Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

கெட்ட வார்த்தை பேசுவது அவ்வளவு பெரிய தப்பா?

கெட்ட வார்த்தை பேசுவது அவ்வளவு பெரிய தப்பா?

“கெட்ட வார்த்தைய கேட்டுக் கேட்டு எனக்குப் பழகிடுச்சு. அதனால அது எனக்குத் தப்பாவே தெரியல.”‏​—கிறிஸ்டோஃபர், 17.

“சின்ன வயசுல நான் நெறைய கெட்ட வார்த்தை பேசுவேன். கெட்ட வார்த்தை பேசறது ஈசிதான். ஆனா, அந்தப் பழக்கத்த நிறுத்தறது ரொம்ப ரொம்பக் கஷ்டம்.”—ரெபெக்கா, 19.

 நீங்கள் என்ன சொல்வீர்கள்?

  •   மற்றவர்கள் கெட்ட வார்த்தை பேசுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    •  நான் அத கண்டுக்க மாட்டேன். அதெல்லாம் எனக்குப் பழகிடுச்சு.

    •  அது கொஞ்சம் எரிச்சலாதான் இருக்கும். ஆனா, கெட்ட வார்த்தை பேசாதீங்க அப்படினெல்லாம் அவங்ககிட்ட சொல்ல மாட்டேன்.

    •  அதையெல்லாம் என் காதால கேக்கவே முடியாது! அது ரொம்ப மோசமான விஷயம்.

  •   எவ்வளவு அடிக்கடி நீங்கள் கெட்ட வார்த்தைகளை பேசுகிறீர்கள்?

    •  பேசவே மாட்டேன்

    •  எப்போதாவது

    •  அடிக்கடி

  •   கெட்ட வார்த்தை பேசுவது ஒரு பெரிய பிரச்சினை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    •  ஆமாம்

    •  இல்லை

 நாம் பேசுகிற வார்த்தைகளைப் பற்றி யோசித்துப் பார்ப்பது ஏன் முக்கியம்?

 கெட்ட வார்த்தை பேசுவது ஒரு மோசமான விஷயம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ‘இல்ல, நான் அப்படி நினைக்கல. கவலப்படறதுக்கு இதவிட பெரிய பிரச்சினை எத்தனையோ இருக்கு. இன்னைக்கு யாருதான் கெட்ட வார்த்தை பேசாம இருக்குறா, சொல்லுங்க!’ என்று நீங்கள் சொல்லலாம்.

 உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கெட்ட வார்த்தை பேசாத நிறைய பேர் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் அப்படிப் பேசாமல் இருப்பதற்கு, நமக்குத் தெரியாத நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒருசிலவற்றை இப்போது பார்க்கலாம்.

  •  நீங்கள் யார் என்பதை உங்கள் வார்த்தைகள் காட்டும். கெட்ட வார்த்தை பேசினால், மற்றவர்களை நீங்கள் கொஞ்சம்கூட மதிப்பதில்லை என்று அர்த்தமாகிவிடலாம். நீங்கள் அப்படித்தானா?

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “வாயிலிருந்து வருவதெல்லாம் இதயத்திலிருந்து வருகின்றன.”—மத்தேயு 15:18.

    கெட்ட வார்த்தைகள் பேசுவது காற்று மாசுபடுவது மாதிரி. அது உங்களையும் மற்றவர்களையும் பாதிக்கும்

  •  நீங்கள் கெட்ட வார்த்தை பேசினால், மற்றவர்கள் உங்களைத் தப்பாக நினைப்பார்கள். கஸ் கன்ட்ரோல் என்ற புத்தகம் இப்படிச் சொல்கிறது: ”நாம் பேசும் விதம் ரொம்ப முக்கியம். ஏனென்றால், நம் நண்பர்கள் யார்... குடும்பத்தில் இருக்கிறவர்களிடமிருந்தும் நம்மோடு வேலை செய்கிறவர்களிடமிருந்தும் நமக்கு எவ்வளவு மரியாதை கிடைக்கிறது... மற்றவர்களுடன் நம் பந்தம் எப்படி இருக்கிறது... நமக்கு வேலை கிடைக்குமா... பதவி உயர்வு கிடைக்குமா... நம்மைப் பற்றி தெரியாதவர்கள் நம்மோடு எப்படி நடந்துகொள்வார்கள்... என இவை எல்லாமே நாம் பேசும் விதத்தைப் பொறுத்துதான் இருக்கிறது.” அதோடு, “நீங்கள் கெட்ட வார்த்தை பேசாமல் இருந்தால், மற்றவர்களோடு உங்களுக்கு இருக்கும் உறவு இன்னும் நன்றாக இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்” என்றும் அந்த புத்தகம் சொல்கிறது.

     பைபிள் இப்படிச் சொல்கிறது: ‘பழிப்பேச்சை . .‏. ‏  உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்.’—எபேசியர் 4:31.

  •  கெட்ட வார்த்தை பேசும்போது யாரும் உங்களைப் பார்த்து அசந்து போகமாட்டார்கள். ஹவ் ரூடு! என்ற தன்னுடைய புத்தகத்தில், டாக்டர் அலெக்ஸ் பேக்கர் இதைப் பற்றிச் சொல்லியிருந்தார்: ”நீங்கள் எப்போதும் கெட்ட வார்த்தை பேசிக்கொண்டிருந்தால், உங்களைச் சுற்றி இருக்கிறவர்களுக்கு அது ரொம்ப எரிச்சலாக இருக்கும். கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டிருக்கும் ஒருவரின் பேச்சு, சுவாரஸ்யமாகவும் இருக்காது, நகைச்சுவையாகவும் இருக்காது, அன்பாகவும் இருக்காது. அதுமட்டுமல்ல, அப்படிப் பேசிக்கொண்டிருப்பதால் யாரும் உங்களை புத்திசாலி என்றும் நினைக்க மாட்டார்கள்.”

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம்.”—எபேசியர் 4:29.

 நீங்கள் என்ன செய்யலாம்?

  •  குறிக்கோள் வையுங்கள். ஒரு மாதத்துக்குள் கெட்ட வார்த்தை பேசுவதை நிறுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் இந்தக் குறிக்கோளை உங்களால் எட்ட முடிகிறதா என்பதை காலண்டரில் அல்லது ஒரு பேப்பரில் எழுதி வையுங்கள். ஆனாலும், இந்தப் பழக்கத்தை முழுமையாக விடுவதற்கு, நீங்கள் வேறு சில விஷயங்களையும் செய்ய வேண்டியிருக்கலாம். உதாரணத்துக்கு:

  •  உங்கள் மனதை கெட்ட வார்த்தைகளால் நிரப்பும் பொழுதுபோக்கைத் தவிர்த்திடுங்கள். “கெட்ட சகவாசம் நல்ல ஒழுக்கநெறிகளைக் கெடுத்துவிடும்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:33, அடிக்குறிப்பு) “சகவாசம்” என்பது மக்களை மட்டுமல்ல பொழுதுபோக்கையும் குறிக்கிறது. அதாவது, நீங்கள் பார்க்கிற படங்களையும், நீங்கள் விளையாடுகிற வீடியோ கேம்ஸ்களையும், நீங்கள் கேட்கிற இசையையும் குறிக்கிறது. கென்னத் என்ற 17 வயது பையன் இப்படிச் சொல்கிறான்: “ஒரு பாட்டோட இசை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கிறதுனால, அதுல கெட்ட வார்த்தை வருதுங்கிறதயே மறந்து நீங்க பாட ஆரம்பிச்சிடலாம்.“

  •  வளர்ந்தவர்கள் மாதிரி நடந்துகொள்ளுங்கள். ‘நாங்க இன்னும் ஒண்ணும் சின்னக் குழந்தை இல்ல, வளர்ந்துட்டோம்!’ என்று காட்டுவதற்காக சிலர் கெட்ட வார்த்தைகளைப் பேசுகிறார்கள். ஆனால் கெட்ட வார்த்தை பேசுவதால் நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்றெல்லாம் யாரும் நினைக்க மாட்டார்கள். உண்மை என்னவென்றால், வளர்ந்தவர்கள், அதாவது, முதிர்ச்சியுள்ளவர்கள், ‘சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்தி [தங்களை] பயிற்றுவித்திருக்கிறார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 5:14) அதனால், மற்றவர்களைக் கவருவதற்காக கெட்ட வார்த்தைகளைப் பேசி உங்களுடைய மதிப்பைக் குறைத்துக்கொள்ளாதீர்கள்.

 தூசு, புகை எப்படி காற்றை மாசுபடுத்துகிறதோ அதே மாதிரி நாம் பேசும் கெட்ட வார்த்தைகள் நம்முடைய மனதையும், நாம் பேசுவதை கேட்கிறவர்களுடைய மனதையும் அசிங்கமான எண்ணங்களால் மாசுபடுத்துகிறது. இந்த மாதிரி அசிங்கமாக யோசிக்கிறவர்கள் ஏற்கெனவே இந்த உலகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்! அதனால், அதில் இன்னும் நிறைய பேரை சேர்த்துவிடாதீர்கள் என்று கஸ் கன்ட்ரோல் புத்தகம் சொல்கிறது. அதோடு, “எப்போதும் நல்ல வார்த்தைகளையே பேசுவதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். இப்படிச் செய்யும்போது நீங்களும் சந்தோஷமாக இருப்பீர்கள், நீங்கள் பேசுவதைக் கேட்கிறவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்” என்று அந்தப் புத்தகம் சொல்கிறது.