யோவான் 14:1-31

14  பின்பு, “நீங்கள் மனம் கலங்க வேண்டாம்.+ கடவுள்மேல் விசுவாசம் வையுங்கள்,+ என்மேலும் விசுவாசம் வையுங்கள்.  என்னுடைய தகப்பனின் வீட்டில் தங்குவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. அப்படி இல்லாதிருந்தால் நானே உங்களுக்குச் சொல்லியிருப்பேன். உங்களுக்காக ஒரு இடத்தைத் தயார்படுத்துவதற்கு நான் போகிறேன்.+  நான் போய் உங்களுக்காக ஒரு இடத்தைத் தயார்படுத்திய பின்பு, மறுபடியும் வந்து என் வீட்டுக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு போவேன். அப்போது, நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.+  நான் போகும் இடத்துக்கான வழி உங்களுக்குத் தெரியும்” என்று சொன்னார்.  தோமா+ அவரிடம், “எஜமானே, நீங்கள் எங்கே போகிறீர்கள் என்றுகூட எங்களுக்குத் தெரியாது, அப்படியிருக்கும்போது அந்த வழி எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.  அதற்கு இயேசு, “நானே வழியும்+ சத்தியமும்+ வாழ்வுமாக இருக்கிறேன்.+ என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்.+  உங்களுக்கு என்னைத் தெரிந்திருந்தால் என் தகப்பனையும் தெரிந்திருக்கும்; இப்போதிலிருந்து நீங்கள் அவரைத் தெரிந்தும் பார்த்தும் இருக்கிறீர்கள்”+ என்று சொன்னார்.  பிலிப்பு அவரிடம், “எஜமானே, தகப்பனை எங்களுக்குக் காட்டுங்கள், அது போதும்” என்று சொன்னார்.  அதற்கு இயேசு அவரிடம், “பிலிப்பு, இத்தனை காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னைத் தெரிந்துகொள்ளவில்லையா? என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்.+ அப்படியிருக்கும்போது, ‘தகப்பனை எங்களுக்குக் காட்டுங்கள்’ என்று நீ எப்படிக் கேட்கிறாய்? 10  நான் என் தகப்பனோடும் என் தகப்பன் என்னோடும் ஒன்றுபட்டிருப்பதை நீ நம்பவில்லையா?+ நான் உங்களுக்குச் சொல்கிற விஷயங்களைச் சொந்தமாகச் சொல்லவில்லை.+ என்னோடு ஒன்றுபட்டிருக்கும் என் தகப்பன்தான் தன்னுடைய செயல்களை என் மூலம் செய்துவருகிறார். 11  நான் என் தகப்பனோடும் என் தகப்பன் என்னோடும் ஒன்றுபட்டிருப்பதாக நான் சொல்வதை நம்புங்கள். இல்லையென்றால், என் செயல்களைப் பார்த்தாவது நம்புங்கள்.+ 12  உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என்மேல் விசுவாசம் வைக்கிறவன் நான் செய்கிற செயல்களைச் செய்வான், அவற்றைவிட பெரிய செயல்களையும் செய்வான்.+ ஏனென்றால், நான் என் தகப்பனிடம் போகிறேன்.+ 13  அதோடு, மகன் மூலம் தகப்பன் மகிமைப்படும்படி, என் பெயரில் நீங்கள் எதைக் கேட்டாலும் அதைச் செய்வேன்.+ 14  என் பெயரில் நீங்கள் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். 15  என்மேல் உங்களுக்கு அன்பிருந்தால் என் கட்டளைகளின்படி நடப்பீர்கள்.+ 16  என் தகப்பனிடம் நான் வேண்டிக்கொள்வேன். அப்போது, என்றென்றும் உங்களோடு இருப்பதற்காக இன்னொரு சகாயரை* அவர் உங்களுக்குத் தருவார்.+ 17  அதுதான் சத்தியத்தை வெளிப்படுத்துகிற கடவுளுடைய சக்தி.+ உலகத்தால் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், இந்த உலகம் அதைப் பார்க்காமலும் தெரிந்துகொள்ளாமலும் இருக்கிறது.+ ஆனால், நீங்கள் அதைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஏனென்றால், அது உங்களுடனேயே இருக்கிறது, உங்களுக்குள்ளும் இருக்கிறது. 18  நான் உங்களைத் தனியாக* தவிக்க விடமாட்டேன், கண்டிப்பாக உங்களிடம் வருவேன்.+ 19  இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம் என்னைப் பார்க்காது, நீங்களோ என்னைப் பார்ப்பீர்கள்.+ ஏனென்றால் நான் உயிரோடிருக்கிறேன், நீங்களும் உயிரோடிருப்பீர்கள். 20  அந்த நாளில், நான் என் தகப்பனோடு ஒன்றுபட்டிருப்பதையும், நீங்கள் என்னோடு ஒன்றுபட்டிருப்பதையும், நான் உங்களோடு ஒன்றுபட்டிருப்பதையும் தெரிந்துகொள்வீர்கள்.+ 21  என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவற்றின்படி நடப்பவன்தான் என்மேல் அன்பு காட்டுகிறான். என்மேல் அன்பு காட்டுகிறவனிடம் என் தகப்பனும் அன்பு காட்டுவார், நானும் அவன்மேல் அன்பு காட்டி அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்” என்று சொன்னார். 22  யூதாஸ்+ என்பவர் (யூதாஸ் இஸ்காரியோத்து அல்ல) அவரிடம், “எஜமானே, நீங்கள் உங்களை உலகத்துக்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு மட்டுமே வெளிப்படுத்துவதாகச் சொல்கிறீர்களே, ஏன்?” என்று கேட்டார். 23  அதற்கு இயேசு, “ஒருவனுக்கு என்மேல் அன்பு இருந்தால், அவன் என் வார்த்தையின்படி நடப்பான்,+ என் தகப்பனும் அவன்மேல் அன்பு காட்டுவார். நாங்கள் இரண்டு பேரும் அவனிடம் வந்து அவனோடு தங்குவோம்.+ 24  என்மேல் அன்பு காட்டாதவன் என் வார்த்தைகளின்படி நடக்க மாட்டான்; நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிற வார்த்தை என்னுடையதல்ல, என்னை அனுப்பிய தகப்பனுடையது.+ 25  நான் உங்களோடு இருக்கும்போதே இவற்றை உங்களுக்குச் சொல்லிவிட்டேன். 26  ஆனால், என் தகப்பன் என்னுடைய பெயரில் அனுப்பப்போகிற அவருடைய சக்தியாகிய சகாயர் எல்லா காரியங்களையும் உங்களுக்குக் கற்றுக்கொடுத்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லா விஷயங்களையும் உங்களுக்கு ஞாபகப்படுத்துவார்.+ 27  உங்களுக்குச் சமாதானத்தைத் தந்துவிட்டுப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குத் தருகிறேன்.+ இந்த உலகம் தருகிற விதத்தில் நான் அதைத் தருவதில்லை. நீங்கள் மனம் கலங்க வேண்டாம், பயப்பட வேண்டாம். 28  ‘நான் போவேன், ஆனால் மறுபடியும் உங்களிடம் வருவேன்’ என்று உங்களுக்குச் சொன்னதைக் கேட்டீர்கள். என்மேல் உங்களுக்கு அன்பு இருந்தால், நான் என் தகப்பனிடம் போவதை நினைத்து சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், என் தகப்பன் என்னைவிட பெரியவர்.+ 29  இது நடக்கும்போது நீங்கள் நம்புவதற்காக இப்போதே, இது நடப்பதற்கு முன்பே, இதை உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.+ 30  இனி நான் உங்களோடு அதிகம் பேச மாட்டேன். ஏனென்றால், இந்த உலகத்தை ஆளுகிறவன்+ வருகிறான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை.+ 31  தகப்பன்மேல் நான் அன்பு வைத்திருக்கிறேன் என்பதை உலகம் தெரிந்துகொள்வதற்காக என் தகப்பனின் கட்டளைப்படியே செய்கிறேன்.+ எழுந்திருங்கள், இங்கிருந்து போகலாம்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆறுதல்படுத்துகிறவரை.” கடவுளுடைய சக்தி இங்கே ஆளுருவில் பேசப்பட்டிருக்கிறது.
வே.வா., “அநாதைகளைப் போல்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா