அப்போஸ்தலர் 20:1-38
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மீடியா

இஸ்ரவேலில் இருக்கும் ஓநாய்கள் முக்கியமாக இரவு நேரங்களில்தான் வேட்டையாடுகின்றன. (ஆப 1:8) ஓநாய்களுக்கு முரட்டுத்தனமும் பசிவெறியும் துணிச்சலும் பேராசையும் அதிகம். அவற்றால் ஓரளவு செம்மறியாடுகளைத்தான் சாப்பிட அல்லது இழுத்துச்செல்ல முடியும் என்றாலும், பொதுவாக அதைவிட அதிகமான செம்மறியாடுகளைக் கொன்று குவிக்கின்றன. பைபிள், விலங்குகளையும் அவற்றின் குணங்களையும் பழக்கங்களையும் அடையாள அர்த்தத்தில் குறிப்பிடுகிறது. நல்ல குணங்கள், கெட்ட குணங்கள் ஆகிய இரண்டுக்குமே அடையாளமாக அவற்றைக் குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு, மரணப்படுக்கையில் இருந்தபோது யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனத்தில், வேட்டையாடுகிற ஓநாயை (கானஸ் லூபுஸ்) போல பென்யமீன் கோத்திரத்தார் இருப்பார்கள் என்று அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதி 49:27) ஆனால், பெரும்பாலான மற்ற வசனங்களில், மூர்க்கம், பேராசை, கொடூரம், தந்திரம் போன்ற கெட்ட குணங்களுக்குத்தான் ஓநாய்கள் அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. போலித் தீர்க்கதரிசிகள் (மத் 7:15), கிறிஸ்தவ ஊழியத்தைக் கொடூரமாக எதிர்க்கிறவர்கள் (மத் 10:16; லூ 10:3), கிறிஸ்தவ சபைக்குள்ளிருந்தே எழும்பும் ஆபத்தான பொய்ப் போதகர்கள் (அப் 20:29, 30) போன்ற ஆட்கள் ஓநாய்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். ஓநாய்கள் எந்தளவு ஆபத்தானவை என்று மேய்ப்பர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. “கூலிக்கு மேய்ப்பவன்,” “ஓநாய் வருவதைப் பார்த்ததுமே ஆடுகளை விட்டுவிட்டு ஓடிவிடுகிறான்” என்று இயேசு சொன்னார். கூலிக்கு மேய்ப்பவனுக்கு ‘ஆடுகள்மேல் அக்கறையில்லை’ என்றும் சொன்னார். ஆனால் இயேசு, ‘ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிற’ ‘நல்ல மேய்ப்பராக’ இருக்கிறார்.—யோவா 10:11-13.