Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா உங்களுக்கு பலம் கொடுப்பார்

யெகோவா உங்களுக்கு பலம் கொடுப்பார்

“படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்.”—சங். 41:3.

பாடல்கள்: 23, 138

1, 2. பைபிள் காலங்களில் யெகோவா என்ன செய்தார், இன்று சிலர் எப்படி யோசிக்கலாம்?

நீங்கள் எப்போதாவது உடம்பு முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறீர்களா? அப்போது, ‘என் உடம்பு சரியாயிடுமா?’ என்று யோசித்திருப்பீர்கள். ஒருவேளை உங்கள் குடும்பத்தாரோ நண்பரோ அப்படி கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தால், ‘இவர் சீக்கிரமா குணமாயிடுவாரா?’ என்று யோசித்திருப்பீர்கள். நீங்களும் உங்கள் சொந்தபந்தங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்புதான். பைபிள் காலத்தில் இருந்த சிலர், உடல்நிலை மோசமாக இருந்த சமயத்தில் அவர்கள் குணமாவார்களா என்று யோசித்தார்கள். உதாரணத்துக்கு, ஆகாப் மற்றும் யேசபேலின் மகனான அகசியாவுக்கு விபத்து ஏற்பட்டபோது, தனக்கு குணமாகுமா என்று கவலைப்பட்டார். சீரியாவை சேர்ந்த பெனாதாத் ராஜாவும் வியாதியால் கஷ்டப்பட்டபோது அவர் குணமாவாரா என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்.—2 இரா. 1:2; 8:7, 8

2 யெகோவா சிலரை அற்புதமாகக் குணமாக்கினார், அவருடைய தீர்க்கதரிசிகளை பயன்படுத்தி இறந்துபோன சிலரை உயிரோடு எழுப்பினார் என்று பைபிள் சொல்கிறது. (1 இரா. 17:17-24; 2 இரா. 4:17-20, 32-35) ஆனால், இன்று நமக்கு இருக்கும் வியாதிகளை யெகோவா அற்புதமாகக் குணமாக்குவாரா என்று சிலர் யோசிக்கலாம்.

3-5. யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் என்ன செய்ய சக்தி இருக்கிறது, எந்தெந்த கேள்விகளுக்கு நாம் பதில் தெரிந்துகொள்ள போகிறோம்?

3 யெகோவா தேவனால் வியாதிகளை குணமாக்கவும் முடியும், அதை வரவைக்கவும் முடியும். உதாரணத்துக்கு ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த பார்வோனையும், மோசேயின் அக்கா மிரியாமையும் வியாதியால் தண்டித்தார். (ஆதி. 12:17; எண். 12:9, 10; 2 சா. 24:15) இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமல் போனதால் “பிணியையும், [அதாவது நோயையும்] வாதையையும்” கொடுத்து யெகோவா அவர்களை தண்டித்தார். (உபா. 28:58-61) மற்ற சமயங்களில் அவர்களுக்கு எந்த வியாதியும் வராமல் பாதுகாத்திருக்கிறார். (யாத். 23:25; உபா. 7:15) அதோடு, வியாதியால் கஷ்டப்பட்டவர்களை யெகோவா குணப்படுத்தியும் இருக்கிறார். ஒருசமயம் யோபு மோசமான வியாதியால் கஷ்டப்பட்டார், ‘சாவதே மேல்’ என்றுகூட நினைத்தார். ஆனால், யெகோவா அவரை முழுமையாகக் குணமாக்கினார்.—யோபு 2:7; 3:11 42:10, 16.

4 அப்படியென்றால், யெகோவா தேவனால் வியாதிகளை நிச்சயம் குணப்படுத்த முடியும். இயேசுவுக்கும் வியாதிகளைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. அவர் பூமியில் இருந்தபோது தொழுநோய், காக்காய்வலிப்பு போன்ற நோய்களைக் குணப்படுத்தினார். பார்வை இல்லாதவர்களையும், ஊனமாக இருந்தவர்களையும் குணப்படுத்தினார். (மத்தேயு 4:23, 24-ஐ வாசியுங்கள்; யோவா. 9:1-7) இதையெல்லாம் யோசித்துப் பார்க்கும்போது புதிய உலகத்தில் இயேசு செய்யப்போகும் அற்புதங்களைப் பார்க்க நமக்கு ஆசையாக இருக்கிறது இல்லையா? அந்தச் சமயத்தில், ‘வியாதிப்பட்டிருக்கிறேன்’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.—ஏசா. 33:24.

5 நமக்கு ஏதாவது மோசமான வியாதி வந்துவிட்டால் யெகோவாவும் இயேசுவும் நம்மை அற்புதமாகக் குணமாக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாமா? ஒரு சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு என்னென்ன விஷயங்களை யோசித்துப் பார்க்க வேண்டும்?

யெகோவாவை நம்பியிருங்கள்

6. முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் செய்த அற்புதங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

6 முதல் நூற்றாண்டில், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் சிலருக்கு அற்புதங்களைச் செய்கிற சக்தியை யெகோவா கொடுத்தார். (அப். 3:2-7; 9:36-42) அவர்களால் வியாதிகளைக் குணப்படுத்த முடிந்தது, வித்தியாசமான மொழிகளில் பேச முடிந்தது. (1 கொ. 12:4-11) ஆனால் சில காலத்துக்குப் பிறகு, அந்த அற்புதங்கள் எதுவும் நடக்கவில்லை. (1 கொ. 13:8) அதனால், இன்றும் யெகோவா நம்மையோ நம் குடும்பத்தாரையோ அற்புதமாகக் குணப்படுத்துவார் என்று எதிர்பார்க்க முடியாது.

7. சங்கீதம் 41:3 நமக்கு எப்படி ஆறுதலாக இருக்கிறது?

7 அன்று வாழ்ந்த தம்முடைய ஊழியர்கள் சிலரை யெகோவா அற்புதமாகக் குணப்படுத்தவில்லை என்றாலும் அவர்களை பலப்படுத்தினார், ஆறுதல் தந்தார். அதேபோல் நம்மையும் பலப்படுத்துவார். “சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்” என்று தாவீது ராஜா எழுதினார். (சங். 41:1, 2) கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்பவர்கள் சாவே இல்லாமல் வாழ்வார்கள் என்று தாவீது சொல்லவில்லை. ஏனென்றால், தாவீது வாழ்ந்த காலத்தில் அப்படி இரக்கம் காட்டியவர்கள் நிரந்தரமாக வாழவில்லை. அப்படியென்றால், அவர்களுக்கு யெகோவா எப்படி உதவி செய்வார்? தாவீதே அதற்குப் பதில் சொல்கிறார்: “படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.” (சங். 41:3) யெகோவா அவருடைய மக்கள் படும் கஷ்டங்களை எல்லாம் நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார், அவர்களை மறக்கவே மாட்டார். அவர்களுக்குத் தைரியத்தையும் ஞானத்தையும் கொடுப்பார். அதுமட்டுமல்ல, வியாதி வந்தால் மனித உடல் தானாக சரியாகும் விதத்தில்தான் யெகோவா படைத்திருக்கிறார்.

8. சங்கீதம் 41:4 சொல்கிறபடி தாவீது யெகோவாவிடம் என்ன கேட்டார்?

8 தாவீது ஒருசமயம், “கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும்” என்று சொன்னார். (சங். 41:4) உடல்நிலை ரொம்ப மோசமாக இருந்த சமயத்தில் தாவீது இதை எழுதியிருக்கலாம். அந்த சமயத்தில் அவருடைய மகன் அப்சலோம், ராஜ பதவியை அபகரிப்பதற்காக தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருந்தான். தாவீதால் அதை தடுத்து நிறுத்த முடியவில்லை. பத்சேபாளோடு செய்த தவறினால்தான் இந்த கஷ்டமெல்லாம் வந்தது என்று தாவீதுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. (2 சா. 12:7-14) இருந்தாலும், யெகோவா தன்னை மன்னித்துவிட்டார் என்று தாவீதுக்குத் தெரியும். தன்னுடைய வியாதியைத் தாங்கிக்கொள்வதற்கு உதவி செய்வார் என்றும் நம்பினார். ஆனால், யெகோவா தனக்கு ஏதாவது அற்புதம் செய்ய வேண்டும் என்று தாவீது எதிர்பார்த்தாரா?

9. (அ) எசேக்கியா ராஜாவுக்கு யெகோவா என்ன அற்புதம் செய்தார்? (ஆ) யெகோவாவிடம் தாவீது எதை எதிர்பார்த்தார்?

9 வியாதியாக இருந்த சிலரை யெகோவா குணப்படுத்தியிருக்கிறார். உதாரணத்துக்கு, எசேக்கியா ராஜா சாகும் நிலையில் இருந்தபோது யெகோவா அவரைக் குணப்படுத்தினார்; அதனால் அவர் இன்னும் 15 வருஷங்கள் வாழ்ந்தார். (2 இரா. 20:1-6) யெகோவா தன்னை அற்புதமாகக் குணமாக்க வேண்டும் என்று தாவீது எதிர்பார்க்கவில்லை. ‘சிறுமைப்பட்டவர்கள்மீது’ இரக்கம் காட்டுகிறவர்களுக்கு யெகோவா எப்படி உதவி செய்வாரோ அதேபோன்ற உதவியைத்தான் தாவீது எதிர்பார்த்தார். யெகோவாவோடு தாவீதுக்கு நெருங்கிய பந்தம் இருந்ததால், யெகோவா தன்னைப் பலப்படுத்த வேண்டும், தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அதோடு, தன்னுடைய உடல்நிலை தானாகவே சரியாக வேண்டும் என்றும் எதிர்பார்த்தார். நாமும் வியாதியால் கஷ்டப்படும்போது தாவீதைப் போலவே யெகோவாவிடம் இப்படி உதவி கேட்கலாம்.—சங். 103:3.

10. துரோப்பீமுவுக்கும் எப்பாப்பிரோதீத்துவுக்கும் என்ன ஆனது, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

10 அப்போஸ்தலன் பவுலுக்கு நோய்களைக் குணமாக்கும் சக்தி இருந்தாலும் அவர் சிலரைத்தான் அற்புதமாகக் குணமாக்கினார். (அப்போஸ்தலர் 14:8-10-ஐ வாசியுங்கள்.) புபிலியுவுடைய அப்பாவின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருந்தபோது பவுல் “ஜெபம் செய்து, அவர்மீது கைகளை வைத்து அவரைக் குணப்படுத்தினார்.” (அப். 28:8) ஆனால், பவுல் தனக்குத் தெரிந்த எல்லாரையுமே குணப்படுத்தவில்லை. உதாரணத்துக்கு, பவுலும் அவருடைய நண்பரான துரோப்பீமுவும் மிஷனரி பயணம் செய்தார்கள். (அப். 20:3-5, 22; 21:29) ஆனால், அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது பவுல் அவரைக் குணப்படுத்தவில்லை. அதனால் துரோப்பீமு, மிஷனரி பயணத்தை நிறுத்திவிட்டு உடல்நிலை சரியாவதற்காக மிலேத்துவில் தங்கிவிட்டார். (2 தீ. 4:20) பவுலுடைய மற்றொரு நண்பரான எப்பாப்பிரோதீத்துவும் ‘நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்.’ ஆனால், பவுல் அவரைக் குணப்படுத்தியதாக பைபிள் எதுவும் சொல்லவில்லை.—பிலி. 2:25-27, 30.

எப்படிப்பட்ட ஆலோசனையைக் கேட்க வேண்டும்?

11, 12. லூக்காவைப் பற்றி என்ன விஷயங்கள் நமக்குத் தெரியும், அவர் பவுலுக்கு எப்படி உதவி செய்திருக்கலாம்?

11 லூக்கா ஒரு மருத்துவராக இருந்தார்; பவுலோடு சேர்ந்து மிஷனரி பயணமும் செய்தார். (அப். 16:10-12; 20:5, 6; கொலோ. 4:14) பவுலுக்கும் மற்றவர்களுக்கும் உடம்பு சரியில்லாமல் போனபோதெல்லாம் லூக்கா அவர்களுக்கு உதவி செய்திருப்பார். (கலா. 4:13) “நோயாளிகளுக்கே மருத்துவர் தேவை” என்ற இயேசுவின் வார்த்தைகளை இது நமக்கு ஞாபகப்படுத்துகிறது.—லூக். 5:31.

12 லூக்கா எந்த இடத்தில், எந்த சமயத்தில் மருத்துவ பயிற்சி எடுத்துக்கொண்டார் என்று பைபிள் சொல்வதில்லை. ஆனால், கொலோசே சபைக்கு பவுல் கடிதம் எழுதியபோது லூக்காவின் வாழ்த்தையும் அவர்களுக்குத் தெரிவித்தார். அப்படியென்றால், கொலோசே சபையில் இருந்தவர்களுக்கு லூக்காவை ஏற்கெனவே தெரிந்திருந்தது. இதை வைத்து பார்க்கும்போது அவர் ஒருவேளை கொலோசேவுக்குப் பக்கத்தில் இருந்த லவோதிக்கேயாவில் ஒரு மருத்துவ பள்ளியில் படித்திருக்கலாம். அப்படியென்றால், லூக்கா வெறுமனே மருத்துவ ஆலோசகராக இல்லை, ஒரு மருத்துவராக சிகிச்சைகளையும் கொடுத்தார் என்று தெரிகிறது. அதோடு, அப்போஸ்தலர் புத்தகத்தையும் லூக்கா புத்தகத்தையும் எழுதியபோது மருத்துவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை லூக்கா பயன்படுத்தினார். இயேசு செய்த அற்புதங்களைப் பற்றிய நுணுக்கமான தகவல்களையும் எழுதினார்.

13. மருத்துவ ஆலோசனை கொடுக்கும்போதும் அதை ஏற்றுக்கொள்ளும்போதும் நாம் என்ன செய்ய வேண்டும்?

13 இன்று அற்புதமாகக் குணப்படுத்தும் சக்தி நம் சகோதரர்கள் யாருக்குமே இல்லை. ஆனால், நமக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசையில் நாம் கேட்காமலேயே ஆலோசனைகளைக் கொடுக்கலாம். சில ஆலோசனைகள் நமக்கு நல்லதாக இருக்கலாம். உதாரணத்துக்கு, தீமோத்தேயுவிடம் திராட்சமதுவை குடிக்கும்படி பவுல் சொன்னார். தீமோத்தேயு மாசுபடிந்த தண்ணீரைக் குடித்ததால் வயிற்று வலியால் அவதிப்பட்டிருக்கலாம். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (1 தீமோத்தேயு 5:23-ஐ வாசியுங்கள்.) நமக்கு யாராவது ஆலோசனை கொடுத்தால் நாம் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, நாம் ஏதாவது உடல்நல பிரச்சினையால் கஷ்டப்படலாம். அப்போது ஒரு சகோதரர் நம்மிடம் சில உணவு வகைகளை, மூலிகைகளை சாப்பிட சொல்லலாம்; சிலவற்றைத் தவிர்க்க சொல்லலாம். ‘என் சொந்தக்காரர் ஒருத்தருக்கு இதே பிரச்சினைதான் இருந்தது. அவரும் இததான் சாப்பிட்டார். இப்போ நல்லா இருக்கார்’ என்று அவர் சொல்லலாம். ஆனால், அந்த நபருக்குக் குணமானது போல் நமக்கும் குணமாகும் என்று சொல்ல முடியாது. அதுமட்டுமல்ல, நிறையப் பேர் குறிப்பிட்ட ஒரு மருந்தையோ சிகிச்சையையோ எடுத்துக்கொள்வதால் அது சிறந்தது என்றும் சொல்ல முடியாது. நிறைய பின்விளைவுகளும் அதனால் வரலாம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.நீதிமொழிகள் 27:12-ஐ வாசியுங்கள்.

‘தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருங்கள்’

14, 15. (அ) எப்படிப்பட்ட ஆட்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? (ஆ) நீதிமொழிகள் 14:15-லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

14 ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றுதான் நாம் எல்லாருமே ஆசைப்படுவோம். அப்போதுதான் நம்மால் சந்தோஷமாக வாழ முடியும், யெகோவாவுக்கு நன்றாக சேவை செய்யவும் முடியும். ஆனால், நாம் ஆதாமின் சந்ததியில் வந்ததால் நம் எல்லாருக்குமே வியாதி வருகிறது. இன்று நிறைய விதமான சிகிச்சைகள் இருக்கின்றன. எந்த சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பது என்ற உரிமையும் நமக்கு இருக்கிறது. சில ஆட்கள் அல்லது நிறுவனங்கள் நம் வியாதிக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்லி நம்மிடம் பணம் பறிக்கலாம். அந்த மருந்தை சாப்பிட்டதால் நிறையப் பேர் குணமானதாக பொய்யும் சொல்லலாம். எப்படியாவது நம் வியாதி குணமாக வேண்டும்... இன்னும் கொஞ்சம் வருஷமாவது உயிர்வாழ வேண்டும்... என்ற ஆசையில் அவர்கள் சொல்லும் மருந்தை அல்லது சிகிச்சையை எடுத்துக்கொள்ள நாம் நினைக்கலாம். ஆனால், பைபிள் நமக்கு இப்படி ஆலோசனை கொடுக்கிறது: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”—நீதி. 14:15.

15 நாம் விவேகமாக இருந்தால் எல்லாருடைய ஆலோசனையையும் நம்பிவிட மாட்டோம். முக்கியமாக, அந்த ஆலோசனையை சொல்லும் நபருக்கு அதைப் பற்றி அதிகம் தெரியாதபோது நாம் இன்னும் கவனமாக இருப்போம். நம்மையே இப்படி கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘இந்த சத்து மருந்தை, உணவு வகையை, இல்லன்னா மூலிகையை சாப்பிட்டதுனால நிறைய பேருக்கு குணமாயிருக்குனு அவர் சொல்றார். ஆனா நிஜமாவே அப்படி குணமாயிருக்கா? ஒருவேளை அதை சாப்பிட்டு நிறைய பேருக்கு குணமாயிருந்தாலும், எனக்கும் குணமாகும்னு எப்படி சொல்ல முடியும்? இதை பத்தி நான் இன்னும் நல்லா தெரிஞ்சுக்கணுமா, இல்ல என் வியாதி பத்தி நல்லா தெரிஞ்ச டாக்டர்கிட்ட பேசி பார்க்கணுமா?’—உபா. 17:6.

16. சிகிச்சைகளை தேர்ந்தெடுக்கும்போது நாம் எதைப் பற்றி யோசிக்க வேண்டும்?

16 எந்தவொரு பரிசோதனையை செய்வதற்கு முன்பும் சிகிச்சையை தேர்ந்தெடுப்பதற்கு முன்பும் நாம் கவனமாக இருக்க வேண்டும். நாம் “தெளிந்த புத்தியுள்ளவர்களாக” இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (தீத். 2:12) ஒரு சிகிச்சை நமக்கு வித்தியாசமாகவோ நம்புவதற்கு கஷ்டமாகவோ இருந்தால் நாம் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். ‘அந்த சிகிச்சைய கொடுக்குறவங்க அதை பத்தி தெளிவா விளக்குறாங்களா? அவங்க சொல்றது நம்புற மாதிரி இருக்கா? இந்த சிகிச்சைய எடுத்துக்கிட்டா முழுசா குணமாக முடியும்னு மத்த டாக்டர்களும் ஒத்துக்குறாங்களா?’ என்றெல்லாம் யோசித்து பார்க்க வேண்டும். (நீதி. 22:29) சிலர் நம்மிடம், ‘இந்த நோய்க்கு அந்த இடத்துல மருந்து கண்டுபிடிச்சிருக்காங்க. டாக்டர்களுக்கெல்லாம் அதை பத்தி தெரியாது’ என்று சொல்லலாம். ஆனால், நிஜமாகவே அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டார்களா என்று நாம் கவனமாக யோசித்துப் பார்க்க வேண்டும். சிகிச்சை கொடுக்கிறவர்கள் அந்த மருந்தை எப்படி செய்கிறார்கள், அதில் என்ன கலந்திருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டார்கள். அந்த மருந்தில் ஏதோவொரு விசேஷ சக்தி இருப்பதாகச் சொல்வார்கள். இதெல்லாம் ரொம்ப ஆபத்தானது. ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு விஷயத்திலும் ஈடுபடக் கூடாது என்று யெகோவா நம்மை எச்சரிக்கிறார்.—உபா. 18:10-12.

“நலமாயிருப்பீர்களாக!”

17. என்ன இயல்பான ஆசை நம் எல்லாருக்கும் இருக்கிறது?

17 முதல் நூற்றாண்டில் ஆளும் குழுவில் இருந்தவர்கள் சபைகளுக்கு எழுதிய கடிதத்தில், சகோதரர்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி சொன்னார்கள். அந்தக் கடிதத்தின் முடிவில், “இவற்றை அறவே தவிர்த்தீர்கள் என்றால், சிறப்புடன் வாழ்வீர்கள். நலமாயிருப்பீர்களாக!” என்று எழுதினார்கள். (அப். 15:29) இந்த வார்த்தைகளை பொதுவாக ஒரு கடிதத்தின் முடிவில் சொல்லி முடிப்பார்கள். நாம் எல்லாரும் ஆரோக்கியமாக இருக்க ஆசைப்படுவதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.

ஆரோக்கியமாக இருக்க ஆசைப்படுவது இயல்புதான். இருந்தாலும் யெகோவாவுக்கு சேவை செய்வதுதான் நமக்கு முக்கியமாக இருக்க வேண்டும் (பாரா 17)

18, 19. புதிய உலகத்தில் நாம் எதற்காக ஆசை ஆசையாக காத்துக்கொண்டிருக்கிறோம்?

18 நாம் பாவிகளாக இருப்பதால் நம்மால் வியாதியிலிருந்து தப்பிக்க முடியாது. இன்று நமக்கு ஏதாவது வியாதி வந்தால் யெகோவா அதை அற்புதமாகக் குணப்படுத்துவார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், வெளிப்படுத்துதல் 22:1, 2 சொல்வதுபோல் சீக்கிரத்தில் எல்லாருடைய வியாதியையும் யெகோவா நிரந்தரமாக நீக்கப்போகிறார். அந்த வசனத்தில் அப்போஸ்தலன் யோவான், எல்லாரையும் குணமாக்கும் ‘வாழ்வளிக்கும் தண்ணீரை’ பற்றியும் ‘வாழ்வளிக்கும் மரங்களை’ பற்றியும் சொன்னார். இன்றோ எதிர்காலத்திலோ நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய எந்தவொரு மூலிகை வைத்தியத்தையும் இது குறிக்கவில்லை. ஆனால், நமக்கு முடிவில்லா வாழ்வைக் கொடுப்பதற்காக யெகோவாவும் இயேசுவும் செய்திருக்கிற எல்லா ஏற்பாடுகளையும் குறிக்கிறது.—ஏசா. 35:5, 6

19 அந்த அருமையான நாளுக்காக நாம் ஆசை ஆசையாக காத்துக்கொண்டிருந்தாலும் இன்றே நாம் ஒரு விஷயத்தை உறுதியாக நம்பலாம். அதாவது, யெகோவா நம் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார், நாம் படும் கஷ்டங்களை நன்றாகப் புரிந்துகொள்கிறார்; நமக்கு ஏதாவது வியாதி வரும்போது யெகோவா நம்மை கைவிடவே மாட்டார் என்று உறுதியாக நம்பலாம். தாவீது சொன்னதுபோல், “நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்” என்று சொல்லலாம்.—சங். 41:12.

^ பாரா. 13 டைஃபாய்ட் மற்றும் வேறு சில மோசமான நோய்கள் வருவதற்கு காரணமாக இருக்கும் கிருமிகளோடு திராட்சமது கலக்கும்போது அந்த கிருமிகள் செத்துவிடும் என்று தி ஆர்ஜின்ஸ் அண்ட் ஏன்சியன்ட் ஹிஸ்ட்ரி ஆஃப் வைன் என்ற புத்தகம் சொல்கிறது.