தீமோத்தேயுவுக்கு முதலாம் கடிதம் 5:1-25

5  வயதான ஆண்களிடம் கடுமையாகப் பேசாதே.+ அதற்குப் பதிலாக, அவர்களை அப்பாக்கள் போல நினைத்து அன்பாக நடத்து; அப்படியே, இளம் ஆண்களைத் தம்பிகள் போலவும்,  வயதான பெண்களை அம்மாக்கள் போலவும், இளம் பெண்களைச் சுத்தமான உள்ளத்தோடு தங்கைகள் போலவும் நினைத்து அன்பாக நடத்து.  ஆதரவு இல்லாத* விதவைகளைக் கவனித்துக்கொள்.*+  ஆனால், எந்த விதவைக்காவது பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ இருந்தால், இந்தப் பிள்ளைகள் முதலில் தங்களுடைய வீட்டில் கடவுள்பக்தியைக் கடைப்பிடிப்பதற்கும்,+ தங்களுடைய பெற்றோருக்கும் தாத்தா பாட்டிக்கும் செய்ய வேண்டிய கடமையைச் செய்வதற்கும் கற்றுக்கொள்ளட்டும்;+ இதுதான் கடவுளுக்குப் பிரியமானது.+  ஆதரவு இல்லாமல் தனியாக வாழ்கிற ஒரு விதவை, கடவுள்மேல் நம்பிக்கை வைத்து+ இரவும் பகலும் விடாமல் அவரிடம் மன்றாடி ஜெபம் செய்வாள்.+  ஆனால், தன்னுடைய ஆசைகளை* திருப்தி செய்வதற்காகவே வாழ்கிற விதவை, உயிரோடிருந்தாலும் செத்தவளாகவே இருப்பாள்.  அதனால், விதவைகள் குற்றம்சாட்டப்படாதவர்களாக இருப்பதற்கு, இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரை கொடு.  ஒருவன் தன்னை நம்பியிருக்கிறவர்களை, முக்கியமாகத் தன்னுடைய குடும்பத்தில் இருக்கிறவர்களை, கவனித்துக்கொள்ளவில்லை என்றால் அவன் விசுவாசத்தை விட்டுவிட்டவனாகவும் விசுவாசத்தில் இல்லாதவனைவிட மோசமானவனாகவும் இருப்பான்.+  விதவைகளின் பட்டியலில் சேர்க்கப்படுகிறவர்கள் 60 வயதைத் தாண்டியவர்களாக இருக்க வேண்டும்; ஒரே கணவனுக்கு மனைவியாக இருந்திருக்க வேண்டும். 10  அதோடு, பிள்ளைகளை வளர்ப்பது,+ மற்றவர்களை உபசரிப்பது,+ பரிசுத்தவான்களின் பாதங்களைக் கழுவுவது,+ கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்வது+ போன்ற எல்லா விதமான நல்ல செயல்களையும் செய்வதற்குத் தங்களையே அர்ப்பணித்து, நல்ல பெயர் எடுத்தவர்களாக இருக்க வேண்டும்.+ 11  ஆனால், இளம் விதவைகளை இந்தப் பட்டியலில் சேர்க்காதே. ஏனென்றால், கிறிஸ்துவோடு உள்ள பந்தத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கிற பாலியல் ஆசைகள் அவர்களுக்குள் வரும்போது மறுமணம் செய்துகொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். 12  அவர்கள் முதலில் கொடுத்த வாக்கை மீறுவதால் அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கிடைக்கும். 13  அதேசமயம், வேலைவெட்டி இல்லாமல் வீடுவீடாகத் திரிவதற்கும் பழகிவிடுகிறார்கள்; வேலைவெட்டி இல்லாதவர்களாக மட்டுமல்ல, வம்பளக்கிறவர்களாகவும், மற்றவர்களுடைய விஷயங்களில் அநாவசியமாகத் தலையிடுகிறவர்களாகவும்,+ பேசக்கூடாத விஷயங்களைப் பேசுகிறவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். 14  அதனால், இளம் விதவைகள் மறுமணம் செய்து,+ பிள்ளைகளைப் பெற்று,+ வீட்டைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும், எதிரிகள் குற்றம் கண்டுபிடிக்க அவர்கள் இடம்கொடுத்துவிடக் கூடாது என்றும் விரும்புகிறேன். 15  சொல்லப்போனால், விதவைகள் சிலர் ஏற்கெனவே வழிதவறி சாத்தானைப் பின்பற்றிப் போய்விட்டார்கள். 16  விசுவாசியாக* இருக்கும் ஒரு பெண்ணின் குடும்பத்தில் விதவைகள் இருந்தால், அவள்தான் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்; அந்தச் சுமையைச் சபையின் மேல் சுமத்தக் கூடாது. அப்போதுதான், ஆதரவு இல்லாத விதவைகளுக்குச் சபையால் ஆதரவு கொடுக்க முடியும்.+ 17  சபையை நல்ல விதத்தில் நடத்துகிற மூப்பர்கள்,+ அதுவும் கடவுளுடைய வார்த்தையைப் பற்றிப் பேசுவதிலும் கற்றுக்கொடுப்பதிலும் கடுமையாக உழைக்கிற மூப்பர்கள்,+ இரட்டிப்பான மதிப்பைப் பெறத் தகுதியுள்ளவர்களாகக் கருதப்பட வேண்டும்.+ 18  ஏனென்றால், “போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக் கூடாது”+ என்றும், “வேலையாள் தன் கூலியைப் பெறத் தகுதியுள்ளவன்” என்றும் வேதவசனம் சொல்கிறது.+ 19  ஒரு மூப்பர்மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டை, இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சி இருந்தால் தவிர ஏற்றுக்கொள்ளாதே.+ 20  பாவம் செய்துகொண்டே இருக்கிறவர்களை+ எல்லாருக்கும் முன்னால் கண்டிக்க வேண்டும்;+ அது மற்றவர்களுக்கு ஓர் எச்சரிப்பாக இருக்கும்.* 21  கடவுளுக்கும், கிறிஸ்து இயேசுவுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட தேவதூதர்களுக்கும் முன்னால் நான் உனக்கு ஆணையிட்டுச் சொல்கிறேன்: எந்தவித தப்பெண்ணமோ பாரபட்சமோ இல்லாமல் இந்த அறிவுரைகளைக் கடைப்பிடி.+ 22  யாரையும் அவசரப்பட்டு நியமித்துவிடாதே;*+ மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கு உடந்தையாக இருக்காதே; எப்போதும் ஒழுக்கமுள்ளவனாக நடந்துகொள். 23  உன் வயிற்றுக் கோளாறின் காரணமாகவும், அடிக்கடி உனக்கு ஏற்படுகிற உடல்நலக் குறைவின் காரணமாகவும் இனி தண்ணீரைக் குடிக்காமல்* கொஞ்சம் திராட்சமதுவைக் குடி. 24  சிலருடைய பாவங்கள் உடனடியாகத் தெரியவருவதால் அவர்களுக்குத் தண்டனை கிடைக்கும். ஆனால், மற்றவர்களுடைய பாவங்களும் தெரியவரும், ஆனால் பிற்பாடு தெரியவரும்.+ 25  அதேபோல், நல்ல செயல்களும் தெரியவரும்;+ அப்படித் தெரியவராத நல்ல செயல்களை என்றென்றும் மறைத்து வைக்க முடியாது.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “உண்மையிலேயே உதவி தேவைப்படுகிற.”
நே.மொ., “விதவைகளுக்கு மதிப்புக் கொடு.”
அநேகமாக, பாலியல் ஆசைகளைக் குறிக்கலாம்.
வே.வா., “இயேசுவின் சீஷராக.”
நே.மொ., “அப்போதுதான் மற்றவர்களுக்குப் பயம் வரும்.”
வே.வா., “யார்மீதும் அவசரப்பட்டு கைகளை வைத்துவிடாதே.”
வே.வா., “தண்ணீரை மட்டும் குடிக்காமல்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா