மத்தேயு எழுதியது 5:1-48
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மலைமேல்: அநேகமாக, இந்த மலை கப்பர்நகூமுக்கும் கலிலேயா கடலுக்கும் பக்கத்தில் இருந்திருக்கலாம். இயேசு இந்த மலைமேல் சற்று உயரமான இடத்துக்கு ஏறிப்போயிருப்பார்; இந்த மலைமேல் இருந்த சமவெளியில் கூடிவந்தவர்களுக்கு அவர் கற்பிக்க ஆரம்பித்தார்.—லூ 6:17, 20.
அவர் உட்கார்ந்த பின்பு: உட்கார்ந்து கற்பிப்பது யூதப் போதகர்களின் வழக்கமாக இருந்தது; அதுவும் முறைப்படி கற்பிக்கும் வகுப்புகளில் இது வழக்கமாக இருந்தது.
சீஷர்கள்: மாத்தட்டிஸ் என்ற கிரேக்க பெயர்ச்சொல் “சீஷர்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இந்த வசனத்தில்தான் அது முதல் தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு மாணவரைக் குறிக்கிறது. போதகரோடு அவருக்கு நெருங்கிய பந்தம் இருப்பதையும், அது அவருடைய வாழ்க்கையையே வடிவமைப்பதையும் அது மறைமுகமாக அர்த்தப்படுத்துகிறது. இயேசு பேசுவதைக் கேட்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தபோதிலும், அவர் முக்கியமாகத் தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சீஷர்களின் நன்மைக்காகவே பேசியதாகத் தெரிகிறது.—மத் 7:28, 29; லூ 6:20.
அவர் கற்பிக்க ஆரம்பித்தார்: நே.மொ., “அவர் தன் வாயைத் திறந்து கற்பிக்க ஆரம்பித்தார்.” “தன் வாயைத் திறந்து” என்ற வார்த்தைகள் ஒரு செமிட்டிக் மரபுத்தொடரின் நேரடி மொழிபெயர்ப்பு. அதன் அர்த்தம், அவர் தன் பேச்சை ஆரம்பித்ததை அது அர்த்தப்படுத்தியது. (தானி 10:16); அப் 8:35-லும் 10:34-லும், இதே கிரேக்க வார்த்தைகள் ‘பேச ஆரம்பித்தார்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள்: வே.வா., “தங்களுடைய ஆன்மீகத் தேவையை உணர்ந்தவர்கள்.” “உணர்ந்தவர்கள்” என்பதற்கான கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “ஏழைகள் (தேவையில் இருப்பவர்கள்; வறுமையில் இருப்பவர்கள்; பிச்சை கேட்கிறவர்கள்).” இந்த வசனத்தில், ஏதோவொரு தேவையில் இருப்பவர்களை, அதுவும் அதை நன்றாக உணர்ந்தவர்களை, குறிப்பதற்காக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே கிரேக்க வார்த்தைதான் லூ 16:20, 22-ல் “பிச்சைக்காரன்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள்” என்ற வார்த்தைகள் சில மொழிபெயர்ப்புகளில், “ஆவியில் எளிமையுள்ளவர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றுக்கான கிரேக்க வார்த்தைகள், ஆன்மீக விதத்தில் தாங்கள் வறுமையில் இருப்பதையும், கடவுளுடைய வழிநடத்துதல் தங்களுக்குத் தேவை என்பதையும் உணர்ந்து வேதனைப்படுகிறவர்களைக் குறிக்கிறது.
சந்தோஷமானவர்கள்: ‘சந்தோஷம்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, குஷியாகவும் ஜாலியாகவும் இருப்பதை மட்டுமே குறிப்பதில்லை. இந்த வார்த்தை மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும்போது, கடவுளுடைய ஆசீர்வாதத்தையும் கருணையையும் பெற்றவர்களுடைய மனநிலையைக் குறிக்கிறது. இந்த வார்த்தை கடவுளையும், பரலோக மகிமையைப் பெற்றிருக்கும் இயேசுவையும் விவரிப்பதற்குக்கூட பயன்படுத்தப்பட்டுள்ளது.—1தீ 1:11; 6:15.
அவர்களுடையது: இது இயேசுவின் சீஷர்களைக் குறிக்கிறது; ஏனென்றால், அவர் முக்கியமாக அவர்களிடம்தான் பேசிக்கொண்டிருந்தார்.—மத் 5:1, 2.
சாந்தமாக இருப்பவர்கள்: சாந்தம் என்பது கடவுளுடைய விருப்பத்துக்கும் வழிநடத்துதலுக்கும் மனதார அடிபணிகிறவர்களின் குணத்தைக் குறிக்கிறது. அப்படிப்பட்டவர்கள் மற்றவர்களை அடக்கியாள முயற்சி செய்ய மாட்டார்கள். சாந்தம் கோழைத்தனத்தையோ பலவீனத்தையோ குறிப்பதில்லை. “தாழ்மையான” அல்லது “மனத்தாழ்மையான” என்று அர்த்தப்படுத்துகிற ஒரு எபிரெய வார்த்தைக்கு இந்த வார்த்தையை செப்டுவஜன்ட் பயன்படுத்தியிருக்கிறது. மோசேயையும் (எண் 12:3), கற்றுக்கொள்ளும் விருப்பம் உள்ளவர்களையும் (சங் 25:9), பூமியைச் சொந்தமாக்கப்போகிற நபர்களையும் (சங் 37:11), மேசியாவையும் (சக 9:9; மத் 21:4) விவரிப்பதற்கு அது இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறது. இயேசுவும் தான் சாந்தமாக இருப்பதாக, அதாவது தாழ்மையாக இருப்பதாக, சொன்னார்.—மத் 11:29.
பூமி அவர்களுக்குச் சொந்தமாகும்: இயேசு அநேகமாக, சங் 37:11-ல் உள்ள வார்த்தைகளைக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. “தாழ்மையானவர்கள் [சாந்தமானவர்கள்] இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்” என்று அங்கே சொல்லப்பட்டிருக்கிறது. “பூமி” என்பதற்கான எபிரெய வார்த்தையும் சரி (ஈரெட்ஸ்), கிரேக்க வார்த்தையும் சரி (ஃகே), இந்த மொத்த கிரகத்தையும் குறிக்கலாம், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் போன்ற ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியையும் குறிக்கலாம். இயேசுதான் சாந்தமானவர்களில் தலைசிறந்த உதாரணம் என்பதை பைபிள் சுட்டிக்காட்டுகிறது. (மத் 11:29) நிறைய வசனங்கள் காட்டுகிறபடி, ஒரு ராஜாவாக இந்தப் பூமியிலுள்ள ஒரு பகுதியை மட்டுமல்ல, இந்த முழு பூமியையும் அவர் சொந்தமாக்கிக்கொள்வார், அதாவது முழு பூமியின் மீதும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வார். (சங் 2:8; வெளி 11:15); பரலோக நம்பிக்கையுள்ள அவருடைய சீஷர்களும் இந்த அர்த்தத்தில் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள் (வெளி 5:10). இயேசுவின் ஆட்சியில் இந்தப் பூமியில் வாழப்போகிற சாந்தமானவர்களுடைய விஷயம் வேறு. அவர்கள் இந்தப் பூமியை உடைமையாகப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்; அவர் ஆட்சி செய்யும் பூஞ்சோலை பூமியில் வாழும் பாக்கியத்தைத்தான் ‘சொந்தமாக்கிக்கொள்வார்கள்.’—மத் 25:34-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள்: அதாவது, இந்த உலகத்தில் ஊழலும் அநீதியும் ஒழிந்து, கடவுளுடைய தராதரங்கள் மட்டுமே மதிக்கப்படும் காலத்தைப் பார்க்க ஏங்குகிறவர்கள்; அந்தத் தராதரங்களின்படி வாழ முயற்சி செய்கிறவர்கள்.
இரக்கம் காட்டுகிறவர்கள்: “இரக்கம் காட்டுகிறவர்கள்” என்றும் “இரக்கம்” என்றும் மொழிபெயர்க்கப்படும் கிரேக்க வார்த்தைகள், மன்னிப்பதையோ தீர்ப்பின் கடுமையைக் குறைப்பதையோ மட்டும் குறிப்பதில்லை. அது பெரும்பாலும், தேவையில் இருப்பவருக்கு வலியப்போய் உதவி செய்யும்படி ஒருவரைத் தூண்டும் கரிசனையையும் பரிதாப உணர்ச்சியையும் குறிக்கிறது.
சுத்தமான இதயமுள்ளவர்கள்: அதாவது, “மனதில் சுத்தமானவர்கள்.” ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் சுத்தமாக இருப்பதைக் குறிக்கிறது. பாசம், நேசம், ஆசை, உள்ளெண்ணம் ஆகிய எல்லாவற்றிலுமே தூய்மையாக இருப்பதை இது உட்படுத்துகிறது.
கடவுளைப் பார்ப்பார்கள்: நிஜமாகப் பார்ப்பார்கள் என்று எப்போதுமே சொல்ல முடியாது; ஏனென்றால், “[கடவுளை] பார்க்கிற எந்த மனுஷனும் உயிரோடு இருக்க முடியாது.” (யாத் 33:20) “பார்ப்பார்கள்” என்பதற்கான கிரேக்க வார்த்தை, “மனக்கண்களில் பார்ப்பார்கள், புரிந்துகொள்வார்கள், தெரிந்துகொள்வார்கள்” என்ற அர்த்தங்களையும் கொடுக்கும். இந்தப் பூமியில் யெகோவாவை வணங்குகிறவர்கள், விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளும் விதத்தில் அவருடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமாகவும், தங்களுக்காக அவர் செய்வதையெல்லாம் கவனிப்பதன் மூலமாகவும் அவருடைய குணாதிசயத்தை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள்; இந்த அர்த்தத்தில்தான் ‘கடவுளைப் பார்க்கிறார்கள்.’ (எபே 4:18; எபி 11:27) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்படும்போது, நிஜமாகவே யெகோவாவைப் பார்ப்பார்கள்; அவர் “எந்த விதத்தில் இருக்கிறாரோ அந்த விதத்திலேயே” பார்ப்பார்கள்.—1யோ 3:2.
சமாதானம் பண்ணுகிறவர்கள்: இவர்கள், சமாதானம் இருக்கும்போது அதைக் கட்டிக்காப்பதோடு, சமாதானம் இல்லாதபோது அதை உருவாக்குகிறவர்களாக இருப்பார்கள்.
உப்பாக: உப்பு என்பது, உணவு கெட்டுவிடாதபடி அதைப் பாதுகாப்பதற்கும் அதற்கு சுவை சேர்ப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு தாதுப்பொருள். இந்த வசனத்தில், உப்புக்கு இருக்கும் பாதுகாப்புத் தன்மையைப் பற்றி இயேசு வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆன்மீக ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் கெட்டுவிடாமல் இருக்க அவருடைய சீஷர்களால் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடிந்தது.
அதன் சுவையை இழந்தால்: இயேசுவின் காலத்தில், சவக் கடல் பகுதியிலிருந்துதான் பெரும்பாலும் உப்பு எடுக்கப்பட்டது. அது மற்ற தாதுப்பொருள்களோடு கலந்திருந்தது. அந்தக் கலவையிலிருந்து உப்பை நீக்கியபோது, சுவையோ பிரயோஜனமோ இல்லாத பொருள்தான் மிஞ்சியது.
மலைமேல் இருக்கிற நகரம்: இயேசு ஒரு குறிப்பிட்ட நகரத்தைப் பற்றிச் சொல்லவில்லை. அவர் இந்தப் பூமியில் வாழ்ந்த காலத்தில், நிறைய நகரங்கள் மலைமேல் அமைந்திருந்தன. எதிரிகள் எளிதில் தாக்காமல் இருப்பதற்காக அவை அங்கே கட்டப்பட்டன. அந்த நகரங்களைப் பெரிய மதில்கள் சூழ்ந்திருந்தன. அதனால், அவை மறைந்திருக்கவில்லை; பல மைல் தூரத்திலிருந்தும் அவற்றைப் பார்க்க முடிந்தது. வெள்ளையடிக்கப்பட்ட வீடுகளைக் கொண்ட சின்னச் சின்னக் கிராமங்களும் மலைமேல் இருந்தன; அவையும் மறைந்திருக்கவில்லை.
விளக்கை: பைபிள் காலங்களில், ஒலிவ எண்ணெய் ஊற்றப்பட்ட சின்ன களிமண் விளக்குகள்தான் பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்பட்டன.
கூடையால்: தானியம் போன்ற உலர் பொருள்களை அளப்பதற்குக் கூடைகள் பயன்படுத்தப்பட்டன. இங்கே சொல்லப்படும் “கூடை” (கிரேக்கில், மோடியோஸ்) கிட்டத்தட்ட 9 லி. கொள்ளளவு கொண்டது.
தகப்பனை: ‘தகப்பன்’ என்ற வார்த்தை சுவிசேஷப் புத்தகங்களில் 160 தடவைக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது; இங்குதான் அது முதன்முதலில் வருகிறது. யெகோவாவை இயேசு இங்கு ‘தகப்பன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இயேசு இந்த வார்த்தையைப் பயன்படுத்திய விதத்தைப் பார்க்கும்போது, யெகோவாவைத் தகப்பன் என்று சொல்வதன் அர்த்தம் மக்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்; ஏனென்றால், எபிரெய வேதாகமத்தில் ‘தகப்பன்’ என்ற வார்த்தை ஏற்கெனவே யெகோவாவுக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தது. (உபா 32:6; சங் 89:26; ஏசா 63:16) யெகோவாவின் பழங்கால ஊழியர்கள் சிறப்பான பல பட்டப்பெயர்களைப் பயன்படுத்தி அவரை விவரித்தார்கள் அல்லது அழைத்தார்கள். உதாரணத்துக்கு, “சர்வவல்லமையுள்ள கடவுள்,” “உன்னதமான கடவுள்,” ‘மகத்தான படைப்பாளர்’ போன்ற பட்டப்பெயர்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால் இயேசு, எல்லாரும் சகஜமாகப் பயன்படுத்திய எளிமையான வார்த்தையைத்தான், அதாவது ‘தகப்பன்’ என்ற வார்த்தையைத்தான், அடிக்கடி பயன்படுத்தினார். கடவுளுக்குத் தன் வணக்கத்தாரோடு இருக்கும் நெருங்கிய பந்தத்தை இது சிறப்பித்துக் காட்டுகிறது.—ஆதி 17:1; உபா 32:8; பிர 12:1.
திருச்சட்டத்தையோ தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையோ: “திருச்சட்டம்” என்பது ஆதியாகமம்முதல் உபாகமம்வரை இருக்கும் பைபிள் புத்தகங்களைக் குறிக்கிறது. ‘தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள்’ என்பது எபிரெய வேதாகமத்தில் இருக்கும் தீர்க்கதரிசனப் புத்தகங்களைக் குறிக்கிறது. ஆனாலும், இவை இரண்டும் சேர்த்து சொல்லப்படும்போது, எபிரெய வேதாகமம் முழுவதையும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.—மத் 7:12; 22:40; லூ 16:16.
உண்மையாகவே: கிரேக்கில், ஆமென். இது, ஆமன் என்ற எபிரெய வார்த்தையின் எழுத்துப்பெயர்ப்பு. இதன் அர்த்தம், “அப்படியே ஆகட்டும்” அல்லது “நிச்சயமாகவே.” ஒரு விஷயத்தை, வாக்குறுதியை, அல்லது தீர்க்கதரிசனத்தைச் சொல்வதற்கு முன்பு இயேசு அடிக்கடி இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். இப்படி, அவர் சொல்லவந்த விஷயம் முழுக்க முழுக்க உண்மை என்பதையும் நம்பகமானது என்பதையும் வலியுறுத்திக் காட்டினார். “உண்மையாகவே” அல்லது ஆமென் என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்தியதுபோல் வேறு யாரும் பயன்படுத்தியதாக வேறெந்தப் புனித நூலும் சொல்வதில்லை. தான் சொல்லவரும் விஷயம் நம்பகமானது என்பதை இன்னும் அதிகமாக வலியுறுத்துவதற்காக இயேசு இந்த வார்த்தையை அடுத்தடுத்து இரண்டு தடவை சொல்லியிருக்கிறார் (ஆமென் ஆமென்); யோவான் சுவிசேஷம் முழுவதிலும் அந்தப் பதிவுகளை நாம் பார்க்கலாம்.—யோவா 1:51.
வானமும் பூமியும் அழிந்துபோனாலும்: இது, “ஒருபோதும் நடக்காது” என்ற அர்த்தத்தைத் தரும் உயர்வு நவிற்சி அணி. நிஜமான வானமும் பூமியும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று பைபிள் சொல்கிறது.—சங் 78:69; 119:90.
சின்ன எழுத்துகூட: அப்போது புழக்கத்தில் இருந்த எபிரெய எழுத்துக்களிலேயே மிகச் சிறிய எழுத்து யோத் (י).
ஒரு எழுத்தின் சின்ன கோடுகூட: ஒருசில எபிரெய எழுத்துக்களைப் பொறுத்தவரை, ஒரு சின்ன கோடுதான் ஒரு எழுத்தை இன்னொரு எழுத்திலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டியது. இயேசு பயன்படுத்திய உயர்வு நவிற்சி அணி, கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் ஒரு சின்ன விவரம்கூட நிறைவேறாமல் போகாது என்பதை வலியுறுத்திக் காட்டியது.
நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்: இஸ்ரவேலில் இருந்த ஒரு உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுவதைக் குறிக்கிறது. (மத் 10:17; மாற் 13:9) கொலை வழக்குகளில் தீர்ப்புக் கொடுக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றங்களுக்கு இருந்தது.—உபா 16:18; 19:12; 21:1, 2.
சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்: இந்த வார்த்தைகள், கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட எபிரெய வேதாகமத்தில் இருந்த விஷயங்களையும் குறிக்கலாம், யூதர்களுடைய பாரம்பரிய போதனைகளையும் குறிக்கலாம்.—மத் 5:27, 33, 38, 43.
கடும் கோபமாகவே இருக்கிறவன்: இப்படிப்பட்ட தவறான மனப்பான்மையைக் காட்டுகிறவர்களின் மனதில் வெறுப்பு வளரும் என்பதையும், அது கொலையில் போய் முடியலாம் என்பதையும் இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன. (1யோ 3:15) கடைசியில், அவனை ஒரு கொலைகாரன் என்று கடவுள் நியாயந்தீர்க்கலாம்.
கேவலமான வார்த்தைகளால்: கிரேக்கில், ராக்கா (ஒருவேளை, எபிரெய அல்லது அரமேயிக் வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம்). இதன் அர்த்தம், “மடையன்” அல்லது “மரமண்டை.” சக வணக்கத்தார் ஒருவரை இதுபோல் இழிவாகப் பேசுகிறவர் தன் மனதில் வெறுப்பை வளர்ப்பதோடு, கேவலமான வார்த்தைகளால் அந்த வெறுப்பைக் கொட்டித் தீர்க்கவும் செய்வார்.
உச்ச நீதிமன்றத்தில்: எருசலேமில் இருந்த நீதிவிசாரணைக் குழுவாகிய நியாயசங்கத்தைக் குறித்தது. தலைமைக் குருவும் 70 மூப்பர்களும் வேத அறிஞர்களும் அதன் உறுப்பினர்களாக இருந்தார்கள். அதன் தீர்ப்பை இறுதித் தீர்ப்பாக யூதர்கள் கருதினார்கள்.—சொல் பட்டியலில் “நியாயசங்கம்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
கேடுகெட்ட முட்டாளே: இதற்கான கிரேக்க வார்த்தை, “கலகத்தனம்” அல்லது “அடாவடித்தனம்” என்ற அர்த்தத்தைத் தருகிற எபிரெய வார்த்தையைப் போலவே ஒலித்தது. ஒழுக்க விஷயத்தில் தறிகெட்டுப்போனவன் என்றும் கடவுளுக்குத் துரோகம் செய்தவன் என்றும் ஒருவரைத் திட்டுவதற்காக அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இன்னொருவரைப் பார்த்து அந்த வார்த்தையைச் சொல்வது, கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்கிறவனுக்குக் கிடைக்கும் தண்டனை அவருக்கும் கிடைக்க வேண்டுமென்று, அதாவது அவர் நிரந்தரமாக அழிய வேண்டுமென்று, சொல்வதுபோல் இருந்தது.
கெஹென்னாவுக்குள்: ‘கெஹென்னா’ என்ற வார்த்தை, “இன்னோம் பள்ளத்தாக்கு” என்ற அர்த்தத்தைத் தரும் ஃகேஹ் இன்னோம் என்ற எபிரெய வார்த்தைகளிலிருந்து வந்திருக்கிறது. இந்தப் பள்ளத்தாக்கு பழங்கால எருசலேமுக்கு மேற்கிலும் தெற்கிலும் அமைந்திருந்தது. (இணைப்பு B12-ஐயும், “எருசலேமும் சுற்றுப்புறமும்” என்ற வரைபடத்தையும் பாருங்கள்.) இயேசுவின் காலத்தில், அது குப்பைக்கூளங்களை எரிக்கும் இடமாக ஆகியிருந்தது. அதனால், “கெஹென்னா” என்ற வார்த்தை நிரந்தர அழிவைக் குறிப்பதற்குப் பொருத்தமான வார்த்தையாக இருந்தது.—சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பைப் பாருங்கள்.
பலிபீடத்தில் காணிக்கை செலுத்த: குறிப்பிட்ட காணிக்கைகளையோ பாவங்களையோ பற்றி மட்டுமே இயேசு பேசவில்லை. காணிக்கை என்பது திருச்சட்டத்தின்படி யெகோவாவின் ஆலயத்தில் செலுத்தப்பட்ட எந்தவொரு பலியையும் காணிக்கையையும் குறித்திருக்கலாம். பலிபீடம் என்பது தகன பலிக்கான பலிபீடத்தைக் குறித்தது; ஆலயத்தில் குருமார்களுக்கான பிரகாரத்தில் அது வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரகாரத்துக்குள் போக பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால், அதன் நுழைவாசலில் அவர்கள் தங்களுடைய காணிக்கைகளைக் குருவானவரிடம் கொடுத்தார்கள்.
உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய்: இயேசு விவரிக்கும் காட்சியில், ஒருவர் தன்னுடைய காணிக்கையைக் குருவானவரிடம் கொடுக்கும் தறுவாயில் இருக்கிறார். ஆனால், தன் சகோதரரோடு இருக்கும் பிரச்சினையை அவர் முதலில் தீர்க்க வேண்டும். கடவுளுக்குப் பிரியமான விதத்தில் தன் காணிக்கையைச் செலுத்துவதற்கு முன்பு, அவர் போய், புண்பட்டிருக்கிற தன் சகோதரரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால், பண்டிகைக் காலங்களில் பல ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அப்படிப்பட்ட காணிக்கைகளை ஆலயத்துக்குக் கொண்டுவருவார்கள்; அவர்கள் மத்தியில் அந்தச் சகோதரர் இருக்கலாம்.—உபா 16:16.
சமாதானமாகுங்கள்: இதற்கான கிரேக்க வார்த்தை, “பகையை விட்டுவிட்டு நண்பராவதை; சமரசமாவதை; பழையபடி சுமுகமாகப் பழகுவதை அல்லது ஒற்றுமையாக இருப்பதை” குறிப்பதாக விளக்கப்பட்டிருக்கிறது. கூடுமானால், புண்பட்டவரின் மனதில் இருக்கும் வன்மத்தை நீக்குவதன் மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் இதன் குறிக்கோள். (ரோ 12:18) இயேசு சொல்லவந்த குறிப்பு இதுதான்: கடவுளோடு நல்ல பந்தத்தை அனுபவிக்க வேண்டுமென்றால், மற்றவர்களோடு நல்ல பந்தத்தைக் காத்துக்கொள்வது அவசியம்.
சல்லிக்காசுகூட: நே.மொ., “கடைசி குவாட்ரன்கூட,” இது ஒரு தினாரியுவில் 1/64 பங்கு. ஒரு தினாரியு என்பது ஒரு நாள் கூலி.—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
மணத்துணைக்குத் துரோகம்: அதாவது, “கல்யாணமான ஓர் ஆணோ பெண்ணோ வேறொருவரோடு வைத்துக்கொள்ளும் உடலுறவு.” இந்த வார்த்தைகள் யாத் 20:14; உபா 5:18 ஆகிய வசனங்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அந்த வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள நாஆஃப் என்ற எபிரெய வினைச்சொல்லுக்கு இந்த வசனத்தில் மோயிக்கீயோ என்ற கிரேக்க வினைச்சொல் கொடுக்கப்பட்டுள்ளது. பைபிளில் இந்த வார்த்தை, கல்யாணமான ஓர் ஆணோ பெண்ணோ வேண்டுமென்றே இன்னொருவரோடு முறைகேடான உறவுகொள்வதை அர்த்தப்படுத்துகிறது. (மத் 5:32-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்; போர்னியா என்ற கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பாகிய ‘பாலியல் முறைகேட்டை’ பற்றி அங்கே விளக்கப்பட்டிருக்கிறது.) திருச்சட்டம் அமலில் இருந்த சமயத்தில், இன்னொருவரின் மனைவியோடு அல்லது இன்னொருவருக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த பெண்ணோடு உறவுகொள்வது மணத்துணைக்குத் துரோகம் செய்வதாகக் கருதப்பட்டது.
சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்: மத் 5:21-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
கெஹென்னாவுக்குள்: மத் 5:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பையும் பாருங்கள்.
விவாகரத்துப் பத்திரத்தை: விவாகரத்து செய்வதைத் திருச்சட்டம் ஊக்கப்படுத்தவில்லை. யாரும் அவசரப்பட்டு விவாகரத்து செய்யாமல் இருப்பதற்கும் பெண்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுக்கும் ஏற்பாடு இருந்தது. (உபா 24:1) அந்தப் பத்திரத்தை வாங்க விரும்பிய ஒரு கணவர், அதைக் கொடுக்கும் அதிகாரம் பெற்றிருந்த ஆண்களை ஒருவேளை சந்தித்துப் பேச வேண்டியிருந்திருக்கும்; அவர்கள் அந்தத் தம்பதியை சமரசப்படுத்த முயற்சி செய்திருப்பார்கள்.
பாலியல் முறைகேட்டை: கிரேக்கில், போர்னியா. இது, பைபிள் கண்டனம் செய்யும் எல்லா விதமான முறையற்ற உடலுறவுகளையும் குறிக்கிறது. மணத்துணைக்குத் துரோகம், விபச்சாரம், கல்யாணமாகாதவர்கள் வைத்துக்கொள்கிற உடலுறவு, ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணும் வைத்துக்கொள்கிற உடலுறவு, மிருகங்களோடு வைத்துக்கொள்கிற உடலுறவு ஆகிய எல்லாமே இதில் அடங்கும்.—சொல் பட்டியலில் “பாலியல் முறைகேடு” என்ற தலைப்பைப் பாருங்கள்.
யெகோவாவிடம்: எபிரெய வேதாகமத்தில் இருக்கும் ஏதோவொரு வசனத்திலிருந்து இயேசு இங்கே நேரடியாக மேற்கோள் காட்டவில்லை; ஆனாலும், அவர் சொன்ன இரண்டு கட்டளைகளும், லேவி 19:12; எண் 30:2; உபா 23:21 போன்ற வசனங்களில் இருக்கும் குறிப்புகள்தான்; மூல எபிரெயப் பதிவில், கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் (தமிழில், ய்ஹ்வ்ஹ்) அந்த வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.—இணைப்பு C-ஐப் பாருங்கள்.
சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்: மத் 5:21-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
நீங்கள் சத்தியமே செய்ய வேண்டாம்: எந்த விதமான உறுதிமொழியையும் கொடுக்கக் கூடாதென்று இயேசு இங்கே சொல்லவில்லை. ஏனென்றால், அப்போது அமலில் இருந்த திருச்சட்டம், சில முக்கியமான சந்தர்ப்பங்களில் உறுதிமொழி கொடுப்பதை அல்லது நேர்ந்துகொள்வதை அனுமதித்தது. (எண் 30:2; கலா 4:4) அதனால், விளையாட்டுத்தனமாக அல்லது முன்பின் யோசிக்காமல் சத்தியம் செய்வதைத்தான் இயேசு கண்டனம் செய்தார்; அப்படிச் செய்வது, உறுதிமொழியின் புனிதத்தையே கெடுப்பதாக இருந்தது.
பரலோகத்தின் மீது சத்தியம் செய்ய வேண்டாம்: தாங்கள் சொல்லும் விஷயத்துக்கு வலு சேர்ப்பதற்காக, “பரலோகத்தின் மீது,” “பூமியின் மீது,” “எருசலேமின் மீது” என்றெல்லாம் மக்கள் சத்தியம் செய்தார்கள். சொல்லப்போனால், இன்னொருவருடைய “தலையின் மீது,” அதாவது உயிரின் மீதுகூட அவர்கள் சத்தியம் செய்தார்கள். (மத் 5:35, 36) ஆனால், கடவுளுடைய பெயரின் மீது சத்தியம் செய்யாமல் படைப்புகளின் மீது சத்தியம் செய்வது எந்தளவுக்குச் செல்லுபடியாகும் என்பது யூதர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது. அநேகமாக, அப்படிச் சத்தியம் செய்து கொடுத்ததை சுலபமாக வாபஸ் வாங்கிக்கொள்ளலாம் என்றும், அதற்காகத் தண்டனை கிடைக்காது என்றும் சிலர் நினைத்திருக்கலாம்.
மகா ராஜாவின்: அதாவது, “யெகோவா தேவனின்.”—மல் 1:14.
இதற்கு மிஞ்சி சொல்லப்படும் எதுவும் பொல்லாதவனிடமிருந்தே வருகிறது: வெறுமனே ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று சொல்வதற்குப் பதிலாக, திரும்பத் திரும்ப சத்தியம் செய்துகொண்டே இருக்கிறவர்கள், தாங்கள் நம்பகமற்றவர்கள் என்பதைத்தான் காட்டுகிறார்கள். அவர்கள், ‘பொய்க்குத் தகப்பனான’ சாத்தானின் குணத்தைத்தான் காட்டுகிறார்கள்.—யோவா 8:44.
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்: இயேசுவின் காலத்தில், திருச்சட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த வார்த்தைகளை (யாத் 21:24; லேவி 24:20) சிலர் தவறாகச் சுட்டிக்காட்டி, தனிப்பட்ட விதமாகப் பழிவாங்குவதில் தவறில்லை என்று சொன்னார்கள். ஆனால், வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு, நியமிக்கப்பட்ட நீதிபதிகள் தகுந்த தண்டனைத் தீர்ப்பைக் கொடுத்தபோது இந்தச் சட்டம் சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டது.—உபா 19:15-21.
சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்: மத் 5:21-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
வலது கன்னத்தில் அறைந்தால்: இந்த வசனத்தில், ராப்பைஸோ என்ற கிரேக்க வினைச்சொல் “அறைந்தால்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒருவரைக் காயப்படுத்துவதற்காக அல்ல, அவருடைய கோபத்தைத் தூண்டவோ அவரை அவமானப்படுத்தவோதான் கன்னத்தில் அறைந்திருப்பார்கள். தன்னுடைய சீஷர்கள், அவமானப்படுத்தப்படும்போது பழிக்குப் பழி வாங்காமல் அதைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்று இயேசு அர்த்தப்படுத்தினார்.
உங்கள் மேலங்கியையும் அவனுக்குக் கொடுத்துவிடுங்கள்: யூத ஆண்கள் பொதுவாக இரண்டு அங்கிகளைப் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஒன்று, உள்ளங்கி (கிரேக்கில், கிட்டான்; இது நீளமான கையோ அரைக் கையோ உள்ள சட்டை போன்றது; முழங்கால்வரை அல்லது கணுக்கால்வரை நீளமாக இருந்தது; உள்ளுக்குள் போட்டுக்கொள்ளும் ஆடையாக இருந்தது), இன்னொன்று மேலங்கி (கிரேக்கில், ஹைமாட்டியான்; தொளதொளவென்ற ஒரு அங்கி; வெறுமனே ஒரு செவ்வக வடிவத் துணியில் செய்யப்பட்டிருக்கலாம்). ஒரு அங்கியை அடமானப்பொருளாக, அதாவது கடனை அடைப்பதற்கான உத்தரவாதமாக, பயன்படுத்த முடிந்தது. (யோபு 22:6) சமாதானத்துக்காகத் தன் சீஷர்கள் தங்களுடைய உள்ளங்கியை மட்டுமல்லாமல் அதிக மதிப்புள்ள தங்களுடைய மேலங்கியையும் கொடுத்துவிட மனமுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று இயேசு அர்த்தப்படுத்தினார்.
ஏதோவொரு வேலைக்காக . . . வரச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்தினால்: கட்டாய வேலை செய்யும்படி குடிமக்களைக் கேட்கும் உரிமை ரோம அதிகாரிகளுக்கு இருந்ததைப் பற்றி இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களால் ஆட்களையும் மிருகங்களையும் கட்டாயப்படுத்தி வேலை வாங்க முடிந்தது; அல்லது, அரசு வேலைகள் வேகமாக நடப்பதற்குத் தேவைப்பட்ட எதை வேண்டுமானாலும் பறிமுதல் செய்ய முடிந்தது. ரோம வீரர்கள் இப்படித்தான் சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோனை “கட்டாயப்படுத்தி,” இயேசுவின் சித்திரவதைக் கம்பத்தைச் சுமக்க வைத்தார்கள்.—மத் 27:32.
மைல்: அநேகமாக, 1,479.5 மீ. (4,854 அடி) நீளமுள்ள ரோம மைலைக் குறிக்கிறது.—சொல் பட்டியலையும் இணைப்பு B14-ஐயும் பாருங்கள்.
கடன் வாங்க: அதாவது, “வட்டியில்லாமல் கடன் வாங்க.” சக யூதர்களிடம் வட்டி வாங்கக் கூடாதென்று திருச்சட்டம் சொன்னது. (யாத் 22:25) தேவையில் இருந்தவர்களுக்குத் தாராளமாகக் கடன் கொடுக்கும்படியும் உற்சாகப்படுத்தியது (உபா 15:7, 8).
மற்றவர்கள்மேல் அன்பு காட்ட வேண்டும்: மற்றவர்கள்மேல் அன்பு காட்ட வேண்டுமென்று திருச்சட்டம் இஸ்ரவேலர்களுக்குச் சொன்னது. (லேவி 19:18) ‘மற்றவர்கள்’ என்பது சக மனிதர்களைக் குறித்தது. ஆனால், அது சக யூதர்களை மட்டும்தான் குறித்ததாகச் சில யூதர்கள் சொன்னார்கள். அதுவும், வாய்மொழி பாரம்பரியங்களைப் பின்பற்றியவர்கள் அப்படிச் சொன்னார்கள். மற்ற எல்லாரையுமே எதிரிகளாகப் பார்க்க வேண்டுமென்று அவர்கள் சொன்னார்கள்.
எதிரியை வெறுக்க வேண்டும்: திருச்சட்டத்தில் இப்படிப்பட்ட எந்தக் கட்டளையும் இல்லை. மற்றவர்கள்மேல் அன்பு காட்ட வேண்டுமென்ற கட்டளையில், எதிரிகளை வெறுக்க வேண்டுமென்ற அர்த்தம் மறைந்திருந்ததாகச் சில யூத ரபீக்கள் நம்பினார்கள்.
சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்: மத் 5:21-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள்: இயேசுவின் அறிவுரை, எபிரெய வேதாகமத்திலுள்ள நியமங்களுக்கு இசைவாக இருக்கிறது.—யாத் 23:4, 5; யோபு 31:29; நீதி 24:17, 18; 25:21.
வரி வசூலிப்பவர்களும்: நிறைய யூதர்கள் ரோம அதிகாரிகளுக்காக வரி வசூலித்தார்கள். மக்களுக்கு அவர்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. ஏனென்றால், தாங்கள் வெறுக்கிற வேறொரு நாட்டுக்கு அவர்கள் துணைபோனதோடு, சட்டப்படி வசூலிக்க வேண்டிய தொகையைவிட அதிகமாக வசூலித்தார்கள். வரி வசூலித்த யூதர்களிடமிருந்து மற்ற யூதர்கள் பொதுவாக ஒதுங்கியே இருந்தார்கள். அவர்களைப் பாவிகள் போலவும் விலைமகள்கள் போலவும் பார்த்தார்கள்.—மத் 11:19; 21:32.
சகோதரர்களுக்கு: இஸ்ரவேல் தேசத்தார் எல்லாரையும் குறிக்கிறது. அவர்கள் எல்லாரும் ஒரே தகப்பனாகிய யாக்கோபின் பிள்ளைகளாக இருந்தார்கள், ஒரே கடவுளாகிய யெகோவாவை ஒற்றுமையாக வணங்குபவர்களாகவும் இருந்தார்கள்.—யாத் 2:11; சங் 133:1.
வாழ்த்துச் சொன்னால்: மற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது, நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டுமென்று வாழ்த்துவதை உட்படுத்தியது.
உலக மக்களும்: யூதர்களாக இல்லாதவர்களைக் குறித்தது; கடவுளோடு அவர்களுக்கு எந்தப் பந்தமும் இருக்கவில்லை. அவர்களை யூதர்கள் கெட்டவர்களாக, அசுத்தமானவர்களாக, தவிர்க்க வேண்டியவர்களாக கருதினார்கள்.
பரிபூரணராக: இங்கே ‘பரிபூரணம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, “முழுமை,” “முதிர்ச்சி” என்ற அர்த்தத்தைத் தரலாம்; அல்லது, ஒரு அதிகாரி ஏற்படுத்தியிருக்கும் தராதரங்களின்படி “குற்றமற்றவராக” இருப்பதை அர்த்தப்படுத்தலாம். யெகோவா மட்டும்தான் முழுமையான கருத்தில் பரிபூரணராக இருக்கிறார். அதனால், இந்த வார்த்தை மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும்போது அவர்கள் ஓரளவுக்குப் பரிபூரணமாக இருப்பதைத்தான் குறிக்கிறது. இந்த வசனத்தில், யெகோவாவின் மீதும் மற்ற மனிதர்களின் மீதும் கிறிஸ்தவர்கள் முழுமையான அன்பு காட்ட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஒருவர் பாவ இயல்புள்ளவராக இருந்தாலும் இப்படிப்பட்ட அன்பை அவரால் காட்ட முடியும்.
மீடியா

1. கெனேசரேத் சமவெளி. இது முக்கோண வடிவில் இருந்த செழிப்பான நிலப்பகுதி. சுமார் 5 கி.மீ. (3 மைல்) நீளத்திலும் 2.5 கி.மீ. (1.5 மைல்) அகலத்திலும் இருந்தது. இந்தப் பகுதியின் கடலோரத்தில்தான் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகிய மீனவர்களைத் தன்னோடு சேர்ந்து ஊழியம் செய்ய இயேசு அழைத்தார்.—மத் 4:18-22.
2. இயேசு இங்குதான் மலைப்பிரசங்கத்தைக் கொடுத்தார் என்று பாரம்பரியம் சொல்கிறது.—மத் 5:1; லூ 6:17, 20.
3. கப்பர்நகூம். இந்த நகரத்தில்தான் இயேசு குடியிருந்தார். இந்த நகரத்திலோ இதற்குப் பக்கத்திலோதான் அவர் மத்தேயுவைச் சந்தித்தார்.—மத் 4:13; 9:1, 9.

இன்று சவக் கடலின் (உப்புக்கடலின்) தண்ணீர், உலகத்தில் உள்ள கடல்களின் தண்ணீரைவிட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிக உப்புத்தன்மை கொண்டது. (ஆதி 14:3) சவக் கடலின் தண்ணீர் ஆவியாக மாறியபோதெல்லாம் இஸ்ரவேலர்களுக்கு நிறைய உப்பு கிடைத்தது. அது மற்ற தாதுப்பொருள்களோடு கலந்திருந்ததால் தரம் குறைந்ததாக இருந்தது; ஆனாலும், அவர்கள் அதைப் பயன்படுத்தினார்கள். பெனிக்கேயர்களிடமிருந்தும் இஸ்ரவேலர்கள் உப்பை வாங்கியிருக்கலாம். அந்த பெனிக்கேயர்கள் மத்தியதரைக் கடலின் தண்ணீரை ஆவியாக்குவதன் மூலம் உப்பைத் தயாரித்ததாகச் சொல்லப்படுகிறது. உப்பு உணவுக்குச் சுவை சேர்ப்பதாக பைபிள் சொல்கிறது. (யோபு 6:6) மக்களுடைய தினசரி வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட விஷயங்களை உவமைகளாகப் பயன்படுத்துவதில் இயேசு திறமைசாலியாக இருந்தார். அதனால், முக்கியமான ஆன்மீகப் பாடங்களைக் கற்றுத்தருவதற்காக உப்பை உவமையாகப் பயன்படுத்தினார். உதாரணத்துக்கு, மலைப்பிரசங்கத்தில் அவர் தன்னுடைய சீஷர்களிடம், “நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்” என்று சொன்னார். ஆன்மீக விதத்திலும் ஒழுக்க விதத்திலும் சீரழியாதபடி அல்லது கெட்டுப்போகாதபடி மற்றவர்களை அவர்கள் பாதுகாப்பார்கள் என்ற அர்த்தத்தில்தான் அவர் அப்படிச் சொன்னார்.

வீடுகளிலும் மற்ற கட்டிடங்களிலும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட களிமண் விளக்குகளில் ஒலிவ எண்ணெய் ஊற்றப்பட்டது. அதற்குத் திரியும் பயன்படுத்தப்பட்டது. வெளிச்சம் தருவதற்காக விளக்குகள் பொதுவாகக் களிமண்ணினாலோ, மரத்தினாலோ, உலோகத்தினாலோ செய்யப்பட்ட விளக்குத்தண்டுகளின் மேல் வைக்கப்பட்டன. அவை சுவர்களில் இருந்த மாடங்களில் அல்லது திட்டுகளில்கூட வைக்கப்பட்டன. சிலசமயங்களில், கயிற்றில் கட்டி உட்கூரையில் தொங்கவிடப்பட்டன.

இந்த விளக்குத்தண்டு (1), எபேசுவிலும் இத்தாலியிலும் கண்டெடுக்கப்பட்ட முதல் நூற்றாண்டு கலைப்பொருள்களின் அடிப்படையில் ஒரு கலைஞர் கற்பனை செய்த வடிவம். இப்படிப்பட்ட விளக்குத்தண்டுகள் அநேகமாக பணக்கார வீடுகளில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஏழை வீடுகளில், விளக்குகள் உட்கூரையில் தொங்கவிடப்பட்டன அல்லது சுவரில் இருந்த மாடத்தில் வைக்கப்பட்டன (2), அல்லது மண்ணினாலோ மரத்தினாலோ செய்யப்பட்ட விளக்குத்தண்டின் மேல் வைக்கப்பட்டன.

கிரேக்கில் கெஹென்னா என்று அழைக்கப்பட்ட இன்னோம் பள்ளத்தாக்கு, பழங்கால எருசலேமின் தெற்கிலும் தென்மேற்கிலும் இருந்த ஒரு பள்ளத்தாக்கு. இயேசுவின் காலத்தில் அது குப்பைகூளங்களை எரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. அதனால், முழுமையான அழிவுக்குப் பொருத்தமான அடையாளமாக இருக்கிறது.

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கெஹென்னா என்று அழைக்கப்படும் இன்னோம் பள்ளத்தாக்கு (1). ஆலயப் பகுதி (2). முதல் நூற்றாண்டில் யூதர்களுடைய ஆலயம் இங்குதான் இருந்தது. இன்று இங்கு மிகவும் பிரபலமான ஒரு மசூதி இருக்கிறது. அது பாறை மாடக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.—இணைப்பு B12-ல் உள்ள வரைபடத்தைப் பாருங்கள்.

படத்தில் காட்டப்பட்டுள்ள விவாகரத்துப் பத்திரம் கி.பி. 71 அல்லது 72-ல் அரமேயிக் மொழியில் எழுதப்பட்டது. யூதேய பாலைவனத்தில் இருந்த ஒரு வறண்ட நதிப்படுகையின் (முராபாட் காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்) வடக்கில் அது கண்டெடுக்கப்பட்டது. யூதர்கள் கலகம் செய்த ஆறாவது வருஷத்தில், நாக்சன் என்பவரின் மகனான ஜோசஃப், மசாடா நகரத்தில் வாழ்ந்துவந்த ஜானத்தன் என்பவரின் மகளாகிய மிரியமை விவாகரத்து செய்ததாக அது குறிப்பிடுகிறது.