யோவான் எழுதியது 9:1-41

9  அவர் போய்க்கொண்டிருந்தபோது, பிறவியிலேயே பார்வையற்றவனாக இருந்த ஒருவனைப் பார்த்தார்.  அப்போது அவருடைய சீஷர்கள், “ரபீ,+ இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா, இவனுடைய அப்பா அம்மா செய்த பாவமா?” என்று கேட்டார்கள்.  அதற்கு இயேசு, “இவன் செய்த பாவமும் இல்லை, இவனுடைய அப்பா அம்மா செய்த பாவமும் இல்லை. கடவுளுடைய செயல்கள் இவன் மூலம் எல்லாருக்கும் தெரியவரும்படியே இப்படிப் பிறந்திருக்கிறான்.+  என்னை அனுப்பியவருடைய செயல்களைப் பகலிலேயே நாம் செய்ய வேண்டும்.+ ராத்திரி வரப்போகிறது, அப்போது எந்த மனுஷனாலும் வேலை செய்ய முடியாது.  நான் இந்த உலகத்தில் இருக்கும்வரை, இந்த உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன்”+ என்று சொன்னார்.  இவற்றைச் சொன்ன பின்பு, தரையில் துப்பி, எச்சிலால் மண்ணைக் குழைத்து, அந்த மனிதனுடைய கண்கள்மேல் பூசி,+  “சீலோவாம் குளத்துக்குப் போய்க் கழுவு” என்றார். (சீலோவாம் என்றால் “அனுப்பப்பட்டது” என்று அர்த்தம்.) அவனும் போய், கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தான்.+  அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் முன்பு அவன் பிச்சை எடுத்ததைப் பார்த்தவர்களும், “இங்கே உட்கார்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவன் இவன்தானே?” என்று பேசிக்கொண்டார்கள்.  சிலர், “இவன்தான்” என்று சொன்னார்கள். வேறு சிலர், “இல்லவே இல்லை, ஆனால் அவனைப் போலவே இருக்கிறான்” என்று சொன்னார்கள். அந்த மனிதனோ, “நான்தான் அவன்” என்று திரும்பத் திரும்பச் சொன்னான். 10  அதற்கு அவர்கள், “அப்படியானால், உனக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?” என்று கேட்டார்கள். 11  அப்போது அவன், “இயேசு என்பவர் மண்ணைக் குழைத்து என் கண்கள்மேல் பூசி, ‘சீலோவாம் குளத்துக்குப் போய்க் கழுவு’+ என்று சொன்னார். நானும் போய்க் கழுவினேன், எனக்குப் பார்வை கிடைத்தது” என்று சொன்னான். 12  அதற்கு அவர்கள், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள். அவனோ, “எனக்குத் தெரியாது” என்று சொன்னான். 13  முன்பு பார்வையற்றவனாக இருந்த அந்த மனிதனைப் பரிசேயர்களிடம் அவர்கள் கூட்டிக்கொண்டு போனார்கள். 14  இயேசு மண்ணைக் குழைத்து அவனுடைய கண்கள்மேல் பூசிய+ நாள் ஓய்வுநாளாக இருந்தது.+ 15  அப்போது பரிசேயர்களும், “உனக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?” என்று அவனிடம் கேட்க ஆரம்பித்தார்கள். அதற்கு அவன், “மண்ணைக் குழைத்து அவர் என் கண்கள்மேல் பூசினார்; அதைக் கழுவிய பிறகு எனக்குப் பார்வை கிடைத்தது” என்று சொன்னான். 16  பின்பு பரிசேயர்களில் சிலர், “அந்த மனுஷன் கடவுளிடமிருந்து வந்தவனல்ல. ஏனென்றால், அவன் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதில்லை”+ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். மற்றவர்களோ, “இப்படிப்பட்ட அற்புதங்களை ஒரு பாவியால் எப்படிச் செய்ய முடியும்?”+ என்று கேட்டார்கள். இதனால், அவர்கள் மத்தியில் பிரிவினை ஏற்பட்டது.+ 17  பின்பு அந்த மனிதனிடம், “அவன் உனக்குத்தானே பார்வை கொடுத்தான், அந்த ஆளைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்?” என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன், “அவர் ஒரு தீர்க்கதரிசி” என்று சொன்னான். 18  ஆனால், பார்வையற்றவனாக இருந்தவன் இப்போது பார்க்கிறான் என்பதை யூத மதத் தலைவர்கள் நம்பவில்லை. அதனால், அவனுடைய அப்பா அம்மாவைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். 19  “இவன்தான் உங்கள் மகனா? இவன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்கிறீர்களே, இப்போது இவனுக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?” என்று அவர்களிடம் கேட்டார்கள். 20  அப்போது அவனுடைய அப்பா அம்மா, “இவன் எங்களுடைய மகன்தான், பிறக்கும்போதே குருடனாகத்தான் பிறந்தான். 21  ஆனால், இப்போது இவனுக்கு எப்படிப் பார்வை கிடைத்தது என்று எங்களுக்குத் தெரியாது, யார் இவனுக்குப் பார்வை தந்தது என்றும் எங்களுக்குத் தெரியாது. இவனையே கேளுங்கள். இவன் வளர்ந்த பையன்தானே, இவனே சொல்லட்டும்” என்றார்கள். 22  யூத மதத் தலைவர்களுக்குப் பயந்து+ அவனுடைய அப்பா அம்மா இப்படிச் சொன்னார்கள்; ஏனென்றால், இயேசுவைக் கிறிஸ்து என்று யாராவது சொன்னால் ஜெபக்கூடத்திலிருந்து அவர்களை நீக்கிவிட வேண்டுமென்று+ அந்தத் தலைவர்கள் ஏற்கெனவே தீர்மானம் எடுத்திருந்தார்கள். 23  அதனால்தான், “இவன் வளர்ந்த பையன்தானே. இவனையே கேளுங்கள்” என்று அவனுடைய அப்பா அம்மா சொன்னார்கள். 24  முன்பு பார்வையற்றவனாக இருந்த அந்த மனிதனை இரண்டாவது தடவை அவர்கள் கூப்பிட்டு, “உண்மையைச் சொல்லி கடவுளை மகிமைப்படுத்து. அந்த ஆள் ஒரு பாவி என்று எங்களுக்குத் தெரியும்” என்று சொன்னார்கள். 25  அதற்கு அவன், “அவர் ஒரு பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும், பார்க்க முடியாமலிருந்த என்னால் இப்போது பார்க்க முடிகிறது” என்று சொன்னான். 26  அப்போது அவர்கள், “அவன் உனக்கு என்ன செய்தான்? உனக்கு எப்படிப் பார்வை தந்தான்?” என்று அவனிடம் கேட்டார்கள். 27  அதற்கு அவன், “நான் ஏற்கெனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேட்கவில்லை. மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? நீங்களும் அவருடைய சீஷர்களாக விரும்புகிறீர்களா என்ன?” என்று கேட்டான். 28  அப்போது அவர்கள் அவனைச் சபித்து, “நீதான் அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயுடைய சீஷர்கள். 29  மோசேயிடம் கடவுள் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும்; ஆனால், அந்த ஆள் எங்கிருந்து வந்திருக்கிறான் என்று எங்களுக்குத் தெரியாது” என்று சொன்னார்கள். 30  அதற்கு அந்த மனிதன், “என்ன ஆச்சரியம்! அவர் எனக்குப் பார்வை தந்திருக்கிறார், அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்று தெரியாது என்கிறீர்களே! 31  பாவிகளுடைய ஜெபத்தைக் கடவுள் கேட்பதில்லை,+ அவருக்குப் பயந்து அவருடைய விருப்பத்தின்படி* செய்கிறவனுடைய ஜெபத்தைத்தான் அவர் கேட்கிறார்+ என்பது நமக்குத் தெரியும். 32  பிறவிக் குருடனுக்கு ஒருவர் பார்வை தந்ததாகச் சரித்திரமே இல்லை. 33  அவர் கடவுளிடமிருந்து வரவில்லை என்றால், அவரால் ஒன்றுமே செய்திருக்க முடியாது”+ என்று சொன்னான். 34  அதற்கு அவர்கள், “முழுக்க முழுக்கப் பாவத்தில் பிறந்த நீயா எங்களுக்குச் சொல்லித்தருகிறாய்?” என்று கேட்டு, அவனைத் துரத்திவிட்டார்கள்!+ 35  அவனைத் துரத்திவிட்டார்கள் என்ற விஷயத்தை இயேசு கேள்விப்பட்டார்; பிறகு அவனைப் பார்த்தபோது, “மனிதகுமாரன்மேல் நீ விசுவாசம் வைக்கிறாயா?” என்று கேட்டார். 36  அதற்கு அந்த மனிதன், “ஐயா, அவர் யார் என்று சொல்லுங்கள்; அப்போது நான் விசுவாசம் வைப்பேன்” என்று சொன்னான். 37  இயேசு அவனிடம், “நீ அவரைப் பார்த்திருக்கிறாய்; உன்னிடம் பேசிக்கொண்டிருப்பவர்தான் அவர்” என்று சொன்னார். 38  உடனடியாக அவன், “எஜமானே, நான் விசுவாசம் வைக்கிறேன்” என்று சொல்லி அவர் முன்னால் மண்டிபோட்டு தலைவணங்கினான். 39  பின்பு இயேசு, “பார்வையற்றவர்கள் பார்வை அடையும்படியும்+ பார்வையுள்ளவர்கள் பார்வை இழக்கும்படியும்+ தீர்ப்பு பெறுவதற்காகவே நான் இந்த உலகத்துக்கு வந்தேன்” என்று சொன்னார். 40  அவனோடிருந்த பரிசேயர்கள் இவற்றைக் கேட்டு, “நாங்களும் என்ன பார்வையற்றவர்களா?” என்று கேட்டார்கள். 41  அதற்கு இயேசு, “நீங்கள் பார்வையற்றவர்களாக இருந்திருந்தால், பாவமில்லாமல் இருந்திருப்பீர்கள். ஆனால், ‘நாங்கள் பார்க்கிறோம்’ என்று நீங்கள் சொல்வதால் பாவமுள்ளவர்களாகவே இருக்கிறீர்கள்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “சித்தத்தின்படி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா