Skip to content

ஞானஸ்நானம் என்றால் என்ன?

ஞானஸ்நானம் என்றால் என்ன?

பைபிள் தரும் பதில்

 ஞானஸ்நானம் என்பது ஒரு நபர் தண்ணீருக்குள் மூழ்கி எழும்புவதைக் குறிக்கிறது. a பைபிளில் நிறைய ஞானஸ்நானங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. (அப்போஸ்தலர் 2:41) அதில் ஒன்றுதான் இயேசுவுடைய ஞானஸ்நானம், அவர் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் எடுத்தார். (மத்தேயு 3:13, 16) சில வருஷங்களுக்குப் பின்பு, எத்தியோப்பியர் ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்தபோது ‘தண்ணீர் இருக்கிற ஓர் இடத்தில்’ ஞானஸ்நானம் எடுத்தார்.—அப்போஸ்தலர் 8:36-40.

 ஒருவர் தன்னுடைய சீஷராக ஆக வேண்டும் என்றால், அவர் கண்டிப்பாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று இயேசு சொல்லிக்கொடுத்தார். (மத்தேயு 28:19, 20) அப்போஸ்தலன் பேதுருவும் ஞானஸ்நானம் எடுப்பது முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.—1 பேதுரு 3:21.

இந்தக் கட்டுரையில்

 ஞானஸ்நானம் என்றால் என்ன?

 ஒருவர் ஞானஸ்நானம் எடுக்கும்போது, அவருடைய கடந்த கால பாவங்களிலிருந்து மனம் திருந்தி விட்டார் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள். அதுமட்டுமல்ல, அவருடைய வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரி, கடவுளுடைய விருப்பத்தை செய்வதற்குத்தான் முதலிடம் கொடுப்பார் என்பதையும் தெரிந்துகொள்வார்கள். அப்படியென்றால் அவர் கடவுளுக்கும் இயேசுவுக்கும் கீழ்ப்படிந்து நடப்பார். ஒருவர் ஞானஸ்நானம் எடுக்கும்போது அவர் முடிவில்லாத வாழ்க்கைக்கு போகிற வழியில் நடக்க ஆரம்பிக்கிறார்.

 தண்ணீரில் மூழ்கி எழுவது ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் செய்கிற மாற்றங்களுக்கு அடையாளமாக இருக்கிறது. ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஞானஸ்நானத்தை அடக்கம் செய்வதோடு பைபிள் ஒப்பிடுகிறது. (ரோமர் 6:4; கொலோசெயர் 2:12) ஒருவர் தண்ணீருக்குள் மூழ்கும்போது அவர் தன்னுடைய பழைய வாழ்க்கையைப் பொருத்ததில் இறந்துவிடுகிறார். தண்ணீரில் இருந்து வெளியே வரும்போது, கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவராக புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்.

 குழந்தை ஞானஸ்நானத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

 குழந்தை ஞானஸ்நானத்தைப் பற்றி பைபிள் கற்பிப்பது கிடையாது. b ஒருவர் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றால், அவர் சில விஷயங்களை கட்டாயம் செய்தாக வேண்டும். உதாரணத்துக்கு, அவர் பைபிளின் அடிப்படை போதனைகளையாவது புரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கேற்ப வாழ வேண்டும். அவருடைய பாவங்களிலிருந்து மனம் திருந்த வேண்டும், ஜெபத்தில் கடவுளிடம் அவருடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். (அப்போஸ்தலர் 2:38, 41; 8:12) இவற்றையெல்லாம் குழந்தைகளால் செய்ய முடியாது.

பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் எடுப்பதன் அர்த்தம் என்ன?

  இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று சொன்னார். (மத்தேயு 28:19, 20) இந்த வசனத்தில் ‘பெயரில்’ என்று சொல்லப்பட்டிருப்பது எதைக் குறிக்கிறது? ஞானஸ்நானம் எடுக்கிற நபர் பரலோக தகப்பனுடைய மற்றும் மகனுடைய அதிகாரத்தையும் ஸ்தானத்தையும், கடவுளுடைய சக்தியின் பங்கையும் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு உதாரணத்தை பார்க்கலாம்: பிறவியிலேயே நடக்க முடியாத ஒருவரிடம் அப்போஸ்தலன் பேதுரு, “நாசரேத்தூர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் சொல்கிறேன், எழுந்து நட!” என்று சொன்னார். (அப்போஸ்தலர் 3:6) இதிலிருந்து “பெயரில்” என்பதன் அர்த்தம் தெளிவாக தெரிகிறது. அது இயேசு கிறிஸ்துவுக்கு இருந்த அதிகாரத்தைக் குறிக்கிறது. அதை பேதுரு புரிந்திருந்தார், ஏற்றுக்கொண்டார். அதனால்தான், இயேசு கிறிஸ்துவின் பெயரில் அந்த நபரை சுகப்படுத்தினார்.

  •   இந்த வசனத்தில் ‘தகப்பன்’ என்பது யெகோவா c தேவனைக் குறிக்கிறது. அவர்தான் நம்மை படைத்தவர், நமக்கு உயிர் கொடுத்தவர், சர்வ வல்லமையுள்ள கடவுள். அதனால், முழு அதிகாரமும் அவருக்குத்தான் இருக்கிறது.—ஆதியாகமம் 17:1; வெளிப்படுத்துதல் 4:11.

  •   ‘மகன்’ என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. அவர் நமக்காக தன்னுடைய உயிரையே கொடுத்தார். (ரோமர் 6:23) மனிதர்களுக்கான கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவின் பங்கை ஏற்றுக்கொண்டு அதற்கு நன்றியோடு இருந்தால் மட்டும்தான் நமக்கு மீட்பு கிடைக்கும்.—யோவான் 14:6; 20:31; அப்போஸ்தலர் 4:8-12.

  •   ‘சக்தி’ என்பது கடவுளிடமிருந்து வருகிற ஆற்றலை, அதாவது செயல்படுகிற ஆற்றலை, குறிக்கிறது. d படைப்பதற்கு... உயிர் கொடுப்பதற்கு... தன்னுடைய செய்தியை தீர்க்கதரிசிகளுக்கும் மற்றவர்களுக்கும் சொல்வதற்கு... தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற அவர்களுக்கு வல்லமை தருவதற்கு... கடவுள் அந்த சக்தியை பயன்படுத்தினார். (ஆதியாகமம் 1:2; யோபு 33:4; ரோமர் 15:18, 19) தன்னுடைய யோசனைகளைப் பதிவு செய்வதற்கும் பைபிள் எழுத்தாளர்களுக்கு கடவுள் இந்த சக்தியைத்தான் கொடுத்தார்.—2 பேதுரு 1:21.

மறுபடியும் ஞானஸ்நானம் எடுப்பது ஒரு பாவமா?

  மக்கள் தங்களுடைய மதத்தை மாற்றிக்கொள்வது ரொம்பவே சகஜம்தான். அதனால் முன்பு போய்க்கொண்டிருந்த சர்ச்சில் அவர்கள் ஒருவேளை ஞானஸ்நானம் எடுத்திருக்கலாம். இப்போது மறுபடியும் ஞானஸ்நானம் எடுத்தால் அது பாவமா? சிலர் அதற்கு ஆமாம் என்று சொல்கிறார்கள். ஒருவேளை அவர்கள் அதற்கு எபேசியர் 4:5-ஐ காரணம் காட்டலாம். அது இப்படிச் சொல்கிறது: “ஒரே எஜமானும் ஒரே விசுவாசமும் ஒரே ஞானஸ்நானமும் உண்டு.”ஆனால் இந்த வசனம் ஒருவர் மறுபடியும் ஞானஸ்நானம் எடுக்க கூடாது என்று சொல்கிறதா? இல்லை. அதை எப்படிச் சொல்லலாம்?

 வசனத்தின் பின்னணி. எபேசியர் 4:5-க்கு முன்பும் பின்பும் இருக்கிற வசனங்களைப் படிக்கும்போது, உண்மைக் கிறிஸ்தவர்கள் அவர்களுடைய நம்பிக்கையிலும் விசுவாசத்திலும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதை அப்போஸ்தலன் பவுல் வலியுறுத்துகிறார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். (எபேசியர் 4:1-3, 16) அப்படிப்பட்ட ஒற்றுமை இருக்க வேண்டும் என்றால், அவர்கள் எல்லாரும் ஒரே எஜமானராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும். எல்லாருக்கும் ஒரே விசுவாசம் இருக்க வேண்டும், அதாவது பைபிள் போதனைகளை ஒரே மாதிரி புரிந்திருக்க வேண்டும். ஞானஸ்நானம் எடுப்பதற்காக பைபிள் எதிர்பார்க்கிற அதே தகுதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

 முன்பு ஞானஸ்நானம் எடுத்த சிலரை மறுபடியும் ஞானஸ்நானம் எடுப்பதற்கு அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்தினார். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்தவ போதனைகளை முழுமையாக புரிந்துகொள்ளாமலேயே ஞானஸ்நானம் எடுத்திருந்தார்கள்.—அப்போஸ்தலர் 19:1-5.

 கடவுள் ஏற்றுக்கொள்கிற ஞானஸ்நானம். ஒருவருடைய ஞானஸ்நானத்தை கடவுள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அவர் பைபிள் சத்தியங்களைப் பற்றி திருத்தமான அறிவைப் பெற வேண்டும். (1 தீமோத்தேயு 2:3, 4) ஒருவர் பைபிளில் இல்லாத மத போதனைகளின் அடிப்படையில் ஞானஸ்நானம் எடுத்திருந்தால் அந்த ஞானஸ்நானத்தை கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார். (யோவான் 4:23, 24) ஒருவேளை, தான் எடுத்த ஞானஸ்நானம் சரிதான் என்று அந்த நபர் நினைத்தாலும் அவர் ‘திருத்தமான அறிவின்’ அடிப்படையில் அந்த ஞானஸ்நானத்தை எடுக்கவில்லை. (ரோமர் 10:2) ஒருவருடைய ஞானஸ்நானத்தை கடவுள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அவர் பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும், கற்றுக்கொண்டபடி வாழ்க்கையில் நடக்க வேண்டும், கடவுளுக்கு தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும், அதன் பின்பு மறுபடியும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அவர் மறுபடியும் ஞானஸ்நானம் எடுப்பது ஒரு பாவம் கிடையாது. சொல்லப்போனால் அதுதான் சரியான விஷயமும் கூட.

பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற மற்ற ஞானஸ்நானங்கள்

  இயேசுவின் சீஷர்கள் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுத்ததன் அர்த்தத்தை நாம் இதுவரை பார்த்தோம். ஆனால், பைபிள் வேறு சில ஞானஸ்நானங்களைப் பற்றியும் சொல்கிறது. அதற்கு வேறு சில அர்த்தங்களும் இருக்கின்றன. அதைப் பற்றிதான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

 யோவான் ஸ்நானகர் கொடுத்த ஞானஸ்நானம். e யூதர்களும் யூத மதத்துக்கு மாறியவர்களும் யோவான் ஸ்நானகரிடம் ஞானஸ்நானம் எடுத்தார்கள். எதற்காக? இஸ்ரவேல் மக்களுக்கு மோசே மூலமாக யெகோவா கொடுத்த திருச்சட்டத்துக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டதை நினைத்து மனம் வருந்தியதைக் காட்டுவதற்காக அவர்கள் ஞானஸ்நானம் எடுத்தார்கள். அதுமட்டுமல்ல, நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசுதான் மேசியா என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அவரை ஏற்றுக்கொள்வதற்கும் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் மக்களை தயார்படுத்தியது.—லூக்கா 1:13-17; 3:2, 3; அப்போஸ்தலர் 19:4.

 இயேசு எடுத்த ஞானஸ்நானம். யோவான் ஸ்நானகர் இயேசுவுக்கு கொடுத்த ஞானஸ்நானம் மற்ற ஞானஸ்நானங்களை விட ரொம்பவே வித்தியாசமானது. ஏனென்றால் இயேசு ஒரு பரிபூரண மனிதனாக இருந்தார். அவர் பாவமே செய்ததில்லை. (1 பேதுரு 2:21, 22) அதனால் அவர் மனம் திருந்த வேண்டிய அவசியமும் இல்லை. “நல்ல மனசாட்சிக்காகக் கடவுளிடம் வேண்டுதல்” செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. (1 பேதுரு 3:21) இந்தக் காரணங்களுக்காக இயேசு ஞானஸ்நானம் எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, முன்னறிவிக்கப்பட்ட மேசியாவாக கடவுளுடைய விருப்பத்தை செய்ய தயாராக இருந்ததைக் காட்டுவதற்காகத்தான் இயேசு ஞானஸ்நானம் எடுத்தார். இதில் நமக்காக அவருடைய உயிரைக் கொடுப்பதும் உட்பட்டிருந்தது.—எபிரெயர் 10:7-10.

 கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம் எடுப்பது. கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி யோவான் ஸ்நானகரும் இயேசு கிறிஸ்துவும் சொன்னார்கள். (மத்தேயு 3:11; லூக்கா 3:16; அப்போஸ்தலர் 1:1-5) இந்த ஞானஸ்நானமும் கடவுளுடைய சக்தியின் பெயரில் எடுக்கிற ஞானஸ்நானமும் ஒன்று கிடையாது. (மத்தேயு 28:19) அதை எப்படிச் சொல்லலாம்?

 இயேசுவுடைய சீஷர்களில் ஒரு சிறிய எண்ணிக்கை மட்டும்தான் கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். அவர்கள் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதால், பரலோகத்துக்குப் போய் கிறிஸ்துவோடு ராஜாக்களாகவும், குருமார்களாகவும் சேவை செய்வார்கள். f (1 பேதுரு 1:3, 4; வெளிப்படுத்துதல் 5:9, 10) இவர்கள் பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்கிற நம்பிக்கையுள்ள கோடிக்கணக்கான இயேசுவின் சீஷர்களை ஆட்சி செய்வார்கள்.—மத்தேயு 5:5; லூக்கா 23:43.

 கிறிஸ்து இயேசுவுக்குள்ளும், அவருடைய மரணத்திற்குள்ளும் ஞானஸ்நானம். கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம் எடுக்கிறவர்கள், ‘கிறிஸ்து இயேசுவுக்குள்ளும் ஞானஸ்நானம்’ எடுக்கிறார்கள். (ரோமர் 6:3) இந்த ஞானஸ்நானம், இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்யப்போகிற அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களுக்குப் பொருந்தும். இப்படி அவர்கள் இயேசுவுக்குள் ஞானஸ்நானம் எடுப்பதால் அவருடைய அபிஷேகம் செய்யப்பட்ட சபையின் அங்கத்தினர்களாக ஆகிறார்கள். இயேசு தலையாக இருக்கிறார், இவர்கள் உடலாக இருக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 12:12, 13, 27; கொலோசெயர் 1:18.

 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், ‘[இயேசுவுடைய] மரணத்துக்குள்ளும் ஞானஸ்நானம்’ எடுக்கிறார்கள். (ரோமர் 6:3, 4) இவர்கள் இயேசுவைப் போல் தங்களையே தியாகம் செய்து கடவுளுக்கு கீழ்ப்படிகிறார்கள். இவர்கள் பூமியில் என்றென்றும் வாழ்கிற நம்பிக்கையை விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். அடையாள அர்த்தம் உள்ள இந்த ஞானஸ்நானம் அவர்கள் இறந்து பரலோகத்துக்குரிய உடலில் உயிர்த்தெழுப்பப்படும்போது முடிவுக்கு வருகிறது.—ரோமர் 6:5; 1 கொரிந்தியர் 15:42-44.

 நெருப்பினால் கொடுக்கப்படுகிற ஞானஸ்நானம். யோவான் ஸ்நானகர் தன்னுடைய போதனையைக் கேட்க வந்திருந்தவர்களிடம் இப்படிச் சொன்னார்: “அவர் [அதாவது, இயேசு] கடவுளுடைய சக்தியாலும் நெருப்பாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். அவர் தன்னுடைய கையில் தூற்றுவாரியை வைத்திருக்கிறார்; தன்னுடைய களத்துமேடு முழுவதையும் சுத்தப்படுத்தி, கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணைக்க முடியாத நெருப்பில் சுட்டெரிப்பார்.” (மத்தேயு 3:11, 12) அப்படியென்றால் கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்படுகிற ஞானஸ்நானத்துக்கும் நெருப்பினால் கொடுக்கப்படுகிற ஞானஸ்நானத்துக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த உதாரணத்திலிருந்து யோவான் என்ன சொல்ல வருகிறார்?

 இங்கே கோதுமை என்பது இயேசுவுடைய வார்த்தைகளைக் கேட்டு அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களைக் குறிக்கிறது. இவர்களுக்கு கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம் பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வசனத்தில் பதர் என்பது இயேசுவுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாதவர்களைக் குறிக்கிறது. இவர்களுக்குத்தான் நெருப்பினால் ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது. அதாவது அவர்கள் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்.—மத்தேயு 3:7-12; லூக்கா 3:16, 17.

a வைன்ஸ் கம்ப்ளீட் எக்ஸ்போஸிட்டரி டிக்ஷனரி ஆஃப் ஓல்ட் அன்ட் நியூ டெஸ்ட்மென்ட் வேர்ட்ஸ் சொல்கிறபடி, “ஞானஸ்நானம்” என்ற கிரேக்க வார்த்தைக்கு “அமிழ்த்தி எடு, மூழ்குவது, வெளியே வருவது” போன்ற அர்த்தங்கள் இருக்கின்றன.

b சர்ச்சில் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது அவர்கள்மேல் தண்ணீரை தெளிப்பார்கள், அல்லது அவர்கள் தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள். இதைத்தான் குழந்தை ஞானஸ்நானம் என்பார்கள்.

c யெகோவா என்பது கடவுளுடைய தனிப்பட்ட பெயர். (சங்கீதம் 83:18) “யெகோவா யார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

dபரிசுத்த ஆவி என்பது என்ன?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

eயோவான் ஸ்நானகர் யார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

fயார் பரலோகத்திற்குப் போகிறார்கள்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

g சில தூய்மை சடங்குகளை பற்றி பைபிள் சொல்லும்போது, அதாவது பாத்திரங்கள்மேல் தண்ணீர் ஊற்றுவதைப் பற்றி சொல்லும்போது “ஞானஸ்நானம்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (மாற்கு 7:4; எபிரெயர் 9:10) இந்த வார்த்தைக்கும் இயேசுவும் அவருடைய சீஷர்களும் தண்ணீரில் எடுத்த ஞானஸ்நானத்துக்கும் சம்பந்தமே இல்லை.