Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

ஓரினச்சேர்க்கை தவறா?

ஓரினச்சேர்க்கை தவறா?

 “வளர வளர எனக்கு பசங்கமேல ஒரு ஈர்ப்பு வந்துச்சு. அந்த ஆசைய கட்டுப்படுத்துறதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ‘இப்போ இப்படித்தான் இருக்கும், வளர்ந்த பிறகு சரி ஆகிடும்’னு நினைச்சேன். ஆனா இப்பவும் எனக்கு அந்த பிரச்சினை இருக்கு.”—டேவிட், 23.

 டேவிட் ஒரு கிறிஸ்தவர். கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ அவர் ஆசைப்படுகிறார். ஆண்கள்மேல் ஈர்ப்பு இருக்கும் டேவிடால், கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ முடியுமா? ஓரினச்சேர்க்கையைப் பற்றிக் கடவுள் என்ன நினைக்கிறார்?

 பைபிள் என்ன சொல்கிறது?

 ஓரினச்சேர்க்கையைப் பற்றி ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. ஒவ்வொரு காலப்பகுதிக்கு ஏற்றபடி அது மாறிக்கொண்டே வருகிறது. உலகத்தில் பிரபலமாக இருக்கும் கருத்துகளின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் யோசிப்பது கிடையாது. அவர்கள், உலகத்தில் இருக்கும் மக்களின் ‘போதனைகளாகிய பலவிதமான காற்றால் இங்குமங்கும் அடித்துச் செல்லப்படுவதும்’ கிடையாது. (எபேசியர் 4:14) ஓரினச்சேர்க்கையைப் பற்றி (அல்லது, வேறெந்த விஷயத்தைப் பற்றியும்) பைபிள் என்ன சொல்கிறதோ, அதன் அடிப்படையில்தான் யோசிக்கிறார்கள்.

 ஓரினச்சேர்க்கையைப் பற்றி பைபிள் ரொம்ப தெளிவாகச் சொல்கிறது. அது என்ன சொல்கிறது என்று கவனியுங்கள்:

  •  “ஒருவன் பெண்ணோடு உடலுறவுகொள்வது போல ஆணோடு உடலுறவுகொள்ளக் கூடாது.”—லேவியராகமம் 18:22.

  •  “தங்களுடைய உள்ளத்திலுள்ள ஆசைகளின்படி . . . கட்டுக்கடங்காத காமப்பசிக்கு இணங்கிவிடும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார். அவர்கள் மத்தியிலுள்ள பெண்கள் இயல்பான முறையில் உறவுகொள்வதை விட்டுவிட்டு இயல்புக்கு மாறான முறையில் உறவுகொண்டார்கள்.”—ரோமர் 1:24, 26.

  •  “ஏமாந்துவிடாதீர்கள். பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்கள், சிலையை வணங்குகிறவர்கள், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்கள், ஆண் விபச்சாரக்காரர்கள், ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்கள், திருடர்கள், பேராசைக்காரர்கள், குடிகாரர்கள், சபித்துப் பேசுகிறவர்கள், கொள்ளையடிக்கிறவர்கள் ஆகியோர் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.”—1 கொரிந்தியர் 6:9, 10.

 உண்மையைச் சொன்னால், கடவுள் தந்திருக்கும் நெறிமுறைகள் எல்லாருக்குமே பொருந்தும். அவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களாக இருந்தாலும் சரி, எதிர்பாலாரோடு உறவுகொள்ள வேண்டுமென்ற இயல்பான ஆசை உள்ளவர்களாக இருந்தாலும் சரி. பொதுவாக, தப்பான விஷயங்களைச் செய்ய வேண்டுமென்ற ஆசை யாருக்கு வேண்டுமானாலும் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடக்க வேண்டுமென்றால், அந்த ஆசைகளை அவர்கள் கட்டுப்படுத்த வேண்டும்.​—கொலோசெயர் 3:5.

 அப்படியென்றால், . . . ?

 அப்படியென்றால், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களை வெறுக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறதா?

 இல்லை. சொல்லப்போனால், பைபிள் யாரையுமே வெறுக்க கூடாது என்றுதான் சொல்கிறது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களாக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி. எப்படிப்பட்ட வாழ்க்கையை மக்கள் வாழ்ந்தாலும், “எல்லாரோடும் சமாதானமாக இருக்கப் பாடுபடுங்கள்” என்றுதான் பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 12:14) அதனால், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களை அவமானப்படுத்துவது, கேலி செய்வது, அவர்கள்மேல் வெறுப்பைக் காட்டும் விதத்தில் எதையாவது செய்வது என எல்லாமே தப்புத்தான்.

 அப்படியென்றால், ஆணும்-ஆணும் பெண்ணும்-பெண்ணும் கல்யாணம் செய்துகொள்வது சம்பந்தமான சட்டங்களைக் கிறிஸ்தவர்கள் எதிர்க்க வேண்டுமா?

 கல்யாண வாழ்க்கையில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்க வேண்டும் என்பதுதான் கடவுள் வைத்த நியதி. இதைத்தான் பைபிள் காட்டுகிறது. (மத்தேயு 19:4-6) ஆணும்-ஆணும் பெண்ணும்-பெண்ணும் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்ற சட்டங்களை, அரசாங்கங்கள் மனிதர்களுடைய கருத்துகளின் அடிப்படையில்தான் போடுகிறார்கள். பைபிளின் அடிப்படையில் அல்ல. அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கிறிஸ்தவர்கள் தலையிடாமல் நடுநிலையோடு இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 18:36) அதனால், ஓரினச்சேர்க்கை சம்பந்தப்பட்ட சட்டங்களைக் கிறிஸ்தவர்கள் ஆதரிப்பதும் இல்லை, எதிர்ப்பதும் இல்லை.

 ஒருவேளை, . . . ?

 ஒருவேளை, இப்போது ஒருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்றால், அவரால் தன்னை மாற்றிக்கொள்ள முடியுமா?

 கண்டிப்பாக முடியும்! முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சில கிறிஸ்தவர்கள்கூட மாறியிருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போக மாட்டார்கள் என்று சொன்ன பிறகு, “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்தீர்கள்” என்று பைபிள் சொல்கிறது.​—1 கொரிந்தியர் 6:​11.

 ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட அவர்கள் தங்களை மாற்றிக்கொண்ட பிறகு, பழைய ஆசை அவர்களுக்குள் எட்டிப்பார்க்கவே இல்லை என்று சொல்ல முடியுமா? இல்லை! “கடவுள் தருகிற புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்; அதாவது, திருத்தமான அறிவின் மூலம் உங்கள் சுபாவத்தைக் கடவுளுடைய சாயலுக்கு ஏற்றபடி புதிதாக்கிக்கொண்டே இருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:10) அப்படியென்றால், சுபாவத்தை மாற்றிக்கொள்வது என்பது தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டிய ஒரு விஷயம்.

 ஒருவேளை, கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள நினைக்கும் ஒருவருக்கு, இப்போதும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை இருந்தால் என்ன செய்வது?

 கெட்ட ஆசை ஒருவருக்குள் வந்தால், அதைப் பற்றியே யோசிப்பதா வேண்டாமா, அந்த ஆசையின்படி செய்வதா வேண்டாமா என்பதெல்லாம் அந்த நபருடைய கையில்தான் இருக்கிறது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வேண்டுமென்ற ஆசை இருக்கும் ஒருவருக்குக்கூட இது பொருந்தும். அந்த ஆசையை அவர் எப்படி அடக்கலாம்? பைபிள் சொல்கிறது: “கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடந்துகொண்டிருங்கள், அப்போது எந்தவொரு பாவ ஆசையையும் நிறைவேற்ற மாட்டீர்கள்.”—கலாத்தியர் 5:16.

 இந்த வசனத்தில், ஒருவருக்குப் பாவ ஆசைகளே வராது என்று சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, தவறாமல் பைபிளைப் படித்து அடிக்கடி ஜெபம் செய்தால், அந்த ஆசைகளை அடக்குவதற்குத் தேவையான மனவலிமை அவருக்குக் கிடைக்கும் என்று சொல்கிறது.

 இது ரொம்பவே உண்மை என்று இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் பார்த்த டேவிட் சொல்கிறார். அவருடைய பிரச்சினையைப் பற்றி முழுமையாக தன் அப்பா அம்மாவிடம் சொன்னார். “அத சொன்னதுக்கு அப்புறம் ஒரு பெரிய பாரத்த இறக்கி வெச்ச மாதிரி இருந்துச்சு. இத கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருந்தா, என் டீனேஜ்ல நான் சந்தோஷமா இருந்திருப்பேன்” என்று டேவிட் சொல்கிறார்.

 முடிவாக என்ன சொல்லலாம்? யெகோவா தரும் நெறிமுறைகள்படி நடந்ததால்தான் நம்மால் எப்போதுமே சந்தோஷமாக இருக்க முடியும். அவர் தரும் நெறிமுறைகள் “நீதியானவை, அவை இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன” என்றும், ‘அவற்றின்படி நடக்கும்போது மிகுந்த பலன் கிடைக்கும்’ என்றும் நாம் உறுதியாக நம்புகிறோம்.—சங்கீதம் 19:8, 11.