எபிரெயர் 11:1-40

11  விசுவாசம் என்பது எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயம் நடக்கும் என்று உறுதியாக நம்புவதாகும்;+ பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியை* பார்ப்பதாகும்.  விசுவாசத்தால்தான் கடவுளிடமிருந்து நம் முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.  இந்தப் பிரபஞ்சத்தில்* இருப்பதெல்லாம் கடவுளுடைய வார்த்தையால் படைக்கப்பட்டன* என்பதையும் பார்க்க முடியாதவற்றிலிருந்து பார்க்க முடிகிறவை தோன்றியிருக்கின்றன என்பதையும் விசுவாசத்தால் நாம் புரிந்துகொள்கிறோம்.  விசுவாசத்தால்தான் ஆபேல், காயீனுடைய பலியைவிட உயர்ந்த பலியைக் கடவுளுக்குக் கொடுத்தார்.+ அதனால் அவர் நீதிமான் என்று நற்சாட்சி பெற்றார். அவருடைய காணிக்கைகளைக் கடவுள் ஏற்றுக்கொண்டாரே.*+ அவர் இறந்துபோனாலும் தன்னுடைய விசுவாசத்தால் இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறார்.+  விசுவாசத்தால்தான் ஏனோக்கு,+ வேதனைப்பட்டுச் சாகாதபடி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். அப்படி அவரைக் கடவுள் இடம் மாற்றியதால் அதற்குப் பின்பு அவரை யாரும் பார்க்கவில்லை;+ அவர் இடம் மாற்றப்படுவதற்கு முன்பே, கடவுளுக்கு மிகவும் பிரியமாக நடந்துகொண்டவர் என்று நற்சாட்சி பெற்றிருந்தார்.  விசுவாசமில்லாமல் யாரும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது. ஏனென்றால், கடவுளை அணுகுகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவரை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறார் என்றும் நம்ப வேண்டும்.+  விசுவாசத்தால்தான் நோவா,+ பார்க்காதவற்றைப் பற்றிக் கடவுளிடமிருந்து எச்சரிப்பு கிடைத்தபோது+ கடவுள்பயத்தைக் காட்டினார். தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு பேழையைக் கட்டினார்;+ இந்த விசுவாசத்தால்தான் உலகத்தை அவர் கண்டனம் செய்தார்,+ அதே விசுவாசத்தால்தான் நீதிமான்களில் ஒருவரானார்.  விசுவாசத்தால்தான் ஆபிரகாம்,+ தனக்குச் சொத்தாகக் கிடைக்கவிருந்த இடத்துக்குப் போகும்படி சொல்லப்பட்டபோது, அந்த இடம் எங்கே இருக்கிறதென்று தெரியாவிட்டாலும் கீழ்ப்படிந்து புறப்பட்டுப் போனார்.+  விசுவாசத்தால்தான் அவர், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் ஓர் அன்னியனாகத் தங்கியிருந்தார்.+ அதே வாக்கைப் பெற்ற சக வாரிசுகளான ஈசாக்கோடும் யாக்கோபோடும்+ கூடாரங்களில் தங்கியிருந்தார்.+ 10  ஏனென்றால், கடவுளே வடிவமைத்துக் கட்டிய உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்ட நகரத்துக்காக+ அவர் காத்துக்கொண்டிருந்தார். 11  விசுவாசத்தால்தான் சாராள்கூட, வயதானவளாக இருந்தாலும் கர்ப்பமானாள்.*+ ஏனென்றால், வாக்குறுதி கொடுத்தவர் உண்மையுள்ளவர்* என்று அவள் நம்பினாள். 12  அதனால்தான், பிள்ளை பெற முடியாத*+ ஒரு மனிதருக்கு வானத்திலுள்ள ஏராளமான நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணற்ற மணலைப் போலவும்+ பிள்ளைகள் பிறந்தார்கள்.+ 13  மேலே சொல்லப்பட்ட இவர்கள் எல்லாரும் விசுவாசமுள்ளவர்களாக இறந்தார்கள். வாக்குறுதிகள் நிறைவேறுவதை அவர்கள் பார்க்காவிட்டாலும்,+ தூரத்திலிருந்து அவற்றைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.+ தாங்கள் குடியிருந்த தேசத்தில் தங்களை அன்னியர்கள் என்றும், தற்காலிகக் குடிகள் என்றும் எல்லாருக்கும் சொன்னார்கள். 14  இப்படிச் சொல்கிறவர்கள் தங்களுக்காக ஒரு தேசத்தை ஊக்கமாகத் தேடிக்கொண்டிருந்ததற்கு அத்தாட்சி கொடுக்கிறார்கள். 15  ஆனாலும், தாங்கள் விட்டுவந்த இடத்தை அவர்கள் நினைத்துக்கொண்டே இருக்கவில்லை;+ அப்படி நினைத்துக்கொண்டே இருந்திருந்தால், அங்கே திரும்பிப்போக அவர்களுக்கு வாய்ப்பு இருந்திருக்கும். 16  ஆனால், அதைவிட உயர்ந்த இடத்தை, அதாவது பரலோகத்துக்குரிய இடத்தை, பெறுவதற்கு அவர்கள் முயற்சி செய்தார்கள். அதனால், அவர்களுடைய கடவுள் என்று அழைக்கப்படுவதைக் கடவுள் அவமானமாக நினைக்கவில்லை.+ அதற்குப் பதிலாக, அவர்களுக்கென்று ஒரு நகரத்தைத் தயார்படுத்தி வைத்திருக்கிறார்.+ 17  விசுவாசத்தால்தான் ஆபிரகாம், தான் சோதிக்கப்பட்டபோது+ ஈசாக்கைப் பலி கொடுக்கும் அளவுக்குப் போனார். வாக்குறுதிகளைச் சந்தோஷத்தோடு பெற்றிருந்த அவர், தன்னுடைய ஒரே மகனைப் பலி கொடுக்க முன்வந்தார்.+ 18  “ஈசாக்கின் வழியாக உருவாகும் சந்ததிதான் உன்னுடைய சந்ததி என்று அழைக்கப்படும்” என்று அவருக்குச் சொல்லப்பட்டிருந்தாலும் அப்படிச் செய்ய முன்வந்தார்.+ 19  ஏனென்றால், இறந்தவனை மறுபடியும் கடவுளால் உயிரோடு எழுப்ப முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால், மரணத்திடமிருந்து அவனைப் பெற்றுக்கொண்டார்; எதிர்காலத்தில் நடக்கவிருந்த சம்பவத்துக்கு இது ஓர் அடையாளமாக இருந்தது.+ 20  விசுவாசத்தால்தான் ஈசாக்கு, எதிர்கால சம்பவங்களைப் பற்றிச் சொல்லி யாக்கோபையும்+ ஏசாவையும் ஆசீர்வதித்தார்.+ 21  விசுவாசத்தால்தான் யாக்கோபு, தான் சாவதற்கு முன்பு+ யோசேப்பின் மகன்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தார்,+ பின்பு தன்னுடைய கைத்தடியில் சாய்ந்தபடி கடவுளை வணங்கினார்.+ 22  விசுவாசத்தால்தான் யோசேப்பு, சாகும் நிலையில் இருந்தபோது, இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டு வெளியே போவார்கள் என்று சொன்னார். அதோடு, தன்னுடைய எலும்புகளை என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தமான* அறிவுரைகளையும்* கொடுத்தார்.+ 23  விசுவாசத்தால்தான் மோசேயின் அப்பாவும் அம்மாவும், ராஜாவின் கட்டளைக்குப் பயப்படாமல்,+ அழகான குழந்தையாகிய மோசேயை+ மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள்.+ 24  விசுவாசத்தால்தான் மோசே, வளர்ந்து ஆளானபோது+ பார்வோனுடைய மகளின் மகன்+ என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை; 25  பாவத்தால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களை அனுபவிப்பதைவிட, கடவுளுடைய மக்களோடு சேர்ந்து துன்புறுத்தப்படுவதையே அவர் தேர்ந்தெடுத்தார். 26  ஏனென்றால், எகிப்தின் பொக்கிஷங்களைவிட கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக* இருப்பதால் வரும் அவமானத்தையே உயர்ந்த செல்வமாக நினைத்தார், தனக்குக் கிடைக்கவிருந்த பலன்மேல் கண்களைப் பதிய வைத்தார். 27  விசுவாசத்தால்தான் அவர், ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல்+ எகிப்தைவிட்டுப் புறப்பட்டுப் போனார்;+ பார்க்க முடியாதவரைப்+ பார்ப்பதுபோல் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாக இருந்தார். 28  விசுவாசத்தால்தான் அவர், இஸ்ரவேலர்களின் மூத்த மகன்களைக் கடவுளுடைய தூதன் கொல்லாதபடி* பஸ்காவைக் கொண்டாடினார், வாசல் நிலைக்கால்களில் இரத்தத்தைத் தெளித்தார்.+ 29  விசுவாசத்தால்தான் அவர்கள், வறண்ட தரையில் நடப்பதுபோல் செங்கடலில் நடந்து போனார்கள்;+ எகிப்தியர்கள் அதைக் கடக்க முயற்சி செய்தபோது அதில் மூழ்கிப்போனார்கள்.+ 30  விசுவாசத்தால்தான், எரிகோ நகரத்தின் மதிலை இஸ்ரவேலர்கள் ஏழு நாட்கள் சுற்றி வந்தபின்பு அது விழுந்தது.+ 31  விசுவாசத்தால்தான் ராகாப் என்ற விலைமகள், உளவாளிகளைச் சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டாள்.+ அதனால், கீழ்ப்படியாதவர்களோடு சேர்ந்து அவள் அழியவில்லை. 32  இன்னும் யாரைப் பற்றிச் சொல்வேன்? கிதியோன்,+ பாராக்,+ சிம்சோன்,+ யெப்தா,+ தாவீது,+ சாமுவேல்+ என்பவர்களையும், மற்ற தீர்க்கதரிசிகளையும் பற்றிச் சொல்லிக்கொண்டே போனால் எனக்கு நேரம் போதாது. 33  விசுவாசத்தால்தான் இவர்கள் ராஜ்யங்களைத் தோற்கடித்தார்கள்,+ நீதியை நிலைநாட்டினார்கள், வாக்குறுதிகளைப் பெற்றார்கள்,+ சிங்கங்களின் வாயை அடைத்தார்கள்,+ 34  கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைத் தாக்குப்பிடித்தார்கள்,+ வாளுக்குத் தப்பினார்கள்,+ பலவீனத்தில் பலம் பெற்றார்கள்,+ போர்களில் வல்லவர்களாக ஆனார்கள்,+ எதிரிகளுடைய படைகளைத் தோற்கடித்தார்கள்.+ 35  பெண்கள், இறந்துபோன தங்களுடைய அன்புக்குரியவர்களை உயிர்த்தெழுதலில் பெற்றுக்கொண்டார்கள்.+ வேறு சிலர், அதைவிட மேலான உயிர்த்தெழுதல் கிடைப்பதற்காக, விடுதலை* பெறச் சம்மதிக்காமல் சித்திரவதையைச் சகித்தார்கள். 36  மற்றவர்கள் கேலி செய்யப்பட்டார்கள், முள்சாட்டையால் அடிக்கப்பட்டார்கள், சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்,+ சிறையில் தள்ளப்பட்டார்கள்.+ 37  அதோடு கல்லெறியப்பட்டார்கள்,+ சோதிக்கப்பட்டார்கள், இரண்டாக அறுத்துக் கொல்லப்பட்டார்கள், வாளால் வெட்டப்பட்டார்கள்,+ உபத்திரவங்களின்போது செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போட்டிருந்தார்கள்,+ வறுமையில் வாடினார்கள், உபத்திரவத்தை அனுபவித்தார்கள்,+ கொடுமைக்கு ஆளானார்கள்.+ 38  அப்படிப்பட்டவர்களைப் பெற்றிருக்க இந்த உலகத்துக்கு அருகதை இல்லாமல்போனது; அவர்கள் பாலைவனங்களிலும் மலைகளிலும் அலைந்து திரிந்தார்கள், குகைகளிலும்+ குழிகளிலும் தஞ்சம் புகுந்தார்கள். 39  அவர்கள் எல்லாரும் தங்களுடைய விசுவாசத்தால் கடவுளிடமிருந்து நற்சாட்சி பெற்றிருந்தாலும் அவர் தந்த வாக்குறுதி நிறைவேறுவதைப் பார்க்கவில்லை. 40  ஏனென்றால், நமக்கு முன்பே அவர்கள் பரிபூரணம் அடையாதபடி, மேலான ஒன்றை நமக்குக் கொடுக்க கடவுள் நினைத்திருந்தார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “நம்பகமான ஆதாரத்தை.”
வே.வா., “சகாப்தங்களில்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “ஒழுங்கமைக்கப்பட்டன.”
வே.வா., “காணிக்கைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் கடவுள் சாட்சி கொடுத்தாரே.”
வே.வா., “கருத்தரிப்பதற்குப் பலம் பெற்றாள்.”
வே.வா., “நம்பகமானவர்.”
நே.மொ., “செத்தவர் போலிருந்த.”
வே.வா., “தன்னுடைய சவ அடக்கத்தைப் பற்றிய.”
வே.வா., “கட்டளையையும்.”
நே.மொ., “கிறிஸ்துவாக.”
நே.மொ., “தொடாதபடி.”
வே.வா., “ஏதோவொரு மீட்புவிலை கொடுத்து விடுதலை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா