2 ராஜாக்கள் 4:1-44

4  தீர்க்கதரிசிகளின் மகன்களில்+ ஒருவருடைய மனைவி எலிசாவிடம் வந்து, “உங்களுடைய ஊழியரான என் கணவர் இறந்துவிட்டார். அவர் எப்போதுமே யெகோவாவுக்குப் பயந்து நடந்தவர்+ என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், கடன் கொடுத்த ஒருவன் இப்போது என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் அடிமையாக்க வந்திருக்கிறான்” என்று வேதனையோடு சொன்னாள்.  அதற்கு எலிசா, “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? சரி, உன் வீட்டில் என்ன இருக்கிறது, சொல்” என்றார். அதற்கு அவள், “ஜாடியில் இருக்கிற எண்ணெயைத் தவிர வீட்டில் வேறு எதுவுமே இல்லை”+ என்று சொன்னாள்.  அப்போது அவர், “நீ போய் அக்கம்பக்கத்தில் இருக்கிற எல்லாரிடமும் காலி பாத்திரங்களை வாங்கிக்கொள். எத்தனை வாங்க முடியுமோ அத்தனையும் வாங்கிக்கொள்.  பிறகு, நீயும் உன்னுடைய மகன்களும் வீட்டுக்குள் போய் கதவைச் சாத்திக்கொள்ளுங்கள். எல்லா பாத்திரங்களிலும் எண்ணெய் ஊற்றுங்கள்; நிரம்பிய பாத்திரங்களைத் தனியாக எடுத்து வைத்துவிடுங்கள்” என்று சொன்னார்.  அதன்படியே, அவள் அங்கிருந்து போனாள். அவளும் அவளுடைய மகன்களும் வீட்டுக்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டார்கள். அவளுடைய மகன்கள் ஒவ்வொரு பாத்திரமாக அவளிடம் கொடுக்க, அவளும் அவற்றில் எண்ணெய் ஊற்றிக்கொண்டே இருந்தாள்.+  பாத்திரங்கள் எல்லாம் நிரம்பியதும் தன்னுடைய மகன்களில் ஒருவனிடம், “இன்னொரு பாத்திரத்தைத் தா”+ என்று கேட்டாள். அப்போது அவன், “அவ்வளவுதான், வேறு பாத்திரம் இல்லை” என்று சொன்னான். அத்துடன் எண்ணெய் வருவது நின்றுவிட்டது.+  பின்பு, உண்மைக் கடவுளின் ஊழியரிடம் அவள் வந்து நடந்ததைச் சொன்னாள். அதற்கு அவர், “நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனை அடைத்துவிடு. மீதியிருக்கிற பணத்தை வைத்து நீயும் உன் மகன்களும் பிழைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்.  ஒருநாள், சூனேம்+ ஊருக்கு எலிசா போனார். அங்கே செல்வாக்குள்ள ஒரு பெண் இருந்தாள். அவள் தன்னுடைய வீட்டில் சாப்பிடச் சொல்லி எலிசாவை வற்புறுத்தினாள்.+ அதனால், அந்த வழியாகப் போகும்போதெல்லாம் அவளுடைய வீட்டில்தான் அவர் சாப்பிடுவார்.  ஒருநாள் அவள் தன் கணவனிடம், “அடிக்கடி இந்த வழியாகப் போகிறாரே, அவர் கடவுளின் ஊழியர்.* 10  அதனால், மொட்டைமாடியில் அவருக்கு ஒரு சின்ன அறை+ கட்டிக்கொடுக்கலாம். அதில் ஒரு கட்டிலையும் மேஜை நாற்காலியையும் விளக்குத்தண்டையும் வைக்கலாம். இங்கே வரும்போதெல்லாம் அந்த அறையில் அவர் தங்கிக்கொள்ளட்டும்”+ என்று சொன்னாள். 11  ஒருநாள், எலிசா அவளுடைய வீட்டுக்கு வந்தார்; பின்பு, படுத்துக்கொள்ள மாடி அறைக்குப் போனார். 12  அப்போது தன்னுடைய ஊழியன் கேயாசியிடம்,+ “அந்த சூனேமியப்+ பெண்ணைக் கூப்பிடு” என்று சொன்னார். அவனும் கூப்பிட்டான், அந்தப் பெண் அங்கே வந்து நின்றாள். 13  பின்பு அவர் கேயாசியைப் பார்த்து, “நீ அந்தப் பெண்ணிடம், ‘நீ எங்களுக்காக எவ்வளவோ சிரமப்பட்டிருக்கிறாய்.+ உனக்கு என்ன வேண்டும்?+ உனக்காக ராஜாவிடமோ படைத் தளபதியிடமோ பேச வேண்டுமா?’+ என்று நான் கேட்டதாகத் தயவுசெய்து சொல்” என்றார். அதற்கு அவள், “எனக்கு எதுவும் வேண்டாம், சொந்த ஊரில் நிம்மதியாகத்தான் இருக்கிறேன்” என்று சொன்னாள். 14  அதனால் எலிசா, “அவளுக்கு வேறென்ன உதவி செய்யலாம்?” என்று கேயாசியிடம் கேட்டார். அதற்கு கேயாசி, “அவளுக்கு மகன் இல்லை,+ அவளுடைய கணவருக்கும் வயதாகிவிட்டது” என்று சொன்னான். 15  உடனே அவர், “அவளைக் கூப்பிடு” என்று சொன்னார். கேயாசி அவளைக் கூப்பிட்டபோது, அவள் கதவருகே வந்து நின்றாள். 16  அப்போது எலிசா, “அடுத்த வருஷம் இந்த நேரத்தில் உன் மடியில் ஒரு மகன் இருப்பான்”+ என்று சொன்னார். அதற்கு அவள், “எஜமானே, நீங்கள் உண்மைக் கடவுளின் ஊழியர். இந்த அடிமைப் பெண்ணிடம் பொய் சொல்லாதீர்கள்” என்றாள். 17  ஆனால், எலிசா சொன்னபடியே அந்தப் பெண் கர்ப்பமாகி, அடுத்த வருஷம் அதே சமயத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். 18  அந்தப் பையன் வளர்ந்தான்; ஒருநாள், அவனுடைய அப்பா அறுவடை செய்கிறவர்களுடன் இருந்தார், அவன் அங்கே போனான். 19  தன் அப்பாவிடம், “தலை வலிக்கிறது, தலை வலிக்கிறது” என்று சொல்லிக்கொண்டே இருந்தான். அதனால் அவர் தன்னுடைய வேலைக்காரனிடம், “இவனைக் கொண்டுபோய் இவனுடைய அம்மாவிடம் விடு” என்று சொன்னார். 20  அவனும் அந்தப் பையனைத் தூக்கிக்கொண்டுபோய் அவனுடைய அம்மாவிடம் விட்டான். அந்தப் பையன் மத்தியானம்வரை அவளுடைய மடியில் உட்கார்ந்திருந்தான், பின்பு இறந்துவிட்டான்.+ 21  அப்போது, அவள் மாடிக்குப் போய் உண்மைக் கடவுளுடைய ஊழியரின்+ கட்டிலில் அவனைக் கிடத்தினாள். பின்பு, கதவைச் சாத்திவிட்டு வந்தாள். 22  தன் கணவனைக் கூப்பிட்டு, “தயவுசெய்து ஒரு வேலைக்காரனையும் கழுதையையும் என்னோடு அனுப்பி வையுங்கள். நான் சீக்கிரமாக உண்மைக் கடவுளின் ஊழியரைப் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்று சொன்னாள். 23  அதற்கு அவர், “இன்று மாதப் பிறப்போ*+ ஓய்வுநாளோ இல்லையே, ஏன் இன்றைக்குப் போகிறாய்?” என்று கேட்டார். அவளோ, “பரவாயில்லை, போய்விட்டு வருகிறேன்” என்று சொன்னாள். 24  கழுதைமேல் சேணம்* வைத்து ஏறியதும் தன் வேலைக்காரனிடம், “வேகமாகப் போ, நான் சொன்னால் தவிர எங்கேயும் நிற்காதே” என்று சொன்னாள். 25  உண்மைக் கடவுளின் ஊழியரைப் பார்க்க கர்மேல் மலைக்குப் போனாள். அவள் தூரத்தில் வரும்போதே அவர் பார்த்துவிட்டார். உடனே தன் ஊழியனான கேயாசியிடம், “அதோ பார், சூனேமியப் பெண் வந்துகொண்டிருக்கிறாள். 26  நீ ஓடிப்போய் அவளிடம், ‘நன்றாக இருக்கிறாயா? உன் கணவரும் மகனும் நன்றாக இருக்கிறார்களா?’ என்று தயவுசெய்து கேள்” என்றார். அவன் போய் அவளிடம் விசாரித்தபோது, “எல்லாரும் நன்றாக இருக்கிறோம்” என்று சொன்னாள். 27  உண்மைக் கடவுளின் ஊழியரிடம் அவள் வந்தவுடன், அவருடைய காலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.+ அதைப் பார்த்ததும் அவளைத் தள்ளிவிடுவதற்காக கேயாசி வந்தான். ஆனால் உண்மைக் கடவுளின் ஊழியரோ, “அவளை விட்டுவிடு, அவள் ரொம்ப நொந்துபோயிருக்கிறாள். அதற்கான காரணம் எனக்குத் தெரியாது, யெகோவா அதைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை” என்றார். 28  அப்போது அவள், “எஜமானே, எனக்கு ஒரு மகன் வேண்டுமென்று நான் உங்களிடம் கேட்டேனா? ‘என்னை ஏமாற்றாதீர்கள்’+ என்று நான் உங்களிடம் சொன்னேன், இல்லையா?” என்று கேட்டாள். 29  உடனே அவர் கேயாசியிடம், “உன்னுடைய உடையை இடுப்பில் இழுத்துக் கட்டிக்கொண்டு+ புறப்படு, என்னுடைய தடியைக் கையில் எடுத்துக்கொள். வழியில் யாரிடமும் நலம் விசாரித்துக்கொண்டிருக்காதே; யாராவது உன்னிடம் விசாரித்தாலும், எதுவும் பேசாதே. போய் அந்தப் பையனுடைய முகத்தில் என்னுடைய தடியை வை” என்று சொன்னார். 30  அப்போது அந்தப் பையனின் அம்மா அவரிடம், “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* உங்கள் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நீங்கள் வராமல் நான் இங்கிருந்து போகவே மாட்டேன்”+ என்று சொன்னாள். அதனால், எலிசாவும் அவளுடன் போனார். 31  கேயாசி அவர்களுக்கு முன்னால் போய் அந்தப் பையனின் முகத்தில் தடியை வைத்தான். ஆனாலும், அவனுக்குப் பேச்சுமூச்சே வரவில்லை.+ அதனால் கேயாசி எலிசாவிடம் வந்து, “பையன் எழுந்திருக்கவில்லை” என்று சொன்னான். 32  எலிசா அவளுடைய வீட்டுக்கு வந்தபோது, செத்துப்போன அந்தப் பையனின் உடல் அவருடைய கட்டிலில் இருந்தது.+ 33  அவர்கள் இரண்டு பேரும் வெளியில் நிற்க, அவர் மட்டும் உள்ளே போய் கதவைச் சாத்திக்கொண்டு யெகோவாவிடம் ஜெபம் செய்தார்.+ 34  பின்பு, கட்டிலில் ஏறி தன் வாயை அந்தப் பையனின் வாய்மீதும், தன் கண்களை அவனுடைய கண்கள்மீதும், தன் உள்ளங்கைகளை அவனுடைய உள்ளங்கைகள்மீதும் வைத்துப் படுத்துக்கொண்டார். அப்போது, அவனுடைய உடல் சூடாக ஆரம்பித்தது.+ 35  எலிசா அந்த வீட்டுக்குள் அங்குமிங்கும் நடந்துவிட்டு, மறுபடியும் கட்டிலில் ஏறி அந்தப் பையன்மீது படுத்துக்கொண்டார். அப்போது அந்தப் பையன் ஏழு தடவை தும்மிவிட்டு, தன் கண்களைத் திறந்தான்.+ 36  எலிசா உடனே கேயாசியைக் கூப்பிட்டு, “சூனேமியப் பெண்ணை வரச் சொல்” என்றார். அவன் கூப்பிட்டதும் அவள் உள்ளே வந்தாள். அப்போது எலிசா, “உன்னுடைய மகனைத் தூக்கிக்கொள்”+ என்று சொன்னார். 37  அவள் உள்ளே வந்து அவருடைய காலடியில் மண்டிபோட்டு தலைவணங்கினாள். பிறகு, தன்னுடைய மகனைத் தூக்கிக்கொண்டு போனாள். 38  அதன் பின்பு, எலிசா கில்காலுக்குத் திரும்பிப் போனார்; அந்தச் சமயத்தில், அந்த இடம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.+ தீர்க்கதரிசிகளின் மகன்கள்+ அவர் முன்னால் உட்கார்ந்திருந்தார்கள். அவர் தன்னுடைய ஊழியனிடம்,+ “பெரிய பானையில் கூழ் காய்ச்சி தீர்க்கதரிசிகளின் மகன்களுக்குக் கொடு” என்று சொன்னார். 39  அதனால், அங்கிருந்த ஒருவர் காய்கறிகளைப் பறித்துவர வயலுக்குப் போனார். வரும்போது காட்டுச் செடியிலிருந்து கொம்மட்டிக் காய்களைப் பறித்து, தன் உடை நிறைய கொண்டுவந்தார். தான் பறித்து வந்தது என்னவென்றே தெரியாமல், அவற்றை நறுக்கி கூழ் பானையில் போட்டார். 40  பின்பு, தீர்க்கதரிசிகளின் மகன்களுக்கு அதைப் பரிமாறினார்கள். அந்தக் கூழை வாயில் வைத்தவுடன், “கடவுளின் ஊழியரே, இந்தப் பானையில் இருப்பது விஷம்!” என்று அவர்கள் அலறினார்கள். அதற்குமேல் அவர்களால் அதைச் சாப்பிட முடியவில்லை. 41  அதனால் எலிசா, “கொஞ்சம் மாவு கொண்டுவாருங்கள்” என்று சொன்னார். அதைப் பானையில் போட்டு, “இப்போது மக்களுக்குப் பரிமாறுங்கள்” என்று சொன்னார். அப்போது, அந்தக் கூழில் இருந்த விஷம் போயிருந்தது.+ 42  பாகால்-சலீஷாவிலிருந்து+ ஒருவர் உண்மைக் கடவுளின் ஊழியரிடம் வந்தார். முதல் அறுவடையிலிருந்து செய்யப்பட்ட 20 பார்லி ரொட்டிகளையும்,+ பை நிறைய புது தானியத்தையும்+ அவரிடம் கொண்டுவந்தார். அப்போது எலிசா, “இவற்றை மக்களுக்குக் கொடுங்கள், அவர்கள் சாப்பிடட்டும்” என்று சொன்னார். 43  அப்போது அவருடைய ஊழியன், “இதை எப்படி 100 பேருக்குப் பரிமாறுவது?”+ என்று கேட்டான். அதற்கு எலிசா, “மக்களுக்குக் கொடுங்கள். ‘அவர்கள் திருப்தியாகச் சாப்பிட்ட பிறகுகூட மீதியிருக்கும்’+ என்று யெகோவா சொல்கிறார்” என்று சொன்னார். 44  அந்த ஊழியன் அவர்களுக்குப் பரிமாறினான். யெகோவா சொன்னபடியே, அவர்கள் சாப்பிட்ட பிறகுகூட கொஞ்சம் மீதியிருந்தது.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “பரிசுத்த மனிதர்.”
வே.வா., “முதலாம் பிறையோ.”
சேணம் என்பது மிருகங்களின் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதற்குப் போடப்படும் தோலினால் ஆன இருக்கை.
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “நீங்கள் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா