யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 5:1-14

5  சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தவருடைய+ வலது கையில் ஒரு சுருளைப் பார்த்தேன். அதன் இரண்டு பக்கத்திலும்* எழுதப்பட்டிருந்தது, ஏழு முத்திரைகளால் நன்றாக முத்திரை போடப்பட்டிருந்தது.  அதோடு, பலமுள்ள ஒரு தேவதூதர் உரத்த குரலில், “முத்திரைகளை உடைத்து, சுருளை விரிக்க யாருக்குத் தகுதி இருக்கிறது?” என்று கேட்டார்.  ஆனால், சுருளை விரிப்பதற்கும் அதைப் படித்துப் பார்ப்பதற்கும், பரலோகத்திலோ பூமியிலோ பூமிக்கடியிலோ இருக்கிற ஒருவரால்கூட முடியவில்லை.  சுருளை விரிப்பதற்கும் அதைப் படித்துப் பார்ப்பதற்கும் தகுதியுள்ளவர் ஒருவர்கூட இல்லை என்பதால் நான் தேம்பித் தேம்பி அழுதேன்.  ஆனால் மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “அழாதே. இதோ! யூதா கோத்திரத்துச் சிங்கமும்+ தாவீதின்+ வேருமானவர்+ ஜெயித்துவிட்டார்.+ அதனால், அந்தச் சுருளின் ஏழு முத்திரைகளையும் உடைத்து அவரால் அதை விரிக்க முடியும்” என்று சொன்னார்.  சிம்மாசனத்துக்கும் நான்கு ஜீவன்களுக்கும் மூப்பர்களுக்கும்+ நடுவில் ஓர் ஆட்டுக்குட்டி+ நிற்பதைப் பார்த்தேன். அது வெட்டப்பட்டதுபோல் இருந்தது.+ அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. இந்தக் கண்கள், பூமி முழுவதும் அனுப்பப்பட்டிருக்கிற கடவுளுடைய ஏழு சக்திகளைக் குறிக்கின்றன.+  உடனே, அந்த ஆட்டுக்குட்டியானவர் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தவரிடம்+ போய், அவருடைய வலது கையிலிருந்த சுருளை வாங்கினார்.  அவர் அந்தச் சுருளை வாங்கியபோது, நான்கு ஜீவன்களும் 24 மூப்பர்களும்+ ஆட்டுக்குட்டியானவருக்கு முன்னால் மண்டிபோட்டு தலைவணங்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் யாழையும், தூபப்பொருள் நிறைந்த தங்கக் கிண்ணங்களையும் வைத்திருந்தார்கள். அந்தத் தூபப்பொருள் பரிசுத்தவான்களின் ஜெபங்களைக் குறிக்கிறது.+  அவர்கள் இந்தப் புதுப்பாட்டைப் பாடிக்கொண்டிருந்தார்கள்:+ “சுருளை வாங்கிக்கொள்வதற்கும் அதன் முத்திரைகளை உடைப்பதற்கும் உங்களுக்குத்தான் தகுதி இருக்கிறது. ஏனென்றால், நீங்கள் வெட்டிக் கொல்லப்பட்டீர்கள், உங்களுடைய இரத்தத்தால் எல்லா கோத்திரங்களையும் மொழிகளையும் இனங்களையும் தேசங்களையும் சேர்ந்தவர்களிலிருந்து+ ஆட்களைக் கடவுளுக்காக விலைகொடுத்து வாங்கினீர்கள்.+ 10  அவர்களை ராஜாக்களாகவும்+ நம்முடைய கடவுளுக்குச் சேவை செய்கிற குருமார்களாகவும்+ நியமித்தீர்கள்; அவர்கள் ராஜாக்களாகப் பூமியின் மீது ஆட்சி செய்வார்கள்.”+ 11  அதன் பின்பு, சிம்மாசனத்தையும் நான்கு ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றி கோடிக்கணக்கிலும்* லட்சக்கணக்கிலும் தேவதூதர்கள் இருப்பதைப் பார்த்தேன்,+ அவர்களுடைய குரலையும் கேட்டேன். 12  அவர்கள் உரத்த குரலில், “வெட்டிக் கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவர்+ அதிகாரத்தையும் செல்வத்தையும் ஞானத்தையும் பலத்தையும் மாண்பையும் மகிமையையும் புகழையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவர்”+ என்று சொன்னார்கள். 13  பரலோகத்திலும் பூமியிலும் பூமிக்கடியிலும்+ கடலிலும் அவை எல்லாவற்றிலும் இருக்கிற ஒவ்வொரு ஜீவனும், “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவருக்கும்+ ஆட்டுக்குட்டியானவருக்கும்+ புகழும் மாண்பும்+ மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாவதாக”+ என்று சொல்வதைக் கேட்டேன். 14  அந்த நான்கு ஜீவன்களும், “ஆமென்!”* என்றன. அந்த மூப்பர்கள் மண்டிபோட்டு, கடவுளை வணங்கினார்கள்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “உள்ளேயும் வெளியேயும்.”
நே.மொ., “பத்தாயிரம் தடவை பத்தாயிரமும்.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்!”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா