அப்போஸ்தலர் 14:1-28

14  இக்கோனியாவில் யூதர்களுடைய ஜெபக்கூடத்துக்கு அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாகப் போனார்கள். அங்கே அவர்கள் திறமையாகப் பேசியதால் ஏராளமான யூதர்களும் கிரேக்கர்களும் இயேசுவின் சீஷர்களானார்கள்.  ஆனால், விசுவாசம் வைக்காத யூதர்கள் மற்ற தேசத்து மக்களுடைய* மனதைக் கெடுத்து, அந்தச் சகோதரர்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிட்டார்கள்.+  அதனால், அவர்கள் இரண்டு பேரும் அங்கே பல வாரங்கள் தங்கி, யெகோவா* தந்த அதிகாரத்தில் தைரியமாகப் பேசிவந்தார்கள். அவர் தன்னுடைய அளவற்ற கருணையைப் பற்றிய செய்திக்குச் சாட்சியாக அவர்கள் மூலம் அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்தார்.+  இருந்தாலும், நகர மக்களுக்கு இடையில் பிரிவினை உண்டானது; சிலர் யூதர்களின் பக்கமும் சிலர் அப்போஸ்தலர்களின் பக்கமும் சேர்ந்துகொண்டார்கள்.  அப்போஸ்தலர்களை அவமானப்படுத்திக் கல்லெறிந்து கொல்ல மற்ற தேசத்து மக்களும் யூதர்களும் யூதத் தலைவர்களும் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.+  இதைப் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டவுடன் லிக்கவோனியாவைச் சேர்ந்த நகரங்களான லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவற்றைச் சுற்றியிருந்த பகுதிகளுக்கும் தப்பித்து ஓடினார்கள்.+  அங்கே அவர்கள் நல்ல செய்தியைத் தொடர்ந்து அறிவித்து வந்தார்கள்.  லீஸ்திராவில், பிறவியிலேயே கால் ஊனமான ஒருவன் உட்கார்ந்திருந்தான்; அவன் ஒருபோதும் நடந்ததில்லை.  பவுல் பேசுவதை அவன் கேட்டுக்கொண்டிருந்தான். அதனால் பவுல் அவனை உற்றுப் பார்த்து, குணமாவதற்கு ஏற்ற விசுவாசம்+ அவனுக்கு இருப்பதைப் புரிந்துகொண்டு, 10  “எழுந்து நில்” என்று சத்தமாகச் சொன்னார். அப்போது, அவன் துள்ளியெழுந்து நடக்க ஆரம்பித்தான்.+ 11  பவுல் செய்ததைக் கூட்டத்தார் பார்த்தபோது, “தெய்வங்கள் மனுஷ உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கிறார்கள்!”+ என்று லிக்கவோனிய மொழியில் கத்தினார்கள். 12  பின்பு, பர்னபாவை சீயுஸ் என்றும், பவுல் முன்நின்று பேசியதால் அவரை ஹெர்மஸ் என்றும் அழைத்தார்கள். 13  நகரவாசலில் இருந்த சீயுஸ் கோயில் பூசாரி, அங்கே காளைகளையும் மாலைகளையும் கொண்டுவந்து, கூட்டத்தாரோடு சேர்ந்து அவர்களுக்குப் பலி கொடுக்க விரும்பினான். 14  ஆனால், அப்போஸ்தலர்களாகிய பர்னபாவும் பவுலும் இதைக் கேள்விப்பட்டபோது, தங்கள் மேலங்கிகளைக் கிழித்துக்கொண்டு அந்தக் கூட்டத்துக்குள் ஓடிப்போய், 15  “மக்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போல் குறைபாடுகள் உள்ள மனுஷர்கள்தான்.+ இந்த வீணான காரியங்களை விட்டுவிட்டு, வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்த உயிருள்ள கடவுளிடம்+ திரும்புங்கள், அதற்காகவே உங்களுக்கு நல்ல செய்தியைச் சொல்கிறோம். 16  கடந்த காலங்களில் அவர் எல்லா தேசத்து மக்களையும் அவரவருடைய இஷ்டப்படி நடக்க அனுமதித்திருந்தார்.+ 17  ஆனாலும், அவர் தன்னைப் பற்றிச் சாட்சி கொடுக்காமல் இருந்ததில்லை.+ எப்படியென்றால், வானத்திலிருந்து மழையையும், பருவ காலங்களில் அமோக விளைச்சலையும்,+ ஏராளமான உணவையும் உங்களுக்குத் தந்து, உங்கள் உள்ளத்தைச் சந்தோஷத்தால் நிரப்பி நன்மை செய்திருக்கிறார்”+ என்று சத்தமாகச் சொன்னார்கள். 18  இப்படிச் சொன்ன பிறகும், தங்களுக்குப் பலி செலுத்தாதபடி கூட்டத்தாரைத் தடுப்பது அவர்களுக்குப் பெரும் பாடாக இருந்தது. 19  பின்பு, அந்தியோகியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் சிலர் வந்து, கூட்டத்தாரைத் தூண்டிவிட்டு+ பவுல்மேல் கல்லெறிந்தார்கள். அதன் பின்பு, அவர் இறந்துவிட்டதாக நினைத்து நகரத்துக்கு வெளியே அவரை இழுத்துக்கொண்டுபோய்ப் போட்டார்கள்.+ 20  ஆனால், சீஷர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது அவர் எழுந்து நகரத்துக்குள் போனார். அடுத்த நாள் பர்னபாவோடு தெர்பைக்குப் புறப்பட்டுப் போனார்.+ 21  அவர்கள் இரண்டு பேரும் அந்த நகரத்தில் நல்ல செய்தியை அறிவித்து, நிறைய பேரைச் சீஷர்களாக்கினார்கள். பின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிப் போய், 22  அங்கிருந்த சீஷர்களைப் பலப்படுத்தினார்கள்;+ “கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போவதற்கு நாம் பல உபத்திரவங்களைச் சந்தித்தே தீர வேண்டும்” என்று சொல்லி, விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.+ 23  அதோடு, ஒவ்வொரு சபையிலும் அவர்களுக்காக மூப்பர்களை நியமித்து,+ விரதமிருந்து, ஜெபம் செய்து,+ யெகோவாமேல்* நம்பிக்கை வைத்திருந்த அவர்களைப் பாதுகாக்கும்படி அவரிடம் வேண்டிக்கொண்டார்கள். 24  பின்பு, அவர்கள் பிசீதியா வழியாக பம்பிலியாவுக்கு வந்தார்கள்.+ 25  பெர்கே நகரத்தில் கடவுளுடைய வார்த்தையை அறிவித்த பின்பு அத்தலியாவுக்குப் போனார்கள். 26  பிற்பாடு, அங்கிருந்து கப்பல் ஏறி அந்தியோகியாவுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். கடவுளுடைய அளவற்ற கருணையால் அவருடைய வேலை அங்குதான் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த வேலையை அவர்கள் முழுமையாகச் செய்து முடித்திருந்தார்கள்.+ 27  அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்த பின்பு, சபையில் இருந்தவர்களை ஒன்றுகூட்டி, தங்கள் மூலம் கடவுள் செய்த பல காரியங்களைப் பற்றியும், விசுவாசக் கதவை மற்ற தேசத்து மக்களுக்கு அவர் திறந்துவிட்டதைப் பற்றியும் சொன்னார்கள்.+ 28  அங்கே சீஷர்களோடு கொஞ்சக் காலம் அவர்கள் தங்கியிருந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “யூதரல்லாதவர்களுடைய.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா