Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

நான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா?—பாகம் 1: ஞானஸ்நானம் என்றால் என்ன?

நான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா?—பாகம் 1: ஞானஸ்நானம் என்றால் என்ன?

 ஒவ்வொரு வருஷமும் யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பத்தில் வளர்க்கப்படுகிற நிறைய இளம் பிள்ளைகள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். நீங்களும் ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பதன் அர்த்தத்தை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

 ஞானஸ்நானம் என்றால் என்ன?

 பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற ஞானஸ்நானம் என்பது ஒருவர் தண்ணீருக்குள் முழுமையாக மூழ்கி எழுவதைக் குறிக்கிறது. வெறுமனே அவர்மேல் தண்ணீர் தெளிப்பதை அல்ல. தண்ணீருக்குள் மூழ்கி எழுவது ஒரு முக்கியமான காரியத்துக்கு அடையாளமாக இருக்கிறது.

  •   நீங்கள் தண்ணீருக்குள் மூழ்கும்போது, இனிமேல் உங்களுக்கு பிடித்த மாதிரி வாழப்போவதில்லை என்பதை மற்றவர்களுக்கு தெரிவிக்கிறீர்கள்.

  •   நீங்கள் தண்ணீரில் இருந்து வெளியே வரும்போது, கடவுளுக்கு பிடித்தமான விஷயங்களை செய்கிற ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறீர்கள்.

 எது சரி எது தப்பு என்பதை முடிவு செய்கிற அதிகாரம் யெகோவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டீர்கள். அவருக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்பதை நீங்களாகவே முடிவு எடுத்தீர்கள், அதை அவரிடம் ஜெபத்தில் சொல்லியிருக்கிறீர்கள். ஞானஸ்நானம் எடுப்பதன் மூலமாக இதை எல்லாருக்கும் வெளிப்படையாக தெரிவிக்கிறீர்கள்.

 இப்படி யோசித்துப் பாருங்கள்: இனிமேல் யெகோவாவுக்காகத்தான் வாழப் போகிறீர்கள் என்று நீங்கள் முடிவெடுத்திருக்கிறீர்கள், அதை எல்லாருக்கும் ஏன் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்? 1 யோவான் 4:19-ஐயும் வெளிப்படுத்துதல் 4:11-ஐயும் பாருங்கள்.

 அர்ப்பணம் என்றால் என்ன?

 நீங்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு தனிப்பட்ட விதமாக யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டும். அதை எப்படிச் செய்ய வேண்டும்?

 நீங்கள் யெகோவாவிடம் ஸ்பெஷலான ஒரு ஜெபம் செய்கிறீர்கள். அதில், எப்போதுமே நீங்கள் யெகோவாவுக்கு மட்டும்தான் சேவை செய்வீர்கள்... எப்படிப்பட்ட சூழ்நிலைமை வந்தாலும் சரி, யார் எப்படி நடந்துகொண்டாலும் சரி, இனி யெகோவாவுக்கு பிடித்த மாதிரிதான் நடந்துகொள்வீர்கள்... என்றெல்லாம் அவருக்கு வாக்கு கொடுக்கிறீர்கள். இதுதான் அர்ப்பணம் என்பதன் அர்த்தம்.

 இப்படி நீங்கள் தனிப்பட்ட விதமாக அர்ப்பணித்ததை ஞானஸ்நானம் எடுப்பதன் மூலமாக எல்லாருக்கும் காட்டுகிறீர்கள். அதுமட்டுமல்ல, இனி உங்கள்மேல் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, யெகோவாவுக்குத்தான் முழுமையாக நீங்கள் சொந்தம் என்பதையும் மற்றவர்களுக்குக் காட்டுகிறீர்கள்.—மத்தேயு 16:24.

 இப்படி யோசித்துப் பாருங்கள்: நீங்கள் யெகோவாவுக்கு சொந்தமானவர்களாக ஆகிவிட்டால் உங்கள் வாழ்க்கை சூப்பராக மாறிவிடும், ஏன் அப்படிச் சொல்லலாம்? ஏசாயா 48:17, 18-ஐயும் எபிரெயர் 11:6-ஐயும் பாருங்கள்.

 ஞானஸ்நானம் எடுப்பது ஏன் முக்கியம்?

 ஒருவர் தன்னுடைய சீஷராக ஆக வேண்டுமென்றால் அவர் கண்டிப்பாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 28:19, 20) அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் அதுதான் உண்மை. ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் அவர் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.—1 பேதுரு 3:21.

 யெகோவாமேல் இருக்கிற அன்பும், அவர் உங்களுக்கு செய்த விஷயங்களுக்கான நன்றியுணர்வும்தான் ஞானஸ்நானம் எடுக்க உங்களைத் தூண்ட வேண்டும். சங்கீதக்காரனுக்கு இருந்த அதே மனப்பான்மை உங்களுக்கும் இருக்க வேண்டும். அவர் இப்படி எழுதினார்: “யெகோவா எனக்குச் செய்திருக்கிற எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைமாறு செய்வேன்? . . . யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வேன். யெகோவாவிடம் நேர்ந்துகொண்டதையெல்லாம் . . . நிறைவேற்றுவேன்.”—சங்கீதம் 116:12-14.

 இப்படி யோசித்துப் பாருங்கள்: யெகோவா உங்களுக்கு என்னென்ன நல்ல விஷயங்களை செய்திருக்கிறார்? அதற்காக நீங்கள் அவருக்கு என்ன செய்ய போகிறீர்கள்? உபாகமம் 10:12, 13-ஐயும் ரோமர் 12:1-ஐயும் பாருங்கள்.