யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 22:1-21

22  பின்பு, வாழ்வு தரும் தண்ணீர் நிறைந்த ஆற்றை அவர் எனக்குக் காட்டினார்;+ அது பளிங்குபோல் பளபளத்தது. கடவுளுடைய சிம்மாசனத்திலிருந்தும் ஆட்டுக்குட்டியானவருடைய+ சிம்மாசனத்திலிருந்தும் அது புறப்பட்டு,  நகரத்தின் முக்கியத் தெரு நடுவில் பாய்ந்தோடியது. ஆற்றின் இரண்டு பக்கங்களிலும் வாழ்வு தரும் மரங்கள் இருந்தன. அவை மாதத்துக்கு ஒரு தடவை என வருஷத்துக்கு 12 தடவை பழம் கொடுத்தன; அவற்றின் இலைகள் தேசத்தார் குணமாவதற்கு உதவின.+  அங்கே இனி எந்தச் சாபமும் இருக்காது. கடவுளுடைய சிம்மாசனமும் ஆட்டுக்குட்டியானவருடைய சிம்மாசனமும்+ அந்த நகரத்தில் இருக்கும். அவருடைய அடிமைகள் அவருக்குப் பரிசுத்த சேவை செய்வார்கள்.  அவருடைய முகத்தை அவர்கள் பார்ப்பார்கள்.+ அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.+  இனி இரவு என்பதே இருக்காது.+ விளக்கோ சூரிய ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனென்றால், கடவுளாகிய யெகோவா* அவர்கள்மீது ஒளிவீசுவார்.+ அவர்கள் என்றென்றும் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்.+  பின்பு, அவர் என்னிடம், “இந்த வார்த்தைகள் நம்பகமானவை, உண்மையானவை;+ தீர்க்கதரிசிகளுக்குத் தன்னுடைய வார்த்தைகளைக் கொடுக்கிற கடவுளாகிய யெகோவா,*+ சீக்கிரத்தில் நடக்க வேண்டியவற்றைத் தன்னுடைய அடிமைகளுக்குக் காட்டுவதற்காகத் தன்னுடைய தூதரை அனுப்பினார்.  இதோ! நான் சீக்கிரமாக வருகிறேன்;+ இந்தச் சுருளில் இருக்கிற தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கடைப்பிடிக்கிறவன் எவனோ அவன் சந்தோஷமானவன்”+ என்று சொன்னார்.  யோவானாகிய நான்தான் இவற்றைக் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருந்தேன். நான் கேட்டும், பார்த்தும் முடித்த பின்பு, இவற்றை எனக்குக் காட்டிய தேவதூதரை வணங்குவதற்காக அவருடைய காலில் விழுந்தேன்.  ஆனால் அவர், “வேண்டாம்! இப்படிச் செய்யாதே! உன்னைப் போலவும், தீர்க்கதரிசிகளாகிய உன் சகோதரர்களைப் போலவும், இந்தச் சுருளின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கிறவர்களைப் போலவும் நானும் ஓர் அடிமைதான்; கடவுளை வணங்கு”+ என்று சொன்னார். 10  அதோடு அவர் என்னிடம், “இந்தச் சுருளில் இருக்கிற தீர்க்கதரிசன வார்த்தைகளை முத்திரை போட வேண்டாம். ஏனென்றால், குறித்த காலம் நெருங்கிவிட்டது. 11  அநீதியைச் செய்கிறவன் தொடர்ந்து அநீதியைச் செய்யட்டும்; அசுத்தமானவன் தொடர்ந்து அசுத்தமானதைச் செய்யட்டும்; நீதியுள்ளவன் தொடர்ந்து நீதியைச் செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் தொடர்ந்து பரிசுத்தமாக நடக்கட்டும். 12  “‘இதோ! நான் சீக்கிரமாக வருகிறேன். அவரவர் செய்த செயல்களுக்கு ஏற்ப அவரவருக்குப் பலன் கொடுப்பேன்.+ 13  நானே ஆல்பாவும் ஒமேகாவும்,*+ முதலும் கடைசியும், ஆரம்பமும் முடிவுமாக இருக்கிறேன். 14  வாழ்வு தரும் மரங்களின் பழங்களைச் சாப்பிடும் உரிமை கிடைப்பதற்காகவும்,+ நுழைவாசல்கள் வழியாக நகரத்துக்குள் நுழைகிற வாய்ப்புக் கிடைப்பதற்காகவும்+ தங்கள் அங்கிகளைத் துவைத்தவர்கள்+ சந்தோஷமானவர்கள். 15  நாய் போன்றவர்களும்,* ஆவியுலகத் தொடர்புகொள்கிறவர்களும், பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்களும், கொலைகாரர்களும், சிலைகளை வணங்குகிறவர்களும், பொய்யை விரும்பி பொய்யிலே புரளுகிறவர்களும்+ வெளியே இருப்பார்கள்.’ 16  ‘சபைகளுடைய நன்மைக்காக இவற்றை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படி இயேசுவாகிய நான் என் தூதரை அனுப்பினேன். நான் தாவீதின் வேராகவும் சந்ததியாகவும்+ இருக்கிறேன், பிரகாசமான விடியற்கால நட்சத்திரமாகவும்+ இருக்கிறேன்.’” 17  “வருக! வருக!” என்று கடவுளுடைய சக்தி அழைத்துக்கொண்டே இருக்கிறது, மணமகளும்+ அதேபோல் அழைக்கிறாள். கேட்கிற எவரும் “வருக, வருக!” என்று அழைக்கட்டும்; தாகமாயிருக்கிற எவரும் வரட்டும்;+ விருப்பமுள்ள எவரும் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளட்டும்.+ 18  “இந்தச் சுருளில் இருக்கிற தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கேட்கிற எல்லாருக்கும் சாட்சியாக நான் சொல்கிறேன்: ஒருவன் இவற்றோடு எதையாவது கூட்டினால்,+ இந்தச் சுருளில் எழுதப்பட்டிருக்கிற தண்டனைகளைக் கடவுள் அவன்மேல் கூட்டுவார்.+ 19  ஒருவன் இந்தத் தீர்க்கதரிசனச் சுருளின் வார்த்தைகளிலிருந்து எதையாவது எடுத்துவிட்டால், இந்தச் சுருளில் எழுதப்பட்ட காரியங்களிலிருந்து கடவுள் அவனுடைய பங்கை எடுத்துவிடுவார்; வாழ்வு தரும் மரங்களின் பழத்தைச் சாப்பிடவோ+ பரிசுத்த நகரத்துக்குள்+ நுழையவோ அவனை அனுமதிக்க மாட்டார். 20  இவற்றைச் சாட்சியாக அறிவிக்கிறவர், ‘ஆம், நான் சீக்கிரமாக வருகிறேன்’”+ என்று சொல்கிறார். “ஆமென்!* எஜமானாகிய இயேசுவே, வாருங்கள்.” 21  நம்முடைய எஜமானாகிய இயேசுவின் அளவற்ற கருணை பரிசுத்தவான்கள்மீது இருக்கட்டும்.

அடிக்குறிப்புகள்

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
கிரேக்க எழுத்துக்களில் ஆல்பா என்பது முதல் எழுத்து, ஒமேகா என்பது கடைசி எழுத்து.
அதாவது, “கடவுள் அருவருக்கிற காரியங்களைச் செய்கிறவர்களும்.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்!”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா