Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விவாகரத்தானவர்களுக்கு உதவுங்கள்

விவாகரத்தானவர்களுக்கு உதவுங்கள்

விவாகரத்தான யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், இன்று விவாகரத்து சர்வ சாதாரணமாகிவிட்டது. ஓர் ஆய்வின்படி, போலந்தில் 30 வயதைக் கடந்த தம்பதிகள், மூன்று அல்லது ஆறு வருடங்களுக்குள் விவாகரத்துக்குத் தயாராகிவிடுகிறார்கள்.

“[ஐரோப்பாவில்] இரண்டில் ஒரு திருமணம் விவாகரத்தில் முடிகிறது” என்று ஸ்பெயினின் குடும்பநல நிறுவனம் சொல்கிறது. மற்ற நாடுகளிலும் இதே கதைதான்.

மனப் போராட்டங்கள்

விவாகரத்தானவர்கள் எப்படி உணர்கிறார்கள்? கிழக்கு ஐரோப்பாவில் அனுபவமுள்ள ஒரு திருமண ஆலோசகர் சொல்கிறார்: “மனதளவில் பிரிந்த தம்பதிகள் கோர்ட்டில் சட்டப்படி விவாகரத்து பெறுகிறார்கள். இதனால், தாங்க முடியாத வலியும் வேதனையும் ஏற்படுகிறது. விவாகரத்தான பிறகு கோபம், கவலை, மனக்கசப்பு, அவமானம், ஏமாற்றம் என்று மனதில் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஏற்படும். . . . கோர்ட்டில் அறிவித்தவுடன் மனப் போராட்டங்கள் தீவிரமடையும். தனிமை வாட்டும், வெறுமை வதைக்கும். ‘என்னை யாரு மதிப்பா? இனிமே நான் வாழ்ந்து என்ன பிரயோஜனம்?’ என்று யோசிக்கலாம்.” சிலர் தற்கொலை செய்துகொள்ளக்கூட நினைக்கலாம்.

சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்தான ஈவா என்ற சகோதரி சொல்கிறார்: “எனக்கு ரொம்ப அவமானமா இருந்துச்சு. அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க, கூட வேலை பாக்குறவங்க என்னை வித்தியாசமா பாத்தாங்க. அந்த சமயத்துல கோபம் தலைக்கேறும். என் இரண்டு பிள்ளைகளுக்கும் இனி நான்தான் அம்மா-அப்பா.” * 12 வருடங்கள் மூப்பராகச் சேவை செய்த அஷோக் சொல்கிறார்: “என் சுயமரியாதை இழந்துட்டேன், எப்பவும் கோபமா இருந்தேன். எல்லாரையும்விட்டு பிரிஞ்சே இருந்தேன்.”

இயல்பு நிலைக்குத் திரும்ப காலமெடுக்கும்

பொதுவாக, அவர்கள் எதிர்காலத்தை நினைத்துப் பயப்படுவார்கள். பல வருடங்களுக்குப் பிறகுகூட இயல்பு நிலைக்குத் திரும்ப மாட்டார்கள். தங்கள்மேல் மற்றவர்களுக்கு அக்கறை இல்லை என்று நினைப்பார்கள். ஒரு பத்திரிகை எழுத்தாளர் சொல்கிறார்: “அவங்க பழக்கவழக்கங்களை மாத்திக்கணும், பிரச்சினைகள தனியா சமாளிக்க கத்துக்கணும்.”

ஸ்டெயின்ஸ்லா என்ற சகோதரர் சொல்கிறார்: “விவாகரத்தான பிறகு, என் ரெண்டு பிள்ளைங்களையும் அவள் பாக்கவே விடல. வாழ்க்கையில எனக்குனு யாருமே இல்லைனு தோனுச்சு, யெகோவாகூட என்னை மறந்துட்டாருனு நினைச்சேன். வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. போகப்போகத்தான்  சரியானேன்.” வாண்டா என்ற சகோதரிக்கு விவாகரத்தானதும் எதிர்காலத்தைப் பற்றிய பயம் வந்தது. “கொஞ்ச நாளைக்குப்பிறகு, என்னையும் பிள்ளைங்களயும் யாருமே கண்டுக்க மாட்டாங்க, சகோதர சகோதரிங்ககூட எங்கள கைவிட்டுடுவாங்கனு நினைச்சேன். ஆனா, சகோதரங்க எங்களுக்கு பக்கபலமா இருந்தாங்க. பிள்ளைங்கள சத்தியத்துல வளக்குறதுக்கு உதவுனாங்க” என்கிறார் வாண்டா.

விவாகரத்தானவர்களின் மனப் போராட்டங்களை இப்போது உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? ‘நான் எதற்குமே லாயக்கில்லை, யாருமே என்னை கண்டுகொள்வதில்லை’ என்றெல்லாம் நினைத்து அவர்கள் தங்களையே வெறுப்பார்கள். சுற்றியிருப்பவர்கள் செய்வதெல்லாம் தவறாகவே தெரியும். சபையில் யாருக்கும் அவர்கள்மேல் அன்பில்லை என்றுகூட நினைப்பார்கள். இருந்தாலும், ஸ்டெயின்ஸ்லா, வாண்டாவைப் போன்ற நிறைய பேர் சகோதரர்களின் அன்பைப் பின்னால் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

தனிமையும் வெறுமையும் வாட்டும்போது...

நாம் எவ்வளவுதான் பக்கபலமாக இருந்தாலும் விவாகரத்தானவர்கள் சில நேரங்களில் தனிமையாக உணர்வார்கள். விவாகரத்தான சகோதரிகள் தங்கள்மேல் யாருக்குமே அக்கறை இல்லாததுபோல் உணர்வார்கள். “விவாகரத்தாகி எட்டு வருஷம் ஆச்சு. இப்பகூட சில நேரத்துல எனக்கு தாழ்வு மனப்பான்மை வருது. அந்த மாதிரி நேரத்துல தனியா போய் அழுவேன், என்னை நானே நொந்துக்குவேன்” என்கிறார் ஆலிட்ஸியா.

விவாகரத்தானவர்கள் தனியாக இருக்க நினைப்பது இயல்புதான். ஆனால், “தனியாக இருக்க விரும்புகிறவன் தன் இஷ்டப்படி நடக்கிறான், யாருடைய அறிவுரையையும் கேட்காமல் மனம்போன போக்கில் நடக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 18:1, NW) ஒருவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வது நல்லதல்ல. ஆலோசனைக்கோ ஆறுதலுக்கோ எப்போதும் ஓர் எதிர்பாலரை அணுகுவதும் ஞானமானதல்ல.

எதிர்காலத்தைப் பற்றிய பயம், தனிமை உணர்வு, ‘யாருக்கும் என்மேல் அக்கறை இல்லை’ என்ற எண்ணம் போன்றவற்றால் விவாகரத்தான நபர் அலைக்கழிக்கப்படலாம். இதையெல்லாம் சமாளிப்பது அவ்வளவு சுலபமில்லை. எனவே, யெகோவாவைப்போல நாமும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். (சங். 55:22; 1 பே. 5:6, 7) நாம் செய்யும் சின்ன உதவிகூட அவர்களுக்கு ஆறுதல் தரும். சபையில் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்வார்கள்.—நீதி. 17:17; 18:24.

^ பாரா. 6 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.