Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

செக்ஸ்டிங் பற்றி நான் என்ன தெரிந்து வைத்திருக்க வேண்டும்?

செக்ஸ்டிங் பற்றி நான் என்ன தெரிந்து வைத்திருக்க வேண்டும்?

 செக்ஸ்டிங் என்றால் என்ன?

செல்ஃபோன் மூலமாக ஆபாசமான மெசேஜ்களையோ, ஆபாசப் படங்களையோ, ஆபாச வீடியோக்களையோ அனுப்புவதுதான் செக்ஸ்டிங் (sexting). “இப்பெல்லாம் இது சர்வ சாதாரணமாயிடுச்சு! நாம ஒரு மெசேஜ் அனுப்ப... மத்தவங்க திரும்ப நமக்கு மெசேஜ் அனுப்ப... இப்படி மாறி மாறி அனுப்பி, கடைசியில ஆபாசப் படங்கள அனுப்ப ஆரம்பிச்சிடுவோம்” என்கிறார் ஒருவர்.

மக்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள்? “நீங்கள் காதலிக்கிற நபருடைய நிர்வாணப் படத்தை உங்கள் செல்ஃபோனில் வைத்திருப்பது, நீங்கள் செக்ஸில் ஈடுபட ஆரம்பித்துவிட்டீர்கள் என்பதற்கான ஒரு விளம்பரமாக இருக்கிறது” என்று சில டீனேஜர்கள் நினைத்துக்கொள்வதாக மூத்த வழக்கறிஞர் ஒருவர் த நியு யார்க் டைம்ஸில் கருத்துத் தெரிவித்திருந்தார். ஒரு டீனேஜ் பெண், செக்ஸ்டிங்கை பற்றிச் சொல்லும்போது, “அத செய்யறதுனால கர்ப்பமாயிட மாட்டோம், பால்வினை நோய்களும் வராது. அதனால, இது பாதுகாப்பான செக்ஸ்னு சொல்லலாம்” என்று குறிப்பிட்டாள்.

வேறுபல காரணங்களுக்காகவும் டீனேஜர்கள் செக்ஸ்டிங் செய்கிறார்கள்; உதாரணத்திற்கு:

 • தாங்கள் காதலிக்க நினைக்கும் நபரோடு நெருங்கிப் பழக ஆசைப்படுவதால்.

 • ஆபாசப் படத்தை அனுப்பிய நபருக்கு தாங்களும் ஒரு ஆபாசப் படத்தை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால்.

 செக்ஸ்டிங்கினால் வரும் பிரச்சினைகள் என்ன?

செல்ஃபோனில் ஒரு ஃபோட்டோவை அனுப்பிவிட்ட பிறகு, அதை நீங்கள் மற்றவர்களிடம் கொடுத்துவிடுகிறீர்கள், இனி அது உங்களுடையது அல்ல, இனிமேலும் அது உங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை!—அது உங்கள் பெயரையும்கூட கெடுத்துவிடலாம்! மூத்த ஆராய்ச்சி நிபுணரும் ப்யூ ஆய்வு மையத்தின் ஆசிரியருமான அமென்டா லென்ஹார்ட் என்பவர் செக்ஸ்டிங் பற்றி வெளியிட்ட அறிக்கையில், “தவறுகளும் குற்றச்செயல்களும் முன் எப்போதையும்விட இப்போது ரொம்ப சுலபமான வழிகளில் பரப்பப்படுகிறது, எல்லாரும் பார்ப்பதற்காகப் பாதுகாக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

சில சமயங்களில்...

 • ஆட்கள் தங்களுடைய செல்ஃபோனுக்கு வருகிற நிர்வாணப் படங்களைத் தங்களுடைய நண்பர்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக ஒரே க்ளிக்கில் எல்லாருக்கும் அனுப்பி வைக்கிறார்கள்.

 • காதலியால் ‘கைவிடப்பட்ட’ ஆண்கள், தங்களுடைய காதலியைப் பழிவாங்குவதற்காக அவளுடைய நிர்வாணப் படங்களை எல்லாருக்கும் அனுப்பி வைக்கிறார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? பல சந்தர்ப்பங்களில், நிர்வாணப் படங்களை செல்ஃபோனில் அனுப்புவது குழந்தை துஷ்பிரயோகத்திற்கும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை அனுப்புவதற்கும் சமம் என்பதாகக் கருதப்படுகிறது. செக்ஸ்டிங் செய்த சில மைனர்கள்மீது செக்ஸ் குற்றவாளிகளுக்கான வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

 பைபிள் என்ன சொல்கிறது?

திருமணமானவர்கள் பாலியல் இன்பம் அனுபவிப்பதை பைபிள் ஆதரித்துப் பேசுகிறது. (நீதிமொழிகள் 5:18) ஆனால், திருமணமாகாத நபர்கள் பாலுறவில் ஈடுபடுவதை அது கண்டனம் செய்கிறது. பின்வரும் பைபிள் வசனங்களைக் கவனியுங்கள்:

 • “பாலியல் முறைகேடு, எல்லா விதமான அசுத்தம், பேராசை ஆகியவற்றைப் பற்றிய பேச்சுகூட உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது. . . . அதேபோல், வெட்கக்கேடான நடத்தை, முட்டாள்தனமான பேச்சு, ஆபாசமான கேலிப் பேச்சு ஆகியவை உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது.”—எபேசியர் 5:3, 4.

 • “பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, கட்டுக்கடங்காத காமப்பசி, கெட்ட ஆசை, . . . பேராசை ஆகியவற்றைத் தூண்டுகிற உங்களுடைய உடல் உறுப்புகளை அழித்துப்போடுங்கள்.”—கொலோசெயர் 3:5.

“பாலியல் முறைகேடு” (மணத்துணை அல்லாத நபரோடு உடலுறவு) கூடாது என்று மட்டுமே இந்த வசனங்கள் சொல்வதில்லை; “அசுத்தமான நடத்தையும்” (எல்லா விதமான ஒழுக்கங்கெட்ட செயல்களும்), ‘கட்டுக்கடங்காத காமப்பசியும்’ (மணமானவர்களுக்கு வருகிற இயல்பான காதல் உணர்வுகள் அல்ல, தவறான நடத்தைக்கு வழிநடத்துகிற மோகமும்) கூடாது என்று சொல்கின்றன.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:

 • நிர்வாணப் படங்களை செல்ஃபோனில் அனுப்புவது ஒருவித “அசுத்தமான நடத்தை” என எப்படிச் சொல்லலாம்?

 • அது எப்படி ‘கட்டுக்கடங்காத காமப்பசிக்கு’ தீனிபோடுவதாக இருக்கும்?

 • நிர்வாணப் படங்களைப் பார்க்கிற அல்லது பரப்புகிற ஆசை ஏன் ‘கெட்டதாக’ இருக்கிறது?

பின்வரும் பைபிள் வசனங்கள், செக்ஸ்டிங்கை தவிர்ப்பதற்கு இன்னும் பலமான காரணங்களை அளிக்கின்றன.

 • “எதற்காகவும் வெட்கப்படாத வேலையாளாக . . . [கடவுளால்] ஏற்றுக்கொள்ளப்பட்டவனாக அவருக்கு முன்னால் நிற்பதற்கு உன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்.”—2 தீமோத்தேயு 2:15.

 • “நீங்கள் எந்தளவுக்குப் பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் கடவுள்பக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்!”—2 பேதுரு 3:11.

நல்லொழுக்கம் நல்ல பலன்களைத் தரும் என்பதைத்தான் இந்த வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உங்கள் நடத்தை மெச்சும்படி இருந்தால், அவசரக்குடுக்கை போல் ஏதோவொன்றைச் செய்துவிட்டு பிற்பாடு அதை நினைத்து நினைத்து வருத்தப்பட மாட்டீர்கள்.—கலாத்தியர் 6:7.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:

 • நான் எப்படிப்பட்டவன்(ள்)?

 • மற்றவர்களுடைய பெயர் கெட்டுப்போனால் எனக்கென்ன என்று நினைக்கிறேனா?

 • மற்றவர்களுடைய மனதை நோகடிக்கற விஷயத்தை ரசித்துப் பார்க்க விரும்புகிறேனா?

 • செக்ஸ்டிங் செய்வது என் பெயரை எப்படிக் கெடுக்கும்?

 • என் அப்பா அம்மா என்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையை அது எப்படிக் குலைத்துப்போடும்?

உண்மைக் கதை “என் ஃப்ரெண்டு ஒருத்தி ஒரு பையனோட ரகசியமா பழகிட்டு இருந்தா. ஒருநாள், அவ தன்னோட நிர்வாணப் படத்த அவனுக்கு அனுப்பி வெச்சா, அவனும் தன்னோட நிர்வாணப் படத்த அவளுக்கு அனுப்பி வெச்சான். 48 மணிநேரம்கூட ஆகல, அவளோட அப்பா அவளோட செல்ஃபோன செக் செய்யறதுக்காக அத எடுத்துப் பார்த்தாரு. அதிலிருந்த மெசேஜ்கள பார்த்துட்டு அப்படியே ஷாக் ஆயிட்டாரு! அவள கூப்பிட்டு விசாரிச்சாரு, அவளும் எல்லாத்தையும் ஒத்துக்கிட்டா. ஏன்தான் அப்படிச் செஞ்சோமோன்னு நெனச்சு அவ இப்ப வருத்தப்படறது எனக்குத் தெரியும், ஆனா அவளோட அப்பா அம்மாவுக்கு எவ்ளோ அதிர்ச்சி, எவ்ளோ வேதனை! அவமேல இருந்த நம்பிக்கையே அவங்களுக்கு போயிடுச்சு.”

வாழ்க்கையின் உண்மை: ஆபாச விஷயங்களை செல்ஃபோனில் அனுப்புகிறவர்களும், அவற்றைப் பார்க்கிறவர்களும் தங்களைத்தாங்களே கேவலப்படுத்திக்கொள்கிறார்கள். பாய்ஃப்ரெண்டு வற்புறுத்தியதால் செக்ஸ்டிங் செய்த ஒரு டீனேஜ் பெண் சொல்வதைக் கவனியுங்கள்; “என்னைக் கண்டாலே எனக்கு வெறுப்பா இருந்துச்சு, என்னையே நான் அசிங்கப்படுத்திகிட்டேன்” என்கிறாள் அவள்.

செக்ஸ்டிங் செய்வதால் தார்மீக, ஒழுக்க, ஏன் சட்ட ரீதியில்கூட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால், பின்வரும் பைபிள் ஆலோசனையைப் பின்பற்றுவது சிறந்ததாக இருக்கும்:

 • “இளமைப் பருவத்தில் வருகிற ஆசைகளைவிட்டு நீ விலகி ஓடு.”—2 தீமோத்தேயு 2:22.

 • “வீணான காரியங்களைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்புங்கள்.”—சங்கீதம் 119:37.

 நீங்கள் என்ன செய்வீர்கள்?

பைபிள் தரும் ஆலோசனையை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள். ஜேனட் சொல்கிற வாக்கியத்தை வாசித்துவிட்டு, பெஸ்ட் ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள்.

“ஒருநாள் நான் ஒரு பையன சந்திச்சேன், அவனோட செல்ஃபோன் நம்பர எனக்குக் கொடுத்தான், நானும் கொடுத்தேன். ஒரு வாரத்துக்குள்ளயே அந்தப் பையன், டூ பீஸ்ல இருக்கற மாதிரி என்னோட ஃபோட்டோவ அனுப்பச் சொல்லி மெசேஜ் பண்ணினான்!”—ஜேனட்.

ஜேனட் என்ன செய்திருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?

 • ஆப்ஷன் 1 நீங்கள் இப்படி நினைக்கலாம்: ‘அதில தப்பொன்னும் இல்ல. ஒருவேள நாங்க பீச்சுக்குப் போயிருந்தா, எப்படியும் என்னை நீச்சல் உடையில பார்த்திருப்பானே.’

 • ஆப்ஷன் 2 நீங்கள் இப்படி நினைக்கலாம்: ‘அவன் மனசில என்ன இருக்குன்னு தெரியல. ரொம்பக் கவர்ச்சியா இல்லாத மாதிரி ஒரு ஃபோட்டோவ அனுப்பி வெக்கறேன், என்ன செய்யறான்னு பார்க்கலாம்.’

 • ஆப்ஷன் 3 நீங்கள் இப்படி நினைக்கலாம்: ‘இந்தப் பையனோட மனசில “அது” மட்டும்தான் இருக்கு! அவனோட மெசேஜ டிலீட் செய்யப்போறேன்!”

ஆப்ஷன் 3-தான் பெஸ்ட்டாகத் தோன்றுகிறது, இல்லையா? பைபிளும்கூட அதைத்தான் சொல்கிறது: “அறிவுள்ளவர்கள் ஆபத்து வருவதைப் பார்த்து அதைத் தவிர்த்துவிடுவார்கள், ஆனால் யோசிக்காமல் கொள்ளாமல் செயல்படுபவர்கள் நேராகப் போய் அதில் மாட்டிக்கொண்டு, பிற்பாடு வருத்தப்படுவார்கள்.”—நீதிமொழிகள் 22:3, குட் நியூஸ் டிரான்ஸ்லேஷன்.

செக்ஸ்டிங் மற்றும் அதுபோன்ற கெட்ட செயல்களுக்கான மூலக் காரணத்தைத்தான் மேலே உள்ள பயிற்சி சுட்டிக்காட்டுகிறது: நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நீங்கள் மிகக் கவனமாக இருக்கிறீர்களா? (நீதிமொழிகள் 13:20) சாரா என்ற இளம் பெண் இப்படிச் சொல்கிறாள்: “யாரெல்லாம் தப்பான நடத்தைய பொறுத்துக்க மாட்டாங்களோ அவங்களோட மட்டும் பழகுங்க.” டிலியா என்ற இளம் பெண்ணும் அதை ஒத்துக்கொள்கிறாள். “சில ‘ஃப்ரெண்ட்ஸ்’ உங்க ஒழுக்கநெறிகள்ல நீங்க உறுதியா இருக்கறதுக்கு உதவ மாட்டாங்க, அதயெல்லாம் உடைச்சு எறியத்தான் பார்ப்பாங்க. ஒழுக்கக்கேடு-ங்கற சாக்கடையில அவங்க விழுந்தது மட்டுமில்லாம உங்களையும் அந்தச் சாக்கடைக்குள்ள இழுக்கப் பார்ப்பாங்க. நீங்க அந்தச் சாக்கடைக்குள்ள விழணுமா என்ன?” என்று கேட்கிறாள்.