Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

நான் சோஷியல் மீடியாவை பயன்படுத்தக் கூடாது என்று என்னுடைய அப்பா-அம்மா சொன்னால்...

நான் சோஷியல் மீடியாவை பயன்படுத்தக் கூடாது என்று என்னுடைய அப்பா-அம்மா சொன்னால்...

 உங்களுடைய ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் சோஷியல் மீடியாவை பயன்படுத்துகிறார்கள்... அதைப் பற்றியே நாள் முழுக்க பேசிக்கொண்டிருக்கிறார்கள்... என்று உங்களுக்குத் தோன்றுகிறது. உங்களை அவர்கள் கேலி செய்கிறார்கள், ஏனென்றால் உங்களுக்கு அதில் ஒரு அக்கவுன்ட் இல்லை. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் நீங்கள் எதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் எதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்?

 சோஷியல் மீடியாவை பயன்படுத்தாமல் இருப்பது நீங்கள் ஒருவர் மட்டும் கிடையாது. நிறைய பெற்றோர் சோஷியல் மீடியாவை பயன்படுத்த தங்களுடைய பிள்ளைகளை அனுமதிப்பதில்லை. அப்படிப் பயன்படுத்தினால் கீழே சொல்லப்பட்டிருக்கிற பிரச்சினைகள் வந்துவிடுமோ என்று அவர்கள் பயப்படலாம்.

  •   மன அழுத்தம் அல்லது மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம்

  •   ஆபாசத்தைப் பார்க்க வேண்டியிருக்கலாம்... யாராவது அவர்களுக்கு அசிங்கமான படங்களை அனுப்பி வைக்கலாம் அல்லது அனுப்பச் சொல்லி கேட்கலாம்... இன்டர்நெட்டில் வம்பு இழுப்பவர்கள் கையில் அவர்கள் மாட்டிக்கொள்ளலாம்

  •   ஃபிரெண்ட்ஸ் நடுவில் தேவையில்லாத பிரச்சினைகள் வரலாம்.

 டீனேஜ் பிள்ளைகள் நிறைய பேர் சோஷியல் மீடியாவுக்கு ‘நோ’சொல்லியிருக்கிறார்கள். அது தங்களுக்கு நல்லது செய்வதில்லை, கெடுதல்தான் செய்கிறது என்பதை அவர்கள் புரிந்திருக்கிறார்கள். சில டீனேஜர்கள் அதற்கு ‘நோ’ சொன்னதற்கான காரணத்தைப் பார்க்கலாமா?

  •   பிரயோஜனமான காரியங்களுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை எல்லாம் சோஷியல் மீடியா எடுத்துக்கொள்வதாக பிரிஸில்லா புரிந்துகொண்டாள்.

  •   தன்னுடைய சோஷியல் மீடியா பேஜில் அசிங்கமான தகவல்கள் வந்து குவிவதை ஜெரமியால் தடுக்க முடியவில்லை, அது அவனுக்கு பிடிக்கவில்லை.

  •   சோஷியல் மீடியாவுக்கு அதிக நேரம் கொடுப்பதால் மற்றவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்பதே தன் மனதுக்குள் எப்போதும் ஓடிக்கொண்டிருப்பதாக பெத்தானியா புரிந்துகொண்டாள்.

 “என்னுடைய சோஷியல் மீடியா ‘ஆப்’-ஐ டெலிட் செய்ததை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். அது இல்லையே என்று எனக்கு இப்போது கவலை இல்லை. ஏனென்றால் எனக்கு முக்கியமான விஷயங்கள் செய்வதற்கு இப்போது நிறைய நேரம் இருக்கிறது.”—சியரா.

 “சோஷியல் மீடியாவை பயன்படுத்த ஆரம்பித்தால் அதுவே கதி என்று உட்கார்ந்து விடுவோம். இன்றைக்கு நாம் போடுகிற போஸ்டுக்கு லைக் வருமா, டிஸ்லைக் வருமா என்பதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்போம். இதெல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதை டெலிட் செய்வது ஒண்ணும் அவ்வளவு ஈஸி கிடையாது. அதை டெலிட் செய்த உடனே என் மனசு ரொம்ப லேசாக ஆகிவிட்டது. அது இல்லாமல் இப்போது நான் ரொம்ப நிம்மதியாக இருக்கிறேன்.”—கேட்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

 உங்களுடைய அப்பா-அம்மா போடுகிற கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நடங்கள். அப்பா-அம்மா போடுகிற கட்டுப்பாடுகளுக்கு கோபப்படாமல், குறை சொல்லாமல் ஏற்று நடக்கிற அளவுக்கு நீங்கள் பக்குவமான நபராக ஆகிவிட்டீர்கள் என்பதைக் காட்டுங்கள்.

 பைபிள் ஆலோசனை: “முட்டாள் தன்னுடைய உணர்ச்சிகளையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுகிறான். ஆனால், ஞானமுள்ளவன் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறான்.”—நீதிமொழிகள் 29:11.

 உங்களுடைய அப்பா-அம்மாவுக்குத் தெரியாமல்... அவர்கள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு... ஒரு சோஷியல் மீடியா அக்கவுன்டை உருவாக்க சொல்லி ஒருசிலர் உங்களுக்கு சொல்லலாம். ஆனால் அது ரொம்ப பெரிய தப்பு. ஏனென்றால் அப்படிச் செய்தால் மாட்டிக்கொள்வோம் என்று உங்களுக்கு எப்போதும் பதட்டமாகவே இருக்கும், உங்கள் மனதும் உறுத்திக்கொண்டே இருக்கும். அதுமட்டுமல்ல, உங்களுடைய அப்பா-அம்மாவுக்கு அதைப் பற்றி தெரியவந்தால் நீங்கள் அவர்களிடம் வசமாக மாட்டிக்கொள்வீர்கள். அவர்கள் உங்கள் மேலே வைத்திருக்கிற நம்பிக்கையையும் இழந்துவிடுவீர்கள்.

 பைபிள் ஆலோசனை: “நாங்கள் எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க விரும்புகிறோம்.”—எபிரெயர் 13:18.

 உங்கள் அப்பா அம்மாவுடைய தீர்மானத்தை உங்களுடைய தீர்மானம் ஆக்குங்கள். மேலே சொல்லப்பட்டிருக்கிற டீனேஜ் பிள்ளைகள் மாதிரி சோஷியல் மீடியாவுக்கு ‘நோ’ சொல்வதற்கு நிறைய காரணங்களை நீங்களும் யோசித்துப் பார்க்கலாம். சோஷியல் மீடியாவுக்கு ‘குட்பை’ சொல்வதுதான் நல்லது என்று உங்களுக்கு தோன்றினால், அதைச் செய்துவிடுங்கள். இது ஏதோ உங்கள் அப்பா அம்மா எடுத்த முடிவு என்பதற்காக அப்படிச் செய்யாதீர்கள், இது உங்களுடைய முடிவு என்பதை மனதில் வையுங்கள். அப்போதுதான் உங்களுடைய ­ஃபிரெண்ட்ஸ் இதைப் பற்றி உங்களிடம் கேட்கும்போது உங்களால் தயக்கமில்லாமல் தெளிவாக பதில் சொல்ல முடியும், அவர்களுடைய கேலியில் இருந்தும்கூட தப்பிக்க முடியும்.

 சுருக்கமாக சொன்னால்: இந்த விஷயத்தில் உங்கள் அப்பா-அம்மாவுடன் ஒத்துப்போங்கள். ‘அவர்கள் எடுத்த முடிவு சரிதான்’ என்று நீங்கள் ஏன் நினைத்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அப்படிச் செய்தால் அவர்கள் எடுத்த தீர்மானம் இப்போது உங்களுடைய தீர்மானமாகவும் இருக்கும். கொஞ்ச நாளைக்காவது உங்களால் சோஷியல் மீடியா இல்லாமல் வாழ முடியாதா என்ன!