நீதிமொழிகள் 22:1-29

22  நிறைய சொத்துகளைச் சம்பாதிப்பதைவிட நல்ல பெயரைச் சம்பாதிப்பது சிறந்தது.+தங்கத்தையும் வெள்ளியையும் சம்பாதிப்பதைவிட மரியாதையைச் சம்பாதிப்பது சிறந்தது.   பணக்காரனுக்கும் ஏழைக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது. அவர்கள் இரண்டு பேரையும் யெகோவாதான் படைத்தார்.+   சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான்.ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்.*   மனத்தாழ்மை காட்டுவதாலும் யெகோவாவுக்குப் பயப்படுவதாலும் கிடைக்கிற பலன்,செல்வமும் மகிமையும் வாழ்வுமே.+   குறுக்கு வழியில் போகிறவனின் பாதையிலே முட்களும் கண்ணிகளும் இருக்கின்றன.ஆனால், தன் உயிரை மதிக்கிறவன் அவற்றிலிருந்து தூரமாக விலகியிருப்பான்.+   நடக்க வேண்டிய வழியில்* நடக்க பிள்ளையைப் பழக்கு.+வயதானாலும் அவன் அதைவிட்டு விலக மாட்டான்.+   பணக்காரன் ஏழையை ஆளுகிறான்.கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.+   அநீதியை விதைக்கிறவன் அழிவை அறுப்பான்.+அவனுடைய அராஜகம்* முடிவுக்கு வரும்.+   தாராள குணமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்.ஏனென்றால், அவன் ஏழைகளோடு தன் உணவைப் பகிர்ந்துகொள்கிறான்.+ 10  ஏளனம் செய்கிறவனை விரட்டிவிடு.அப்போது சண்டை நின்றுவிடும்,சச்சரவுகளும்* பழிப்பேச்சுகளும் முடிவுக்கு வரும். 11  ஒருவன் சுத்தமான இதயத்தை விரும்பும்போதும் கனிவாகப் பேசும்போதும்,ராஜாவுக்கு நண்பனாக இருப்பான்.+ 12  அறிவோடு நடக்கிறவனை யெகோவா கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக்கொள்கிறார்.*ஆனால், துரோகியின் பேச்சை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறார்.+ 13  “வெளியே சிங்கம் நிற்கிறது, நடுத்தெருவில் என்னைக் கடித்துக் குதறிப்போடும்!” என்று சோம்பேறி சொல்கிறான்.+ 14  நடத்தைகெட்ட பெண்ணின் வாய் ஒரு படுகுழி.+ யெகோவாவின் கண்டனத் தீர்ப்புக்கு ஆளானவன் அதில் விழுவான். 15  பிள்ளையின் நெஞ்சில் முட்டாள்தனம் வேரூன்றியிருக்கும்.+ஆனால், தண்டனையின்* பிரம்பு அதை அவனைவிட்டு நீக்கிவிடும்.+ 16  ஏழையை ஏமாற்றி சொத்து சேர்க்கிறவனும்,+பணக்காரனுக்கு அன்பளிப்புகள் கொடுக்கிறவனும்வறுமையின் பிடியில் சிக்குவார்கள். 17  ஞானமுள்ளவர்கள் சொல்கிற வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேட்டு,+நான் புகட்டும் அறிவை உன் இதயத்தில் வை.+ 18  அவை எப்போதும் உன் உதடுகளில் இருக்கும்படி,+அவற்றை உன் இதயத்தில் ஆழமாகப் பதிய வைப்பது சந்தோஷத்தைத் தரும்.+ 19  நீ யெகோவாமேல் நம்பிக்கை வைப்பதற்காகஇன்று நான் உனக்கு அறிவு புகட்டுகிறேன். 20  ஆலோசனைகளையும் அறிவுரைகளையும்நான் உனக்கு ஏற்கெனவே எழுதியிருக்கிறேனே! 21  உன்னை அனுப்பியவருக்குச் சரியான தகவலை நீ கொண்டுபோய்க் கொடுப்பதற்காகஉண்மையான, நம்பகமான வார்த்தைகளை உனக்குப் போதித்திருக்கிறேனே! 22  ஒருவன் ஏழை என்பதால் அவனைக் கொள்ளையடிக்காதே.+நகரவாசலில் எளியவனுக்கு அநியாயம் செய்யாதே.+ 23  அவர்களுக்காக யெகோவாவே வாதாடுவார்.+அவர்களை ஏமாற்றுகிறவர்களின் உயிரைப் பறித்துவிடுவார். 24  கோபக்காரனோடு சகவாசம் வைக்காதே.எரிந்து விழுகிற சுபாவம் உள்ளவனோடு சேராதே. 25  அப்போதுதான், அவனைப் பார்த்து நீயும் கெட்டுப்போக மாட்டாய்,ஆபத்தில் சிக்கிக்கொள்ள மாட்டாய்.+ 26  வேறொருவன் வாங்குகிற கடனுக்கு நீ பொறுப்பேற்காதே.அதற்காகக் கை குலுக்கி ஒப்பந்தம் செய்யாதே.+ 27  கடனை அடைக்க உனக்கு வழியில்லை என்றால்,நீ படுத்திருக்கிற படுக்கைகூட பறிபோய்விடுமே! 28  உன் முன்னோர்கள் பூர்வ காலத்தில் வைத்தஎல்லைக் குறியைத் தள்ளி வைக்காதே.+ 29  திறமையாக வேலை செய்கிறவனைப் பார்த்திருக்கிறாயா? அவன் சாதாரண ஆட்கள் முன்னால் அல்ல,ராஜாக்கள் முன்னால் நிற்பான்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அதன் விளைவுகளை அனுபவிக்கிறான்.”
வே.வா., “சரியான வழியில்.”
நே.மொ., “கோபாவேசத்தின் கோல்.”
வே.வா., “வழக்குகளும்.”
நே.மொ., “யெகோவாவின் கண்கள் அறிவைக் காக்கும்.”
வே.வா., “கண்டித்துத் திருத்தும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா