2 ராஜாக்கள் 8:1-29

8  எலிசா தான் உயிரோடு எழுப்பிய பையனின்+ அம்மாவிடம், “இந்தத் தேசத்தில் ஏழு வருஷங்களுக்குப் பஞ்சம் இருக்கும் என்று யெகோவா தெரிவித்திருக்கிறார்.+ அதனால், நீ குடும்பத்தோடு வேறொரு தேசத்துக்குப் போய்க் குடியிரு” என்று சொல்லியிருந்தார்.  உண்மைக் கடவுளின் ஊழியர் சொன்னபடியே அந்தப் பெண் செய்தாள். குடும்பத்தோடு பெலிஸ்தியர்களின் தேசத்துக்குப்+ போய் ஏழு வருஷங்கள் குடியிருந்தாள்.  ஏழு வருஷங்கள் கழித்து பெலிஸ்தியர்களின் தேசத்திலிருந்து அந்தப் பெண் திரும்பி வந்தாள்; தன்னுடைய வீட்டையும் வயலையும் மீட்டுக் கொடுக்கச் சொல்லி முறையிடுவதற்காக ராஜாவிடம் போனாள்.  அந்தச் சமயத்தில், எலிசாவின் ஊழியனான கேயாசியிடம் ராஜா பேசிக்கொண்டிருந்தார். “எலிசா செய்த அற்புத செயல்கள்+ எல்லாவற்றையும் தயவுசெய்து எனக்கு விலாவாரியாகச் சொல்லுங்கள்” என்று அவனிடம் கேட்டார்.  இறந்துபோன பையனை எலிசா எப்படி உயிரோடு எழுப்பினார்+ என்பதை அவன் விவரித்துக் கொண்டிருந்தபோதே, அந்தப் பையனின் அம்மா அங்கே வந்தாள்; வீட்டையும் வயலையும் மீட்டுக் கொடுக்கச் சொல்லி ராஜாவிடம் முறையிட்டாள்.+ உடனே கேயாசி, “ராஜாவே, என் எஜமானே, நான் சொன்னேனே, அந்தப் பெண் இவள்தான், இவன்தான் அந்தப் பையன். இவனைத்தான் எலிசா உயிரோடு எழுப்பினார்” என்று சொன்னான்.  அப்போது ராஜா அந்தப் பெண்ணிடம் விசாரித்தார், அவளும் நடந்ததையெல்லாம் சொன்னாள். பின்பு அரண்மனை அதிகாரி ஒருவரைக் கூப்பிட்டு, “இந்தப் பெண்ணின் எல்லா சொத்துகளையும் அவள் இல்லாத சமயத்தில் வயலில் கிடைத்த எல்லா வருமானத்தையும் அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று ராஜா கட்டளையிட்டார்.  சீரியா ராஜாவான பெனாதாத்+ வியாதியாக இருந்த சமயத்தில், தமஸ்குவுக்கு+ எலிசா வந்தார். அப்போது, “உண்மைக் கடவுளின் ஊழியர்+ இங்கே வந்திருக்கிறார்” என்ற செய்தி ராஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டது.  உடனே அசகேலை+ ராஜா கூப்பிட்டு, “அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு உண்மைக் கடவுளின் ஊழியரைப் போய்ப் பார்.+ ‘இந்த வியாதியிலிருந்து நான் குணமாகிவிடுவேனா?’ என்று அவர் மூலம் யெகோவாவிடம் விசாரித்துவிட்டு வா” என்று சொன்னான்.  அதனால், தமஸ்குவில் கிடைக்கும் எல்லா வகையான நல்ல பொருள்களையும் எடுத்துக்கொண்டு எலிசாவைப் பார்க்க அசகேல் போனான்; 40 ஒட்டகங்கள் சுமக்கும் அளவுக்குப் பொருள்களைக் கொண்டுபோனான். பின்பு, அவர் முன்னால் வந்து நின்று, “உங்களுடைய ஊழியனான சீரியா ராஜா பெனாதாத் என்னை அனுப்பினார். அவருக்கு வந்திருக்கிற வியாதி குணமாகுமா என்று உங்களிடம் விசாரித்துவிட்டு வரச் சொன்னார்” என்றான். 10  அதற்கு எலிசா, “‘நீங்கள் கண்டிப்பாகக் குணமடைவீர்கள்’ என்று நீ அவரிடம் சொல். ஆனால், அவர் நிச்சயம் இறந்துவிடுவார் என்று யெகோவா எனக்குத் தெரிவித்திருக்கிறார்”+ என்று சொன்னார். 11  எலிசா வைத்த கண் வாங்காமல் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தார்; அதனால், அவனுக்கு ரொம்பத் தர்மசங்கடமாகிவிட்டது. அதன் பின்பு, உண்மைக் கடவுளின் ஊழியர் அழ ஆரம்பித்தார். 12  உடனே அசகேல், “எஜமானே, ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு எலிசா, “இஸ்ரவேல் மக்களுக்கு நீ செய்யப்போகும் கொடுமைகளை+ நினைத்துதான் அழுகிறேன். அவர்களுடைய கோட்டைகளைத் தீ வைத்துக் கொளுத்துவாய், பலசாலிகளை வாளால் வெட்டுவாய், பிள்ளைகளைக் கொடூரமாக அடித்துக் கொன்றுபோடுவாய், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழிப்பாய்”+ என்று சொன்னார். 13  அப்போது அசகேல், “இந்த நாயைப் பார்த்து இப்படிச் சொல்கிறீர்களே, நான் போய் இப்படியெல்லாம் செய்வேனா?” என்று கேட்டான். ஆனால் எலிசா, “நீ சீரியாவுக்கு ராஜாவாகப் போகிறாய் என்று யெகோவா எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்”+ என்று சொன்னார். 14  அசகேல் அங்கிருந்து புறப்பட்டு ராஜாவிடம் வந்தான். ராஜா அவனிடம், “எலிசா என்ன சொன்னார்?” என்று கேட்டான். அதற்கு அசகேல், “நீங்கள் கண்டிப்பாகக் குணமடைவீர்கள் என்று சொன்னார்”+ என்றான். 15  அடுத்த நாள் அசகேல் ஒரு போர்வையைத் தண்ணீரில் முக்கியெடுத்து ராஜாவின் முகத்தில் போட்டு அழுத்தியதால், ராஜா மூச்சுமுட்டி செத்துப்போனான்.+ அவனுக்குப் பதிலாக அசகேல் ராஜாவானான்.+ 16  இஸ்ரவேலின் ராஜாவான ஆகாபின் மகன் யோராம்+ ஆட்சி செய்த ஐந்தாம் வருஷத்தில், யோசபாத் யூதாவின் ராஜாவாக இருக்கும்போதே அவருடைய மகன் யோராம்+ ராஜாவானார். 17  ராஜாவானபோது அவருக்கு 32 வயது; அவர் எட்டு வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். 18  ஆகாபின் மகளை அவர் கல்யாணம் செய்ததால்,+ இஸ்ரவேல் ராஜாக்களைப் போலவே மோசமான வழியில் நடந்தார்;+ ஆகாபின் வீட்டார் செய்த கெட்ட காரியங்களை+ இவரும் செய்தார்; யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துகொண்டே இருந்தார்.+ 19  ஆனாலும், தன்னுடைய ஊழியரான தாவீதை முன்னிட்டு யூதா மக்களை அழிக்க யெகோவா விரும்பவில்லை.+ ஏனென்றால், தாவீதுக்கும் அவருடைய மகன்களுக்கும் என்றென்றும் ஒரு விளக்கை* கொடுப்பதாக அவர் தாவீதுக்கு வாக்குக் கொடுத்திருந்தார்.+ 20  யோராமின் ஆட்சிக் காலத்தில் யூதாவை எதிர்த்து ஏதோமியர்கள் கலகம் செய்து,+ தங்களுக்கென்று ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.+ 21  அதனால், யோராம் தன்னுடைய எல்லா ரதங்களோடும் சாயீருக்குப் புறப்பட்டுப் போனார். ராத்திரியில் எழுந்து போய், தன்னையும் ரதத் தலைவர்களையும் சுற்றிவளைத்திருந்த ஏதோமியர்களைத் தோற்கடித்தார். அதனால், அந்த வீரர்கள் தங்களுடைய கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். 22  ஆனாலும், இன்றுவரை யூதாவை எதிர்த்து ஏதோம் கலகம் செய்துகொண்டுதான் இருக்கிறது. அந்தச் சமயத்தில் லிப்னாவும்+ கலகம் செய்தது. 23  யோராமின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 24  யோராம் இறந்த* பின்பு, அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அதாவது ‘தாவீதின் நகரத்தில்,’ அடக்கம் செய்யப்பட்டார்.+ அடுத்ததாக, அவருடைய மகன் அகசியா+ ராஜாவானார். 25  இஸ்ரவேலின் ராஜாவான ஆகாபின் மகன் யோராம் ஆட்சி செய்த 12-ஆம் வருஷத்தில், யூதாவின் ராஜாவான யோராமின் மகன் அகசியா ராஜாவானார்.+ 26  ராஜாவானபோது அவருக்கு 22 வயது. அவர் எருசலேமில் ஒரு வருஷம் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அத்தாலியாள்;+ இவள் இஸ்ரவேலின் ராஜாவான உம்ரியின்+ பேத்தி. 27  ஆகாபின் வீட்டாருக்குச் சொந்தக்காரராக இருந்ததால்,+ அவர்களைப் போலவே+ அகசியாவும் மோசமான வழியில் நடந்துவந்தார், யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்துவந்தார். 28  சீரியாவின் ராஜாவான அசகேலை எதிர்த்துப் போர் செய்ய ஆகாபின் மகன் யோராமுடன் ராமோத்-கீலேயாத்துக்குப்+ போனார். அப்போது, சீரியர்களால் தாக்கப்பட்டு யோராம் காயமடைந்தார்.+ 29  சீரியாவின் ராஜாவான அசகேலை எதிர்த்து ராமாவில்* போர் செய்தபோது யோராம் ராஜா காயமடைந்ததால், குணமாவதற்காக யெஸ்ரயேலுக்குத்+ திரும்பிப் போனார்.+ ஆகாபின் மகனான யோராம் காயமடைந்ததால்* அவரைப் பார்க்க யூதாவின் ராஜாவும் யோராமின் மகனுமான அகசியா யெஸ்ரயேலுக்குப் போனார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “வாரிசை.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்ட.”
ராமோத்-கீலேயாத் என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “வியாதிப்பட்டதால்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா