லூக்கா எழுதியது 8:1-56
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மீடியா

இந்த விளக்குத்தண்டு (1), எபேசுவிலும் இத்தாலியிலும் கண்டெடுக்கப்பட்ட முதல் நூற்றாண்டு கலைப்பொருள்களின் அடிப்படையில் ஒரு கலைஞர் கற்பனை செய்த வடிவம். இப்படிப்பட்ட விளக்குத்தண்டுகள் அநேகமாக பணக்கார வீடுகளில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஏழை வீடுகளில், விளக்குகள் உட்கூரையில் தொங்கவிடப்பட்டன அல்லது சுவரில் இருந்த மாடத்தில் வைக்கப்பட்டன (2), அல்லது மண்ணினாலோ மரத்தினாலோ செய்யப்பட்ட விளக்குத்தண்டின் மேல் வைக்கப்பட்டன.

இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள படகு, கலிலேயா கடற்கரைக்குப் பக்கத்தில் சேற்றில் புதைந்து காணப்பட்ட முதல் நூற்றாண்டு மீன்பிடிப் படகின் எஞ்சிய பகுதிகளை அடிப்படையாக வைத்து சித்தரிக்கப்பட்டுள்ளது; அதோடு, கடற்கரையோரத்தில் அமைந்திருந்த மிக்தால் என்ற ஊரைச் சேர்ந்த முதல் நூற்றாண்டு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மொசைக் ஓவியத்தையும் அடிப்படையாக வைத்து சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட படகுக்குப் பாய்மரமும் கப்பற்பாயும் (கப்பற்பாய்களும்) இருந்திருக்கலாம். அதில் மொத்தம் ஐந்து படகோட்டிகள் இருந்திருக்கலாம். அவர்களில் நான்கு பேர் துடுப்புப் போட்டிருக்கலாம்; இன்னொருவர் படகின் பின்புறத்தில் இருந்த சின்ன தளத்தில் நின்றுகொண்டு படகை ஓட்டியிருக்கலாம். அந்தப் படகின் நீளம் சுமார் 8 மீ. (26.5 அடி). அதன் நடுப்பகுதியின் அகலம் சுமார் 2.5 மீ. (8 அடி), அதன் ஆழம் 1.25 மீ. (4 அடி). அந்தப் படகில் 13 அல்லது அதற்கும் அதிகமான ஆண்கள் பயணம் செய்திருக்கலாம்.

1985/1986-ல் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக கலிலேயா கடலின் நீர்மட்டம் குறைந்தது. அப்போது, சேற்றில் புதைந்திருந்த ஒரு பழங்காலப் படகின் முக்கியப் பகுதி வெளியில் தெரிந்தது. எஞ்சியிருக்கும் அந்தப் பகுதியின் நீளம் 8.2 மீ. (27 அடி), அகலம் 2.3 மீ. (7.5 அடி), அதிகபட்ச உயரம் 1.3 மீ. (4.3 அடி). கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் கி.பி. முதல் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட சமயத்தில் அந்தப் படகு கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அந்தப் படகு இப்போது இஸ்ரேலில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது கிட்டத்தட்ட 2,000 வருஷங்களுக்கு முன்பு தண்ணீரில் மிதந்து சென்றபோது எப்படி இருந்திருக்கும் என்பதை இந்த வீடியோ அனிமேஷன் காட்டுகிறது.

கலிலேயா கடலின் கிழக்குக் கரையோரமாகத்தான், பேய் பிடித்திருந்த இரண்டு பேரை இயேசு குணப்படுத்தினார். அவர்களைப் பிடித்திருந்த பேய்களைப் பன்றிக் கூட்டத்துக்குள் அவர் அனுப்பிவிட்டார்.