யோவான் எழுதியது 15:1-27

15  “நான்தான் உண்மையான திராட்சைக் கொடி, என் தகப்பன்தான் திராட்சைத் தோட்டக்காரர்.  கனி தராத என்னுடைய கிளைகள் எல்லாவற்றையும் அவர் வெட்டிப்போடுகிறார். கனி தருகிற கிளைகள் ஒவ்வொன்றையும், அது அதிகமாகக் கனி தரும்படி சுத்தம் செய்கிறார்.+  நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே சுத்தமாகியிருக்கிறீர்கள்.+  என்னோடு நிலைத்திருங்கள், நானும் உங்களோடு நிலைத்திருப்பேன். எந்தவொரு கிளையும் தானாகக் கனி தர முடியாது, திராட்சைக் கொடியோடு நிலைத்திருந்தால் மட்டும்தான் கனி தர முடியும். அதேபோல், நீங்களும் என்னோடு நிலைத்திருந்தால் மட்டும்தான் உங்களால் கனி தர முடியும்.+  நான் திராட்சைக் கொடி, நீங்கள் கிளைகள். ஒருவன் என்னோடும் நான் அவனோடும் நிலைத்திருந்தால் அவன் அதிகமாகக் கனி தருவான்.+ என்னோடு இல்லையென்றால் உங்களால் எதையுமே செய்ய முடியாது.  ஒருவன் என்னோடு நிலைத்திருக்கவில்லை என்றால், கிளையைப் போல் அவன் வெட்டியெறியப்பட்டுக் காய்ந்துபோவான். அப்படிப்பட்ட கிளைகளை ஆட்கள் சேகரித்து நெருப்பில் போடுவார்கள், அவை எரிந்துபோகும்.  நீங்கள் என்னோடு நிலைத்திருந்தால், அதோடு என் வார்த்தைகள் உங்களுடைய இதயத்தில் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்புகிற எதை வேண்டுமானாலும் கேளுங்கள், கேட்டபடியே உங்களுக்கு நடக்கும்.+  நீங்கள் அதிகமதிகமாகக் கனி தந்து, என்னுடைய சீஷர்கள் என்று நிரூபிக்கும்போது, என் தகப்பன் மகிமைப்படுகிறார்.+  தகப்பன் என்மேல் அன்பு காட்டியதைப் போல்+ நான் உங்கள்மேல் அன்பு காட்டியிருக்கிறேன், அதனால் நீங்கள் என் அன்பில் நிலைத்திருங்கள். 10  நான் என் தகப்பனுடைய கட்டளைகளின்படி நடந்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போலவே, நீங்களும் என் கட்டளைகளின்படி நடந்தால் என்னுடைய அன்பில் நிலைத்திருப்பீர்கள். 11  என்னைப் போலவே நீங்களும் நிறைவான சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இவற்றை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.+ 12  நான் உங்கள்மேல் அன்பு காட்டியதுபோல் நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான் என் கட்டளை.+ 13  ஒருவன் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கிற அன்பைவிட மேலான அன்பு வேறு எதுவும் இல்லை.+ 14  என்னுடைய கட்டளைப்படி நீங்கள் நடந்தால் என் நண்பர்களாக இருப்பீர்கள்.+ 15  இனி உங்களை அடிமைகள் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், எஜமான் செய்வது ஒரு அடிமைக்குத் தெரியாது. நான் உங்களை நண்பர்கள் என்றே சொல்லியிருக்கிறேன். ஏனென்றால், என் தகப்பனிடமிருந்து கேட்ட எல்லா விஷயங்களையும் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். 16  நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை, நான்தான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். நிலைத்திருக்கிற கனியைக் கொடுக்கும்படி நான்தான் உங்களை நியமித்தேன். நீங்கள் அப்படிக் கனி கொடுக்கும்போது, என் பெயரில் தகப்பனிடம் எதைக் கேட்டாலும் அதை அவர் உங்களுக்குத் தருவார்.+ 17  நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்பதற்காக இவற்றைக் கட்டளையிடுகிறேன்.+ 18  உலகம் உங்களை வெறுத்தால், அது உங்களை வெறுப்பதற்கு முன்பே என்னை வெறுத்தது என்று தெரிந்துகொள்ளுங்கள்.+ 19  நீங்கள் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், அவர்களுக்குச் சொந்தமான உங்களை இந்த உலகம் நேசித்திருக்கும். ஆனால், நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லாததாலும்,+ நான் இந்த உலகத்திலிருந்து உங்களைத் தேர்ந்தெடுத்திருப்பதாலும் உலகம் உங்களை வெறுக்கிறது.+ 20  நான் உங்களுக்குச் சொன்ன இந்த வார்த்தைகளை ஞாபகத்தில் வையுங்கள்: அடிமை தன் எஜமானைவிட உயர்ந்தவன் அல்ல. அவர்கள் என்னைத் துன்புறுத்தியிருந்தால் உங்களையும் துன்புறுத்துவார்கள்;+ என் வார்த்தையின்படி நடந்திருந்தால் உங்கள் வார்த்தையின்படியும் நடப்பார்கள். 21  நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால்தான் உங்களுக்கு விரோதமாக இவற்றையெல்லாம் செய்வார்கள். ஏனென்றால், என்னை அனுப்பியவரைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது.+ 22  நான் வந்து அவர்களிடம் பேசியிருக்காவிட்டால், அவர்களுக்குப் பாவம் இருந்திருக்காது.+ ஆனால், இப்போது அவர்களுடைய பாவத்துக்கு அவர்களால் எந்தச் சாக்குப்போக்கும் சொல்ல முடியாது.+ 23  என்னை வெறுக்கிறவன் என் தகப்பனையும் வெறுக்கிறான்.+ 24  வேறு யாருமே செய்யாத செயல்களை நான் அவர்கள் மத்தியில் செய்யாமல் இருந்திருந்தால், அவர்களுக்குப் பாவம் இருந்திருக்காது.+ ஆனால், இப்போது அவர்கள் என்னைப் பார்த்தும்கூட என்னையும் என் தகப்பனையும் வெறுத்திருக்கிறார்கள். 25  ‘காரணமில்லாமல் என்னை வெறுத்தார்கள்’+ என்று அவர்களுடைய திருச்சட்டத்தில் எழுதப்பட்ட வார்த்தை நிறைவேறும்படியே இப்படி நடந்தது. 26  தகப்பனிடமிருந்து நான் அனுப்பப்போகிற சகாயர்* வரும்போது, அதாவது சத்தியத்தை வெளிப்படுத்துகிற சக்தி+ தகப்பனிடமிருந்து வரும்போது, அவர் என்னைப் பற்றிச் சாட்சி கொடுப்பார்.+ 27  ஆரம்பத்திலிருந்து நீங்கள் என்னோடு இருப்பதால், நீங்களும் என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்க வேண்டும்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆறுதல்படுத்துகிறவர்.” கடவுளுடைய சக்தி இங்கே ஆளுருவில் பேசப்பட்டிருக்கிறது.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா