மத்தேயு எழுதியது 7:1-29

7  பின்பு அவர், “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்,+ அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள்.+  மற்றவர்களை நீங்கள் எப்படி நியாயந்தீர்க்கிறீர்களோ அப்படித்தான் நீங்களும் நியாயந்தீர்க்கப்படுவீர்கள்;+ எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்.*+  உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையை* கவனிக்காமல் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை ஏன் பார்க்கிறீர்கள்?+  உங்கள் கண்ணில் மரக்கட்டை இருக்கும்போது நீங்கள் எப்படி உங்கள் சகோதரனிடம், ‘உன் கண்ணில் இருக்கிற தூசியை எடுக்கட்டுமா’ என்று கேட்க முடியும்?  வெளிவேஷக்காரர்களே! முதலில் உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையை எடுத்துப்போடுங்கள், அப்போதுதான் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை எப்படி எடுப்பது என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.  பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களிடமுள்ள முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்னால் போடாதீர்கள்;+ அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துப்போட்டு, திரும்பிவந்து உங்களைக் குதறிவிடும்.+  கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்;+ தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்.+  ஏனென்றால், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான்,+ தேடுகிற ஒவ்வொருவனும் கண்டுபிடிக்கிறான், தட்டுகிற ஒவ்வொருவனுக்கும் திறக்கப்படும்.  உங்களில் யாராவது தன் மகன் ரொட்டியைக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பாரா? 10  மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? 11  பொல்லாதவர்களான நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கத் தெரிந்திருக்கும்போது, உங்கள் பரலோகத் தகப்பன் தன்னிடம் கேட்கிறவர்களுக்கு+ நன்மையானவற்றை இன்னும் எந்தளவுக்குக் கொடுப்பார்!+ 12  அதனால், மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்;+ சொல்லப்போனால், திருச்சட்டத்தின் சாராம்சமும் தீர்க்கதரிசனப் புத்தகங்களின் சாராம்சமும் இதுதான்.+ 13  இடுக்கமான வாசல் வழியாகப் போங்கள்;+ ஏனென்றால், அழிவுக்குப் போகிற வாசல் அகலமானது, அதன் பாதை விசாலமானது; நிறைய பேர் அதன் வழியாகப் போகிறார்கள். 14  ஆனால், முடிவில்லாத வாழ்வுக்குப் போகிற வாசல் இடுக்கமானது, அதன் பாதை குறுகலானது; சிலர்தான் அதைக் கண்டுபிடிக்கிறார்கள்.+ 15  போலித் தீர்க்கதரிசிகளைக்+ குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு வருவார்கள்;+ ஆனால், உண்மையில் அவர்கள் பசிவெறிபிடித்த ஓநாய்கள்.+ 16  அவர்களுடைய கனிகளை* வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொள்வீர்கள். முட்செடியிலிருந்து திராட்சைகளையும், முட்புதரிலிருந்து அத்திகளையும் பறிக்க முடியுமா?+ 17  நல்ல மரமெல்லாம் நல்ல கனியைக் கொடுக்கும், கெட்ட மரமெல்லாம் கெட்ட கனியைக் கொடுக்கும்.+ 18  நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுக்க முடியாது, கெட்ட மரம் நல்ல கனியைக் கொடுக்க முடியாது.+ 19  நல்ல கனி கொடுக்காத மரமெல்லாம் வெட்டப்பட்டு, நெருப்பில் போடப்படும்.+ 20  இப்படி, அவர்களுடைய கனிகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொள்வீர்கள்.+ 21  என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’* என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி* செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்.+ 22  அந்த நாளில் நிறைய பேர் என்னிடம், ‘கர்த்தாவே, கர்த்தாவே,+ உங்கள் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னோமே, உங்கள் பெயரில் பேய்களைத் துரத்தினோமே, உங்கள் பெயரில் எத்தனையோ அற்புதங்களை* செய்தோமே’+ என்று சொல்வார்கள்; 23  ஆனால் நான் அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது!* அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டுப் போய்விடுங்கள்’+ என்று சொல்வேன். 24  நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிறவன் பாறைமேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப் போல் இருக்கிறான்.+ 25  கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை. ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது. 26  அதேசமயம், நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டும் அவற்றின்படி நடக்காதவன் மணல்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியில்லாத மனுஷனைப் போல் இருக்கிறான்.+ 27  கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து, அந்த வீட்டைத் தாக்கியபோது,+ அது இடிந்து தரைமட்டமானது” என்று சொன்னார். 28  இயேசு இந்த விஷயங்களைச் சொல்லி முடித்தபோது, அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள்.+ 29  ஏனென்றால், அவர்களுடைய வேத அறிஞர்களைப் போல் கற்பிக்காமல், கடவுளிடமிருந்து அதிகாரம் பெற்றவராக அவர் கற்பித்தார்.+

ஆராய்ச்சிக் குறிப்புகள்

வெளிவேஷக்காரர்களே!: மத் 6:2, 5, 16 ஆகிய வசனங்களில் இயேசு இந்த வார்த்தையை யூத மதத் தலைவர்களுக்குப் பயன்படுத்தினார். ஆனால் இந்த வசனத்தில், இன்னொருவரின் குறைகளையே கவனித்துக்கொண்டு தன்னுடைய குறைகளைக் கவனிக்காமல்போகும் தன் சீஷர்களுக்குப் பயன்படுத்துகிறார்.

பரிசுத்தமானதை நாய்களுக்கு . . . முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்னால்: திருச்சட்டத்தின்படி பன்றிகளும் நாய்களும் அசுத்தமான விலங்குகளாக இருந்தன. (லேவி 11:7, 27) காட்டு மிருகத்தால் கொல்லப்பட்ட ஒரு மிருகத்தின் உடலை நாய்களுக்குப் போட்டுவிட அனுமதிக்கப்பட்டது. (யாத் 22:31) ஆனால், “பரிசுத்தமான இறைச்சியை,” அதாவது பலி செலுத்தப்பட்ட விலங்குகளின் இறைச்சியை, நாய்களுக்குப் போடுவதை யூதப் பாரம்பரியம் தடை செய்தது. மத் 7:6-ல், ஆன்மீகப் பொக்கிஷங்களை மதிக்காத ஆட்கள்தான் ‘நாய்கள்’ என்றும், ‘பன்றிகள்’ என்றும் அடையாள அர்த்தத்தில் சொல்லப்படுகிறார்கள். முத்துக்களின் அருமை எப்படிப் பன்றிகளுக்குத் தெரியாதோ, அப்படித்தான் ஆன்மீகப் பொக்கிஷங்களின் அருமை சிலருக்குத் தெரியாது; அந்தப் பொக்கிஷங்களைக் கொடுக்கிறவர்களை அவர்கள் மோசமாக நடத்தலாம்.

கேட்டுக்கொண்டே . . . தேடிக்கொண்டே . . . தட்டிக்கொண்டே இருங்கள்: இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வினைச்சொற்கள், தொடர்ந்து நடக்கும் செயல்களைக் குறிக்கின்றன. அதனால், விடாமல் ஜெபம் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன. மூன்று வினைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது, சொல்லப்படும் கருத்துக்கு வலிமை சேர்க்கிறது. இதேபோன்ற குறிப்பைத்தான் லூ 11:5-8-ல் உள்ள உவமையில் இயேசு சொல்லியிருக்கிறார்.

மீனை . . . பாம்பை: கலிலேயா கடலின் சுற்றுப்புறங்களில் வாழ்ந்தவர்களுக்கு மீன்தான் அன்றாட உணவாக இருந்தது. சில வகையான சின்னப் பாம்புகள், பொதுவாக ரொட்டியோடு சாப்பிடப்பட்ட மீன்களைப் போலவே இருந்திருக்கலாம். சிந்தனையைத் தூண்டும் விதத்தில் இயேசு கேட்ட கேள்வி, எந்தவொரு அன்பான பெற்றோரும் இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்ய மாட்டார்கள் என்பதைக் காட்டுகிறது.

ரொட்டியை . . . கல்லை: யூதர்களுக்கும் சுற்றுப்புற தேசத்தாருக்கும் ரொட்டிதான் அன்றாட உணவாக இருந்தது. அதுமட்டுமல்ல, ரொட்டிகளின் அளவும் வடிவமும் கற்களை ஞாபகத்துக்குக் கொண்டுவந்திருக்கலாம். ஒருவேளை இந்தக் காரணங்களால்தான், இயேசு ரொட்டிகளையும் கற்களையும் வேறுபடுத்திக் காட்டியிருக்கலாம். சிந்தனையைத் தூண்டும் விதத்தில் இயேசு கேட்ட கேள்விக்குப் பதில் இதுதான்: “இப்படிப்பட்ட ஒரு காரியத்தை ஒரு அப்பா செய்யவே மாட்டார்.”—மத் 7:10-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

மீனை . . . பாம்பை: கலிலேயா கடலின் சுற்றுப்புறங்களில் வாழ்ந்தவர்களுக்கு மீன்தான் அன்றாட உணவாக இருந்தது. சில வகையான சின்னப் பாம்புகள், பொதுவாக ரொட்டியோடு சாப்பிடப்பட்ட மீன்களைப் போலவே இருந்திருக்கலாம். சிந்தனையைத் தூண்டும் விதத்தில் இயேசு கேட்ட கேள்வி, எந்தவொரு அன்பான பெற்றோரும் இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்ய மாட்டார்கள் என்பதைக் காட்டுகிறது.

பொல்லாதவர்களான நீங்களே: வழிவழியாக வந்த பாவத்தினால் எல்லா மனிதர்களுமே பாவ இயல்புள்ளவர்களாக இருக்கிறார்கள்; அதனால், ஓரளவுக்குப் பொல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இன்னும் எந்தளவுக்கு: இயேசு அடிக்கடி இதுபோல் நியாயங்காட்டிப் பேசினார். முதலில், எல்லாருக்கும் தெரிந்த ஒரு தெளிவான உண்மையைச் சொன்னார்; பிறகு, அந்த உண்மையின் அடிப்படையில் அதைவிட முக்கியமான ஒரு உண்மையை எடுத்துக் காட்டினார். இப்படி, ஒரு எளிமையான விஷயத்தைச் சொல்லி மிக முக்கியமான ஒரு விஷயத்தை உணர்த்தினார்.—மத் 10:25; 12:11, 12; லூ 11:13; 12:28.

திருச்சட்டத்தின் . . . தீர்க்கதரிசனப் புத்தகங்களின்: மத் 5:17-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

திருச்சட்டத்தையோ தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையோ: “திருச்சட்டம்” என்பது ஆதியாகமம்முதல் உபாகமம்வரை இருக்கும் பைபிள் புத்தகங்களைக் குறிக்கிறது. ‘தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள்’ என்பது எபிரெய வேதாகமத்தில் இருக்கும் தீர்க்கதரிசனப் புத்தகங்களைக் குறிக்கிறது. ஆனாலும், இவை இரண்டும் சேர்த்து சொல்லப்படும்போது, எபிரெய வேதாகமம் முழுவதையும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.—மத் 7:12; 22:40; லூ 16:16.

இடுக்கமான வாசல் வழியாகப் போங்கள்: பூர்வ காலங்களில், மதில் சூழ்ந்த நகரங்களுக்கு நுழைவாசல்கள் இருந்தன. மக்களுடைய வாழ்க்கைமுறையையும் நடத்தையையும் விவரிப்பதற்கு பாதை அல்லது “வழி” போன்ற வார்த்தைகளை பைபிள் பயன்படுத்துகிறது. இங்கே சொல்லப்பட்டிருக்கும் இரண்டு விதமான பாதைகள், கடவுளுக்குப் பிரியமான வாழ்க்கைமுறையையும் அவருக்குப் பிரியமில்லாத வாழ்க்கைமுறையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. ஒருவர் எந்தப் பாதையில் போகிறார் என்பதைப் பொறுத்துதான் அவர் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்படுவாரா மாட்டாரா என்பது தீர்மானிக்கப்படும்.—சங் 1:1, 6; எரே 21:8; மத் 7:21.

வாசல் அகலமானது, . . . பாதை விசாலமானது: பழமையான சில கையெழுத்துப் பிரதிகளில், “அதன் பாதை அகலமானது, விசாலமானது” என்று கொடுக்கப்பட்டிருந்தாலும், பழமையான பல கையெழுத்துப் பிரதிகளில் “வாசல் அகலமானது, . . . பாதை விசாலமானது” என்றுதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது, மத் 7:14-ல் உள்ள இணையான கருத்தோடும் ஒத்துப்போகிறது.—இணைப்பு A3-ஐப் பாருங்கள்.

செம்மறியாட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு: வே.வா., “செம்மறியாட்டு உடையில்.” அதாவது, அடையாளப்பூர்வ உடையில் போலி வேஷம் போட்டுக்கொண்டு, செம்மறியாடு போன்ற குணங்களைக் காட்டுவார்கள். இப்படி, கடவுளுடைய மந்தையில் தானும் ஒரு அப்பாவி ஆடு, அதாவது கடவுளுடைய வணக்கத்தாரில் தானும் பழிபாவமற்ற ஒருவர், என்ற பொய்யான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவார்கள்.

பசிவெறிபிடித்த ஓநாய்கள்: இது, பேராசைபிடித்து அலைகிறவர்களையும், சொந்த லாபத்துக்காக மற்றவர்களைச் சுரண்டிப் பிழைப்பவர்களையும் குறிக்கும் உருவகம்.

கனிகளை: இங்கே கனிகள் என்பது மக்களுடைய செயல்களை, வார்த்தைகளை, அல்லது அவர்களுடைய செயல்களாலும் வார்த்தைகளாலும் ஏற்படும் விளைவுகளை அடையாளப்பூர்வமாகக் குறிக்கிறது.

அக்கிரமம்: இதற்கான கிரேக்க வார்த்தை, சட்டங்களை மீறுவது, சட்டங்களை வெறுப்பது, ஏதோ சட்டங்களே இல்லாததுபோல் நடந்துகொள்வது போன்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது. பைபிளில் இந்த வார்த்தை, கடவுளுடைய சட்டங்களை மதிக்காமல் நடந்துகொள்வதைக் குறிக்கிறது.—மத் 7:23; 2 தெ 2:3-7.

அக்கிரமக்காரர்களே: மத் 24:12-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

புத்தியுள்ள: வே.வா., “விவேகமுள்ள.” மத் 24:45-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

விவேகமும்: இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை புத்தியோடு நடந்துகொள்வதைக் குறிக்கிறது. அதாவது, ஆழமான புரிந்துகொள்ளுதல், முன்யோசனை, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நடைமுறை ஞானம் ஆகியவற்றோடு நடந்துகொள்வதைக் குறிக்கிறது. இதே கிரேக்க வார்த்தை மத் 7:24; 25:2, 4, 8, 9 ஆகிய வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதி 41:33, 39-ல் யோசேப்பைப் பற்றிச் சொல்லும்போது இதே வார்த்தையை செப்டுவஜன்ட் பயன்படுத்தியுள்ளது.

கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து: இஸ்ரவேலில் குளிர்காலத்தின்போது (முக்கியமாக, தேபேத் மாதத்தில், அதாவது டிசம்பர்/ஜனவரி சமயத்தில்) திடீரென்று புயல் அடிப்பது சகஜமாக இருந்தது. அப்போது, காற்று பலமாக வீசியது, கனமழை பெய்தது, வெள்ளம் பெருக்கெடுத்து வந்து பேரழிவை ஏற்படுத்தியது.—இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

அவர் கற்பித்த விதத்தை: இந்த வார்த்தைகள், இயேசு எப்படிக் கற்பித்தார் என்பதை, அதாவது எந்த முறைகளைப் பயன்படுத்திக் கற்பித்தார் என்பதை, குறிக்கின்றன. அவர் கற்பித்த விஷயங்களையும்கூட, அதாவது மலைப் பிரசங்கத்தில் அவர் கொடுத்த எல்லா அறிவுரைகளையும்கூட, இந்த வார்த்தைகள் குறிக்கின்றன.

அசந்துபோனார்கள்: இதற்கான கிரேக்க வினைச்சொல், “திணறிப்போகும் அளவுக்கு ஆச்சரியத்தில் மூழ்கிப்போவதை” குறிக்கலாம். இந்த வினைச்சொல் தொடர்நிகழ்காலத்தில் இருப்பதால், இயேசுவின் வார்த்தைகள் மக்கள்மேல் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தியதைக் காட்டுகிறது.

அவர்களுடைய வேத அறிஞர்களைப் போல் கற்பிக்காமல்: அதிகாரப்பூர்வமாகப் பேசுவதைக் காட்டுவதற்கு, உயர்வாக மதிக்கப்பட்ட ரபீக்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுவது வேத அறிஞர்களின் வழக்கமாக இருந்தது. ஆனால் இயேசு, யெகோவாவின் பிரதிநிதியாகப் பேசினார். அதிகாரம் பெற்றவராக, கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்பித்தார்.—யோவா 7:16.

மீடியா

ஓநாய்
ஓநாய்

இஸ்ரவேலில் இருக்கும் ஓநாய்கள் முக்கியமாக இரவு நேரங்களில்தான் வேட்டையாடுகின்றன. (ஆப 1:8) ஓநாய்களுக்கு முரட்டுத்தனமும் பசிவெறியும் துணிச்சலும் பேராசையும் அதிகம். அவற்றால் ஓரளவு செம்மறியாடுகளைத்தான் சாப்பிட அல்லது இழுத்துச்செல்ல முடியும் என்றாலும், பொதுவாக அதைவிட அதிகமான செம்மறியாடுகளைக் கொன்று குவிக்கின்றன. பைபிள், விலங்குகளையும் அவற்றின் குணங்களையும் பழக்கங்களையும் அடையாள அர்த்தத்தில் குறிப்பிடுகிறது. நல்ல குணங்கள், கெட்ட குணங்கள் ஆகிய இரண்டுக்குமே அடையாளமாக அவற்றைக் குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு, மரணப்படுக்கையில் இருந்தபோது யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனத்தில், வேட்டையாடுகிற ஓநாயை (கானஸ் லூபுஸ்) போல பென்யமீன் கோத்திரத்தார் இருப்பார்கள் என்று அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதி 49:27) ஆனால், பெரும்பாலான மற்ற வசனங்களில், மூர்க்கம், பேராசை, கொடூரம், தந்திரம் போன்ற கெட்ட குணங்களுக்குத்தான் ஓநாய்கள் அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. போலித் தீர்க்கதரிசிகள் (மத் 7:15), கிறிஸ்தவ ஊழியத்தைக் கொடூரமாக எதிர்க்கிறவர்கள் (மத் 10:16; லூ 10:3), கிறிஸ்தவ சபைக்குள்ளிருந்தே எழும்பும் ஆபத்தான பொய்ப் போதகர்கள் (அப் 20:29, 30) போன்ற ஆட்கள் ஓநாய்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். ஓநாய்கள் எந்தளவு ஆபத்தானவை என்று மேய்ப்பர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. “கூலிக்கு மேய்ப்பவன்,” “ஓநாய் வருவதைப் பார்த்ததுமே ஆடுகளை விட்டுவிட்டு ஓடிவிடுகிறான்” என்று இயேசு சொன்னார். கூலிக்கு மேய்ப்பவனுக்கு ‘ஆடுகள்மேல் அக்கறையில்லை’ என்றும் சொன்னார். ஆனால் இயேசு, ‘ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிற’ ‘நல்ல மேய்ப்பராக’ இருக்கிறார்.—யோவா 10:11-13.

அத்தி மரம், திராட்சைக் கொடி, முட்புதர்
அத்தி மரம், திராட்சைக் கொடி, முட்புதர்

இயேசு தன்னுடைய உவமைகளில் செடிகளைச் சிலசமயங்களில் பயன்படுத்தினார். அவற்றை அவர் கவனமாகத் தேர்ந்தெடுத்துதான் பயன்படுத்தினார் என்பதில் சந்தேகமே இல்லை. உதாரணத்துக்கு, அத்தி மரமும் (1) திராட்சைக் கொடியும் (2) நிறைய வசனங்களில் சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தி மரங்கள் திராட்சைத் தோட்டங்களில் பெரும்பாலும் நட்டு வைக்கப்பட்டதை லூ 13:6-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன. (2ரா 18:31; யோவே 2:22) “ஒவ்வொருவரும் தங்கள் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் உட்கார்ந்திருப்பார்கள்” என்ற வார்த்தைகள் சமாதானமான, செழிப்பான, பாதுகாப்பான நிலைமை வரும் என்பதைக் குறித்தன. (1ரா 4:25; மீ 4:4; சக 3:10) ஆனால், ஆதாம் பாவம் செய்த பிறகு யெகோவா இந்த நிலத்தைச் சபித்தபோது முட்செடிகளையும் முட்புதர்களையும் பற்றிக் குறிப்பிட்டார். (ஆதி 3:17, 18) மத் 7:16-ல் இயேசு எந்த வகையான முட்புதரைப் பற்றிச் சொன்னார் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், இங்கே படத்தில் காட்டப்பட்டிருப்பது (3), இஸ்ரவேல் காடுகளில் வளரும் ஒரு வகையான முட்செடி (சென்ட்டௌரியா இபெரிக்கா).