Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

சோஷியல் நெட்வொர்க்கில் பிரபலமாக இருப்பது முக்கியமா?

சோஷியல் நெட்வொர்க்கில் பிரபலமாக இருப்பது முக்கியமா?

 இளேன் என்ற ஒரு டீனேஜ் பெண் இப்படி சொல்கிறார்: “என்னுடைய ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் சிலருக்கு சோஷியல் நெட்வொர்க்கில் நூற்றுக்கணக்கான ஃப்ரெண்ட்ஸ் இருந்தார்கள். அதை பார்த்தபோது, ‘ஓ! இவர் பெரிய ஆள் போல!’ என்று தோன்றியது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எனக்கு கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது.”

 நீங்களும் இளேன் மாதிரி யோசித்திருக்கிறீர்களா? சோஷியல் நெட்வொர்க்கில் எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் என்று உங்கள் மூளையை போட்டு கசக்கிக்கொண்டே இருக்கிறீர்களா? இதில் என்னென்ன ஆபத்துகள் இருக்கின்றன என்றும் இந்த ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் இந்த கட்டுரை சொல்லும்.

 இதில் என்னென்ன ஆபத்துகள் இருக்கின்றன?

 “நிறைய சொத்துகளைச் சம்பாதிப்பதைவிட நல்ல பெயரைச் சம்பாதிப்பது சிறந்தது” என்று நீதிமொழிகள் 22:1 சொல்கிறது. அதனால், ஒரு நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதோ நான்கு பேருக்கு நம்மை பிடிக்க வேண்டும் என்று நினைப்பதோ தவறு இல்லைதான்.

 ஆனால், சிலசமயங்களில் இந்த ஆசை ரொம்ப அதிகமாகி, எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் என்று நீங்கள் ஏங்க ஆரம்பித்துவிடலாம். இதில் ஏதாவது ஆபத்து இருக்கிறதா? ஆமாம் இருக்கிறது என்று 16 வயது ஆன்யா சொல்கிறார்:

 “பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்கூலில் பிள்ளைகள் லூசுத்தனமாக சில விஷயங்களை செய்வதைக்கூட நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் இரண்டாவது மாடியிலிருந்துகூட கீழே குதித்திருக்கிறார்கள்.”

 லைக்ஸ் வேண்டும் என்பதற்காக சிலர் முட்டாள்தனமான சில விஷயங்களை செய்து, அதை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போடுகிறார்கள். உதாரணத்துக்கு, சிலர் முரட்டுத்தனமாக வண்டியை ஓட்டி வீடியோ எடுக்கிறார்கள், பஸ்மேல் ஏறி நின்று அல்லது ட்ரெயின் முன்பு நின்று வீரசாகசம் செய்கிறார்கள். ஆனால், இப்படியெல்லாம் விளையாட்டுக்காகக்கூட செய்யக்கூடாது.

 பைபிள் இப்படி சொல்கிறது: ‘வீண் பெருமைக்கு இடம் தர வேண்டாம்.’—பிலிப்பியர் 2:3, பொ.மொ.

 யோசித்துப்பாருங்கள்:

  •   சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருப்பதை நீங்கள் எந்தளவுக்கு முக்கியமாக நினைக்கிறீர்கள்?

  •   மற்றவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், அவர்களுடைய லைக்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக உங்களுடைய ஆரோக்கியத்தை அல்லது உயிரையே நீங்கள் பணயம் வைப்பீர்களா?

 “பிரபலம் என்ற போலித் தோற்றம்”

 பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லாருமே எல்லா சமயத்திலும் ரிஸ்க்கான விஷயங்களை செய்ய மாட்டார்கள். ‘பாப்புலராக’ இருப்பதற்காக வேறு சில விஷயங்களைக்கூட ‘ட்ரை’ பண்ணுவார்கள் என்று 22 வயது எரிக்கா சொல்கிறார்:

 “சில பேர் ஃபோட்டோக்குமேல் ஃபோட்டோவாக போட்டு தள்ளுவார்கள். ஏதோ அவர்களை சுற்றி எப்போதுமே நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்கிற மாதிரி காட்டிக்கொள்வார்கள். இப்படி செய்வது, அவர்கள் ரொம்ப பிரபலமானவர்கள் என்ற போலி தோற்றத்தை கொடுக்கிறது.”

 தாங்கள் ரொம்ப ‘பாப்புலர்’ என்று நம்ப வைப்பதற்காக சிலர் பொய்கூட சொல்வார்கள் என்று 15 வயது கேரா சொல்கிறார்:

 “வீட்டில் இருந்துகொண்டே ஏதோ பார்ட்டிக்கு போன மாதிரி ஃபோட்டோ எடுத்து போடுகிறவர்களை நான் பார்த்திருக்கிறேன்.”

 22 வயது மேத்யூ இதேபோன்ற விஷயத்தை செய்திருப்பதாக ஒத்துக்கொள்கிறார்:

 “நான் ஒரு ஃபோட்டோவை போட்டு, அதை மவுண்ட் எவரெஸ்ட்டில் எடுத்த மாதிரி கமெண்ட் போட்டேன். ஆனால், உண்மை என்னவென்றால் நான் ஆசியா பக்கமே போனதில்லை!”

 பைபிள் இப்படி சொல்கிறது: “நாங்கள் எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க விரும்புகிறோம்.”—எபிரெயர் 13:18.

 யோசித்துப்பாருங்கள்:

  •   சோஷியல் மீடியாவில் உங்களை பிரபலமானவராக காட்டிக்கொள்வதற்காக பொய் சொல்ல வேண்டும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா?

  •    நீங்கள் உண்மையிலேயே எப்படிப்பட்டவர், நீங்கள் எதை பெரிதாக நினைக்கிறீர்கள் என்பதை நீங்கள் போடுகிற ஃபோட்டோக்களும் கமெண்ட்டுகளும் காட்டுகின்றனவா?

 ஃப்ரெண்ட்ஸ் இருப்பதும் லைக்ஸ் வாங்குவதும் எந்தளவுக்கு முக்கியம்?

 நிறைய ஃபாலோவர்ஸ் இருந்தால்... நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருந்தால்... நிறைய லைக்ஸ் வந்தால்... சோஷியல் மீடியாவில் ரொம்ப பிரபலமாக இருக்கிறோம் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். நாம் மேலே பார்த்த மேத்யூ அதே மாதிரிதான் உணர்ந்ததாக சொல்கிறார்:

 “நான் சிலரிடம் போய் ‘உங்களுக்கு எத்தனை ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள்?’ அல்லது ‘உங்களுக்கு அதிகபட்சமாக எத்தனை லைக்ஸ் வந்திருக்கின்றன?’ என்று கேட்பேன். நிறைய பேர் என்னை ஃபாலோ பண்ண வேண்டும் என்பதற்காக முன்பின் தெரியாதவர்களை ஃபாலோ பண்ண ஆரம்பித்தேன். பதிலுக்கு அவர்களும் என்னை ஃபாலோ பண்ணுவார்கள் என்று நினைத்தேன். இப்படி செய்ததால், பிரபலமாக வேண்டும் என்ற ஒரு நெருப்பு எனக்குள் பற்றியெரிந்தது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி சோஷியல் மீடியாவும் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையை அதிகமாக்கியது.”

சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது, தின்பண்டத்தை சாப்பிடுகிற மாதிரி—அந்த நேரத்துக்கு நன்றாகத்தான் இருக்கும், ஆனால் திருப்தியே ஆகாது.

 இன்றைக்கு சிலர் தங்களுக்கு எவ்வளவு ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள், எவ்வளவு லைக்ஸ் வருகின்றன என்பதை பொறுத்துதான் தங்களை தாங்களே எடை போட்டுக்கொள்கிறார்கள் என்று 25 வயது மரியா சொல்கிறார்:

 “ஒரு பெண் ஒரு செல்ஃபியை எடுத்து போட்டு, அதற்கு நிறைய லைக்ஸ் வரவில்லை என்றால் அவள் அசிங்கமாக இருக்கிறாள் என்று முடிவு செய்துகொள்வாள். ஆனால், இது அவளாகவே நினைத்துக்கொள்வதுதான்! உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை! இன்றைக்கு நிறைய பேர் அப்படித்தான் நினைக்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வதால் அவர்கள் தங்களை தாங்களே கேவலமாக நினைத்துக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.”

 பைபிள் இப்படி சொல்கிறது: “வறட்டு கௌரவம் பார்க்காமலும், ஒருவருக்கொருவர் போட்டி போடாமலும், ஒருவர்மேல் ஒருவர் வயிற்றெரிச்சல் படாமலும் இருப்போமாக.”—கலாத்தியர் 5:26.

 யோசித்துப்பாருங்கள்:

  •   சோஷியல் மீடியாவை பயன்படுத்தும்போது நீங்கள் மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டு பார்க்கிறீர்களா?

  •    உங்களுக்கு நிறைய ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் முக்கியமாக நினைக்கிறீர்களா அல்லது உங்கள்மேல் உண்மையிலேயே அக்கறை காட்டுகிற நல்ல நண்பர்களை தேடி கண்டுபிடிப்பதை முக்கியமாக நினைக்கிறீர்களா?