உபாகமம் 28:1-68

28  பின்பு அவர், “இன்று நான் கொடுக்கிற கட்டளைகள் எல்லாவற்றையும் கவனமாகக் கடைப்பிடித்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தால், பூமியிலுள்ள எல்லா தேசத்தாருக்கும் மேலாக யெகோவா உங்களை உயர்த்துவார்.+  எப்போதும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+  நீங்கள் நகர்ப்புறத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், கிராமப்புறத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.+  உங்களுடைய குழந்தைகுட்டிகளும் வயல்களின் விளைச்சலும் ஆடுமாடுகளின் குட்டிகளும் கன்றுகளும் ஆசீர்வதிக்கப்படும்.+  உங்களுடைய கூடையும் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்படும்.*+  நீங்கள் செய்கிற எல்லா காரியங்களும் ஆசீர்வதிக்கப்படும்.  உங்களைத் தாக்க வருகிற எதிரிகளை யெகோவா தோற்கடிப்பார்.+ ஒரு திசையில் அவர்கள் உங்களைத் தாக்க வருவார்கள், ஆனால் ஏழு திசைகளில் உங்களைவிட்டு ஓடிப்போவார்கள்.+  உங்களுடைய களஞ்சியங்களை யெகோவா ஆசீர்வதிப்பார்.+ நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா ஆசீர்வதிப்பார். அவர் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் நிச்சயம் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.  உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து அவருடைய வழிகளில் நடந்தால், யெகோவா உங்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே,+ உங்களைத் தன்னுடைய பரிசுத்தமான ஜனமாக ஆக்குவார்.+ 10  நீங்கள் யெகோவாவின் பெயரைத் தாங்கியிருப்பதைப் பூமியிலுள்ள எல்லா ஜனங்களும் பார்த்து,+ உங்களுக்குப் பயப்படுவார்கள்.+ 11  உங்களுக்குத் தருவதாக உங்கள் முன்னோர்களுக்கு யெகோவா வாக்குக் கொடுத்த தேசத்தில்,+ ஏராளமான பிள்ளைகளையும் ஆடுமாடுகளையும் விளைச்சலையும் யெகோவா தருவார்.+ 12  நிரம்பி வழியும் களஞ்சியமாகிய வானத்தை யெகோவா திறந்து, உங்கள் தேசத்தில் பருவ மழையைப் பொழிய வைப்பார்,+ நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் எத்தனையோ தேசத்தாருக்குக் கடன் கொடுப்பீர்கள், ஆனால் நீங்கள் யாரிடமிருந்தும் கடன் வாங்க மாட்டீர்கள்.+ 13  இன்று நான் கொடுக்கிற கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தால், யெகோவா உங்களை மிகவும் உயர்ந்த நிலையில் வைப்பார், நீங்கள் தாழ்ந்துபோவதற்கு விட மாட்டார்.+ எல்லா ஜனங்களையும் நீங்கள் அடக்கி ஆளுவீர்கள், யாரும் உங்களை அடக்கி ஆள மாட்டார்கள். 14  இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகளை நீங்கள் அச்சுப்பிசகாமல் கடைப்பிடிக்க வேண்டும்.+ வேறு தெய்வங்களைத் தேடிப்போய் வணங்கக் கூடாது.+ 15  ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+ 16  நீங்கள் நகர்ப்புறத்திலும் சபிக்கப்படுவீர்கள், கிராமப்புறத்திலும் சபிக்கப்படுவீர்கள்.+ 17  உங்களுடைய கூடையும் பாத்திரமும் சபிக்கப்படும்.+ 18  உங்களுடைய குழந்தைகுட்டிகளும் வயல்களின் விளைச்சலும் ஆடுமாடுகளின் குட்டிகளும் கன்றுகளும் சபிக்கப்படும்.+ 19  நீங்கள் செய்கிற எல்லா காரியங்களும் சபிக்கப்படும். 20  நீங்கள் யெகோவாவைவிட்டு விலகி கெட்ட வழியில் போனால், நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும் அவர் சாபத்தையும் குழப்பத்தையும் தண்டனையையும் வரவைப்பார். நீங்கள் அடியோடு அழிந்துபோகும்வரை இதையெல்லாம் வரவைப்பார்.+ 21  நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்திலிருந்து யெகோவா உங்களை அடியோடு அழிக்கும்வரை நோயால் உங்களைத் தாக்குவார்.+ 22  காசநோய், கடுமையான காய்ச்சல்,+ வீக்கம், கடுமையான சூடு, போர்,+ வெப்பக்காற்று, தாவர நோய்+ ஆகியவற்றால் யெகோவா தாக்குவார். நீங்கள் அழியும்வரை அவை உங்களைவிட்டுப் போகாது. 23  உங்கள் வானம் செம்பைப் போலவும் பூமி இரும்பைப் போலவும் ஆகும்.*+ 24  யெகோவா வானத்திலிருந்து மழையைக் கொடுப்பதற்குப் பதிலாக, புழுதியையும் மண்ணையும்தான் கொட்டுவார். நீங்கள் அடியோடு அழிந்துபோகும்வரை இதைத்தான் செய்வார். 25  விரோதிகளுக்கு முன்னால் யெகோவா உங்களைத் தோற்கடிப்பார்.+ நீங்கள் அவர்களை ஒரு திசையில் தாக்குவீர்கள், ஆனால் அவர்களைவிட்டு ஏழு திசைகளில் ஓடிப்போவீர்கள். உங்களுடைய கோரமான நிலைமையைப் பார்த்து உலகமே கதிகலங்கும்.+ 26  வானத்துப் பறவைகளும் பூமியின் மிருகங்களும் உங்களுடைய பிணங்களைத் தின்னும். அவற்றை விரட்டிவிட யாரும் இருக்க மாட்டார்கள்.+ 27  எகிப்தியர்களை வாட்டிய கொப்புளங்கள், மூலநோய், படை, தோல் தடிப்புகள் ஆகியவற்றால் யெகோவா உங்களைத் தாக்குவார். அவற்றிலிருந்து நீங்கள் குணமடைய முடியாது. 28  யெகோவா உங்களைப் பைத்தியமாக்குவார், குருடாக்குவார்,+ குழப்புவார். 29  நீங்கள் பட்டப்பகலில் குருடனைப் போல் தட்டுத்தடுமாறுவீர்கள்.+ எந்தக் காரியத்திலும் உங்களுக்கு வெற்றி கிடைக்காது. நீங்கள் எப்போதும் மோசடி செய்யப்படுவீர்கள், கொள்ளையடிக்கப்படுவீர்கள். உங்களைக் காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள்.+ 30  நீங்கள் ஒரு பெண்ணுடன் நிச்சயிக்கப்படுவீர்கள், ஆனால் வேறொருவன் அவளைப் பலாத்காரம் செய்வான். நீங்கள் வீடு கட்டுவீர்கள், ஆனால் அதில் குடியிருக்க மாட்டீர்கள்.+ திராட்சைத் தோட்டம் அமைப்பீர்கள், ஆனால் அதன் பழங்களைச் சாப்பிட மாட்டீர்கள்.+ 31  உங்கள் காளைமாடு உங்களுடைய கண் முன்னால் வெட்டப்படும், ஆனால் அதன் இறைச்சி உங்களுக்குக் கொஞ்சம்கூட கிடைக்காது. உங்கள் கழுதை உங்களுடைய கண் முன்னால் திருடப்படும், ஆனால் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்காது. உங்கள் ஆடுகள் எதிரிகளின் கையில் கொடுக்கப்படும், ஆனால் யாரும் உங்களுடைய உதவிக்கு வர மாட்டார்கள். 32  உங்கள் கண் முன்னால் உங்கள் மகன்களையும் மகள்களையும் வேறு ஆட்கள் பிடித்துக்கொண்டு போவார்கள்.+ அந்தப் பிள்ளைகளுக்காக எப்போதும் ஏங்கிக்கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒன்றுமே செய்ய முடியாமல் தவிப்பீர்கள். 33  உங்கள் நிலத்தின் விளைச்சலையும் உழைப்பின் பலனையும் யார் யாரோ அனுபவிப்பார்கள்.+ நீங்கள் எப்போதும் மோசடி செய்யப்படுவீர்கள், அடக்கி ஒடுக்கப்படுவீர்கள். 34  உங்கள் கண் முன்னால் நடப்பதையெல்லாம் பார்த்து பைத்தியம் பிடித்ததுபோல் அலைவீர்கள். 35  குணப்படுத்த முடியாத கொப்புளங்களை உங்களுடைய தொடைகளிலும் கால்களிலும் யெகோவா வரவைப்பார். அவை உங்களுடைய உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை பரவி, வலி உண்டாக்கும். 36  உங்களுக்கோ உங்கள் முன்னோர்களுக்கோ தெரியாத தேசத்துக்கு உங்களையும் உங்கள் ராஜாவையும் யெகோவா துரத்தியடிப்பார்.+ அங்கே மரத்தாலும் கல்லாலும் உருவாக்கப்பட்ட பொய் தெய்வங்களை வணங்குவீர்கள்.+ 37  யெகோவா உங்களைத் துரத்தியடிக்கிற தேசங்களில் இருக்கிற ஜனங்கள் உங்களுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து ஏளனமாகப் பேசுவார்கள். உங்களைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள்.+ 38  வயலில் ஏராளமாக விதைப்பீர்கள், ஆனால் கொஞ்சம்தான் அறுப்பீர்கள்.+ ஏனென்றால், வெட்டுக்கிளிகள் அவற்றைத் தின்றுதீர்த்துவிடும். 39  திராட்சைத் தோட்டத்தை அமைத்து அதைப் பராமரிப்பீர்கள், ஆனால் உங்களுக்குத் திராட்சமதுவோ திராட்சைப் பழங்களோ கிடைக்காது.+ ஏனென்றால், புழுக்கள் அவற்றைத் தின்றுதீர்த்துவிடும். 40  எல்லா இடங்களிலும் ஒலிவ மரங்கள் வளர்ந்து நிற்கும், ஆனால் உங்கள் உடலில் தேய்க்க ஒலிவ எண்ணெய் இருக்காது. ஏனென்றால், ஒலிவ மரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துவிடும். 41  மகன்களையும் மகள்களையும் பெற்றெடுப்பீர்கள், ஆனால் அவர்கள் உங்களோடு இருக்க மாட்டார்கள். ஏனென்றால், எதிரிகள் அவர்களைப் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்.+ 42  பூச்சிகள் படையெடுத்து வந்து உங்களுடைய எல்லா மரங்களையும் செடிகொடிகளையும் மொட்டையாக்கிவிடும். 43  உங்கள் நடுவில் வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்கள் உயர்ந்துகொண்டே போவார்கள், ஆனால் நீங்கள் தாழ்ந்துகொண்டே போவீர்கள். 44  அவர்களால் உங்களுக்குக் கடன் கொடுக்க முடியும், ஆனால் உங்களால் அவர்களுக்குக் கடன் கொடுக்க முடியாது.+ அவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பார்கள், ஆனால் நீங்கள் அடிமட்டத்துக்குப் போய்விடுவீர்கள்.+ 45  உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்காமலும் அவருடைய கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடிக்காமலும் போனால்,+ இந்த எல்லா சாபங்களும்+ கண்டிப்பாக உங்கள்மேல் வந்து குவியும். நீங்கள் அழியும்வரை+ அவை உங்களைப் பின்தொடரும், உங்களைவிட்டுப் போகவே போகாது. 46  அவை உங்கள்மேலும் உங்கள் வம்சத்தின் மேலும் நிரந்தர அடையாளமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும்.+ 47  ஏனென்றால், எல்லாமே உங்களுக்கு ஏராளமாகக் கிடைத்தபோது உங்கள் கடவுளாகிய யெகோவாவை மகிழ்ச்சியோடும் சந்தோஷம் பொங்கும் இதயத்தோடும் நீங்கள் வணங்கவில்லை.+ 48  யெகோவா உங்களுக்கு எதிராக விரோதிகளை அனுப்புவார். உங்களிடம் ஒன்றுமே இல்லாமல், பசியோடும்+ தாகத்தோடும் கிழிந்த துணிமணிகளோடும் அவர்களுக்கு வேலை செய்வீர்கள்.+ அவர் உங்களை அழிக்கும்வரை உங்கள் கழுத்தில் இரும்பு நுகத்தடியை* சுமத்துவார். 49  பூமியின் ஒரு எல்லையில் இருக்கிற தொலைதூர தேசத்தாரை உங்களுக்கு எதிராக யெகோவா அனுப்புவார்.+ அவர்கள் கழுகைப் போல் வேகமாகப் பாய்ந்து வருவார்கள்.+ அவர்களுடைய மொழி உங்களுக்குப் புரியாது.+ 50  பார்க்கவே அவர்கள் பயங்கரமாக இருப்பார்கள். வயதில் பெரியவர்களுக்கு மதிப்புக் காட்டவோ, வயதில் சிறியவர்களுக்குக் கரிசனை காட்டவோ மாட்டார்கள்.+ 51  நீங்கள் அழியும்வரை உங்களுடைய ஆடுமாடுகளின் குட்டிகளையும் உங்கள் நிலத்தில் விளைகிறவற்றையும் அவர்கள் சாப்பிடுவார்கள். உங்களை ஒழித்துக்கட்டும்வரை தானியத்தையோ புதிய திராட்சமதுவையோ எண்ணெயையோ கன்றுகளையோ ஆட்டுக்குட்டிகளையோ உங்களுக்காக விட்டுவைக்க மாட்டார்கள்.+ 52  உங்கள் தேசத்திலுள்ள எல்லா நகரங்களையும் சுற்றிவளைத்து, வெளியேற வழியில்லாமல் உங்களை அடைத்து வைப்பார்கள். நீங்கள் நம்பியிருக்கிற உயரமான, பலமான மதில்களைத் தரைமட்டமாக்கும்வரை உங்களை வளைத்துக்கொள்வார்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்திருக்கிற தேசத்திலுள்ள நகரங்களைவிட்டு வெளியேற முடியாதபடி உங்களைச் சூழ்ந்துகொள்வார்கள்.+ 53  அப்போது நிலைமை படுமோசமாக இருக்கும். எதிரிகள் உங்களை வாட்டி வதைப்பார்கள். பெற்றெடுத்த பிள்ளைகளையே நீங்கள் சாப்பிடுவீர்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்த மகன்களின் சதையையும் மகள்களின் சதையையும் தின்பீர்கள்.+ 54  இளகிய மனதுள்ளவனும் சொகுசாக வாழ்ந்தவனும்கூட தன் மகன்களுடைய சதையைத் தின்னும்போது, அண்ணன் தம்பிக்கோ ஆசை மனைவிக்கோ உயிரோடு இருக்கிற மகன்களுக்கோ அதைக் கொடுக்க மாட்டான். அவர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டான். 55  ஏனென்றால், சாப்பிட அவனிடம் வேறு எதுவும் இருக்காது. எதிரிகள் உங்கள் நகரங்களைச் சுற்றிவளைத்து, உங்களை அந்தளவுக்கு வாட்டி வதைப்பார்கள்.+ 56  இளகிய மனதுள்ளவளும் கால் தரையில் படாத அளவுக்கு சொகுசாக வாழ்ந்தவளும்கூட,+ ஆசை கணவனுக்கோ மகனுக்கோ மகளுக்கோ இரக்கம் காட்ட மாட்டாள். 57  தான் பெற்றெடுக்கிற பிள்ளையையும் பிரசவத்தின்போது வெளியேறுகிற எதையும் அவர்களுக்குக் கொடுக்க மாட்டாள். அவள் மட்டும் ரகசியமாகத் தின்றுதீர்ப்பாள். ஏனென்றால், எதிரிகள் உங்கள் நகரங்களைச் சுற்றிவளைத்து, உங்களை அந்தளவுக்கு வாட்டி வதைப்பார்கள். 58  இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள திருச்சட்ட வார்த்தைகளை நீங்கள் கவனமாகப் பின்பற்றாமலும்,+ உங்கள் கடவுளாகிய யெகோவாவின்+ மகா அற்புதமான* பெயருக்குப்+ பயப்படாமலும் இருந்தால், 59  உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் பயங்கரமான வேதனைகளையும் தீராத வேதனைகளையும் யெகோவா கொண்டுவருவார்.+ தீராத கொடிய நோய்களை அவர் வர வைப்பார். 60  நீங்கள் எகிப்தில் பார்த்த நோய்கள் எல்லாவற்றையும் உங்கள்மேல் வரவைப்பார். நீங்கள் எந்த நோய்களை நினைத்துப் பயந்து நடுங்கினீர்களோ அதே நோய்கள் நிச்சயமாக உங்களைத் தாக்கும். 61  இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்படாத எல்லா நோய்களையும் வேதனைகளையும்கூட நீங்கள் அழிந்துபோகும்வரை யெகோவா உங்கள்மேல் கொண்டுவருவார். 62  நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப் போல் ஏராளமாக இருந்தாலும்,+ உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்காவிட்டால் கொஞ்சநஞ்ச பேர்தான் மிஞ்சுவீர்கள்.+ 63  உங்களை ஏராளமாகப் பெருக வைப்பதிலும் சீரும் சிறப்புமாக வாழ வைப்பதிலும் ஒருசமயம் சந்தோஷப்பட்ட யெகோவா, இப்போது உங்களை அழிப்பதிலும் ஒழிப்பதிலும் சந்தோஷப்படுவார். நீங்கள் சொந்தமாக்கப்போகும் தேசத்திலிருந்து யெகோவா உங்களை வேரோடு பிடுங்கி எறிவார். 64  பூமியின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை இருக்கிற எல்லா தேசங்களிலும் யெகோவா உங்களைச் சிதறிப்போக வைப்பார்.+ அங்கே மரத்தாலும் கல்லாலும் செய்யப்பட்ட பொய் தெய்வங்களைக் கும்பிடுவீர்கள்; உங்களுக்கோ உங்கள் முன்னோர்களுக்கோ தெரியாத தெய்வங்கள் அவை.+ 65  அந்தத் தேசங்களில் உங்களுக்குச் சமாதானம் இருக்காது,+ நீங்கள் குடியிருப்பதற்கு இடம் இருக்காது. யெகோவா உங்கள் இதயத்தைக் கவலையில் கரைய வைப்பார்,+ கண்களைப் பூத்துப்போகச் செய்வார், மனதைப் பதற வைப்பார்.+ 66  உங்களுடைய உயிர் பயங்கர ஆபத்தில் இருக்கும். ராத்திரி பகலாகப் பயத்தில் நடுங்குவீர்கள். தப்பிப்பிழைப்பதே உங்களுக்குக் கேள்விக்குறியாக இருக்கும். 67  காலைநேரத்தில், ‘எப்போது சாயங்காலம் வருமோ!’ என்றும், சாயங்காலத்தில், ‘எப்போது காலைநேரம் வருமோ!’ என்றும் சொல்வீர்கள். உங்கள் இதயத்திலுள்ள திகிலினாலும், கண் முன்னால் நடக்கிற காட்சிகளாலும் அப்படிச் சொல்வீர்கள். 68  ‘நீங்கள் இனி ஒருநாளும் பார்க்க மாட்டீர்கள்’ என்று நான் சொன்ன இடத்துக்கு யெகோவா உங்களைத் திரும்பிப் போகும்படி செய்வார். நீங்கள் கப்பல்களில் எகிப்துக்கே திரும்பிப் போகும்படி செய்வார். அங்கு எதிரிகளிடம் நீங்களே உங்களை அடிமைகளாக விற்க வேண்டிய நிலை வரும், ஆனால் உங்களை விலைக்கு வாங்க யாருமே முன்வர மாட்டார்கள்” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “கூடையில் தானியமும் பாத்திரத்தில் மாவும் எப்போதுமே நிரம்பி வழியும்.”
அதாவது, “வானம் மழை பொழியாது, பூமி வறண்டுபோகும்.”
இரும்பு நுகத்தடி என்பது கடுமையான அடிமைத்தனத்தைக் குறிக்கிறது.
வே.வா., “யெகோவாவின் மகிமையான, பயபக்தியூட்டுகிற.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா