மத்தேயு எழுதியது 15:1-39

15  பின்பு, எருசலேமிலிருந்து பரிசேயர்களும் வேத அறிஞர்களும் இயேசுவிடம் வந்து,+  “உன்னுடைய சீஷர்கள் ஏன் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறுகிறார்கள்? சாப்பிடுவதற்கு முன்னால் அவர்கள் கை கழுவுவதில்லையே”+ என்று சொன்னார்கள்.  அதற்கு அவர், “உங்களுடைய பாரம்பரியத்தால் ஏன் கடவுளுடைய கட்டளையை மீறுகிறீர்கள்?+  உதாரணமாக, ‘உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்’+ என்றும், ‘அப்பாவையோ அம்மாவையோ கேவலமாகப் பேசுகிற* எவனும் கொல்லப்பட* வேண்டும்’+ என்றும் கடவுள் சொன்னார்.  ஆனால், ‘ஒருவன் தன் அப்பாவிடமோ அம்மாவிடமோ, “என்னிடம் இருப்பதையெல்லாம் ஏற்கெனவே கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டேன், அதனால் உங்களுக்கு என்னால் உதவி செய்ய முடியாது”+ என்று சொல்லிவிட்டால்,  அதன்பின் அவன் தன்னுடைய அப்பாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டியதே இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். இப்படி, உங்களுடைய பாரம்பரியத்தால் கடவுளுடைய வார்த்தையை மதிப்பற்றதாக்கிவிடுகிறீர்கள்.+  வெளிவேஷக்காரர்களே, உங்களைப் பற்றி ஏசாயா சரியாகத்தான் இப்படித் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்:+  ‘இந்த ஜனங்கள் என்னை உதட்டளவில் புகழ்கிறார்கள். ஆனால், இவர்களுடைய இதயம் என்னைவிட்டுத் தூரமாக இருக்கிறது.  இவர்கள் என்னை வணங்குவது வீண், ஏனென்றால் மனுஷர்களுடைய கோட்பாடுகளைத்தான் இவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்’”+ என்று சொன்னார். 10  பின்பு, கூட்டத்தாரைத் தன் பக்கத்தில் வரச் சொல்லி, “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு, அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.+ 11  ஒரு மனுஷனுடைய வாய்க்குள் போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது; அவனுடைய வாயிலிருந்து வெளியே வருவதுதான் அவனைத் தீட்டுப்படுத்தும்”+ என்று சொன்னார். 12  பின்பு சீஷர்கள் அவரிடம் வந்து, “நீங்கள் சொன்னதைக் கேட்டு பரிசேயர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?”+ என்று கேட்டார்கள். 13  அதற்கு அவர், “என் பரலோகத் தகப்பன் நடாத எந்தச் செடியும் வேரோடு பிடுங்கப்படும். 14  அவர்களை விடுங்கள். அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இரண்டு பேருமே குழியில்தான்* விழுவார்கள்”+ என்று சொன்னார். 15  அப்போது பேதுரு அவரிடம், “அந்த உவமையை எங்களுக்குக் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்”+ என்று கேட்டார். 16  அதற்கு அவர், “நீங்களுமா இன்னும் புரிந்துகொள்ளவில்லை?+ 17  ஒருவனுடைய வாய்க்குள் போகிற எல்லாமே வயிற்றுக்குள் போய் பின்பு கழிப்பிடத்துக்குப் போய்விடுகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? 18  ஆனால், வாயிலிருந்து வருவதெல்லாம் இதயத்திலிருந்து வருகின்றன; அவைதான் ஒரு மனுஷனைத் தீட்டுப்படுத்துகின்றன.+ 19  உதாரணமாக, பொல்லாத யோசனைகள்,+ கொலை, மணத்துணைக்குத் துரோகம், பாலியல் முறைகேடு, திருட்டு, பொய் சாட்சி, நிந்தனை என எல்லா தீமைகளும் இதயத்திலிருந்தே வருகின்றன. 20  இவைதான் ஒரு மனுஷனைத் தீட்டுப்படுத்துகின்றன; கை கழுவாமல் சாப்பிடுவது அவனைத் தீட்டுப்படுத்தாது” என்று சொன்னார். 21  பின்பு, இயேசு அங்கிருந்து புறப்பட்டு தீரு, சீதோன் பகுதிக்குப் போனார்.+ 22  அந்தப் பகுதியைச் சேர்ந்த பெனிக்கேயப் பெண் ஒருத்தி அவரிடம் வந்து, “எஜமானே, தாவீதின் மகனே, எனக்கு இரக்கம் காட்டுங்கள்; என்னுடைய மகளைப் பேய் பிடித்து ஆட்டுகிறது”+ என்று கதறினாள். 23  ஆனால், இயேசு அவளிடம் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அதனால், அவருடைய சீஷர்கள் அவரிடம் வந்து, “இவள் நம் பின்னால் கதறிக்கொண்டே வருகிறாள், இவளை அனுப்பிவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். 24  அதற்கு அவர், “கடவுள் என்னை எல்லா மக்களிடமும் அனுப்பவில்லை, வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களிடம்தான் அனுப்பியிருக்கிறார்”+ என்று சொன்னார். 25  அப்போது, அந்தப் பெண் அவர் முன்னால் மண்டிபோட்டு, “ஐயா, எனக்கு உதவி செய்யுங்கள்!” என்று கேட்டாள். 26  அதற்கு அவர், “பிள்ளைகளின் ரொட்டியை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்று சொன்னார். 27  அவளோ, “உண்மைதான், ஐயா; ஆனால், எஜமானுடைய மேஜையிலிருந்து விழுகிற துணுக்குகளை நாய்க்குட்டிகள் சாப்பிடுமே”+ என்று சொன்னாள். 28  அப்போது இயேசு, “பெண்ணே, உனக்கு எவ்வளவு விசுவாசம்! நீ விரும்புகிறபடியே நடக்கட்டும்” என்று சொன்னார். அந்த நொடியே அவளுடைய மகள் குணமானாள். 29  இயேசு அங்கிருந்து புறப்பட்டு கலிலேயா கடலுக்குப் பக்கத்தில் வந்தார்;+ பின்பு, ஒரு மலைமேல் ஏறி அங்கே உட்கார்ந்தார். 30  அப்போது, மக்கள் கூட்டம் கூட்டமாக அவரிடம் வந்தார்கள்; நடக்க முடியாதவர்களையும் கைகால் ஊனமானவர்களையும் பார்வை இல்லாதவர்களையும் பேச முடியாதவர்களையும் இன்னும் பல நோயாளிகளையும் அவருடைய காலடியில் கொண்டுவந்து விட்டார்கள்; அவர்களை அவர் குணமாக்கினார்.+ 31  பேச முடியாதவர்கள் பேசுவதையும், கைகால் ஊனமானவர்கள் குணமானதையும், நடக்க முடியாதவர்கள் நடப்பதையும், பார்க்க முடியாதவர்கள் பார்ப்பதையும் கூட்டத்தார் கண்டு பிரமித்துப்போய், இஸ்ரவேலின் கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.+ 32  பின்பு, இயேசு தன்னுடைய சீஷர்களைக் கூப்பிட்டு, “இந்த மக்களைப் பார்க்கும்போது என் மனம் உருகுகிறது;+ இவர்கள் மூன்று நாட்களாக என்னோடு இருக்கிறார்கள், சாப்பிடுவதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை. இவர்களைப் பட்டினியாக* அனுப்ப எனக்கு விருப்பமில்லை; அப்படி அனுப்பினால் அவர்கள் ஒருவேளை வழியிலேயே மயங்கி விழுந்துவிடலாம்”+ என்று சொன்னார். 33  அதற்கு சீஷர்கள், “ஒதுக்குப்புறமான இந்த இடத்தில் இத்தனை பேருக்குத் தேவையான ரொட்டிகளை எங்கிருந்து வாங்க முடியும்?”+ என்று கேட்டார்கள். 34  அப்போது இயேசு, “உங்களிடம் எத்தனை ரொட்டிகள் இருக்கின்றன?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஏழு ரொட்டிகளும் சில சிறிய மீன்களும் இருக்கின்றன” என்று சொன்னார்கள். 35  அப்போது, தரையில் உட்காரும்படி கூட்டத்தாரிடம் அவர் சொன்னார்; 36  பின்பு, அந்த ஏழு ரொட்டிகளையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அவற்றைப் பிட்டு, சீஷர்களிடம் கொடுத்தார். சீஷர்கள் கூட்டத்தாருக்குக் கொடுத்தார்கள்.+ 37  அவர்கள் எல்லாரும் திருப்தியாகச் சாப்பிட்டார்கள்; அதன் பின்பு, மீதியான ரொட்டித் துண்டுகளை ஏழு பெரிய கூடைகள் நிறைய சேகரித்தார்கள்.+ 38  இத்தனைக்கும், பெண்களையும் சின்னப் பிள்ளைகளையும் தவிர, 4,000 ஆண்கள் சாப்பிட்டிருந்தார்கள். 39  கடைசியில், அவர் கூட்டத்தாரை அனுப்பிவிட்டு மக்தலா என்ற பகுதிக்குப் படகில் ஏறிப்போனார்.+

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

கை கழுவுவதில்லையே: கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்காக அவற்றைக் கழுவுவதைப் பற்றி இங்கே சொல்லப்படவில்லை; பாரம்பரியத்தின்படி தூய்மைச் சடங்கு செய்வதைப் பற்றியே இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. கை கழுவாமல் சாப்பிடுவது ஒரு விபச்சாரியோடு உறவுகொள்வதற்குச் சமம் என்று பாபிலோனிய தால்முட் (சோட்டா 4) பிற்பாடு குறிப்பிட்டது. கை கழுவுவதை அசட்டை செய்கிறவர்கள் “இந்த உலகத்திலிருந்தே அழிக்கப்படுவார்கள்” என்றும் அது குறிப்பிட்டது.

கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டேன்: பணத்தையோ, சொத்தையோ, வேறு ஏதாவது ஒன்றையோ கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டால் அது ஆலயத்துக்குச் சொந்தமாகிவிடும் என்று வேத அறிஞர்களும் பரிசேயர்களும் கற்பித்தார்கள். இந்தப் பாரம்பரியத்தின்படி, ஒரு மகன் எதையாவது கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டு, அது ஆலயத்துக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லிக்கொள்ள முடிந்தது; ஆனால், அதைத் தன்னிடமே வைத்துக்கொண்டு தனக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. சிலர் தங்களுடைய உடைமைகளை இப்படி அர்ப்பணிப்பதன் மூலம், பெற்றோரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பைத் தட்டிக்கழித்ததாகத் தெரிகிறது.—மத் 15:6.

வெளிவேஷக்காரர்களை: கிரேக்கில், ஹிப்போக்ரிட்டஸ். கிரேக்க (பிற்பாடு, ரோம) மேடை நடிகர்களைக் குறிப்பதற்காக இந்த வார்த்தை ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது; ஒலிபெருக்கிபோல் செயல்படுவதற்காகத் தயாரிக்கப்பட்டிருந்த பெரிய முகமூடிகளை இவர்கள் அணிந்திருந்தார்கள். பிற்பாடு இந்த வார்த்தை, உள்ளுக்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக இருப்பவர்களைக் குறிக்கும் உருவகமாகப் பயன்படுத்தப்பட்டது; அதாவது, தன்னுடைய உண்மையான எண்ணங்களை அல்லது குணங்களை மறைப்பதற்காகப் பாசாங்கு செய்கிறவர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இந்த வசனத்தில், யூத மதத் தலைவர்களை ‘வெளிவேஷக்காரர்கள்’ என்று இயேசு குறிப்பிட்டிருக்கிறார்.—மத் 6:5, 16.

வெளிவேஷக்காரர்களே: மத் 6:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

உவமையை: வே.வா., “நீதிக் கதையை; உருவகக் கதையை.”​—மத் 13:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

உவமைகள்: வே.வா., “நீதிக் கதைகள்; உருவகக் கதைகள்.” இதற்கான கிரேக்க வார்த்தை, பாராபோலே. இதன் நேரடி அர்த்தம், “ஒன்றுக்குப் பக்கத்தில் (ஒன்றோடு சேர்த்து) வைப்பது.” இது ஒரு உருவகக் கதையாக, ஒரு பழமொழியாக, அல்லது ஒரு உதாரணமாக இருக்கலாம். இயேசு, அடிக்கடி ஒரு விஷயத்தை அதேபோன்ற இன்னொரு விஷயத்துக்குப் ‘பக்கத்தில் வைத்து,’ அதாவது இன்னொரு விஷயத்தோடு ஒப்பிட்டு, பேசினார். (மாற் 4:30) இயேசு சுருக்கமான உவமைகளைப் பயன்படுத்தினார். அவை பொதுவாக, ஏதோவொரு ஒழுக்க அல்லது ஆன்மீக நெறியை உணர்த்தும் கற்பனைக் கதைகளாக இருந்தன.

மணத்துணைக்குத் துரோகம்: இதற்கான கிரேக்க வார்த்தை (மோய்க்கீயா) இங்கே பன்மையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், பல தடவை மணத்துணைக்குத் துரோகம் செய்வதைக் குறிக்கலாம்.​—சொல் பட்டியலைப் பாருங்கள்.

பாலியல் முறைகேடு: இதற்கான கிரேக்க வார்த்தை (போர்னியா) இங்கே பன்மையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், பல தடவை பாலியல் முறைகேடு செய்வதைக் குறிக்கலாம்.​—மத் 5:32-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும் சொல் பட்டியலையும் பாருங்கள்.

பாலியல் முறைகேட்டை: கிரேக்கில், போர்னியா. இது, பைபிள் கண்டனம் செய்யும் எல்லா விதமான முறையற்ற உடலுறவுகளையும் குறிக்கிறது. மணத்துணைக்குத் துரோகம், விபச்சாரம், கல்யாணமாகாதவர்கள் வைத்துக்கொள்கிற உடலுறவு, ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணும் வைத்துக்கொள்கிற உடலுறவு, மிருகங்களோடு வைத்துக்கொள்கிற உடலுறவு ஆகிய எல்லாமே இதில் அடங்கும்.—சொல் பட்டியலில் “பாலியல் முறைகேடு” என்ற தலைப்பைப் பாருங்கள்.

தாவீதின் மகன்: தாவீதின் வம்சத்தில் வருகிற ஒருவரால்தான் அரசாங்க ஒப்பந்தம் நிறைவேற வேண்டியிருந்தது; அந்த வாரிசு இயேசுதான் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.

அவர் முன்னால் மண்டிபோட்டு: வே.வா., “அவர் முன்னால் தலைவணங்கி; அவருக்கு மரியாதை செலுத்தி.” யூதர் அல்லாத அந்தப் பெண், இயேசுவை “தாவீதின் மகனே” (மத் 15:22) என்று அழைப்பதன் மூலம், அவர்தான் வாக்குக் கொடுக்கப்பட்டிருந்த மேசியா என்பதை ஒத்துக்கொண்டதாகத் தெரிகிறது. அவரை ஒரு தெய்வமாக நினைத்து அல்ல, கடவுளுடைய பிரதிநிதியாக நினைத்து அவள் மண்டிபோட்டாள்.​—மத் 2:2; 8:2; 14:33; 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

பெனிக்கேய: வே.வா., “கானானிய.” கிரேக்கில், கானானையா. இயேசுவின் காலத்தில் “பெனிக்கேயா” என்று அழைக்கப்பட்ட பகுதி “கானான்” என்றும் அழைக்கப்பட்டது. ஏனென்றால், ஆரம்பத்தில் பெனிக்கேயாவில் குடியிருந்தவர்கள் நோவாவின் பேரனான கானானின் வம்சத்தாராக இருந்தார்கள்.​—மாற் 7:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்; அந்த வசனத்தில் இந்தப் பெண் ‘சீரியாவிலுள்ள பெனிக்கேயில் பிறந்ததாக’ சொல்லப்பட்டிருக்கிறது.

தாவீதின் மகனே: மத் 1:1; 15:25-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

தலைவணங்க: வே.வா., “மண்டிபோட.” இதற்கான கிரேக்க வினைச்சொல், ப்ரோஸ்கினீயோ. ஒரு தெய்வத்தை வணங்குவது சம்பந்தமாகப் பயன்படுத்தப்படும்போது “வணங்க” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசனத்தில், “யூதர்களுடைய ராஜா எங்கே பிறந்திருக்கிறார்?” என்றுதான் அந்த ஜோதிடர்கள் கேட்டார்கள். அதனால், ஒரு தெய்வத்துக்கு முன்னால் அல்ல, ஒரு மனித ராஜாவுக்கு முன்னால் தலைவணங்குவதையே இது அர்த்தப்படுத்துகிறது. மாற் 15:18, 19-லும் இதே அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. சில படைவீரர்கள் இயேசுவை “யூதர்களுடைய ராஜாவே” என்று கேலியாக அழைத்து, அவர் முன்னால் “தலைவணங்கினார்கள்” என்று அங்கே சொல்லப்பட்டிருக்கிறது.—மத் 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

அவர் முன்னால் தலைவணங்கி: வே.வா., “அவர் முன்னால் மண்டிபோட்டு; அவருக்கு மரியாதை செலுத்தி.” எபிரெய வேதாகமத்தில் குறிப்பிடப்படும் நபர்கள்கூட தீர்க்கதரிசிகளையோ ராஜாக்களையோ கடவுளுடைய மற்ற பிரதிநிதிகளையோ சந்தித்தபோது அவர்கள் முன்னால் தலைவணங்கினார்கள். (1சா 25:23, 24; 2சா 14:4-7; 1ரா 1:16; 2ரா 4:36, 37) இங்கே சொல்லப்படும் தொழுநோயாளி, மக்களைக் குணப்படுத்தும் சக்திபெற்றிருந்தவரிடம், அதாவது கடவுளுடைய பிரதிநிதியிடம், பேசிக்கொண்டிருந்ததைப் புரிந்துகொண்டதாகத் தெரிகிறது. எதிர்கால ராஜாவாக கடவுளால் நியமிக்கப்பட்டவருக்கு மரியாதை காட்ட அவர் முன்னால் தலைவணங்குவது பொருத்தமானதாக இருந்தது.—மத் 9:18; இங்கே பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தையைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள, மத் 2:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

அவர் முன்னால் மண்டிபோட்டு: வே.வா., “அவர் முன்னால் தலைவணங்கி; அவருக்கு மரியாதை செலுத்தி.” யூதர் அல்லாத அந்தப் பெண், இயேசுவை “தாவீதின் மகனே” (மத் 15:22) என்று அழைப்பதன் மூலம், அவர்தான் வாக்குக் கொடுக்கப்பட்டிருந்த மேசியா என்பதை ஒத்துக்கொண்டதாகத் தெரிகிறது. அவரை ஒரு தெய்வமாக நினைத்து அல்ல, கடவுளுடைய பிரதிநிதியாக நினைத்து அவள் மண்டிபோட்டாள்.​—மத் 2:2; 8:2; 14:33; 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

அவருடைய காலில் விழுந்து: வே.வா., “அவர் முன்னால் தலைவணங்கி; அவர் முன்னால் மண்டிபோட்டு; அவருக்கு மரியாதை செலுத்தி.” இதற்கான கிரேக்க வினைச்சொல், ப்ரோஸ்கினீயோ. ஒரு தெய்வத்தை வணங்குவது சம்பந்தமாகப் பயன்படுத்தப்படும்போது “வணங்க” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசனத்தில், ஒரு அடிமை தன் எஜமானுக்கு மரியாதையோடு அடிபணிவதைக் காட்டுகிறது.​—மத் 2:2; 8:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

அவர் முன்னால் தலைவணங்கி: வே.வா., “அவர் முன்னால் மண்டிபோட்டு; அவருக்கு மரியாதை செலுத்தி.” இயேசு கடவுளுடைய பிரதிநிதி என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவரை ஒரு தெய்வமாக நினைத்து வணங்காமல், ‘கடவுளுடைய மகனாக’ நினைத்துத் தலைவணங்கினார்கள்.​—மத் 2:2; 8:2; 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

பிள்ளைகளின் . . . நாய்க்குட்டிகளுக்கு: திருச்சட்டத்தின்படி நாய் அசுத்தமான விலங்காக இருந்ததால், நாய் என்ற வார்த்தையைத் தரக்குறைவான கருத்தில்தான் பைபிள் அடிக்கடி பயன்படுத்துகிறது. (லேவி 11:27; மத் 7:6; பிலி 3:2, அடிக்குறிப்பு; வெளி 22:15) ஆனால், இயேசுவின் உரையாடலைப் பற்றிய மாற்குவின் பதிவிலும் சரி (7:​27), மத்தேயுவின் பதிவிலும் சரி, ‘நாய்’ என்பதற்கான குறுமை வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அர்த்தம், “நாய்க்குட்டி” அல்லது “வீட்டு நாய்.” மனதைப் புண்படுத்தாத விதத்தில் இந்த ஒப்புமையை இயேசு பயன்படுத்தினார் என்பதை இது காட்டுகிறது. ஒருவேளை, யூதர்கள் அல்லாத மற்ற தேசத்தார் தங்களுடைய செல்லப்பிராணிகளைப் பாசமாக அழைப்பதற்குப் பயன்படுத்திய வார்த்தையையே இயேசுவும் பயன்படுத்தியிருக்கலாம். இஸ்ரவேலர்களை ‘பிள்ளைகள்’ என்றும், மற்ற தேசத்தாரை ‘நாய்க்குட்டிகள்’ என்றும் சொல்வதன் மூலம், யாருக்கு முன்னுரிமை தரப்படும் என்பதை இயேசு சுட்டிக்காட்ட விரும்பியதாகத் தெரிகிறது. பிள்ளைகளும் நாய்களும் இருந்த வீடுகளில், பிள்ளைகளுக்குத்தான் முதலில் உணவு கொடுக்கப்பட்டது.

கைகால் ஊனமானவர்கள் குணமானதையும்: சில கையெழுத்துப் பிரதிகளில் இந்த வார்த்தைகள் இல்லை. ஆனால், அவற்றுக்கு முன்பு எழுதப்பட்ட பெரும்பாலான கையெழுத்துப் பிரதிகளிலும், அவற்றுக்குப் பின்பு எழுதப்பட்ட பல கையெழுத்துப் பிரதிகளிலும் இவை இருக்கின்றன.

அவருடைய மனம் உருகியது: இதற்கான கிரேக்க வினைச்சொல், ஸ்ப்ளாக்னீசோமே. இது “குடல்கள்” (ஸ்ப்ளாக்னா) என்ற வார்த்தையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. உடலுக்குள்ளிருந்து, அதுவும் அடிஆழத்திலிருந்து, பெருக்கெடுக்கும் உணர்ச்சியைக் குறிக்கிறது. கிரேக்க மொழியில், கரிசனையைக் குறிக்கும் வார்த்தைகளிலேயே இதுதான் மிகவும் வலிமையான வார்த்தை.

என் மனம் உருகுகிறது: வே.வா., “எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.”​—மத் 9:36-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

கூடைகள்: இவை, சின்னப் பிரம்புக் கூடைகளாக இருந்திருக்கலாம். தூக்கிக்கொண்டு போவதற்கு வசதியாக, அவற்றுக்குக் கயிறுகள் இருந்திருக்கலாம். அவற்றின் கொள்ளளவு சுமார் 7.5 லிட்டராக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.​—மத் 16:9, 10-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

பெரிய கூடைகள்: வே.வா., “உணவுப் பொருள்களுக்கான கூடைகள்.” இதற்கான கிரேக்க வார்த்தை ஸ்ஃபிரிஸ். முன்பு ஒரு சமயத்தில் இயேசு சுமார் 5,000 ஆண்களுக்கு உணவளித்தபோது பயன்படுத்தப்பட்ட கூடைகளைவிடப் பெரிய கூடைகளை இவை குறிப்பதாகத் தெரிகிறது. (மத் 14:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) அப் 9:25-லும் இதே கிரேக்க வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வசனத்தில், பவுல் ஒரு “கூடையில்” உட்கார வைக்கப்பட்டு, தமஸ்கு நகர மதிலிலிருந்து ஜன்னல் வழியாகக் கீழே இறக்கிவிடப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.

பெண்களையும் சின்னப் பிள்ளைகளையும் தவிர: இந்த அற்புதத்தைப் பற்றி விவரிக்கும்போது மத்தேயு மட்டும்தான் பெண்களையும் சின்னப் பிள்ளைகளையும் பற்றிச் சொல்லியிருக்கிறார். இயேசு அற்புதமாக உணவளித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,000-க்கும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மக்தலா: சில பைபிள்களில், “மகத நாடு” என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று கலிலேயா கடலின் சுற்றுப்புறத்தில் மகத நாடு என்று எந்த இடமும் இல்லை. அதனால், இது திபேரியாவின் வடமேற்கில் (வடமேற்கின் வடப்பக்கத்தில்) சுமார் 6 கி.மீ. (3.5 மைல்) தூரத்தில் இருக்கும் மக்தலா பகுதியாக (கிர்பத் மஜ்தல் [மிக்தல்] என்று கருதப்படுகிற பகுதியாக) இருக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள். இதன் இணைவசனத்தில் (மாற் 8:10) இந்தப் பகுதி தல்மனூத்தா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.​—இணைப்பு B10-ஐப் பாருங்கள்.

மீடியா

கூடைகள்
கூடைகள்

பைபிளில், வித்தியாசப்பட்ட பல கூடைகளைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, கிட்டத்தட்ட 5,000 ஆண்களுக்கு இயேசு அற்புதமாக உணவு தந்ததைப் பற்றிய பதிவில், மீதியான ரொட்டிகள் சேகரிக்கப்பட்ட 12 கூடைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை சின்ன பிரம்புக் கூடைகளைக் குறிக்கலாம். ஆனால், கிட்டத்தட்ட 4,000 ஆண்களுக்கு இயேசு உணவு தந்ததைப் பற்றிய பதிவில், மீதியான ரொட்டிகள் சேகரிக்கப்பட்ட ஏழு கூடைகளுக்கு வேறொரு கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. (மாற் 8:8, 9) அது பெரிய கூடைகளைக் குறிக்கிறது. அப் 9:25-லும் இதே கிரேக்க வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வசனத்தில், பவுல் ஒரு “கூடையில்” உட்கார வைக்கப்பட்டு, தமஸ்கு நகர மதிலிலிருந்து ஜன்னல் வழியாகக் கீழே இறக்கிவிடப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.

கலிலேயா கரையோரத்தில் இருந்த மக்தலா
கலிலேயா கரையோரத்தில் இருந்த மக்தலா

4,000 ஆண்களுக்கும், பல பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் இயேசு உணவு தந்த பிறகு, அவரும் சீஷர்களும் படகில் ஏறி கலிலேயா கடலின் மேற்குக் கரையில் அமைந்திருந்த மக்தலா பகுதிக்குப் போனார்கள். மாற்குவின் பதிவில் இந்தப் பகுதி தல்மனூத்தா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.—மாற் 8:10; இயேசுவின் ஊழியம் சம்பந்தப்பட்ட விரிவான வரைபடங்களுக்கு இணைப்பு A7-D-ஐப் பாருங்கள்.