Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

படைப்பா பரிணாமமா—பாகம் 1: கடவுள் இருக்கிறார் என்று ஏன் நம்ப வேண்டும்?

படைப்பா பரிணாமமா—பாகம் 1: கடவுள் இருக்கிறார் என்று ஏன் நம்ப வேண்டும்?

 படைப்பா பரிணாமமா?

 கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஆம் என்றால், நீங்கள் மட்டுமல்ல உங்களைப் போலவே நிறைய இளைஞர்களும் (அதோடு, பெரியவர்களும்) கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று நம்புகிறார்கள். ஆனால், இந்தப் பிரபஞ்சத்தையும் உயிரினங்களையும் ஏதோவொரு உன்னத சக்தி படைக்கவில்லை, இவையெல்லாம் தானாகவே வந்தன என்று மற்றவர்கள் நம்புகிறார்கள்.

 உங்களுக்குத் தெரியுமா? இதைப் பற்றி விவாதிக்கும் இரு தரப்பினருமே அவர்களுடைய நம்பிக்கை என்ன என்று சட்டென சொல்லிவிடுகிறார்கள். ஆனால், அதை ஏன் நம்புகிறார்கள் என்று அவர்களுக்கே தெரிவதில்லை.

  •   சர்ச் சொல்லிக் கொடுப்பதால் படைப்பில் சிலர் நம்பிக்கை வைக்கிறார்கள்.

  •   ஸ்கூல் சொல்லிக் கொடுப்பதால் பரிணாமத்தில் பலர் நம்பிக்கை வைக்கிறார்கள்.

 படைப்பில் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்கும் அதைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதற்கும் இந்தத் தொடர் கட்டுரைகள் உங்களுக்கு உதவி செய்யும். ஆனால், முதலில், உங்களை நீங்களே இந்த அடிப்படைக் கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்:

 கடவுள் இருக்கிறார் என்று நான் ஏன் நம்புகிறேன்?

 இந்தக் கேள்வி ஏன் முக்கியம்? ஏனென்றால், உங்களுடைய “சிந்திக்கும் திறனை” பயன்படுத்தும்படி பைபிள் உங்களை உற்சாகப்படுத்துகிறது. (ரோமர் 12:1) அப்படியானால், நீங்கள் கடவுளை நம்புவதற்கு பின்வரும் விஷயங்கள் காரணமாக இருக்கக் கூடாது:

  •  உணர்வு (எல்லா சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது)

  •  மற்றவர்களுடைய தாக்கம் (மதப்பற்றுள்ள ஜனங்கள் வசிக்கிற பகுதியில் வசிக்கிறேன்)

  •  அழுத்தம் (அப்பா அம்மா சொல்லிக் கொடுத்ததால்தான் கடவுளை நம்புகிறேன். இல்லையென்றால்...)

 அதற்குப் பதிலாக, கடவுள் இருக்கிறார் என்று நீங்களாகவே நம்ப வேண்டும்; அப்படி நம்புவதற்கு உங்களுக்கு நல்ல காரணங்கள் இருக்க வேண்டும். கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்? “கடவுள் இருக்கிறார் என்று நான் ஏன் நம்புகிறேன்?” என்ற ஒர்க் ஷீட் உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்த உதவும். இந்தக் கேள்விக்கு மற்ற இளைஞர்கள் சொல்கிற பதில்களும் உங்களுக்கு உதவும். “நம்ம உடம்பு எப்படிச் செயல்படுதுனு க்ளாஸ் டீச்சர் சொல்லிக் கொடுக்கும்போதெல்லாம் கடவுள் இருக்காருங்கற என்னோட நம்பிக்கை அதிகமாகிட்டே போகும். உதாரணத்துக்கு, நம்ம உடம்புல இருக்கற ஒவ்வொரு பாகத்துக்கும் தனித்தனி வேலை இருக்கு, அதில சில வேலைகள் ரொம்ப ரொம்ப நுணுக்கமானது. இந்த வேலைங்க எல்லாம் நமக்கே தெரியாம உள்ளுக்குள்ள நடந்திட்டு இருக்கு. அதனாலதான் சொல்றேன், மனுஷங்க உடம்பு, அப்பப்பா ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!”​—டெரஸா.

 பெரிய பெரிய கட்டடங்கள, இல்லன்னா ஒரு கப்பல, இல்ல... ஒரு காரைப் பாக்கும்போதெல்லாம், “இத யார் செஞ்சிருப்பாங்க”ன்னு எனக்கு நானே கேட்டுப்பேன். ஒரு காரை செய்யறதுக்கு புத்திசாலியான ஆட்கள் தேவை. ஏன்னா, அதில சின்னச்சின்னதா ஏகப்பட்ட பொருள்கள் இருக்கு, அத எல்லாத்தையும் கச்சிதமா பொருத்தினாத்தான் கார் ஒழுங்கா ஓடும். கார்களுக்கே ஒரு டிஸைனர் தேவைன்னா, மனுஷங்களுக்கும் கண்டிப்பா தேவைதானே?”​—ரிச்சர்டு.

 நம்ம பிரபஞ்சத்தில இருக்கற ரொம்ப ரொம்பச் சின்னப் பாகத்த புரிஞ்சுக்கறதுக்கு மகா பெரிய புத்திசாலிகளுக்கே நூத்துக்கணக்கான வருஷம் பிடிச்சிருக்குன்னா... முழு பிரபஞ்சத்தையும் உண்டாக்கறதுக்குப் புத்திக்கூர்மையுள்ள எந்த நபரும் தேவைப்படலன்னு சொல்றது எந்த விதத்தில நியாயம்?”—கேரன்.

 அறிவியலுக்குள்ள நான் ஆழமா நுழைய நுழைய, பரிணாமக் கொள்கை மேல இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சிடுச்சு. உதாரணத்துக்கு, இயற்கையில இருக்கற கணித நுணுக்கத்த பத்தியும், மனுஷங்ககிட்ட இருக்கற தனித்தன்மைய பத்தியும் யோசிச்சுப் பாத்தேன். முக்கியமா, நாம யாரு, எங்கிருந்து வந்தோம், எங்க போறோம்ங்கற கேள்விக்கெல்லாம் பதில் தெரிஞ்சுக்கறதுக்கான தேவை நமக்கு இருக்கறத பத்தி யோசிச்சுப் பாத்தேன். இத எல்லாத்தையும் மிருகங்களோட சம்பந்தப்படுத்தி பரிமாணமக் கொள்கை பேசுது... ஆனா மனுஷங்க ஏன் தனித்தன்மை வாய்ந்தவங்களா இருக்காங்கன்னு மட்டும் இதுவரைக்கும் சொன்னதே இல்ல. என்னைப் பொறுத்தவரை, ஒரு படைப்பாளர் இருக்காருங்கறதகூட நம்பிடலாம், ஆனா பரிணாமக் கொள்கைய நம்பறதுக்குத்தான் அதிகமா ‘விசுவாசம்’ தேவைப்படுது.”​—ஆந்தொனி.

என்னுடைய நம்பிக்கையை விளக்குவது

 பார்க்க முடியாத ஒரு விஷயத்தை நம்புகிறீர்கள் என்பதற்காக, உங்கள் வகுப்பு மாணவர்கள் உங்களைக் கிண்டல் செய்தால் என்ன செய்வது? பரிணாமக் கொள்கைதான் உண்மை என்று அறிவியல் நிரூபித்துவிட்டது என்று சொன்னால் என்ன செய்வது?

  முதலாவது, நீங்கள் நம்புகிற விஷயத்தில் உறுதியாக இருங்கள். உங்கள் நம்பிக்கையைப் பற்றிப் பேச பயப்படாதீர்கள், வெட்கப்படாதீர்கள். (ரோமர் 1:16) பின்வரும் விஷயங்களை ஞாபகத்தில் வையுங்கள்:

  1.   கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் மட்டுமே நம்புவதில்லை, ஏராளமானோரும் நம்புகிறார்கள். ஆம், பெரிய பெரிய புத்திசாலிகளும், தொழில்துறை வல்லுநர்களும் நம்புகிறார்கள். உதாரணத்திற்கு, கடவுள் இருக்கிறார் என விஞ்ஞானிகள்கூட நம்புகிறார்கள்.

  2.   சிலர் கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லும்போது உண்மையில் கடவுளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதையே சிலசமயம் அர்த்தப்படுத்துகிறார்கள். தங்களுடைய கருத்துக்கு அத்தாட்சி அளிப்பதற்குப் பதிலாக, “கடவுள் இருக்கிறார் என்றால், துன்பங்களை ஏன் அனுமதிக்கிறார்?” போன்ற கேள்விகளை அவர்கள் எழுப்புகிறார்கள். அறிவுப்பூர்வமாக விவாதிக்க வேண்டிய விஷயத்தை உணர்ச்சிப்பூர்வமாக விவாதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

  3.   மனிதர்களுக்கு “ஆன்மீகத் தேவை” இருக்கிறது. (மத்தேயு 5:3) கடவுள் இருக்கிறார் என்று நம்புவதற்கான தேவையும் இதில் உட்பட்டிருக்கிறது. அதனால், கடவுள் இல்லையென்று சொல்கிற நபர்தான் தன்னுடைய நம்பிக்கையைப் பற்றி விளக்கமளிக்க வேண்டும், நீங்கள் அல்ல!​—ரோமர் 1:18-20.

  4.   கடவுள் இருக்கிறார் என்று நம்புவது நியாயமானதுதான். உயிர் தானாகவே வராது என்ற உண்மையை இது உறுதிப்படுத்துகிறது. உயிரற்ற பொருளிலிருந்து உயிர் வரக்கூடும் என்ற கருத்தை ஆதரிப்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை.

 கடவுள் இருக்கிறார் என்ற உங்கள் நம்பிக்கையைப் பற்றி யாராவது உங்களிடம் கேள்வி எழுப்பினால் என்ன செய்வது? இப்படிச் செய்து பாருங்கள்.

 யாராவது இப்படிச் சொன்னால்: “படிப்பறிவு இல்லாதவங்கதான் கடவுள் இருக்கிறாருனு நம்புவாங்க.”

 நீங்கள் இப்படிப் பதில் சொல்லலாம்: “நிறைய பேர் இப்படிச் சொல்றாங்க, நீங்களுமா இத நம்பறீங்க? நான் நம்பல. ஒருசமயம், 1,600 விஞ்ஞானப் பேராசிரியர்கள வெச்சு ஒரு ஆய்வு நடத்தினாங்க; அந்தப் பேராசிரியர்கள்ல மூனுல ஒரு பகுதியினர் தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லைன்னும் சொல்லல, கடவுள்னு ஒருத்தர் இருக்கறத சந்தேகிக்கறதாவும் சொல்லல. a அப்படீன்னா... அவங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்துச்சு... அந்த நம்பிக்கை இருந்துச்சுங்கறதுக்காக, அவங்க எல்லாரையும் அறிவில்லாதவங்கன்னு சொல்வீங்களா?”

 யாராவது இப்படிச் சொன்னால்: “கடவுள்னு ஒருத்தர் இருந்தா, ஏன் இந்த உலகத்தில இத்தனை கஷ்டம் இருக்கு?”

 நீங்கள் இப்படிப் பதில் சொல்லலாம்: “கடவுள் எப்படிச் செயல்படறாருன்னு புரியலன்னு சொல்ல வர்றீங்களா? இல்ல... அவரு எதுவும் செய்யற மாதிரி தெரியலைன்னு சொல்ல வர்றீங்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] ஏன் இன்னைக்கு இவ்வளவு கஷ்டம் இருக்குங்கற கேள்விக்குத் திருப்தியான பதில் எனக்குக் கிடைச்சுது. அத நீங்க புரிஞ்சுக்கணும்னா நிறைய பைபிள் விஷயங்கள நான் சொல்ல வேண்டியிருக்கும். அதையெல்லாம் தெரிஞ்சுக்க உங்களுக்கு ஆர்வம் இருக்கா?”

 மனிதர்கள் எப்படித் தோன்றினார்கள் என்பதற்கான திருப்தியளிக்கும் விளக்கத்தை பரிணாமக் கொள்கை ஏன் தருவதில்லை என்று இந்தத் தொடர்க் கட்டுரையின் அடுத்த பாகம் சொல்லும்.

a ஆதாரம்: சமூக அறிவியல் ஆய்வுக் குழு, பிப்ரவரி 5, 2007-ல் ஈலைன் ஹௌவார்ட் எக்லன்டு எழுதிய “பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் மதமும் ஆன்மீகமும்” என்ற புத்தகம்.