கொலோசெயர் 2:1-23

2  உங்களுக்காகவும் லவோதிக்கேயாவில்+ இருப்பவர்களுக்காகவும் என்னை நேரில் பார்க்காத எல்லாருக்காகவும் நான் எந்தளவு பாடுபடுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  அவர்களுடைய இதயங்களுக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும்+ என்றும், அவர்கள் எல்லாரும் அன்பினால் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும்+ என்றும் ஆசைப்படுகிறேன். அப்போதுதான், அவர்கள் எல்லாருக்கும் ஒப்பற்ற ஆசீர்வாதம் கிடைக்கும், அதாவது சத்தியத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டோம் என்ற முழு நம்பிக்கை கிடைக்கும்; அதோடு, கடவுளுடைய பரிசுத்த ரகசியமாகிய கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவு கிடைக்கும்.+  ஞானம், அறிவு ஆகிய பொக்கிஷங்களெல்லாம் அவருக்குள் பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.+  சாமர்த்தியமாகப் பேசி யாரும் உங்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறேன்.  உடலால் நான் உங்களோடு இல்லையென்றாலும், உள்ளத்தால் உங்களோடு இருந்து, உங்கள் மத்தியில் இருக்கிற ஒழுங்கையும்+ கிறிஸ்துவின் மேல் நீங்கள் வைத்திருக்கிற உறுதியான விசுவாசத்தையும்+ பார்த்து சந்தோஷப்படுகிறேன்.  அதனால், நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவை எப்படி ஏற்றுக்கொண்டீர்களோ, அப்படியே அவரோடு தொடர்ந்து ஒன்றுபட்டு நடங்கள்.  உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டபடியே, அவரில் வேரூன்றியவர்களாகவும், அவர்மேல் கட்டப்படுகிறவர்களாகவும்,+ விசுவாசத்தில் பலப்படுகிறவர்களாகவும் இருங்கள்;+ கடவுளுக்கு எப்போதும் நன்றி சொல்லுங்கள்.+  தத்துவங்கள் மூலமாகவும் வஞ்சனையான வீண் கருத்துகள் மூலமாகவும் ஒருவனும் உங்களை அடிமையாக* பிடித்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.+ அவை மனித பாரம்பரியங்களையும் இந்த உலகத்தின் அடிப்படைக் காரியங்களையும்தான் சார்ந்திருக்கின்றன, கிறிஸ்துவின் போதனைகளைச் சார்ந்தில்லை.  ஏனென்றால், அவரிடம்தான் தெய்வீகப் பண்புகள் முழு நிறைவாகக் குடிகொண்டிருக்கின்றன.+ 10  அதனால், எல்லா அரசாங்கங்களுக்கும் அதிகாரங்களுக்கும் தலையாக இருக்கிற அவர் மூலம் உங்களுக்கு எல்லாமே நிறைவாகக் கிடைத்திருக்கிறது.+ 11  நீங்கள் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் மனித கைகளால் செய்யப்படாத விருத்தசேதனத்தைச் செய்துகொண்டீர்கள்; பாவமுள்ள சதையைக் களைந்து,+ கிறிஸ்துவுக்குரிய விருத்தசேதனத்தைச் செய்துகொண்டீர்கள்.+ 12  அவருக்குள் ஞானஸ்நானம் பெற்ற நீங்கள் அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள்.+ அதோடு, அவரை உயிர்த்தெழுப்பிய கடவுளுடைய+ வல்லமையில் விசுவாசம் வைத்ததால் அவரோடு இணைந்தவர்களாக அவரோடு உயிர்த்தெழுப்பப்பட்டீர்கள்.+ 13  அதுமட்டுமல்ல, குற்றங்கள் செய்ததன் காரணமாகவும் விருத்தசேதனம் செய்துகொள்ளாததன் காரணமாகவும் நீங்கள் செத்த நிலையில் இருந்தபோதிலும், கடவுள் உங்களை அவரோடு உயிர்ப்பித்தார்.+ நம்முடைய எல்லா குற்றங்களையும் தயவாக மன்னித்தார்.+ 14  அதோடு, ஆணைகள் அடங்கியதும்+ நமக்கு விரோதமாக எழுதப்பட்டதுமான+ திருச்சட்டத்தைத்+ துடைத்தழித்தார்; அதைச் சித்திரவதைக் கம்பத்தில்* வைத்து ஆணியடித்து நம் மத்தியிலிருந்து நீக்கிவிட்டார்.+ 15  இதன்* மூலம், ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் அவர் நிர்வாணக் கோலமாக்கி, வெற்றி ஊர்வலத்தில் எல்லாருக்கும் முன்பாக அவர்களைக் கைதிகளாக இழுத்துக்கொண்டு போனார்.+ 16  அதனால், சாப்பிடுவது குடிப்பது பற்றியோ,+ பண்டிகை நாள், மாதப்பிறப்பு,*+ ஓய்வுநாள்+ ஆகியவற்றை அனுசரிக்காமல் இருப்பது பற்றியோ ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாமல் இருக்கட்டும். 17  ஏனென்றால், அவை வரப்போகிற காரியங்களின் நிழல் மட்டுமே,+ கிறிஸ்துதான் நிஜம்.+ 18  போலியான தாழ்மையையும் தேவதூதர்களின் வழிபாட்டையும் விரும்புகிற எவனும், உங்களுக்குப் பரிசு+ கிடைக்காமல் செய்துவிட அனுமதிக்காதீர்கள்; அப்படிப்பட்டவன் தான் பார்த்த தரிசனங்களை வைத்து “நிலைநிற்கை எடுக்கிறான்”;* உலகச் சிந்தையால் வீண் பெருமைகொள்கிறான். 19  தலையாக இருப்பவரை உறுதியாகப் பிடித்துக்கொள்ளாமல் இருக்கிறான்;+ ஆனால் அவரால்தான் முழு உடலும் மூட்டுகளாலும் தசைநார்களாலும் ஒன்றாக இணைக்கப்பட்டு, ஊட்டம் பெற்று, கடவுள் வளரச் செய்கிறபடி வளர்ந்துவருகிறது.+ 20  இந்த உலகத்தின் அடிப்படைக் காரியங்களைப்+ பொறுத்தவரை நீங்கள் கிறிஸ்துவோடு இறந்திருந்தால், இன்னும் ஏன் இந்த உலகத்தின் பாகமானவர்களைப் போல் வாழ்ந்து வருகிறீர்கள்? 21  உதாரணத்துக்கு, “எடுக்காதே, ருசிக்காதே, தொடாதே” என்ற விதிமுறைகளுக்கு+ ஏன் கட்டுப்பட்டு நடக்கிறீர்கள்? 22  இவையெல்லாம், பயன்படுத்தியவுடன் அழிந்துபோகிற பொருள்களைப் பற்றிய விதிமுறைகள்தான். இவை மனிதர்களுடைய கட்டளைகளாகவும் போதனைகளாகவும்தான் இருக்கின்றன.+ 23  இப்படிப்பட்ட விதிமுறைகள், இஷ்டப்படி வழிபடுவதையும் போலியாகத் தாழ்மை காட்டுவதையும் உடலை வருத்திக்கொள்வதையும் ஞானமானவைபோல் தோன்ற வைப்பது உண்மைதான்.+ இருந்தாலும், பாவ ஆசைகளை எதிர்த்துப் போராட இவை எந்த விதத்திலும் உதவாது.

அடிக்குறிப்புகள்

வே.வா., “இரையாக.”
அல்லது, “அவர்.”
வே.வா., “முதலாம் பிறை.”
பொய் மத ரகசிய சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா