லூக்கா எழுதியது 10:1-42

10  இவற்றுக்குப் பின்பு, இயேசு இன்னும் 70 பேரை நியமித்து, தான் போகவிருந்த ஒவ்வொரு நகரத்துக்கும் இடத்துக்கும் அவர்களைத் தனக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.+  அப்போது அவர்களிடம், “அறுவடை அதிகமாக இருக்கிறது, ஆனால் வேலையாட்கள் குறைவாக இருக்கிறார்கள். அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பச் சொல்லி அறுவடையின் எஜமானிடம் கெஞ்சிக் கேளுங்கள்.+  புறப்பட்டுப் போங்கள்; இதோ! ஓநாய்கள் நடுவில் ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை அனுப்புகிறேன்.+  பணப் பையையோ உணவுப் பையையோ செருப்புகளையோ எடுத்துக்கொண்டு போகாதீர்கள்;+ வழியில் யாருக்கும் வாழ்த்துச் சொல்லாதீர்கள்.*  நீங்கள் ஒரு வீட்டுக்குள் போகும்போது, ‘இந்த வீட்டுக்குச் சமாதானம் கிடைக்கட்டும்’ என்று முதலில் வாழ்த்துச் சொல்லுங்கள்.+  சமாதானத்தை விரும்பாதவர் அங்கே இருந்தால், நீங்கள் சொன்ன சமாதான வாழ்த்து உங்களிடம் திரும்பிவிடும். ஆனால், சமாதானத்தை விரும்புகிறவர் அங்கே இருந்தால், நீங்கள் வாழ்த்திய சமாதானம் அவர்மேல் தங்கும்.  அதனால் நீங்கள் அந்த வீட்டிலேயே தங்கி,+ அங்கிருப்பவர்கள் தருவதைச் சாப்பிடுங்கள், குடியுங்கள்.+ வேலையாள் தன் கூலியைப் பெறத் தகுதியானவன்.+ வீடு வீடாக மாறிக்கொண்டே இருக்காதீர்கள்.  அதோடு, நீங்கள் ஒரு நகரத்துக்குள் போகும்போது, அங்கிருப்பவர்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்கள் முன்னால் வைக்கப்படுவதைச் சாப்பிடுங்கள்.  அங்கே இருக்கிற நோயாளிகளைக் குணமாக்குங்கள். ‘கடவுளுடைய அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது’+ என்று அந்த நகரத்தில் இருப்பவர்களிடம் சொல்லுங்கள். 10  ஆனால், ஒரு நகரத்துக்குள் போகும்போது அங்கிருப்பவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் முக்கியத் தெருக்களுக்குப் போய், 11  ‘எங்கள் பாதங்களில் படிந்த உங்கள் நகரத்தின் தூசியைக்கூட உங்களுக்கு எதிராகத் தட்டிப்போடுகிறோம்.+ ஆனாலும், கடவுளுடைய அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டதைத் தெரிந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லுங்கள். 12  நியாயத்தீர்ப்பு நாளில், சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட அந்த நகரத்துக்குக் கிடைக்கும் தண்டனை பயங்கரமாக இருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.+ 13  கோராசினே, உனக்குக் கேடுதான் வரும்! பெத்சாயிதாவே, உனக்குக் கேடுதான் வரும்! உங்களுடைய நகரங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அங்கிருக்கிறவர்கள் எப்போதோ துக்கத் துணியை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து மனம் திருந்தியிருப்பார்கள்.+ 14  அதனால், நியாயத்தீர்ப்பு நாளில் தீருவுக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை பயங்கரமாக இருக்கும். 15  கப்பர்நகூமே, நீ வானம்வரை உயர்த்தப்படுவாய் என்றா நினைக்கிறாய்? நீ கல்லறைவரை தாழ்த்தப்படுவாய்! 16  நீங்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிறவன் நான் சொல்வதையும் காதுகொடுத்துக் கேட்கிறான்.+ உங்களை அலட்சியம் செய்கிறவன் என்னையும் அலட்சியம் செய்கிறான். அதோடு, என்னை அலட்சியம் செய்கிறவன் என்னை அனுப்பியவரையும் அலட்சியம் செய்கிறான்”+ என்று சொன்னார். 17  பின்பு, அந்த 70 பேரும் சந்தோஷத்தோடு திரும்பி வந்து, “எஜமானே, உங்கள் பெயரைச் சொல்லிக் கட்டளையிடும்போது பேய்கள்கூட எங்களுக்கு அடங்கிவிடுகின்றன”+ என்று சொன்னார்கள். 18  அப்போது அவர், “சாத்தான் பரலோகத்திலிருந்து மின்னல் வேகத்தில் விழுந்துவிட்டதை நான் பார்க்கிறேன்.+ 19  இதோ! பாம்புகளையும் தேள்களையும் மிதிப்பதற்கும், எதிரியின் முழு வல்லமையை அடக்குவதற்கும் நான் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்;+ எதுவுமே உங்களுக்குத் தீங்கு செய்யாது. 20  இருந்தாலும், பேய்கள் உங்களுக்கு அடங்கிவிடுவதை நினைத்து சந்தோஷப்படாதீர்கள்; உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதை நினைத்தே சந்தோஷப்படுங்கள்”+ என்று சொன்னார். 21  அப்போது அவர் சந்தோஷத்தாலும் கடவுளுடைய சக்தியாலும் நிறைந்து, “தகப்பனே, பரலோகத்துக்கும் பூமிக்கும் எஜமானே, எல்லார் முன்னாலும் நான் உங்களைப் புகழ்கிறேன்; ஏனென்றால், இந்த விஷயங்களை நீங்கள் ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும் மறைத்து,+ சிறுபிள்ளைகளுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தகப்பனே, அப்படிச் செய்வதுதான் உங்களுடைய விருப்பமாக இருந்தது.+ 22  என் தகப்பன் எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்; தகப்பனைத் தவிர வேறு யாருக்கும் மகனைத் தெரியாது.+ மகனுக்கும், மகன் யாருக்கு அவரை வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தவிர வேறு யாருக்கும் தகப்பன் யாரென்று தெரியாது”+ என்று சொன்னார். 23  பின்பு, சீஷர்கள் தனியாக இருந்தபோது அவர் அவர்களிடம், “நீங்கள் பார்க்கிறவற்றைப் பார்க்கும் கண்கள் சந்தோஷமானவை.+ 24  ஏனென்றால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், நிறைய தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் பார்க்கிறவற்றைப் பார்க்க ஆசைப்பட்டும் பார்க்கவில்லை.+ நீங்கள் கேட்கிறவற்றைக் கேட்க ஆசைப்பட்டும் கேட்கவில்லை” என்று சொன்னார். 25  அப்போது திருச்சட்ட வல்லுநன் ஒருவன் எழுந்து, அவரைச் சோதிப்பதற்காக, “போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கு* நான் என்ன செய்ய வேண்டும்?”+ என்று கேட்டான். 26  அதற்கு அவர் “திருச்சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ என்ன வாசித்திருக்கிறாய்?” என்று கேட்டார். 27  அப்போது அவன், “‘உங்கள் கடவுளாகிய யெகோவாமேல்* உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்’+ என்றும், ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்’+ என்றும் எழுதியிருக்கிறது” என்று சொன்னான். 28  அப்போது அவர், “சரியாகச் சொன்னாய்; அப்படியே செய்துகொண்டிரு, அப்போது உனக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்”+ என்று சொன்னார். 29  ஆனால் அவன், தான் நீதிமான் எனக் காட்டிக்கொள்வதற்காக,+ “நான் அன்பு காட்ட வேண்டிய அந்த மற்றவர்கள்* உண்மையில் யார்?” என்று இயேசுவிடம் கேட்டான். 30  அதற்கு இயேசு, “ஒருவன் எருசலேமிலிருந்து கீழ்நோக்கி எரிகோவுக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்போது, கொள்ளைக்காரர்களின் கையில் மாட்டிக்கொண்டான். அவர்கள் அவனிடமிருந்த எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு, அவனை அடித்து, கிட்டத்தட்ட சாகும் நிலையில் விட்டுவிட்டுப் போனார்கள். 31  ஆலய குரு ஒருவர் தற்செயலாக அந்த வழியில் வந்துகொண்டிருந்தார்; ஆனால் அவனைப் பார்த்தபோது, எதிர்ப்பக்கமாகப் போய்விட்டார். 32  அதேபோல், ஒரு லேவியரும் அந்த வழியில் வந்து அவனைப் பார்த்தபோது எதிர்ப்பக்கமாகப் போய்விட்டார். 33  ஆனால், அந்த வழியில் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர்+ ஒருவர் அவனைப் பார்த்தபோது மனம் உருகினார். 34  அதனால் அவன் பக்கத்தில் போய், அவனுடைய காயங்கள்மேல் எண்ணெயையும் திராட்சமதுவையும் ஊற்றி, அவற்றுக்குக் கட்டுப்போட்டார். பின்பு, அவனைத் தன்னுடைய கழுதையின் மேல் ஏற்றி, ஒரு சத்திரத்துக்குக் கொண்டுபோய்க் கவனித்துக்கொண்டார். 35  அடுத்த நாள் இரண்டு தினாரியுவை* எடுத்து சத்திரக்காரன் கையில் கொடுத்து, ‘இவனைக் கவனித்துக்கொள்; இதற்குமேல் ஏதாவது செலவானால் நான் திரும்பி வரும்போது உனக்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொன்னார். 36  அப்படியென்றால், இந்த மூன்று பேரில், கொள்ளைக்காரர்கள் கையில் மாட்டிக்கொண்டவனிடம் உண்மையிலேயே அன்பு காட்டியவர்*+ யாரென்று நினைக்கிறாய்?” என்று இயேசு கேட்டார். 37  அதற்கு, “அவனிடம் இரக்கத்தோடு நடந்துகொண்டவர்தான்”+ என்று அவன் சொன்னான். அப்போது அவர், “நீயும் போய் அதேபோல் நடந்துகொள்”+ என்று சொன்னார். 38  பின்பு, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது அவர் ஒரு கிராமத்துக்குள் போனார். அங்கே மார்த்தாள்+ என்ற பெண் அவரைத் தன் வீட்டுக்குக் கூப்பிட்டு உபசரித்தாள். 39  இந்தப் பெண்ணுக்கு மரியாள் என்ற சகோதரியும் இருந்தாள். இவள் இயேசுவின் காலடியில் உட்கார்ந்து, அவர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தாள். 40  ஆனால், மார்த்தாள் நிறைய வேலைகளை மும்முரமாகச் செய்துகொண்டிருந்தாள். அதனால் அவள் அவரிடம் போய், “என் சகோதரி என்னைத் தனியாக வேலை செய்ய விட்டுவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளிடம் சொல்லுங்கள்” என்றாள். 41  அதற்கு அவர், “மார்த்தாள், மார்த்தாள், நீ நிறைய காரியங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு திண்டாடுகிறாய். 42  கொஞ்சம் இருந்தாலே போதும், ஒன்றே ஒன்றுகூடப் போதும். மரியாளைப் பொறுத்தவரை, அவள் மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்.+ அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

அந்தக் காலத்தில், வழியில் பார்க்கிறவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி முத்தம் கொடுப்பதும், அரவணைப்பதும், ரொம்ப நேரம் நலம் விசாரிப்பதும் வழக்கமாக இருந்தது.
நே.மொ., “ஆஸ்தியாகப் பெறுவதற்கு.”
வே.வா., “சக மனிதர்மேலும்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “சக மனிதர்.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “சக மனிதராக நடந்துகொண்டவர்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

ஓநாய்
ஓநாய்

இஸ்ரவேலில் இருக்கும் ஓநாய்கள் முக்கியமாக இரவு நேரங்களில்தான் வேட்டையாடுகின்றன. (ஆப 1:8) ஓநாய்களுக்கு முரட்டுத்தனமும் பசிவெறியும் துணிச்சலும் பேராசையும் அதிகம். அவற்றால் ஓரளவு செம்மறியாடுகளைத்தான் சாப்பிட அல்லது இழுத்துச்செல்ல முடியும் என்றாலும், பொதுவாக அதைவிட அதிகமான செம்மறியாடுகளைக் கொன்று குவிக்கின்றன. பைபிள், விலங்குகளையும் அவற்றின் குணங்களையும் பழக்கங்களையும் அடையாள அர்த்தத்தில் குறிப்பிடுகிறது. நல்ல குணங்கள், கெட்ட குணங்கள் ஆகிய இரண்டுக்குமே அடையாளமாக அவற்றைக் குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு, மரணப்படுக்கையில் இருந்தபோது யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனத்தில், வேட்டையாடுகிற ஓநாயை (கானஸ் லூபுஸ்) போல பென்யமீன் கோத்திரத்தார் இருப்பார்கள் என்று அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதி 49:27) ஆனால், பெரும்பாலான மற்ற வசனங்களில், மூர்க்கம், பேராசை, கொடூரம், தந்திரம் போன்ற கெட்ட குணங்களுக்குத்தான் ஓநாய்கள் அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. போலித் தீர்க்கதரிசிகள் (மத் 7:15), கிறிஸ்தவ ஊழியத்தைக் கொடூரமாக எதிர்க்கிறவர்கள் (மத் 10:16; லூ 10:3), கிறிஸ்தவ சபைக்குள்ளிருந்தே எழும்பும் ஆபத்தான பொய்ப் போதகர்கள் (அப் 20:29, 30) போன்ற ஆட்கள் ஓநாய்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். ஓநாய்கள் எந்தளவு ஆபத்தானவை என்று மேய்ப்பர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. “கூலிக்கு மேய்ப்பவன்,” “ஓநாய் வருவதைப் பார்த்ததுமே ஆடுகளை விட்டுவிட்டு ஓடிவிடுகிறான்” என்று இயேசு சொன்னார். கூலிக்கு மேய்ப்பவனுக்கு ‘ஆடுகள்மேல் அக்கறையில்லை’ என்றும் சொன்னார். ஆனால் இயேசு, ‘ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிற’ ‘நல்ல மேய்ப்பராக’ இருக்கிறார்.—யோவா 10:11-13.

தடியும் உணவுப் பையும்
தடியும் உணவுப் பையும்

பழங்காலத்தில் எபிரெயர்கள் தடிகளை அல்லது கம்புகளைப் பயன்படுத்துவது சகஜமாக இருந்தது. பல காரணங்களுக்காக அவர்கள் தடிகளைப் பயன்படுத்தினார்கள்; உதாரணமாக, பிடிமானத்துக்கு (யாத் 12:11; சக 8:4; எபி 11:21), தற்காப்புக்கு அல்லது பாதுகாப்புக்கு (2சா 23:21), போரடிப்பதற்கு (ஏசா 28:27) மற்றும் ஒலிவப்பழங்களை உதிர்ப்பதற்கு (உபா 24:20) அவற்றைப் பயன்படுத்தினார்கள். உணவுப் பை பொதுவாகத் தோலால் செய்யப்பட்டிருந்தது. பயணிகளும் மேய்ப்பர்களும் விவசாயிகளும் மற்றவர்களும் அதைத் தங்கள் தோளில் சுமந்துகொண்டு போனார்கள். உணவு, துணிமணி போன்றவற்றை எடுத்துக்கொண்டு போவதற்காக அந்தப் பைகள் பயன்படுத்தப்பட்டன. ஊழியம் செய்வதற்காக இயேசு தன் அப்போஸ்தலர்களை அனுப்பியபோது, பல அறிவுரைகளைக் கொடுத்தார். அப்போது, தடிகளையும் உணவுப் பைகளையும் பற்றிக் குறிப்பிட்டார். யெகோவா அவர்களுக்குத் தேவையானதைத் தருவார் என்பதால், தங்களிடம் இருப்பதை மட்டும் கொண்டு போக வேண்டும் என்றும், எதையும் கூடுதலாக வாங்கிக்கொண்டு போகக் கூடாது என்றும் அவர் சொன்னார்.—இயேசு கொடுத்த அறிவுரைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள லூ 9:3 மற்றும் 10:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

கப்பர்நகூம், கோராசின், பெத்சாயிதா
கப்பர்நகூம், கோராசின், பெத்சாயிதா

இந்த வீடியோவில் காட்டப்படும் பரந்துவிரிந்த காட்சி, கலிலேயா கடலின் வடகிழக்குக் கரைக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் ஓஃபிர் கோபுரத்திலிருந்து (Ofir Lookout) எடுக்கப்பட்டது. அன்றைய கப்பர்நகூம் (1) அமைந்திருந்ததாகச் சொல்லப்படும் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 3 கி.மீ. (2 மைல்) தூரத்தில்தான் கோராசின் (2) இருந்தது. இரண்டு வருஷங்களுக்கும் மேலாக இயேசு கலிலேயாவில் பெரிய அளவில் ஊழியம் செய்தபோது பெரும்பாலும் கப்பர்நகூமில் தங்கியதாகத் தெரிகிறது. அப்போஸ்தலர்களான பேதுருவும் அந்திரேயாவும் கப்பர்நகூமில் குடியிருந்தார்கள். மத்தேயு வேலை பார்த்த வரி வசூலிக்கும் அலுவலகம் கப்பர்நகூமில் அல்லது அதற்குப் பக்கத்தில் இருந்தது. (மாற் 1:21, 29; 2:1, 13, 14; 3:16; லூ 4:31, 38) பேதுருவும் அந்திரேயாவும் பிலிப்புவும், கப்பர்நகூமுக்குப் பக்கத்தில் இருந்த பெத்சாயிதா (3) நகரத்தைச் சேர்ந்தவர்கள். (யோவா 1:44) இந்த மூன்று நகரங்களிலும் அவற்றுக்குப் பக்கத்திலும் இயேசு நிறைய அற்புதங்களைச் செய்தார்.—இணைப்பு A7-D, வரைபடம் 3B மற்றும் A7-E, வரைபடம் 4 ஆகியவற்றைப் பாருங்கள்.

எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும் சாலை
எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும் சாலை

இந்த வீடியோவில் காட்டப்படும் சாலை (1), எருசலேமையும் எரிகோவையும் இணைத்த பழங்கால சாலையைக் கற்பனை செய்து பார்க்க உதவுகிறது. அந்தச் சாலை 20 கி.மீ. (12 மைல்) நீளத்தில் இருந்தது; அது கீழ்நோக்கி இறங்கியது; ஏனென்றால், எருசலேமிலிருந்து எரிகோ 1 கி.மீ. (.6 மைல்) இறக்கத்தில் இருந்தது. அந்த ஒதுக்குப்புறமான பொட்டல் காட்டில் அடிக்கடி திருட்டு நடந்தது. அதனால், பயணிகளைப் பாதுகாப்பதற்காக ஒரு காவல்படை அங்கே நிறுத்தப்பட்டது. யூதேய வனாந்தரத்திலிருந்து அந்தச் சாலை புறப்பட்ட இடத்தில்தான் ரோமர்களின் எரிகோ நகரம் (2) அமைந்திருந்தது. அங்கிருந்து கிட்டத்தட்ட 2 கி.மீ. (வெறும் 1 மைலுக்குச் சற்று அதிக) தூரத்தில்தான் பழங்கால எரிகோ நகரம் (3) அமைந்திருந்தது.