Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 113

சுறுசுறுப்பாக உழைக்க வேண்டும்—தாலந்து உவமை

சுறுசுறுப்பாக உழைக்க வேண்டும்—தாலந்து உவமை

மத்தேயு 25:14-30

  • தாலந்து உவமையை இயேசு சொல்கிறார்

இயேசு தன்னுடைய நான்கு அப்போஸ்தலர்களோடு இன்னமும் ஒலிவ மலையில் இருக்கிறார். இப்போது அவர்களுக்கு இன்னொரு உவமையைச் சொல்கிறார். ஒருசில நாட்களுக்கு முன்பு எரிகோவில் இருந்தபோது, கடவுளுடைய அரசாங்கம் எதிர்காலத்தில்தான் ஆட்சியை ஆரம்பிக்கும் என்பதைக் காட்டுவதற்காக மினாவைப் பற்றிய உவமையைச் சொல்லியிருந்தார். அந்த உவமைக்கும் இப்போது சொல்லப்போகிற உவமைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அவருடைய பிரசன்னத்தையும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்தையும் பற்றிய கேள்விக்குப் பதில் சொல்லும்போதுதான் இந்த உவமையையும் சொல்கிறார். அவர் தன்னுடைய சீஷர்களிடம் ஒப்படைக்கிற உடைமைகளை வைத்து அவர்கள் சுறுசுறுப்பாக உழைக்க வேண்டும் என்பதை இந்த உவமை காட்டுகிறது.

“பரலோக அரசாங்கம், தூர தேசத்துக்குப் புறப்பட்டுப் போகிற ஒருவரைப் போல் இருக்கிறது. அவர் போவதற்கு முன்பு, தன்னுடைய அடிமைகளைக் கூப்பிட்டுத் தன் உடைமைகளை அவர்களிடம் ஒப்படைத்தார்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 25:14) இதற்கு முன்பு சொன்ன ஒரு உவமையில், ‘ராஜ அதிகாரத்தைப் பெற்றுவருவதற்காக’ தூர தேசத்துக்குப் போன ஒரு மனிதரோடு இயேசு தன்னை ஒப்பிட்டுப் பேசியிருந்தார். அதனால், இந்த உவமையில் சொல்லப்படுகிற மனிதரும் இயேசுவைத்தான் குறிக்கிறார் என்பதை அப்போஸ்தலர்கள் புரிந்துகொள்கிறார்கள்.—லூக்கா 19:12.

அந்த மனிதர் தூர தேசத்துக்குப் போவதற்கு முன்பு, தன்னுடைய அடிமைகளிடம் விலைமதிப்புள்ள உடைமைகளை ஒப்படைக்கிறார். இயேசு ஊழியம் செய்த மூன்றரை வருஷங்களில், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதில் முழு கவனம் செலுத்தினார். அந்த வேலையைச் செய்ய தன்னுடைய சீஷர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். அவர்களைவிட்டு அவர் போன பிறகும், அந்தப் பயிற்சியைப் பயன்படுத்தி, சீஷர்கள் பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்வார்கள் என்று அவர் நம்பிக்கையோடு இருக்கிறார்.—மத்தேயு 10:7; லூக்கா 10:1, 8, 9; யோவான் 4:38; 14:12-ஐ ஒப்பிடுங்கள்.

அந்த மனிதர் தன்னுடைய உடைமைகளை எப்படிப் பிரித்துக் கொடுக்கிறார்? “அவனவனுடைய திறமைக்கு ஏற்றபடி, ஒருவனுக்கு ஐந்து தாலந்தும், இன்னொருவனுக்கு இரண்டு தாலந்தும், மற்றொருவனுக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டுத் தூர தேசத்துக்குப் போனார்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 25:15) தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட தாலந்தை வைத்து அந்த அடிமைகள் என்ன செய்வார்கள்? அவர்கள் சுறுசுறுப்பாக உழைத்து, எஜமானுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பார்களா?

“ஐந்து தாலந்தை வாங்கியவன் உடனே போய், அவற்றை வைத்து வியாபாரம் செய்து, இன்னும் ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். அதேபோல், இரண்டு தாலந்தை வாங்கியவனும் இன்னும் இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். ஒரேவொரு தாலந்தை வாங்கியவனோ புறப்பட்டுப் போய், தன் எஜமான் கொடுத்த பணத்தை குழிதோண்டிப் புதைத்து வைத்தான்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 25:16-18) எஜமான் திரும்பி வரும்போது என்ன நடக்கும்?

“ரொம்பக் காலத்துக்குப் பிறகு, அந்த அடிமைகளுடைய எஜமான் திரும்பி வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 25:19) முதல் இரண்டு அடிமைகளும் தங்களுடைய “திறமைக்கு ஏற்றபடி” தங்களால் முடிந்ததையெல்லாம் செய்தார்கள். அவர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள்; கடினமாக உழைத்தார்கள்; தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை வைத்து இன்னும் அதிகமாகச் சம்பாதித்தார்கள். ஐந்து தாலந்தை வாங்கியவன், இன்னும் ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். இரண்டு தாலந்தை வாங்கியவனும், இன்னும் இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். (அந்தக் காலத்தில், ஒருவர் கிட்டத்தட்ட 20 வருஷங்கள் வேலை செய்தால்தான் ஒரு தாலந்துக்குச் சமமான பணத்தைச் சம்பாதிக்க முடியும்.) எஜமான் அவர்கள் இரண்டு பேரையும் ஒரே மாதிரி பாராட்டுகிறார். “சபாஷ்! உண்மையுள்ள நல்ல அடிமையே, நீ கொஞ்சக் காரியங்களில் உண்மையுள்ளவனாக இருந்தாய்; அதனால், நிறைய காரியங்களைக் கவனித்துக்கொள்ள உன்னை நியமிப்பேன். உன் எஜமானோடு சேர்ந்து நீயும் சந்தோஷப்படு” என்று அவர்களிடம் சொல்கிறார்.—மத்தேயு 25:21.

ஆனால், ஒரு தாலந்தை வாங்கியவனின் கதை வேறு மாதிரியாக இருக்கிறது. அவன் தன் எஜமானிடம் வந்து, “எஜமானே, நீங்கள் கறாரானவர், மற்றவர்கள் விதைத்ததை அறுவடை செய்கிறவர், மற்றவர்கள் புடைத்ததைச் சேகரிக்கிறவர் என்றெல்லாம் எனக்குத் தெரியும். அதனால் நான் உங்களுக்குப் பயந்து, நீங்கள் கொடுத்த தாலந்தை மண்ணுக்குள் புதைத்து வைத்தேன். இதோ, உங்கள் தாலந்து” என்று சொல்கிறான். (மத்தேயு 25:24, 25) அவன் அந்தப் பணத்தை வட்டிக் கடைக்காரர்களிடம் கொடுத்து வைத்திருந்தால், அவனுடைய எஜமானுக்குக் கொஞ்சமாவது லாபம் கிடைத்திருக்கும். ஆனால், அதைக்கூட அவன் செய்யவில்லை. அவன் தன் எஜமானுக்கு நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தியிருந்தான்.

அதனால்தான், எஜமான் அவனை “பொல்லாத அடிமையே, சோம்பேறியே” என்று சொல்கிறார். பிறகு அவனிடம் இருந்த தாலந்தை வாங்கி, சுறுசுறுப்பாக வேலை செய்யத் தயாராக இருக்கிற அடிமையிடம் கொடுக்கிறார். அதன் பிறகு, “இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும், அவன் ஏராளமாகப் பெற்றிருப்பான்; ஆனால், இல்லாதவனிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்று சொல்கிறார்.—மத்தேயு 25:26, 29.

இந்த உவமையைப் பற்றியும் இயேசுவின் சீஷர்கள் ரொம்ப ஆழமாக யோசிக்க வேண்டியிருக்கிறது. தங்களிடம் இயேசு ஒப்படைக்கிற வேலை, அதாவது சீஷராக்கும் வேலை, மிகவும் மதிப்புள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அந்த வேலையை அவர்கள் சுறுசுறுப்பாகச் செய்ய வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார். எல்லாரும் ஒரேவிதமாக அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதில்லை. அவர் இந்த உவமையில் சொன்னதுபோல, ஒவ்வொருவரும் தங்களுடைய “திறமைக்கு ஏற்றபடி,” தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். ஆனால், எஜமானுடைய உடைமைகளை இன்னும் அதிகமாக்குவதற்குத் தங்களால் முடிந்ததைச் செய்யாமல் ‘சோம்பேறியாக’ இருப்பவர்களைப் பார்த்து இயேசு கண்டிப்பாகச் சந்தோஷப்பட மாட்டார்.

“இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும்” என்று இயேசு சொன்னதைக் கேட்டு அப்போஸ்தலர்கள் கண்டிப்பாகச் சந்தோஷப்பட்டிருப்பார்கள்!