யோவானின் முதலாம் கடிதம் 4:1-21

4  அன்புக் கண்மணிகளே, கடவுளிடமிருந்து வந்ததுபோல் தெரிகிற செய்திகள் எல்லாவற்றையும் நம்பாதீர்கள்;+ அவை கடவுளிடமிருந்துதான் வந்திருக்கின்றனவா என்பதைச் சோதித்துப் பாருங்கள்.+ ஏனென்றால், போலித் தீர்க்கதரிசிகள் நிறைய பேர் இந்த உலகத்தில் வந்திருக்கிறார்கள்.+  கடவுளிடமிருந்து வந்த செய்தியைத் தெரிந்துகொள்ளும் வழி இதுதான்: இயேசு கிறிஸ்து மனிதராக வந்தார் என்பதைத் தெரிவிக்கிற செய்திகளெல்லாம் கடவுளிடமிருந்து வந்திருக்கின்றன.+  ஆனால், இயேசு மனிதராக வந்தார் என்பதைத் தெரிவிக்காத செய்திகளெல்லாம் கடவுளிடமிருந்து வரவில்லை.+ அதோடு, அந்திக்கிறிஸ்துவின் செய்தி வருமென்று நீங்கள் கேள்விப்பட்டபடி,+ அது ஏற்கெனவே உலகத்தில் வந்துவிட்டது.+  சின்னப் பிள்ளைகளே, நீங்கள் கடவுளின் பக்கம் இருக்கிறீர்கள். உலகத்தோடு ஒன்றுபட்டிருக்கிற பிசாசைவிட+ உங்களோடு ஒன்றுபட்டிருக்கிற கடவுள்+ உயர்ந்தவராக இருப்பதால், அப்படிப்பட்ட ஆட்களை நீங்கள் ஜெயித்திருக்கிறீர்கள்.+  அந்த ஆட்கள் உலகத்தின் பக்கம் இருக்கிறார்கள்.+ அதனால்தான் உலக விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள், உலகமும் அவர்கள் சொல்வதைக் கேட்கிறது.+  ஆனால், நாம் கடவுளின் பக்கம் இருக்கிறோம். கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்கிறவன் நாம் சொல்கிற விஷயங்களைக் காதுகொடுத்துக் கேட்கிறான்.+ கடவுளின் பக்கம் இல்லாதவன் நாம் சொல்கிற விஷயங்களைக் கேட்பதில்லை.+ பொய்யான செய்தி எது என்பதையும், கடவுளால் கொடுக்கப்பட்ட உண்மையான செய்தி எது என்பதையும் இப்படித்தான் தெரிந்துகொள்கிறோம்.+  அன்புக் கண்மணிகளே, நாம் தொடர்ந்து ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவோமாக.+ ஏனென்றால், அன்பு கடவுளிடமிருந்துதான் வருகிறது. அன்பு காட்டுகிற ஒவ்வொருவனும் கடவுளுடைய பிள்ளையாக இருக்கிறான், கடவுளைப் பற்றித் தெரிந்தவனாக இருக்கிறான்.+  அன்பு காட்டாதவன் கடவுளைப் பற்றித் தெரியாதவனாக இருக்கிறான். ஏனென்றால், கடவுள் அன்பாகவே இருக்கிறார்.+  தன்னுடைய ஒரே மகன் மூலம் நமக்கு வாழ்வு கிடைப்பதற்காகக்+ கடவுள் அவரை இந்த உலகத்துக்கு அனுப்பினார்;+ இதன் மூலம் கடவுள் நம்மேல் வைத்திருக்கிற அன்பு தெரியவந்தது. 10  நாம் கடவுள்மேல் அன்பு காட்டியதால் அல்ல, அவர் நம்மேல் அன்பு காட்டியதால்தான் நம் பாவங்களுக்குப்+ பிராயச்சித்த பலியாக*+ தன்னுடைய மகனை அனுப்பினார், இதுதான் அன்பு. 11  அன்புக் கண்மணிகளே, இந்த விதத்தில் கடவுள் நம்மேல் அன்பு காட்டினார் என்றால், நாமும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.+ 12  ஒருவனும் ஒருபோதும் கடவுளைப் பார்த்ததில்லை.+ நாம் ஒருவருக்கொருவர் தொடர்ந்து அன்பு காட்டினால், கடவுள் நம்மோடு நிலைத்திருப்பார், தன்னுடைய அன்பை நமக்கு முழுமையாக* காட்டுவார்.+ 13  அவர் தன்னுடைய சக்தியை நமக்குக் கொடுத்ததால்தான் நாம் அவரோடு ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதையும், அவர் நம்மோடு ஒன்றுபட்டிருக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்கிறோம். 14  அதுமட்டுமல்ல, பரலோகத் தகப்பன் தன்னுடைய மகனை இந்த உலகத்துக்கு மீட்பராக அனுப்பியதை+ நாங்கள் நேரடியாகப் பார்த்திருக்கிறோம், அதைப் பற்றிச் சாட்சி கொடுத்தும் வருகிறோம். 15  இயேசுதான் கடவுளுடைய மகன் என்று ஏற்றுக்கொள்கிறவனோடு+ கடவுள் ஒன்றுபட்டிருக்கிறார், அவனும் கடவுளோடு ஒன்றுபட்டிருக்கிறான்.+ 16  கடவுள் எங்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம், அதை நம்பவும் செய்கிறோம்.+ கடவுள் அன்பாகவே இருக்கிறார்.+ தொடர்ந்து அன்பு காட்டுகிறவன் கடவுளோடு ஒன்றுபட்டிருக்கிறான், கடவுளும் அவனோடு ஒன்றுபட்டிருக்கிறார்.+ 17  நியாயத்தீர்ப்பு நாளில் நாம் தயக்கமில்லாமல் பேசுவதற்காகத்தான்*+ இந்த விதத்தில் அன்பு நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது; ஏனென்றால், அவர் இருக்கிற விதமாகவே நாமும் இந்த உலகத்தில் இருக்கிறோம். 18  அன்பில் பயம் இல்லை,+ முழுமையான* அன்பு பயத்தைப் போக்கிவிடும்.* ஏனென்றால், பயம் ஒருவனைக் கட்டுப்படுத்தி வைக்கிறது. சொல்லப்போனால், பயப்படுகிறவனிடம் முழுமையான அன்பு இல்லை.+ 19  கடவுள் முதலில் நம்மேல் அன்பு காட்டியதால் நாமும் அன்பு காட்டுகிறோம்.+ 20  “கடவுள்மேல் எனக்கு அன்பு இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டு ஒருவன் தன் சகோதரனை வெறுத்தால், அவன் பொய்யன்.+ ஏனென்றால், தான் பார்க்கிற சகோதரன்மேல் அன்பு காட்டாதவன்,+ தான் பார்க்காத கடவுள்மேல்+ அன்பு காட்ட முடியாது. 21  கடவுள்மேல் அன்பு காட்டுகிறவன் தன் சகோதரன்மேலும் அன்பு காட்ட வேண்டும். இதுதான் அவர் நமக்குக் கொடுத்த கட்டளை.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “பாவப் பரிகார பலி; சமாதானப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படுகிறது.”
வே.வா., “பரிபூரணமாக.”
வே.வா., “நம்பிக்கையோடு இருப்பதற்காகத்தான்.”
வே.வா., “பரிபூரண.”
வே.வா., “விரட்டிவிடும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா