Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 73

ஒரு சமாரியர் அன்பு காட்டுகிறார்

ஒரு சமாரியர் அன்பு காட்டுகிறார்

லூக்கா 10:25-37

  • முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

  • நல்ல சமாரியர்

இயேசு இன்னமும் எருசலேமுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறார். அவரைப் பார்க்க யூதர்கள் வருகிறார்கள். அவர்களில் சிலர் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். மற்றவர்களோ அவரைச் சோதிக்க நினைக்கிறார்கள். அவர்களில் ஒருவன் திருச்சட்ட வல்லுநனாக இருக்கிறான். அவன் இயேசுவிடம், “போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறான்.—லூக்கா 10:25.

உண்மையிலேயே தன்னிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அவன் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என்பதை இயேசு புரிந்துகொள்கிறார். யூதர்களைக் கோபப்படுத்தும் விதத்தில் இயேசுவை ஏதாவது சொல்ல வைக்க வேண்டும் என்பதற்காகவே அவன் இதைக் கேட்டிருக்கலாம். இது சம்பந்தமாக அவன் மனதில் ஏற்கெனவே ஒரு திட்டவட்டமான கருத்து இருப்பதை இயேசு புரிந்துகொள்கிறார். அதனால், அவன் என்ன யோசிக்கிறான் என்பதை வெளியே கொண்டுவரும் விதத்தில் இயேசு ஞானமாக ஒரு கேள்வியைக் கேட்கிறார்.

அவனிடம், “திருச்சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ என்ன வாசித்திருக்கிறாய்?” என்று கேட்கிறார். அவன் திருச்சட்டத்தைப் படித்திருந்ததால், உபாகமம் 6:5, லேவியராகமம் 19:18 ஆகிய வசனங்களை வைத்து, “‘உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்’ என்றும், ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்’ என்றும்” சொல்கிறான். (லூக்கா 10:26, 27) அவன் சொன்ன பதில் சரிதானா?

இயேசு அவனிடம், “சரியாகச் சொன்னாய்; அப்படியே செய்துகொண்டிரு, அப்போது உனக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்” என்கிறார். இதைக் கேட்டதும் அவன் போய்விட்டானா? தன் கேள்விக்குச் சரியான பதில் கிடைத்தால் போதும் என்று அவன் நினைக்கவில்லை. அவன் தன்னை ‘நீதிமான் எனக் காட்டிக்கொள்ள’ நினைக்கிறான். அவனுடைய கருத்துகள் எல்லாம் சரி என்று இயேசு ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறான். தான் மற்றவர்களிடம் நியாயமாக நடந்துகொள்வதாகக் காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறான். அதனால், “நான் அன்பு காட்ட வேண்டிய அந்த மற்றவர்கள் உண்மையில் யார்?” என்று அவரிடம் கேட்கிறான். (லூக்கா 10:28, 29) இது சாதாரண கேள்வியைப் போல் தெரியலாம். ஆனால், அதற்கு ஆழமான அர்த்தம் இருக்கிறது. ஏன் அப்படிச் சொல்கிறோம்?

“மற்றவர்கள்” என்ற வார்த்தை, யூத பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்கிற ஆட்களை மட்டும்தான் குறிக்கிறது என்று யூதர்கள் நினைக்கிறார்கள். இந்தக் கருத்தை லேவியராகமம் 19:18 ஆதரிப்பதுபோல் தெரியலாம். சொல்லப்போனால், யூதரல்லாத ஒருவருடன் பழகுவது “சட்டத்துக்கு எதிரானது” என்றுகூட யூதர்கள் கருதுகிறார்கள். (அப்போஸ்தலர் 10:28) அதனால், சக யூதர்களிடம் அன்பு காட்டினாலே தான் நீதிமானாகிவிடலாம் என்று அந்த வல்லுநன் நினைக்கிறான். இயேசுவின் சீஷர்களில் சிலரும் இப்படி நினைத்திருக்கலாம். யூதரல்லாத ஆட்களிடம் அவர்கள் இரக்கமில்லாமல் நடந்திருக்கலாம். ஏனென்றால், ‘தாங்கள் அன்பு காட்ட வேண்டிய அந்த மற்றவர்கள்’ பட்டியலில் யூதரல்லாத ஆட்களை அவர்கள் சேர்ப்பதில்லை.

திருச்சட்ட வல்லுநனையும் மற்ற யூதர்களையும் புண்படுத்தாமல் இயேசு எப்படி இந்தத் தவறான எண்ணத்தைச் சரிப்படுத்துவார்? இதற்காக அவர் ஒரு கதை சொல்கிறார். “ஒருவன் எருசலேமிலிருந்து கீழ்நோக்கி எரிகோவுக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்போது, கொள்ளைக்காரர்களின் கையில் மாட்டிக்கொண்டான். அவர்கள் அவனிடமிருந்த எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு, அவனை அடித்து, கிட்டத்தட்ட சாகும் நிலையில் விட்டுவிட்டுப் போனார்கள். ஆலய குரு ஒருவர் தற்செயலாக அந்த வழியில் வந்துகொண்டிருந்தார்; ஆனால் அவனைப் பார்த்தபோது, எதிர்ப்பக்கமாகப் போய்விட்டார். அதேபோல், ஒரு லேவியரும் அந்த வழியில் வந்து அவனைப் பார்த்தபோது எதிர்ப்பக்கமாகப் போய்விட்டார். ஆனால், அந்த வழியில் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அவனைப் பார்த்தபோது மனம் உருகினார்” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 10:30-33.

குருமார்கள் பலரும், ஆலயத்தில் உதவி செய்கிற லேவியர்கள் பலரும் எரிகோவில் வாழ்கிறார்கள் என்று அந்தத் திருச்சட்ட வல்லுநனுக்குத் தெரியும். ஆலயத்திலிருந்து திரும்பி வரும்போது கிட்டத்தட்ட 23 கிலோமீட்டர் தூரம் அவர்கள் பயணம் செய்ய வேண்டும். இது ரொம்ப ஆபத்தான பாதை. ஏனென்றால், பாதையோரத்தில் திருடர்கள் பதுங்கியிருப்பார்கள். ஒரு யூதன் அடிபட்டுக் கிடப்பதைப் பார்க்கும்போது, குருமாரும் லேவியரும் உதவி செய்ய வேண்டாமா? ஆனால், இந்தக் கதையில் வருகிற குருமாரும் லேவியரும் உதவி செய்யவில்லை என்று இயேசு சொல்கிறார். யூதர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு சமாரியர்தான் அவனுக்கு உதவி செய்கிறார்.—யோவான் 8:48.

அடிபட்ட யூதனுக்கு அவர் எப்படி உதவி செய்தார்? “அவன் பக்கத்தில் போய், அவனுடைய காயங்கள்மேல் எண்ணெயையும் திராட்சமதுவையும் ஊற்றி, அவற்றுக்குக் கட்டுப்போட்டார். பின்பு, அவனைத் தன்னுடைய கழுதையின் மேல் ஏற்றி, ஒரு சத்திரத்துக்குக் கொண்டுபோய்க் கவனித்துக்கொண்டார். அடுத்த நாள் இரண்டு தினாரியுவை எடுத்து சத்திரக்காரன் கையில் கொடுத்து, ‘இவனைக் கவனித்துக்கொள்; இதற்குமேல் ஏதாவது செலவானால் நான் திரும்பி வரும்போது உனக்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொன்னார்.”—லூக்கா 10:34, 35.

மிகப் பெரிய போதகரான இயேசு இந்தக் கதையைச் சொன்ன பிறகு, யோசிக்க வைக்கிற ஒரு கேள்வியை அந்த மனிதனிடம் கேட்கிறார். “இந்த மூன்று பேரில், கொள்ளைக்காரர்கள் கையில் மாட்டிக்கொண்டவனிடம் உண்மையிலேயே அன்பு காட்டியவர் யாரென்று நினைக்கிறாய்?” என்று கேட்கிறார். “சமாரியர்” என்று பதில் சொல்ல அவனுக்குத் தர்மசங்கடமாக இருந்திருக்கலாம். அதனால், “அவனிடம் இரக்கத்தோடு நடந்துகொண்டவர்தான்” என்று பதில் சொல்கிறான். அப்போது இயேசு, “நீயும் போய் அதேபோல் நடந்துகொள்” என்று சொல்கிறார். இப்படிச் சொல்வதன் மூலம் அந்தக் கதையின் முக்கிய கருத்தை அவனுக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார்.—லூக்கா 10:36, 37.

எவ்வளவு அருமையாக இயேசு கற்பிக்கிறார்! யூதரல்லாத ஆட்களிடமும் அன்பு காட்ட வேண்டும் என்று நேரடியாக இயேசு சொல்லியிருந்தால், அந்தத் திருச்சட்ட வல்லுநனும் அங்கிருக்கிற மற்ற யூதர்களும் அதை ஏற்றுக்கொண்டிருப்பார்களா? அநேகமாக, அதை ஏற்க மறுத்திருக்கலாம். அதனால், இயேசு ஒரு எளிமையான கதையைச் சொன்னார். அவர்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்களை அதில் குறிப்பிட்டார். அதனால், “நான் அன்பு காட்ட வேண்டிய அந்த மற்றவர்கள் உண்மையில் யார்?” என்ற கேள்விக்குத் தெளிவான பதில் கிடைத்தது. நாமும் பாரபட்சம் பார்க்காமல் எல்லாரிடமும் அன்பையும் கருணையையும் காட்ட வேண்டும் என்றுதான் வேதவசனங்கள் சொல்கின்றன.