யோவான் எழுதியது 10:1-42

10  பின்பு இயேசு அவர்களிடம், “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஆட்டுத்தொழுவத்தின் கதவு வழியாக வராமல் வேறு வழியாக ஏறி வருகிறவன் திருடனாகவும் கொள்ளைக்காரனாகவும் இருக்கிறான்.+  ஆனால், கதவு வழியாக வருகிறவர் ஆடுகளின் மேய்ப்பராக இருக்கிறார்.+  காவல்காரன் அவருக்குத்தான் கதவைத் திறந்துவிடுகிறான்;+ ஆடுகளும் அவருடைய குரலைக் கேட்கின்றன;+ அவர் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, அவற்றை வெளியே நடத்திக்கொண்டு போகிறார்.  அவர் தன்னுடைய ஆடுகள் எல்லாவற்றையும் வெளியே கொண்டுவந்த பின்பு, அவற்றுக்கு முன்னால் போகிறார்; அந்த ஆடுகள் அவருடைய குரலைத் தெரிந்து வைத்திருப்பதால் அவருக்குப் பின்னால் போகின்றன.  அன்னியர்களுடைய குரல் அவற்றுக்குத் தெரியாது; அதனால், அவை அன்னியன் பின்னால் போகவே போகாது, அவனைவிட்டு ஓடிவிடும்” என்று சொன்னார்.  அவர் சொன்ன இந்த ஒப்புமையை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.  அதனால் இயேசு மறுபடியும் அவர்களிடம், “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நான்தான் ஆட்டுத்தொழுவத்தின் கதவு.+  என் பெயரில் போலியாக வந்த எல்லாரும் திருடர்கள், கொள்ளைக்காரர்கள்; அவர்களுடைய குரலுக்கு ஆடுகள் காதுகொடுக்கவில்லை.  நான்தான் கதவு; என் வழியாக நுழைகிற எவரும் மீட்புப் பெறுவார்; அவர் உள்ளே போவார், வெளியே வருவார், மேய்ச்சல் நிலத்தைக் கண்டுபிடிப்பார்.+ 10  திருடன் திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமே தவிர வேறெதற்கும் வருவதில்லை.+ நானோ, அவற்றுக்கு வாழ்வு கிடைப்பதற்காக, அதுவும் முடிவில்லாத வாழ்வு கிடைப்பதற்காக, வந்திருக்கிறேன். 11  நான்தான் நல்ல மேய்ப்பன்;+ நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிறான்.+ 12  ஆனால் கூலிக்கு மேய்ப்பவன், உண்மையான மேய்ப்பனாக இல்லாததாலும் ஆடுகளுக்குச் சொந்தக்காரனாக இல்லாததாலும், ஓநாய் வருவதைப் பார்த்ததுமே ஆடுகளை விட்டுவிட்டு ஓடிவிடுகிறான். அந்த ஓநாய் ஆடுகளைப் பிடித்துக்கொண்டு, மந்தையைச் சிதறடித்துவிடுகிறது. 13  அவன் கூலிக்கு மேய்ப்பவனாக இருப்பதால் ஆடுகள்மேல் அவனுக்கு அக்கறையில்லை. 14  நான்தான் நல்ல மேய்ப்பன். தகப்பன் என்னைத் தெரிந்து வைத்திருப்பது போலவும் தகப்பனை நான் தெரிந்து வைத்திருப்பது போலவும்,+ 15  நான் என்னுடைய ஆடுகளைத் தெரிந்து வைத்திருக்கிறேன், என்னுடைய ஆடுகளும் என்னைத் தெரிந்து வைத்திருக்கின்றன.+ ஆடுகளுக்காக நான் என் உயிரையே கொடுக்கிறேன்.+ 16  இந்தத் தொழுவத்தைச் சேராத வேறே ஆடுகளும் எனக்கு இருக்கின்றன.+ அவற்றையும் நான் கொண்டுவர வேண்டும், அவை என்னுடைய குரலைக் கேட்கும்.* அப்போது, அவை ஒரே மேய்ப்பரின் கீழ் ஒரே மந்தையாகும்.+ 17  நான் என் உயிரைக் கொடுப்பதால்+ என் தகப்பன் என்மேல் அன்பு காட்டுகிறார்;+ என் உயிரை மறுபடியும் பெற்றுக்கொள்வதற்காக நான் அதைக் கொடுக்கிறேன். 18  ஒருவனும் என் உயிரை என்னிடமிருந்து பறிக்க மாட்டான். நானாகவே அதைக் கொடுக்கிறேன். அதைக் கொடுப்பதற்கு எனக்கு அதிகாரம் இருக்கிறது, மறுபடியும் பெற்றுக்கொள்வதற்கும் அதிகாரம் இருக்கிறது.+ இந்தக் கட்டளையை என்னுடைய தகப்பன் எனக்குக் கொடுத்திருக்கிறார்” என்று சொன்னார். 19  அவர் இப்படிச் சொன்னதால் மறுபடியும் யூதர்கள் மத்தியில் பிரிவினை உண்டானது.+ 20  அவர்களில் பலர், “இவனுக்குப் பேய் பிடித்திருக்கிறது. இவன் ஒரு பைத்தியம், இவன் சொல்வதை ஏன் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்கள். 21  மற்றவர்களோ, “பேய் பிடித்தவன் இப்படியா பேசுவான்? குருடர்களுக்குப் பேயால் பார்வை தர முடியுமா?” என்று கேட்டார்கள். 22  அப்போது, எருசலேமில் ஆலய அர்ப்பணப் பண்டிகை நடந்தது. அது குளிர் காலமாக இருந்தது. 23  ஆலயத்தில் இருக்கிற சாலொமோன் மண்டபத்தில்+ இயேசு நடந்துகொண்டிருந்தார். 24  யூதர்கள் அவரைச் சுற்றிவளைத்து, “எவ்வளவு காலத்துக்குத்தான் உன்னைப் பற்றிச் சொல்லாமல் எங்களைக் காக்க வைப்பாய்? நீதான் கிறிஸ்து என்றால், அதை எங்களுக்கு வெளிப்படையாகச் சொல்லிவிடு” என்று கேட்டார்கள். 25  அதற்கு இயேசு, “நான் உங்களுக்குச் சொன்னேன், ஆனால் நீங்கள் நம்பவில்லை. என் தகப்பனுடைய பெயரில் நான் செய்கிற செயல்களே என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்கின்றன.+ 26  நீங்கள் என் மந்தையைச் சேர்ந்த ஆடுகள் இல்லை,+ அதனால்தான் நம்பாமல் இருக்கிறீர்கள். 27  என் ஆடுகள் என்னுடைய குரலைக் கேட்கின்றன,* நான் அவற்றைத் தெரிந்து வைத்திருக்கிறேன், அவை என் பின்னால் வருகின்றன.+ 28  நான் அவற்றுக்கு முடிவில்லாத வாழ்வு தருகிறேன்,+ அவை ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. அவற்றை ஒருவனும் என் கையிலிருந்து பறித்துக்கொள்ள மாட்டான்.+ 29  என்னுடைய தகப்பன் எனக்குக் கொடுத்திருக்கும் அந்த ஆடுகள் மற்ற எல்லாவற்றையும்விட மதிப்புள்ளவை. அவற்றை ஒருவனும் என் தகப்பனுடைய கையிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது.+ 30  நானும் என் தகப்பனும் ஒன்றாயிருக்கிறோம்”*+ என்று சொன்னார். 31  அப்போது, அந்த யூதர்கள் அவரைக் கல்லெறிந்து கொல்வதற்காக மறுபடியும் கற்களை எடுத்தார்கள். 32  இயேசு அவர்களிடம், “என் தகப்பன் சொன்னபடி எத்தனையோ நல்ல செயல்களை உங்கள் முன்னால் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றில் எந்தச் செயலுக்காக நீங்கள் என்மேல் கல்லெறிகிறீர்கள்?” என்று கேட்டார். 33  அதற்கு அந்த யூதர்கள், “நல்ல செயலுக்காக அல்ல, கடவுளை நிந்தித்துப் பேசியதற்காக உன்மேல் கல்லெறிகிறோம்;+ நீ மனுஷனாயிருந்தும் உன்னைக் கடவுளாக்கிக்கொள்கிறாய்” என்று சொன்னார்கள். 34  அதற்கு இயேசு, “உங்களுடைய திருச்சட்டத்தில் ‘“நீங்கள் எல்லாரும் கடவுள்கள்”*+ எனச் சொன்னேன்’ என்று எழுதப்பட்டிருக்கிறது, இல்லையா? 35  கடவுளுடைய வார்த்தையால் கண்டனம் செய்யப்பட்டவர்களையே ‘கடவுள்கள்’+ என்று அவர் அழைத்திருக்கிறார்; அதோடு, வேதவசனங்கள் சொல்வதையும் தள்ளுபடி செய்ய முடியாது. 36  அப்படியிருக்கும்போது, தகப்பனால் புனிதமாக்கப்பட்டும் இந்த உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை ‘கடவுளுடைய மகன்’ என்று சொன்னதற்காகவா ‘கடவுளை நிந்திக்கிறாய்’ என்று சொல்கிறீர்கள்?+ 37  என் தகப்பனின் செயல்களை நான் செய்யாவிட்டால், நீங்கள் என்னை நம்ப வேண்டியதில்லை. 38  அவற்றைச் செய்கிறேன் என்றால், என்னை நீங்கள் நம்பாவிட்டால்கூட, என் செயல்களையாவது நம்புங்கள்;+ அப்போது, என் தகப்பன் என்னோடு ஒன்றுபட்டிருக்கிறார் என்பதையும், நானும் என் தகப்பனோடு ஒன்றுபட்டிருக்கிறேன் என்பதையும் தெரிந்துகொள்வீர்கள்,+ தொடர்ந்து தெரிந்துகொண்டே இருப்பீர்கள்” என்று சொன்னார். 39  இதனால், அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கப் பார்த்தார்கள்; அவரோ அவர்களிடம் சிக்காமல் தப்பித்துக்கொண்டார். 40  அவர் மறுபடியும் யோர்தானைக் கடந்து, யோவான் முதலில் ஞானஸ்நானம் கொடுத்துவந்த இடத்துக்குப் போய்+ அங்கே தங்கினார். 41  நிறைய பேர் அவரிடம் வந்தார்கள்; அப்போது அவர்கள், “யோவான் எந்தவொரு அற்புதமும் செய்யவில்லை; ஆனால், இவரைப் பற்றி யோவான் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்கிறது”+ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். 42  அங்கே அவர்மேல் நிறைய பேர் விசுவாசம் வைத்தார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “குரலுக்குக் கீழ்ப்படியும்.”
வே.வா., “குரலுக்குக் கீழ்ப்படிகின்றன.”
வே.வா., “ஒற்றுமையாக இருக்கிறோம்.”
வே.வா., “கடவுளைப் போன்றவர்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

ஓநாய்
ஓநாய்

இஸ்ரவேலில் இருக்கும் ஓநாய்கள் முக்கியமாக இரவு நேரங்களில்தான் வேட்டையாடுகின்றன. (ஆப 1:8) ஓநாய்களுக்கு முரட்டுத்தனமும் பசிவெறியும் துணிச்சலும் பேராசையும் அதிகம். அவற்றால் ஓரளவு செம்மறியாடுகளைத்தான் சாப்பிட அல்லது இழுத்துச்செல்ல முடியும் என்றாலும், பொதுவாக அதைவிட அதிகமான செம்மறியாடுகளைக் கொன்று குவிக்கின்றன. பைபிள், விலங்குகளையும் அவற்றின் குணங்களையும் பழக்கங்களையும் அடையாள அர்த்தத்தில் குறிப்பிடுகிறது. நல்ல குணங்கள், கெட்ட குணங்கள் ஆகிய இரண்டுக்குமே அடையாளமாக அவற்றைக் குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு, மரணப்படுக்கையில் இருந்தபோது யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனத்தில், வேட்டையாடுகிற ஓநாயை (கானஸ் லூபுஸ்) போல பென்யமீன் கோத்திரத்தார் இருப்பார்கள் என்று அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதி 49:27) ஆனால், பெரும்பாலான மற்ற வசனங்களில், மூர்க்கம், பேராசை, கொடூரம், தந்திரம் போன்ற கெட்ட குணங்களுக்குத்தான் ஓநாய்கள் அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. போலித் தீர்க்கதரிசிகள் (மத் 7:15), கிறிஸ்தவ ஊழியத்தைக் கொடூரமாக எதிர்க்கிறவர்கள் (மத் 10:16; லூ 10:3), கிறிஸ்தவ சபைக்குள்ளிருந்தே எழும்பும் ஆபத்தான பொய்ப் போதகர்கள் (அப் 20:29, 30) போன்ற ஆட்கள் ஓநாய்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். ஓநாய்கள் எந்தளவு ஆபத்தானவை என்று மேய்ப்பர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. “கூலிக்கு மேய்ப்பவன்,” “ஓநாய் வருவதைப் பார்த்ததுமே ஆடுகளை விட்டுவிட்டு ஓடிவிடுகிறான்” என்று இயேசு சொன்னார். கூலிக்கு மேய்ப்பவனுக்கு ‘ஆடுகள்மேல் அக்கறையில்லை’ என்றும் சொன்னார். ஆனால் இயேசு, ‘ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிற’ ‘நல்ல மேய்ப்பராக’ இருக்கிறார்.—யோவா 10:11-13.