Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘சக மனிதர்மீது அன்பு காட்டுங்கள்’

‘சக மனிதர்மீது அன்பு காட்டுங்கள்’

“‘உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்பது இரண்டாம் கட்டளை.”—மத். 22:39.

1, 2. (அ) தலைசிறந்த இரண்டாம் கட்டளை எது? (ஆ) என்ன கேள்விகளைச் சிந்திப்போம்?

பரிசேயன் ஒருவன் இயேசுவைச் சோதிப்பதற்காக, “‘போதகரே, திருச்சட்டத்தில் தலைசிறந்த கட்டளை எது?’ என்று அவரிடம் கேட்டான். அதற்கு அவர், ‘“உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.” இதுதான் தலைசிறந்த கட்டளை, முதலாம் கட்டளை. “உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்” என்பது இரண்டாம் கட்டளை’” என்றார். முதல் கட்டளையைப் பற்றி முந்தின கட்டுரையில் பார்த்தோம், இப்போது இரண்டாம் கட்டளையைப் பற்றி பார்க்கலாம்.—மத். 22:34-39.

2 நம்மீது அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும் என்று இயேசு சொன்னார். அப்படியென்றால், சக மனிதர் யார்? அவர்கள்மீது என்னென்ன வழிகளில் அன்பு காட்டலாம்?

“சக மனிதர் யார்?”

3, 4. (அ) “சக மனிதர் யார்?” என்ற கேள்விக்கு இயேசு எப்படிப் பதிலளித்தார்? (ஆ) அடிபட்டுக் கிடந்த மனிதனுக்குச் சமாரியன் எப்படி உதவினார்? (படத்தைப் பாருங்கள்.)

3 “நான் அன்புகாட்ட வேண்டிய சக மனிதர் யார்?” என்று இயேசுவிடம் ஒருவர் கேட்டார். அதற்கு அவர், நல்ல சமாரியன் பற்றிய உவமையைச் சொன்னார். (லூக்கா 10:29-37-ஐ வாசியுங்கள்.) ஒரு யூதன் கொள்ளையர்களிடம் சிக்கி, அடிபட்டு குற்றுயிரும் குலையுயிருமாக இருந்தான். அந்த வழியில் வந்த ஒரு ஆலயகுருவும்  லேவியரும் அவனைப் பார்த்தும் பார்க்காமல் சென்றுவிட்டார்கள். ஒரு சமாரியன்தான் அவனுக்கு உதவினார். இத்தனைக்கும், யூதர்கள் சமாரியர்களை வெறுத்தார்கள். அவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.—யோவா. 4:9.

4 “அவனுடைய காயங்கள்மீது எண்ணெயையும் திராட்சமதுவையும் ஊற்றி” சமாரியன் கட்டுப்போட்டார். அவரைக் கொண்டுபோய் பயணிகள் தங்கும் சத்திரத்தில் சேர்த்தார். அவரைக் கவனித்துக்கொள்ள அங்கிருந்த சத்திரக்காரனுக்கு இரண்டு தினாரிகளை, அதாவது தன் இரண்டு நாள் கூலியை, கொடுத்தார். (மத். 20:2) இதிலிருந்து, காயப்பட்டவனிடம் அன்பு காட்டி சக மனிதனாக நடந்துகொண்டது யார் என்பது தெளிவாகத் தெரிகிறது. சக மனிதர்கள்மீது அன்பும் இரக்கமும் காட்ட வேண்டும் என்பதை இந்த உவமை மூலமாக இயேசு கற்றுக்கொடுத்தார்.

யெகோவாவின் சாட்சிகள் அன்பு காட்டுவதில் முந்திக்கொள்கிறார்கள் (பாரா 5)

5. சக மனிதர்கள்மீது யெகோவாவின் சாட்சிகள் அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் கொடுங்கள்.

5 இந்தச் சமாரியனைப் போன்ற இரக்கமுள்ள ஆட்களைப் பார்ப்பது கடினம். அதுவும், பந்தபாசம் இல்லாத, கொடூரமான, நல்ல காரியங்களைச் செய்ய விரும்பாத ஆட்கள் வாழும் இந்த “கடைசி நாட்களில்” ரொம்பவே கடினம். (2 தீ. 3:1-3) உதாரணத்திற்கு, அக்டோபர் 2012-ல் நியு யார்க்கை பயங்கரமான புயல் தாக்கியபோது, மக்கள் மின்சாரமும் மற்ற அடிப்படை வசதிகளும்கூட இல்லாமல் தவித்தார்கள். அந்தச் சமயம் பார்த்து கொள்ளையர்கள் வீடுபுகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்தது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் உதவி செய்தார்கள். சக மனிதர்கள் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பே இதற்கு முக்கிய காரணம். வேறு என்ன வழிகளில் சக மனிதர்கள்மீது அன்பு காட்டலாம்?

அன்பு காட்ட வழிகள்

6. சக மனிதர்மீது அன்பு காட்ட ஒரு வழி என்ன?

6 ஆன்மீக விதத்தில் உதவுங்கள். பைபிளில் இருக்கும் ‘ஆறுதலான’ செய்தியைச் சொல்வதன்மூலம் நாம் மக்களுக்கு உதவுகிறோம். (ரோ. 15:4) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லும்போது சக மனிதர்மீது அன்பு காட்டுகிறோம். (மத். 24:14) “நம்பிக்கை அளிக்கிற” இந்தச் செய்தியை அறிவிப்பது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.—ரோ. 15:13.

7. இயேசு சொன்ன பொன்மொழி என்ன, அதைப் பின்பற்றுவதால் என்ன நன்மை?

7 பொன்மொழியைப் பின்பற்றுங்கள். மலை பிரசங்கத்தில் இயேசு இந்தப் பொன்மொழியைச் சொன்னார்: “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்; சொல்லப்போனால், திருச்சட்டத்தின் சாராம்சமும் தீர்க்கதரிசனப் புத்தகங்களின் சாராம்சமும் இதுதான்.” (மத். 7:12) இயேசு சொன்னதுபோல் மற்றவர்களை நடத்தும்போது திருச்சட்டத்தையும் (ஆதியாகமத்திலிருந்து உபாகமம்வரை) தீர்க்கதரிசனப் புத்தகங்களையும் (எபிரெய வேதாகமத்தில் இருப்பவை) கடைப்பிடிக்கிறோம். மற்றவர்கள்மீது அன்பு காட்டுபவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதை இந்தப் புத்தகங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம். ஏசாயா மூலம் யெகோவா இப்படிச் சொன்னார்: ‘நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; இப்படிச் செய்கிற மனுஷன் [சந்தோஷமானவன்].’ (ஏசா. 56:1, 2) சக மனிதர்களிடம் அன்பு காட்டினால் யெகோவா நம்மை நிச்சயம் ஆசீர்வதிப்பார்.

8. நாம் ஏன் எதிரிகளையும் நேசிக்க வேண்டும், அதனால் என்ன நன்மை?

8 எதிரிகளை நேசியுங்கள். “‘சக மனிதர்மீது அன்பு காட்ட வேண்டும், எதிரியையோ வெறுக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்; இப்படிச் செய்யும்போது, உங்கள் பரலோகத் தகப்பனின் பிள்ளைகளாக இருப்பீர்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 5:43-45) “உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிடக்  கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 12:20; நீதி. 25:21) திருச்சட்டத்தின்படி எதிரியுடைய கழுதைச் சுமையோடு விழுந்துகிடந்தால், அதைத் தூக்க அவனுக்கு உதவி செய்ய வேண்டும். (யாத். 23:5) இப்படிச் செய்தால் எதிரிகள்கூட நண்பர்களாக மாற வாய்ப்பிருக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து அன்பு காட்டியதால் எதிரிகளின் மனம்கூட இளகியிருக்கிறது. நாம் அன்பு காட்டியதால், நம்மைக் கொடுமைப்படுத்திய ஒருவர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்போது எவ்வளவு சந்தோஷப்படுவோம்!

9. சகோதரர்களோடு சமாதானமாவதைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?

9 ‘எல்லா மக்களோடும் சமாதானமாய் இருங்கள்.’ (எபி. 12:14) “காணிக்கையைச் செலுத்த பலிபீடத்திற்கு நீங்கள் வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள்மீது ஏதோ மனக்குறை இருப்பது உங்கள் நினைவுக்கு வந்தால், அங்கேயே அந்தப் பலிபீடத்திற்குமுன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவனிடம் சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 5:23, 24) எல்லோரோடும் சமாதானமாய் இருக்க வேண்டும், முக்கியமாக நம் சகோதர சகோதரிகளோடு சமாதானமாய் இருக்க வேண்டும். இப்படிச் சமாதானமாவதற்கு நாம் முதல்படி எடுத்தால், அவர்கள் மேல் அன்பு காட்டினால் யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார்.

10. நாம் ஏன் குற்றம் கண்டுபிடிக்கக் கூடாது?

10 குற்றம் கண்டுபிடிக்காதீர்கள். “நீங்கள் நியாயந்தீர்க்கப்படாமல் இருப்பதற்கு மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்; மற்றவர்களை எப்படி நியாயந்தீர்க்கிறீர்களோ அப்படித்தான் நீங்களும் நியாயந்தீர்க்கப்படுவீர்கள்; எதைக் கொண்டு மற்றவர்களை அளக்கிறீர்களோ, அதைக் கொண்டுதான் அவர்களும் உங்களை அளப்பார்கள். உங்கள் கண்ணிலுள்ள மரக்கட்டையைக் கவனிக்காமல் உங்கள் சகோதரனுடைய கண்ணிலுள்ள தூசியை ஏன் பார்க்கிறீர்கள்? உங்கள் கண்ணில் ஒரு மரக்கட்டை இருக்கும்போது நீங்கள் எப்படி உங்கள் சகோதரனிடம், ‘உன் கண்ணிலுள்ள தூசியை எடுக்கட்டுமா’ என்று கேட்க முடியும்? வெளிவேஷக்காரர்களே! முதலில் உங்கள் கண்ணிலுள்ள மரக்கட்டையை எடுத்துப்போடுங்கள், அப்போதுதான் உங்கள் சகோதரனுடைய கண்ணிலிருந்து தூசியை எப்படி எடுப்பது என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்” என்று இயேசு சொன்னார். (மத். 7:1-5) நாம் செய்யும் பெரிய தவறுகளைப் பற்றி யோசிக்காமல், மற்றவர்கள் செய்யும் சின்ன சின்ன தவறைக்கூட பூதக்கண்ணாடி வைத்து பார்க்கிறோமா?

 அன்பு காட்ட மிகச் சிறந்த வழி

11, 12. சக மனிதர்மீது அன்பு காட்ட எது சிறந்த வழி?

11 நாம் சக மனிதர்கள்மீது மிகச் சிறந்த விதத்தில் அன்பு காட்ட விரும்புகிறோம். அதனால், இயேசுவைப் போலவே நற்செய்தியைப் பிரசங்கிக்கிறோம். (லூக். 8:1) ‘எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்க’ வேண்டும் என்று இயேசு கட்டளையிட்டார். (மத். 28:19, 20) உலகெங்கும் சாட்சி கொடுக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அப்போதுதான், அழிவுக்கு வழிநடத்தும் அகலமான பாதையை விட்டுவிட்டு, வாழ்வுக்கு வழிநடத்தும் குறுகலான பாதையில் செல்ல மக்களுக்கு உதவ முடியும். (மத். 7:13, 14) அதற்காக நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற யெகோவா உதவுவார்.

12 ‘ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியை’ வளர்த்துக்கொள்ள இயேசு மக்களுக்கு உதவியதைப் போலவே நாமும் உதவுகிறோம். (மத். 5:3) “கடவுளுடைய நற்செய்தியை” பிரசங்கிப்பதன்மூலம் மக்களுடைய ஆன்மீக பசியைத் தீர்க்கிறோம். (ரோ. 1:2) நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்கள் இயேசுவின் மூலம் கடவுளோடு சமரசமாகிறார்கள். (2 கொ. 5:18, 19) எனவே, நற்செய்தியைப் பிரசங்கிப்பதுதான் சக மனிதர்மீது அன்பு காட்ட மிகச்சிறந்த வழி.

13. நற்செய்தியைப் பிரசங்கிப்பதைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

13 மறுசந்திப்புகளிலும் பைபிள் படிப்புகளிலும் கடவுளுடைய நெறிமுறைகளைத் தெரிந்துகொள்ள மக்களுக்கு உதவுகிறோம். கற்றுக்கொள்ளும் சத்தியங்கள் அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றிவிடலாம். (1 கொ. 6:9-11) “முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உடையவர்கள்” தங்கள் வாழ்வில் மாற்றங்கள் செய்ய யெகோவா உதவுவார். அவரோடு நெருங்கிய பந்தத்தை வளர்க்கவும் உதவுவார். இதைப் பார்க்கும்போது நம் மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. (அப். 13:48) வாழ்வில் விரக்தியடைந்த நிறைய பேர் இப்படிச் சந்தோஷம் கண்டிருக்கிறார்கள்; அவர்களுடைய கவலைகள் காணாமல் போயிருக்கின்றன. சத்தியத்திற்கு வரும் புதியவர்கள் முன்னேறும்போது நம் மனதில் மகிழ்ச்சி மலர்கிறது. நற்செய்தியைப் பிரசங்கித்து சக மனிதர்களிடம் மிகச்சிறந்த விதத்தில் அன்பு காட்டும்போது எத்தனை எத்தனை ஆசீர்வாதங்கள்!

உண்மையான அன்பிருந்தால்...

14. பவுல் 1 கொரிந்தியர் 13:4-8-ல் அன்பை எப்படி வர்ணிக்கிறார்?

14 உண்மையான அன்பிருந்தால் எப்படி நடந்துகொள்வோம் என பவுல் அருமையாக வர்ணிக்கிறார். இதுபோன்ற அன்பை சக மனிதர்களிடம் காட்டினால், நிறைய பிரச்சினைகளைத் தவிர்க்கலாம், சந்தோஷத்தைச் சம்பாதிக்கலாம், கடவுளுடைய ஆசீர்வாதங்களைப் பெறலாம். (1 கொரிந்தியர் 13:4-8-ஐ வாசியுங்கள்.) இப்போது, அன்பைப் பற்றி பவுல் எப்படி விளக்குகிறார் என்றும் நாம் எப்படி அந்த அன்பை சக மனிதர்களிடம் காட்டலாம் என்றும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

15. (அ) நாம் ஏன் பொறுமையும் கருணையும் காட்ட வேண்டும்? (ஆ) நாம் ஏன் பெருமையடிக்கவோ பொறாமைப்படவோ கூடாது?

15 “அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது.” நாம் எவ்வளவு தவறுகள் செய்தாலும் யெகோவா பொறுமையாக இருக்கிறார்; நமக்குக் கருணை காட்டுகிறார். அதேபோல் நாமும் மற்றவர்களுக்குக் கருணை காட்ட வேண்டும்; அவர்கள் தவறு செய்யும்போது, யோசிக்காமல் பேசும்போது, கோபப்படும்போது பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும். “அன்பு பொறாமைப்படாது.” ஒருவர்மீது உண்மையான அன்பிருந்தால் அவருடைய பொருள்மீது ஆசைப்பட மாட்டோம், சபையில் அவருக்குப் பொறுப்புகள் கிடைத்தால் பொறாமைப்பட மாட்டோம். அன்பிருந்தால் ‘எனக்குதான் எல்லாம் தெரியும்’ என்று பெருமையடிக்க மாட்டோம். ஏனென்றால், ‘மேட்டிமையான பார்வையையும், அகந்தையான மனதையும்’ யெகோவா வெறுக்கிறார்.—நீதி. 21:4.

16, 17. நாம் எப்படி 1 கொரிந்தியர் 13:5, 6-ஐ பின்பற்றலாம்?

16 உண்மையான அன்பிருந்தால் சக மனிதர்களிடம் ‘கேவலமாக நடந்துகொள்ள’ மாட்டோம். பொய் சொல்லவோ திருடவோ மாட்டோம். யெகோவாவுடைய சட்டங்களையோ நியமங்களையோ மீற மாட்டோம். நம்முடைய விஷயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டாமல், மற்றவர்களுடைய விஷயங்களிலும் ஆர்வம் காட்டுவோம்.—பிலி. 2:4.

17 உண்மையான அன்பு, “தீங்கைக் கணக்கு வைக்காது.” நமக்கு யாராவது தீங்கு செய்தால்  பதிலுக்குப் பதில் செய்ய மாட்டோம். (1 தெ. 5:15) மற்றவர்கள்மீது இருக்கும் வன்மத்தை மனதில் வைத்திருந்தால் யெகோவாவைப் பிரியப்படுத்த முடியாது. அப்படி வன்மத்தை வளர்ப்பது நம்மையும் பாதிக்கும் மற்றவர்களையும் பாதிக்கும். (லேவி. 19:18) அன்பு, “அநீதியைக் குறித்துச் சந்தோஷப்படாமல் சத்தியத்தைக் குறித்துச் சந்தோஷப்படும்.” அதாவது, நம்மை வெறுக்கிறவர்கள் கஷ்டப்படும்போதோ அநியாயமாக நடத்தப்படும்போதோ அதைப் பார்த்து நாம் சந்தோஷப்பட மாட்டோம்.நீதிமொழிகள் 24:17, 18-ஐ வாசியுங்கள்.

18. அன்பைப் பற்றி 1 கொரிந்தியர் 13:7, 8-லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

18 அன்பைப் பற்றி பவுல் வேறென்ன சொன்னார்? அன்பு “எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும்.” நம்மைப் புண்படுத்தினவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும்போது, அன்பிருந்தால் அவரை மன்னிப்போம். அன்பு கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் “எல்லாவற்றையும் விசுவாசிக்கும்.” நமக்கு அன்பிருந்தால் கடவுள் செய்திருக்கும் எல்லா ஆன்மீக ஏற்பாடுகளுக்கும் நன்றியோடு இருப்போம். அன்பு, பைபிளில் இருக்கும் வாக்குறுதிகள் “எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்,” மற்றவர்களிடமும் அதைச் சொல்லத் தூண்டும். (1 பே. 3:15) சோதனைகள் வரும்போது அதைச் சமாளிக்க யெகோவா உதவி செய்வார் என்று நம்பிக்கையோடு ஜெபம் செய்வோம். ஒருவர் நமக்கு எதிராக ஏதாவது செய்தாலோ நம்மை துன்பப்படுத்தினாலோ, அன்பிருந்தால் ‘எல்லாவற்றையும் சகித்துக்கொள்வோம்.’ “அன்பு ஒருபோதும் ஒழியாது.” கடவுளுக்குக் கீழ்ப்படியும் மக்கள் என்றென்றும் அன்பு காட்டுவார்கள்.

தொடர்ந்து அன்பு காட்டுங்கள்

19, 20. சக மனிதர்மீது தொடர்ந்து அன்பு காட்ட எந்த பைபிள் வசனங்கள் உதவியாக இருக்கின்றன?

19 பைபிள் ஆலோசனையைப் பின்பற்றி சக மனிதர்மீது தொடர்ந்து அன்பு காட்ட வேண்டும். இனம், மொழி, தேசம் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் எல்லோர்மீதும் அன்பு காட்ட வேண்டும். “உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்” என்று இயேசு சொன்னார். (மத். 22:39) அப்படி அன்பு காட்ட வேண்டும் என்று யெகோவாவும் இயேசுவும் எதிர்பார்க்கிறார்கள். சக மனிதர்மீது அன்பு காட்டுவது கஷ்டமாக இருக்கும்போது, யெகோவாவுடைய சக்தியைத் தந்து வழிநடத்தும்படி ஜெபம் செய்யுங்கள். இப்படி யெகோவாவைச் சார்ந்திருந்தால் அவர் நம்மை ஆசீர்வதிப்பார்; மற்றவர்களையும் அன்பாக நடத்த உதவுவார்.—ரோ. 8:26, 27.

20 சக மனிதர்களை நேசிப்பதற்கான கட்டளை ‘ராஜ சட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. (யாக். 2:8) திருச்சட்டத்தில் இருக்கும் சில சட்டங்களைப் பற்றி சொன்ன பின்பு பவுல் சொன்னார்: “எல்லாக் கட்டளைகளும், ‘உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்ற ஒரே கட்டளையில் அடங்கியிருக்கின்றன. அன்பு காட்டுகிறவன் சக மனிதருக்குத் தீமை செய்ய மாட்டான்; ஆகவே, அன்பு திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறது.” (ரோ. 13:8-10) அதனால், நாம் தொடர்ந்து சக மனிதர்மீது அன்பு காட்ட வேண்டும்.

21, 22. நாம் ஏன் கடவுள்மீதும் சக மனிதர்கள்மீதும் அன்பு காட்ட வேண்டும்?

21 “[யெகோவா] நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழை பெய்யச் செய்கிறார்.” (மத். 5:43-45) சக மனிதர்மீது அன்பு காட்டுவதற்கு இது ஒரு சிறந்த காரணம். நல்லவர்களோ கெட்டவர்களோ யாராக இருந்தாலும் சரி, அன்பு காட்ட வேண்டியது நம் கடமை. நாம் ஏற்கெனவே சிந்தித்தபடி, நற்செய்தியைப் பிரசங்கிப்பது சக மனிதர்கள்மீது இருக்கும் அன்பைக் காட்டுவதற்கான சிறந்த வழி. நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்கள் அருமையான ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.

22 யெகோவாமீது அன்பு காட்ட இன்னும் எத்தனை எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. சக மனிதர்மீது அன்பு காட்ட இன்னும் பல வழிகள் இருக்கின்றன. யெகோவாவுக்கும் சக மனிதர்களுக்கும் அன்பு காட்டுவது மிக முக்கியம் என இயேசு சொன்னார். அன்பு காட்டினால் அவருடைய வார்த்தையை மதிக்கிறோம் என்று அர்த்தம். எல்லாவற்றிற்கும் மேலாக, நம் பரலோகத் தகப்பன் யெகோவாவைச் சந்தோஷப்படுத்துகிறோம்.