எபிரெயருக்குக் கடிதம் 13:1-25

13  தொடர்ந்து சகோதர அன்பைக் காட்டுங்கள்.+  உபசரிக்கும் குணத்தை* காட்ட மறந்துவிடாதீர்கள்;+ இந்தக் குணம் இருந்ததால் சிலர் தங்களுக்கே தெரியாமல் தேவதூதர்களையும் உபசரித்தார்கள்.+  சிறையில் இருப்பவர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்,+ அவர்களோடு நீங்களும் சிறையில் இருப்பதுபோல் நினைத்துக்கொள்ளுங்கள்;+ துன்புறுத்தப்படுகிறவர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்களும்கூட இன்னும் இந்தப் பூமியில்தான் இருக்கிறீர்கள்.*  திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்; தாம்பத்திய உறவின்* புனிதத்தைக் கெடுக்காதீர்கள்.+ ஏனென்றால், பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்களையும், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் கடவுள் நியாயந்தீர்ப்பார்.+  பண ஆசையில்லாமல் வாழுங்கள்.+ உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்.+ ஏனென்றால், “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.+  அதனால், “யெகோவா* எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன், மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?”+ என்று நாம் மிகவும் தைரியமாகச் சொல்லலாம்.  உங்களுக்குக் கடவுளுடைய வார்த்தையைக் கற்றுக்கொடுத்து உங்களை வழிநடத்துகிறவர்களை நினைத்துப் பாருங்கள்.+ அவர்களுடைய நல்ல நடத்தையால் வருகிற பலன்களை ஆழமாக யோசித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.+  இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.  விசித்திரமான பலவித போதனைகளை நம்பி, வழிவிலகிப் போய்விடாதீர்கள். உணவால்* அல்ல, அளவற்ற கருணையால் இதயம் பலப்படுவது நல்லது; உணவுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறவர்களுக்கு எந்தப் பிரயோஜனமும் கிடைப்பதில்லை.+ 10  நமக்கு ஒரு பலிபீடம் இருக்கிறது. அதில் கொடுக்கப்படுகிற பலிகளைச் சாப்பிட,+ கூடாரத்தில் பரிசுத்த சேவை செய்கிறவர்களுக்கு அதிகாரம் இல்லை. 11  ஏனென்றால், பாவப் பரிகார பலியாக எந்த மிருகங்களின் இரத்தத்தைத் தலைமைக் குரு மகா பரிசுத்த அறைக்குள் கொண்டுபோகிறாரோ அந்த மிருகங்களின் உடல்கள் முகாமுக்கு வெளியே சுட்டெரிக்கப்படுகின்றன.+ 12  அதனால், இயேசுவும் தன்னுடைய சொந்த இரத்தத்தால் மக்களைப் புனிதப்படுத்துவதற்காக+ நகரவாசலுக்கு வெளியே பாடுகள் பட்டார்.+ 13  நாமும் அவருக்கு ஏற்பட்ட அவமானங்களைச் சுமந்துகொண்டு,+ முகாமுக்கு வெளியே அவரிடம் போவோமாக. 14  ஏனென்றால், நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிற நகரத்துக்காகவே நாம் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறோம்.+ 15  அதனால், இயேசுவின் வழியாகக் கடவுளுக்கு எப்போதும் நம்முடைய உதடுகளின் கனியைப் பலி செலுத்துவோமாக.+ அதாவது, கடவுளுடைய பெயரை எல்லாருக்கும் அறிவிப்பதன்+ மூலம் அவருக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக.+ 16  அதோடு, நல்லது செய்வதற்கும், உங்களிடம் இருப்பதை மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுப்பதற்கும் மறந்துவிடாதீர்கள்;+ இப்படிப்பட்ட பலிகளைக் கடவுள் மிகவும் விரும்புகிறார்.+ 17  உங்களை வழிநடத்துகிறவர்கள் உங்களைப் பற்றிக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால்+ உங்களைப் பாதுகாத்து வருகிறார்கள்; அதனால், அவர்களுக்குக் கீழ்ப்படிந்து,+ அடிபணிந்து நடங்கள்;+ அப்போது, அவர்கள் இதை வருத்தத்தோடு செய்யாமல் சந்தோஷத்தோடு செய்வார்கள்; அவர்கள் இதை வருத்தத்தோடு செய்தால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள். 18  எங்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்; ஏனென்றால், நாங்கள் எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க விரும்புகிறோம்; எங்களுக்குச் சுத்தமான* மனசாட்சி இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறோம்.+ 19  முக்கியமாக, நான் சீக்கிரத்தில் உங்களிடம் வருவதற்காக ஜெபம் செய்யும்படி உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். 20  ஆடுகளின் பெரிய மேய்ப்பரான+ நம் எஜமான் இயேசுவை என்றென்றுமுள்ள ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் இரத்தத்தோடு உயிருடன் எழுப்பிய சமாதானத்தின் கடவுள், 21  தன்னுடைய விருப்பத்தை* நீங்கள் செய்வதற்குத் தேவையான நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தருவாராக; தனக்குப் பிரியமானதை இயேசு கிறிஸ்து மூலம் நம்மைச் செய்ய வைப்பாராக; அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.* 22  சகோதரர்களே, உற்சாகம் தருகிற இந்த வார்த்தைகளைப் பொறுமையாகக் கேட்டு ஏற்றுக்கொள்ளும்படி உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; நான் உங்களுக்குச் சுருக்கமாகத்தான் கடிதம் எழுதியிருக்கிறேன். 23  நம் சகோதரராகிய தீமோத்தேயு விடுதலையாகிவிட்டார் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் சீக்கிரமாக வந்தால், நான் அவரோடு வந்து உங்களைப் பார்ப்பேன். 24  உங்களை வழிநடத்துகிறவர்களுக்கும் மற்ற எல்லா பரிசுத்தவான்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். இத்தாலியில்+ இருக்கிறவர்கள் உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள். 25  நம் எஜமானுடைய அளவற்ற கருணை உங்கள் எல்லார்மீதும் இருக்கட்டும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அன்னியர்களுக்குத் தயவு.”
அல்லது, “அவர்களோடு சேர்ந்து நீங்களும் கஷ்டப்படுவதாக நினைத்துக்கொள்ளுங்கள்.”
நே.மொ., “பள்ளியறைப் படுக்கையின்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
அதாவது, “உணவைப் பற்றிய சட்டங்களால்.”
நே.மொ., “நல்ல.”
வே.வா., “சித்தத்தை.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா