனுடைய கால்களும் கைகளும் துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. முகத்திலும் ஒரு துணி சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களிடம், “இவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள், இவன் போகட்டும்” என்று சொன்னார். 45  மரியாளைப் பார்க்க வந்திருந்த யூதர்கள் நிறைய பேர் அவர் செய்ததைப் பார்த்து அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள்.+ 46  ஆனால், அவர்களில் சிலர் பரிசேயர்களிடம் போய், இயேசு செய்த காரியங்களைப் பற்றிச் சொன்னார்கள். 47  இதனால் முதன்மை குருமார்களும் பரிசேயர்களும் நியாயசங்கத்தைக் கூட்டி, “இப்போது என்ன செய்வது? இந்த மனுஷன் நிறைய அற்புதங்களைச் செய்கிறானே!+ 48  இவனை இப்படியே விட்டுவிட்டால் எல்லாரும் இவன்மேல் விசுவாசம் வைப்பார்கள். பிறகு, ரோமர்கள் வந்து நம்முடைய ஆலயத்தையும் தேசத்தையும் எடுத்துக்கொள்வார்கள்” என்று சொன்னார்கள். 49  அப்போது, அவர்களில் ஒருவராகவும் அந்த வருஷத்தின் தலைமைக் குருவாகவும் இருந்த காய்பா+ அவர்களிடம், “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. 50  முழு தேசமும் அழிந்துபோவதைவிட மக்களுக்காக ஒரேவொரு மனுஷன் சாவது உங்களுக்குத்தான் நல்லது என்பதை யோசிக்காமல் இருக்கிறீர்களே” என்று சொன்னார். 51  இந்த வார்த்தைகளை அவர் சொந்தமாகச் சொல்லவில்லை; அவர் அந்த வருஷத்தின் தலைமைக் குருவாக இருந்ததால், இயேசு அந்தத் தேசத்துக்காகச் சாகப்போகிறார் என்றும், 52  அந்தத் தேசத்துக்காக மட்டுமல்ல, சிதறிப்போன கடவுளுடைய பிள்ளைகளைக் கூட்டிச்சேர்க்கும்படி அவர்களுக்காகவும் சாகப்போகிறார் என்றும் தீர்க்கதரிசனமாகச் சொன்னார். 53  அன்றுமுதல், அவர்கள் இயேசுவைக் கொல்வதற்கு திட்டம் தீட்ட ஆரம்பித்தார்கள். 54  அதனால், யூதர்கள் மத்தியில் இயேசு வெளிப்படையாக நடமாடாமல், அங்கிருந்து புறப்பட்டு, வனாந்தரத்துக்குப் பக்கத்திலிருந்த எப்பிராயீம்+ என்ற நகரத்துக்குப் போய்த் தன்னுடைய சீஷர்களோடு தங்கினார். 55  யூதர்களுடைய பஸ்கா பண்டிகை+ நெருங்கிக்கொண்டிருந்தது. தூய்மைச் சடங்கு செய்துகொள்வதற்காக நாட்டுப்புறத்திலிருந்து நிறைய பேர் பஸ்காவுக்கு முன்பே எருசலேமுக்குப் போனார்கள். 56  அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஆலயத்தில் கூடிநின்றபோது, “அவர் பண்டிகைக்கு வர மாட்டாரா, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டார்கள். 57  முதன்மை குருமார்களும் பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க* நினைத்தார்கள். அதனால், அவர் இருக்கிற இடம் யாருக்காவது தெரியவந்தால் அதைத் தங்களுக்குச் சொல்ல வேண்டுமென்று கட்டளை போட்டிருந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நினைவுக் கல்லறையில்.”
வே.வா., “சுமார் 3 கி.மீ.” நே.மொ., “சுமார் 15 ஸ்டேடியா.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “கைது செய்ய.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா